November 16, 2017

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?

இலங்கைக்கு சவால் ! இந்தியாவில் முதல் வெற்றி கிடைக்குமா?
என்ற தலைப்பில் தமிழ் நியூஸ் இணையத்தில் பிரசுரித்த என்னுடைய கட்டுரையில் இன்றைய கொல்கத்தா மழை நாளின் அவகாசத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு...



எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
1969இன் பின்னர் நாணய சுழற்சியில் வென்ற அணியொன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பந்துவீச முடிவெடுத்த இரண்டாவது சந்தர்ப்பம் இது தான்.
எனினும் மழை, மைதான + ஆடுகள ஈரலிப்பு, மேக மூட்டம் இவற்றைக் கருத்திற்கொண்டு தலைவர் சந்திமால் எடுத்துள்ள தீர்மானம் இதுவரை இலங்கை அணிக்கு சாதகமாகவும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையைத் துவம்சம் செய்துகொண்டும் இருக்கிறது.
17/3 - கோலியும் ஆட்டமிழந்துள்ளார்.

மிக அபூர்வமாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டும் ஆதிக்கத் திறனை இன்று காட்டிய சுரங்க லக்மால், 6 ஓவர்கள் பந்துவீசி எதுவித ஓட்டங்களையும் கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ஒரு நாளில் எதுவித ஓட்டங்களை கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ராகுலும், கோலியும் ஓட்டம் எதுவும் பெறாமல். அதிலும் ராகுல் ஒரு டெஸ்ட் போட்டியின், அதுவும் டெஸ்ட் தொடரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது இன்னொரு சாதனை.
 இவ்வாறு டெஸ்ட்டின் முதல் பந்தில் ஆட்டமிழந்த 31வது வீரர் இவர்.
(7 தொடர்ச்சியான 50+ ஓட்டங்களுக்குப் பிறகு பூஜ்ஜியம்)
முன்பு லக்மால் கிறிஸ் கெய்லையும் இவ்வாறு ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்த வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், தமிழகத்தின் முரளி விஜயை விட்டுவிட்டு விளையாடிய இந்தியாவின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுமே குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர். இப்படியான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக ஆடக்கூடியவர் விஜய்.
ஆயினும் இப்போது ஆடுகளத்தில் உள்ள புஜாராவும் ரஹானேயும் இப்படியான சூழ்நிலைகளில் நங்கூரத்தை இறக்கி பொறுமையாக ஆடி அணியைக் கரைசேர்க்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள். டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை அண்மைக்காலத்தில் காட்டிவரும் மிகச்சிறந்த வீரர்கள். இவர்கள் இருவரையுமே இலங்கை அணி விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டியிருக்கும்.

எனினும் விட்டு விட்டு விளையாட்டுக் காட்டும் மழையும் மழை இருட்டும் சேர்ந்து ஆட்டத்தை இடையூறு செய்துகொண்டேயுள்ளன. சனிக்கிழமை வரை மழையினால் போட்டி அடிக்கடி தடைப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை எதிர்வுகூறல்கள் எச்சரிக்கின்றன.

நாளை காலையும் இன்றைப் போலவே தன்மைகள் இருந்தால் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது.

இலங்கை அணியும் தனது பங்குக்கு ஒரு அதிருப்தி தரக்கூடிய அணித் தெரிவை செய்திருந்தது.
பலரும் எதிர்பார்த்த திறமையான வீரர் தனஞ்சய டீ சில்வா மற்றும் சிறப்பான form இல் இருக்கும் ரோஷென் சில்வா இருவரையும் வெளியே இருத்திவிட்டு, அண்மைக்காலமாக சொதப்பிவருகின்ற லஹிரு திரிமன்னேவை அணியில் முக்கியமான 3ஆம் இலக்கத்தில் ஆடுவதற்கு தெரிவு செய்துள்ளது.

திரிமன்னே அணியின் தலைவர் சந்திமாலின் நண்பர் என்பதைத் தாண்டி அவரது தெரிவுகளுக்கு உள்ளக ஆதரவுகள் வேறு பலவும் இருப்பதாகத் தெரிகிறது. நீண்ட கால 3ஆம் இலக்கத் தெரிவாக எண்ணப்பட்டு வந்த குசல் மென்டிசை அணியை விட்டு நீக்கவும் திரிமன்னேவுக்கு இந்த இடத்தை வழங்கும் நோக்கம் இருக்குமோ என்ற ஐயமும் வருகிறது.
(ஒருவேளை யாரும் எதிர்பாராமல் டசுன் ஷானகவை  3ஆம் இலக்கத்தில் இறக்கி அதிர்ச்சி அளிப்பார்களோ?)

இந்தியா ஆடுகளத் தன்மையறிந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியிருப்பதைப் போல, இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் டசுன் ஷானகவை இணைத்துள்ளது. அசேல குணரத்ன இல்லாததும், அஞ்செலோ மத்தியூஸால் பந்துவீச முடியாததும் இந்த ஆடுகளத்தில் இலங்கைக்கு இழப்பாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுக்களை எடுத்த ஷானகவுக்கு தனது திறமையை சாதகமான ஆடுகளத்தில் காட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இலங்கை அணி இந்திய மண்ணில் நீண்ட காலமாக எதிர்பார்த்துள்ள வெற்றியை சுவைக்கக்  கூடிய தருணம் இம்முறையாவது வருமா என்பதே இப்போதைய கேள்வி.


உலகின் முதற்தர டெஸ்ட் அணியாக வலம் வரும் கோலியின் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும்போது இன்னும் பன்மடங்கு பலத்தோடு தாங்கள் ஏற்கெனவே 9-0 என்று அனைத்துவிதப் போட்டிகளிலும் துடைத்தெறிந்த சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணியைச் சந்திக்கப்போகிறது.

தரப்படுத்தலில் 6ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணி அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறுவது எப்படி என்றே மறந்து போயுள்ளது.
எனினும் அதிர்ச்சிதரும் விதத்தில் அமீரகத்தில் பாகிஸ்தானை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வீழ்த்தி இலங்கை ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதுவும் முக்கியமான வீரர்கள் அஞ்சேலோ மத்தியூஸ், அசேல குணரத்ன, குஷால் ஜனித் பெரேரா போன்றோர் இல்லாமலேயே.

இந்தியா சென்றுள்ள அணியில் மத்தியூஸ் இப்போது இருக்கிறார். இது சற்று மேலதிக பலம் தான். எனினும் பாகிஸ்தானை வெல்வது போல இந்தியாவை வெல்வது இலகுவான விடயமல்ல.

இந்திய ஆடுகளங்களின் தன்மைகளும் தட்ப வெப்ப சூழலும் அமீரகத்தை விட இலங்கைக்கு பரிச்சயமானதும் சாதகமானதுமானதும் போல தெரிந்தாலும் வரலாறு சொல்வது போல இந்திய மண்ணில் இலங்கைக்கு டெஸ்ட் வெற்றிகள் இதுவரை சாத்தியப்படவே இல்லை.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற காலம் முதல் 35 ஆண்டுகளாக இந்தியாவிலே விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 17இல் இதுவரை கண்டது 10 தோல்விகளும் 7 வெற்றி தோல்வியற்ற சமநிலை முடிவுகளும் தான்.
இந்த பத்து தோல்விகளில் 8 படுமோசமான இன்னிங்ஸ் தோல்விகள் என்பது இலங்கை அணிகள் எவ்வளவு மோசமாக இந்தியாவில் விளையாடியிருக்கின்றன என்பதற்கு உதாரணம்.
அதிலும் தோல்விகள் அனைத்துமே படுமோசமான தோல்விகள்...


Sri Lanka's 10 Test defeats in India, by margin:
Inns & 106 runs Inns & 67 runs Inns & 8 runs Inns & 119 runs Inns & 95 runs Inns & 17 runs 188 runs 259 runs Inns & 144 runs Inns & 24 runs

இதே காலகட்டத்தில் இலங்கை மண்ணிலே இலங்கை 7 தடவை இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இலங்கையின் கன்னி டெஸ்ட் வெற்றியும் இந்தியாவுக்கு எதிராகவே பெறப்பட்ட்து என்பதையும் ஞாபகப்படுத்தவேண்டும்.

இந்தியாவின் அநேக பூகோளத் தன்மைகள் இலங்கையை ஒத்திருந்தும், 1990களின் பிற்பகுதி முதல் அண்மைக்காலம் வரை உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் இலங்கை அணியில் விளையாடியும் , இந்த ஆண்டுகளில் இலங்கை இந்தியாவை பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தியும் கூட டெஸ்ட் வெற்றி என்பது இந்திய மண்ணில் கைகூடவில்லை.

அரவிந்த டீ சில்வா அடித்து விளாசிய காலம்,
அர்ஜுனன் ரணதுங்க உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணித்தலைவராக இருந்த காலம்,
சனத் ஜயசூரிய இந்தியப் பந்துவீச்சாளர்களைக் கண்டா இடங்களிலெல்லாம் துவம்சம் செய்த காலம், 
சமிந்த வாஸ் உலகின் மிகச்சசிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்த காலம்,
முரளிதரன் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் உலக சாதனையாளராகவும் கொடி நாட்டியிருந்த காலம்,
மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காராவும் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக உலகம் முழுவதும் போற்றிப் புகழப்பட்ட பொற்காலம்...

இந்தக் காலங்களில் கூட இலங்கை அணியால் இந்திய மண்ணில் எதனையும் செய்ய முடியவில்லை.

அதற்கான பகுதியளவான ஒரு காரணம் - இலங்கை பலமாக இருந்த இந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு அதிகளவான டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் விளையாடும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இறுதி 23 ஆண்டுகளில் மூன்றே மூன்று டெஸ்ட் தொடர்களை மட்டுமே இலங்கை இந்தியாவிலே ஆடியிருந்தது. இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை ஏழு தடவை தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தது.

இலங்கை அணியுடன் இந்தக் காலகட்டத்தில் இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஏனைய எல்லா அணிகளையும் விட அதிகம். இதற்கு விளம்பரதாரர்கள் + அனுசரணையாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட BCCI தான் காரணம்.
எனினும் இத்தகைய நிலையொன்றுக்கு இந்திய கிரிக்கெட் சபையை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. காரணம் கடன் சிக்கல்கள், வருமானக் குறைவினால் இலங்கை கிரிக்கெட் சபை எப்போது சிக்கித் திணறினாலும் உடனடியாக உதவ முன்வருவது இந்தியாவே.

அங்கே அழைக்காததற்கும் சேர்த்து இதே காலகட்டத்தில் 7 தடவை டெஸ்ட் தொடர்களுக்காக இலங்கைக்கு வந்திருக்கிறது இந்திய அணி.

அந்த நேரங்களில் அண்மைக்காலம் வரை இலங்கையின் கரமே ஓங்கியிருந்திருக்கிறது.
உலக சாதனை 952 ஓட்டங்களும், சனத், சங்கா, அரவிந்த ஆகியோரின் ஓட்டக் குவிப்புக்களும் முரளிதரன், அஜந்த மெண்டிஸ்ஆகியோரின் பந்துவீச்சும், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லக்ஸ்மன், சேவாக், கும்ப்ளே, தோனி, ஹர்பஜன் என்று இருந்த இந்தியப் பிரபல நட்சத்திரங்களையே இலங்கை மண்ணில் மேவி வென்றிருந்தார்கள். 

எனினும் சரியான வாய்ப்புக்கள் இந்தியாவில் விளையாட இலங்கை நட்சத்திரங்களுக்குக் கிடைத்திருந்தால் இலங்கையின் பெறுபேறுகளும் சாதனைகளும் மேலும் மெருகு பெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு இலங்கை அணியில் இப்போதுள்ள சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மத்தியூஸ் ஆகிய இருவரும் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ளவர்கள்.அதுவும் 2009 ஆம் ஆண்டு.

எனவே எல்லா நாட்டு அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக, பொறிக்கிடங்காக இருக்கும் இந்தியா இந்த அனுபவக் குறைவான அணிக்கு பல புதிர்களையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.

உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையையும் மிகச்சிறந்த சுழல்பந்துவீச்சு வரிசையையும் கொண்ட இந்திய அணியை  வீழ்த்துவது உலகின் மிக சிரமமான காரியம். அப்படி ஒரு டெஸ்ட் போட்டியிலாவது  இலங்கை அதை நிகழ்த்துமாயின் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் upset ஆக அது பதிவாகும்.

இதுவரை காலமும் இலங்கை இந்தியாவை இந்தியாவில் வைத்து வெற்றி பெறுவதற்கு நெருங்கி வந்த ஒரு சந்தர்ப்பமும் இங்கே குறிப்பிடப்படவேண்டியது. 
இதுவரையான இறுதி இந்திய சுற்றுலாவாக அமைந்துள்ள 2009இல் அஹமதாபாத் டெஸ்ட் போட்டியில் முதலாம் இன்னிங்சில் இலங்கை இந்தியாவின் முதல் 4 விக்கெட்டுக்களை 32 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி தடுமாற வைத்திருந்தது. எனினும் டிராவிட், தோனி  ஆகியோரின் சதங்கள்  மூலமாக இந்தியா 400 ஓட்டங்களைக் கடந்தது.

இலங்கை இந்தியாவை விட 334 ஓட்டங்களைப்  பெற்றது. இலங்கை பெற்ற 760 ஓட்டங்களே இந்தியாவில் வைத்து இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடரில் இந்திய மண்ணில் பெறப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
(மஹேல 275 ஓட்டங்கள், பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 154, டில்ஷான் 112) மஹேல - பிரசன்னாவின் இணைப்பாட்டமும் ஒரு உலக சாதனையாகும்.

இரண்டாம் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுக்களை எடுக்க இலங்கைக்கு 130 ஓவர்கள் இருந்தபோதிலும் கம்பீர், டெண்டுல்கரின் சதங்களோடு போட்டியை இந்தியா சமநிலைப்படுத்தியது.


முரளிதரன், ஹேரத் இருவரும் சேர்ந்து விளையாடிய வெகுசில போட்டிகளில் ஒன்று இது. எனினும் அரிய  வாய்ப்பு தவறிப்போனது.

அந்தப் போட்டியில் விளையாடிய மத்தியூசும், ஹேரத்தும் மறக்கமாட்டார்கள் அந்த அனுபவத்தை.

இன்றைய நாளில் இதுவரை ஆரம்பமும் இதேபோன்று இலங்கை ஆரம்ப விக்கெட்டுக்களை உடைத்து எறிந்துள்ளது.

எனினும் அப்போதைய நட்சத்திரங்கள் விளையாடிய அணியை விட விராட்கோலி தலைமை தாங்கும் இந்த அணி மிகப் பலம் வாய்ந்தது.
சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வை வழங்கி, மாற்றுப் பந்துவீச்சு வரிசையை பரிசீலிக்கும் அளவுக்கு பலத்துடன் இருக்கிறது.
காயத்திலிருந்து மீண்டு வரும் முரளி விஜயை அணியில் சேர்ப்பதா ராகுலைத் தொடர்ந்து விளையாடவிடுவதா என்பது பற்றிய ஆரோக்கியமான வாதங்கள் இடம்பெறுகின்றன.
அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் மிகச் சிறப்பான ஓட்ட சேகரிப்பு Form இல் இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டிகளில் வெளுத்து வாங்கும் ரோஹித் ஷர்மா அணியில் இணைவதற்கு இன்னமுமே போராடவேண்டி இருக்கிறது.

பந்துவீச்சாளர்களுக்கு இடையிலும் கடுமையான போட்டி.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடங்களில் உள்ள அஷ்வினும் ஜடேஜாவும் மட்டுமன்றி அடுத்தகட்ட சுழல்பந்து வீச்ச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராக இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களிலும் கடுமையான போட்டி. ஒருநாள், T20 போட்டிகளில் பிரகாசித்து வரும் பும்ராவுக்கு டெஸ்ட் அணியில் நுழைய முடியாமல் இருக்கிறது.

பலவீனம் என்பதை அடையாளப்படுத்த முடியாத அணியாக இருப்பதே இந்திய அணியின் சிறப்பு. 
இலங்கை அணியோ யாரை சேர்த்து அணியைத் திடப்படுத்துவது என்பதில் குழப்பத்தை எதிர்கொண்டுள்ள அணி.

எனினும் இந்த வருடத்தில் ஒரு சிறப்பான, நம்பிக்கை மிகுந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்கும் டிமுத் கருணாரத்ன இலங்கையின் இப்போதைய நம்பிக்கை.
இந்த வருடத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 60 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
அணியின் தலைவர் சந்திமால் டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது சிறப்பாகவே ஆடிவருகிறார்.
முன்னாள் தலைவர் மத்தியூஸுக்கு 5000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு 282 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. தன்னை மீண்டும் நிரூபிக்கவேண்டிய தேவையும், நீண்ட காலத்துக்குப் பின்(இரண்டு வருடங்கள்) டெஸ்ட் சதம் ஒன்றைப் பெறவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக மற்ற இளைய வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கவேண்டியவரும் இவரே.
விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றொரு நிச்சயமான வீரர்.
பயிற்சிப் போட்டியில் காட்டிய திறமையினால் இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகிறது.

அடுத்த 3ஆம் இடம் தான் இப்போதைக்கு ஆடிக்கொண்டிருக்கிறது. இளம் துடுப்பாட்ட வீரராக நம்பிக்கை தந்த குசல் மெண்டிசை அழைத்துச் செல்லாமல் விட்டதே தவறு என்று எல்லா விதமான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்க திரிமன்னவா, தனஞ்சய டீ சில்வாவா என்ற கேள்வி இப்போது முன்னிற்கிறது.

இன்று திரிமன்னேவை அணியில் கொண்டுவந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கிக்கட்டியுள்ளனர் தேர்வாளர்கள். எனினும் திரிமன்னே ஒரு லாவகமான துடுப்பாட்டவீரர் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.தனது பொறுப்பை உணர்ந்து ஆடினால் ஒரு புதிய சங்கக்காரவாக மாறுவார். அப்படி ஆடி இலங்கை அணி ரசிகர்களின் எதிர்ப்பை தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்வார் என்றால் அது பெரிய வரமே..

பந்துவீச்சாளர்களில் ஹேரத், டில்ருவான் பெரேராவுடன் இன்னும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் + ஷானக என்பது சந்திமால் எதிர்பார்ப்பது போல 'பெரிய' அணிகளை வெற்றிபெற இலங்கை எதிர்பார்க்கும் ஐந்து பந்துவீச்சாளர் வியூகமே.



மறுபக்கம் இதுவரை தான் தலைமை தாங்கிய 29 போட்டிகளில் 19 வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி, இந்திய டெஸ்ட் தலைமைத்துவ சாதனையாக இரண்டாமிடத்தில் உள்ள கங்குலியின் 21 வெற்றிகளை முறியடிக்க இந்தத் தொடரை வெள்ளையடிக்க வேண்டியுள்ளது.
முதலாமிடம் மகேந்திர சிங் தோனி - 60 டெஸ்ட் போட்டிகளில் 27 இல் வெற்றிகள்.
எனினும் கோலி இரண்டு போட்டிகளின் பின் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ளவிருக்கிறார் என்பது கவனிக்கக்கூடியது.
கங்குலி இந்த 21 வெற்றிகளைப்பெற 49 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கவேண்டிஇருந்தது.

சில மைல் கற்கள் & சாதனைக்குக் காத்திருக்கும் வீரர்கள்..




அஷ்வினுக்கு 300 விக்கெட்டுக்களைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொடரில் இன்னும் 8 விக்கெட்டுக்களே தேவைப்படுகின்றன. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளுக்குள் இந்த இலக்கை அடைந்தால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை அடைந்தவர் என்ற உலக சாதனை அவர் வசமாகும்.


இப்போது 52 போட்டிகளில் 292 விக்கெட்டுக்களை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.



அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ 56 போட்டிகளிலும், நம்மவர் முரளிதரன் 58 போட்டிகளிலும் இந்த 300 விக்கெட்டுக்களை எட்டியிருந்தனர்.

இந்திய சாதனை - அனில் கும்ப்ளே - 66 டெஸ்ட் போட்டிகள்.



இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய  இன்னும் 70 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.



நூறு டெஸ்ட் விக்கெட்டுக்கள் என்ற இலக்கை அடைவதற்கு டில்ருவான் பெரேராவிற்கு இன்னும் 7 விக்கெட்டுக்களும், லக்மலுக்கு 9 விக்கெட்டுக்களும்தே, உமேஷ் யாதவிற்கு 6 விக்கெட்டுக்களும் வைப்படுகின்றன.


இலங்கை அணிக்கு இழக்க எதுவுமில்லை. போராட்ட குணத்தை உலகின் மிகச்சிறந்த அணிக்கு எதிராக வெளிப்படுத்த, சந்திமால் தனது அணி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கான மிகச்சிறந்த தருணம் இது.
இதுவரை 99 டெஸ்ட் தோல்விகளை (265 போட்டிகளில்) பெற்றுள்ள இலங்கை அணிக்கு 100வைத்து தோல்வியைத் தள்ளிப்போட முடியுமா ?

இன்றைய முதல் நாளில் செலுத்திய ஆதிக்கத்தைக் கொண்டு சென்று அதிர்ச்சியை வழங்கமுடியுமா?
காத்திருப்போம் தெரிந்துகொள்ள...


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner