November 16, 2017

17/3 - கொல்கத்தா - மழை - லக்மால் - அதிர்ச்சியோடு ஆரம்பித்த இலங்கை ! தொடரும் தோல்வி வரலாற்றை மாற்றுமா?

இலங்கைக்கு சவால் ! இந்தியாவில் முதல் வெற்றி கிடைக்குமா?
என்ற தலைப்பில் தமிழ் நியூஸ் இணையத்தில் பிரசுரித்த என்னுடைய கட்டுரையில் இன்றைய கொல்கத்தா மழை நாளின் அவகாசத்தில் மேலும் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு...எல்லா கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ள இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
1969இன் பின்னர் நாணய சுழற்சியில் வென்ற அணியொன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பந்துவீச முடிவெடுத்த இரண்டாவது சந்தர்ப்பம் இது தான்.
எனினும் மழை, மைதான + ஆடுகள ஈரலிப்பு, மேக மூட்டம் இவற்றைக் கருத்திற்கொண்டு தலைவர் சந்திமால் எடுத்துள்ள தீர்மானம் இதுவரை இலங்கை அணிக்கு சாதகமாகவும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையைத் துவம்சம் செய்துகொண்டும் இருக்கிறது.
17/3 - கோலியும் ஆட்டமிழந்துள்ளார்.

மிக அபூர்வமாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் காட்டும் ஆதிக்கத் திறனை இன்று காட்டிய சுரங்க லக்மால், 6 ஓவர்கள் பந்துவீசி எதுவித ஓட்டங்களையும் கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ஒரு நாளில் எதுவித ஓட்டங்களை கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ராகுலும், கோலியும் ஓட்டம் எதுவும் பெறாமல். அதிலும் ராகுல் ஒரு டெஸ்ட் போட்டியின், அதுவும் டெஸ்ட் தொடரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது இன்னொரு சாதனை.
 இவ்வாறு டெஸ்ட்டின் முதல் பந்தில் ஆட்டமிழந்த 31வது வீரர் இவர்.
(7 தொடர்ச்சியான 50+ ஓட்டங்களுக்குப் பிறகு பூஜ்ஜியம்)
முன்பு லக்மால் கிறிஸ் கெய்லையும் இவ்வாறு ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

எல்லோரும் எதிர்பார்த்த வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், தமிழகத்தின் முரளி விஜயை விட்டுவிட்டு விளையாடிய இந்தியாவின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுமே குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தனர். இப்படியான வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக ஆடக்கூடியவர் விஜய்.
ஆயினும் இப்போது ஆடுகளத்தில் உள்ள புஜாராவும் ரஹானேயும் இப்படியான சூழ்நிலைகளில் நங்கூரத்தை இறக்கி பொறுமையாக ஆடி அணியைக் கரைசேர்க்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள். டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான பெறுபேறுகளை அண்மைக்காலத்தில் காட்டிவரும் மிகச்சிறந்த வீரர்கள். இவர்கள் இருவரையுமே இலங்கை அணி விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டியிருக்கும்.

எனினும் விட்டு விட்டு விளையாட்டுக் காட்டும் மழையும் மழை இருட்டும் சேர்ந்து ஆட்டத்தை இடையூறு செய்துகொண்டேயுள்ளன. சனிக்கிழமை வரை மழையினால் போட்டி அடிக்கடி தடைப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை எதிர்வுகூறல்கள் எச்சரிக்கின்றன.

நாளை காலையும் இன்றைப் போலவே தன்மைகள் இருந்தால் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது.

இலங்கை அணியும் தனது பங்குக்கு ஒரு அதிருப்தி தரக்கூடிய அணித் தெரிவை செய்திருந்தது.
பலரும் எதிர்பார்த்த திறமையான வீரர் தனஞ்சய டீ சில்வா மற்றும் சிறப்பான form இல் இருக்கும் ரோஷென் சில்வா இருவரையும் வெளியே இருத்திவிட்டு, அண்மைக்காலமாக சொதப்பிவருகின்ற லஹிரு திரிமன்னேவை அணியில் முக்கியமான 3ஆம் இலக்கத்தில் ஆடுவதற்கு தெரிவு செய்துள்ளது.

திரிமன்னே அணியின் தலைவர் சந்திமாலின் நண்பர் என்பதைத் தாண்டி அவரது தெரிவுகளுக்கு உள்ளக ஆதரவுகள் வேறு பலவும் இருப்பதாகத் தெரிகிறது. நீண்ட கால 3ஆம் இலக்கத் தெரிவாக எண்ணப்பட்டு வந்த குசல் மென்டிசை அணியை விட்டு நீக்கவும் திரிமன்னேவுக்கு இந்த இடத்தை வழங்கும் நோக்கம் இருக்குமோ என்ற ஐயமும் வருகிறது.
(ஒருவேளை யாரும் எதிர்பாராமல் டசுன் ஷானகவை  3ஆம் இலக்கத்தில் இறக்கி அதிர்ச்சி அளிப்பார்களோ?)

இந்தியா ஆடுகளத் தன்மையறிந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியிருப்பதைப் போல, இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மிதவேகப்பந்து வீசும் சகலதுறை வீரர் டசுன் ஷானகவை இணைத்துள்ளது. அசேல குணரத்ன இல்லாததும், அஞ்செலோ மத்தியூஸால் பந்துவீச முடியாததும் இந்த ஆடுகளத்தில் இலங்கைக்கு இழப்பாக இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுக்களை எடுத்த ஷானகவுக்கு தனது திறமையை சாதகமான ஆடுகளத்தில் காட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இலங்கை அணி இந்திய மண்ணில் நீண்ட காலமாக எதிர்பார்த்துள்ள வெற்றியை சுவைக்கக்  கூடிய தருணம் இம்முறையாவது வருமா என்பதே இப்போதைய கேள்வி.


உலகின் முதற்தர டெஸ்ட் அணியாக வலம் வரும் கோலியின் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும்போது இன்னும் பன்மடங்கு பலத்தோடு தாங்கள் ஏற்கெனவே 9-0 என்று அனைத்துவிதப் போட்டிகளிலும் துடைத்தெறிந்த சந்திமாலின் தலைமையிலான இலங்கை அணியைச் சந்திக்கப்போகிறது.

தரப்படுத்தலில் 6ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணி அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறுவது எப்படி என்றே மறந்து போயுள்ளது.
எனினும் அதிர்ச்சிதரும் விதத்தில் அமீரகத்தில் பாகிஸ்தானை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வீழ்த்தி இலங்கை ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதுவும் முக்கியமான வீரர்கள் அஞ்சேலோ மத்தியூஸ், அசேல குணரத்ன, குஷால் ஜனித் பெரேரா போன்றோர் இல்லாமலேயே.

இந்தியா சென்றுள்ள அணியில் மத்தியூஸ் இப்போது இருக்கிறார். இது சற்று மேலதிக பலம் தான். எனினும் பாகிஸ்தானை வெல்வது போல இந்தியாவை வெல்வது இலகுவான விடயமல்ல.

இந்திய ஆடுகளங்களின் தன்மைகளும் தட்ப வெப்ப சூழலும் அமீரகத்தை விட இலங்கைக்கு பரிச்சயமானதும் சாதகமானதுமானதும் போல தெரிந்தாலும் வரலாறு சொல்வது போல இந்திய மண்ணில் இலங்கைக்கு டெஸ்ட் வெற்றிகள் இதுவரை சாத்தியப்படவே இல்லை.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற காலம் முதல் 35 ஆண்டுகளாக இந்தியாவிலே விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 17இல் இதுவரை கண்டது 10 தோல்விகளும் 7 வெற்றி தோல்வியற்ற சமநிலை முடிவுகளும் தான்.
இந்த பத்து தோல்விகளில் 8 படுமோசமான இன்னிங்ஸ் தோல்விகள் என்பது இலங்கை அணிகள் எவ்வளவு மோசமாக இந்தியாவில் விளையாடியிருக்கின்றன என்பதற்கு உதாரணம்.
அதிலும் தோல்விகள் அனைத்துமே படுமோசமான தோல்விகள்...


Sri Lanka's 10 Test defeats in India, by margin:
Inns & 106 runs Inns & 67 runs Inns & 8 runs Inns & 119 runs Inns & 95 runs Inns & 17 runs 188 runs 259 runs Inns & 144 runs Inns & 24 runs

இதே காலகட்டத்தில் இலங்கை மண்ணிலே இலங்கை 7 தடவை இந்தியாவை வீழ்த்தியுள்ளது. இலங்கையின் கன்னி டெஸ்ட் வெற்றியும் இந்தியாவுக்கு எதிராகவே பெறப்பட்ட்து என்பதையும் ஞாபகப்படுத்தவேண்டும்.

இந்தியாவின் அநேக பூகோளத் தன்மைகள் இலங்கையை ஒத்திருந்தும், 1990களின் பிற்பகுதி முதல் அண்மைக்காலம் வரை உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் இலங்கை அணியில் விளையாடியும் , இந்த ஆண்டுகளில் இலங்கை இந்தியாவை பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தியும் கூட டெஸ்ட் வெற்றி என்பது இந்திய மண்ணில் கைகூடவில்லை.

அரவிந்த டீ சில்வா அடித்து விளாசிய காலம்,
அர்ஜுனன் ரணதுங்க உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணித்தலைவராக இருந்த காலம்,
சனத் ஜயசூரிய இந்தியப் பந்துவீச்சாளர்களைக் கண்டா இடங்களிலெல்லாம் துவம்சம் செய்த காலம், 
சமிந்த வாஸ் உலகின் மிகச்சசிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்த காலம்,
முரளிதரன் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் உலக சாதனையாளராகவும் கொடி நாட்டியிருந்த காலம்,
மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காராவும் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக உலகம் முழுவதும் போற்றிப் புகழப்பட்ட பொற்காலம்...

இந்தக் காலங்களில் கூட இலங்கை அணியால் இந்திய மண்ணில் எதனையும் செய்ய முடியவில்லை.

அதற்கான பகுதியளவான ஒரு காரணம் - இலங்கை பலமாக இருந்த இந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு அதிகளவான டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் விளையாடும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இறுதி 23 ஆண்டுகளில் மூன்றே மூன்று டெஸ்ட் தொடர்களை மட்டுமே இலங்கை இந்தியாவிலே ஆடியிருந்தது. இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை ஏழு தடவை தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தது.

இலங்கை அணியுடன் இந்தக் காலகட்டத்தில் இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஏனைய எல்லா அணிகளையும் விட அதிகம். இதற்கு விளம்பரதாரர்கள் + அனுசரணையாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட BCCI தான் காரணம்.
எனினும் இத்தகைய நிலையொன்றுக்கு இந்திய கிரிக்கெட் சபையை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது. காரணம் கடன் சிக்கல்கள், வருமானக் குறைவினால் இலங்கை கிரிக்கெட் சபை எப்போது சிக்கித் திணறினாலும் உடனடியாக உதவ முன்வருவது இந்தியாவே.

அங்கே அழைக்காததற்கும் சேர்த்து இதே காலகட்டத்தில் 7 தடவை டெஸ்ட் தொடர்களுக்காக இலங்கைக்கு வந்திருக்கிறது இந்திய அணி.

அந்த நேரங்களில் அண்மைக்காலம் வரை இலங்கையின் கரமே ஓங்கியிருந்திருக்கிறது.
உலக சாதனை 952 ஓட்டங்களும், சனத், சங்கா, அரவிந்த ஆகியோரின் ஓட்டக் குவிப்புக்களும் முரளிதரன், அஜந்த மெண்டிஸ்ஆகியோரின் பந்துவீச்சும், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லக்ஸ்மன், சேவாக், கும்ப்ளே, தோனி, ஹர்பஜன் என்று இருந்த இந்தியப் பிரபல நட்சத்திரங்களையே இலங்கை மண்ணில் மேவி வென்றிருந்தார்கள். 

எனினும் சரியான வாய்ப்புக்கள் இந்தியாவில் விளையாட இலங்கை நட்சத்திரங்களுக்குக் கிடைத்திருந்தால் இலங்கையின் பெறுபேறுகளும் சாதனைகளும் மேலும் மெருகு பெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு இலங்கை அணியில் இப்போதுள்ள சிரேஷ்ட வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மத்தியூஸ் ஆகிய இருவரும் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ளவர்கள்.அதுவும் 2009 ஆம் ஆண்டு.

எனவே எல்லா நாட்டு அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக, பொறிக்கிடங்காக இருக்கும் இந்தியா இந்த அனுபவக் குறைவான அணிக்கு பல புதிர்களையும் அழுத்தத்தையும் கொடுக்கும் என்பது உறுதி.

உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையையும் மிகச்சிறந்த சுழல்பந்துவீச்சு வரிசையையும் கொண்ட இந்திய அணியை  வீழ்த்துவது உலகின் மிக சிரமமான காரியம். அப்படி ஒரு டெஸ்ட் போட்டியிலாவது  இலங்கை அதை நிகழ்த்துமாயின் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் upset ஆக அது பதிவாகும்.

இதுவரை காலமும் இலங்கை இந்தியாவை இந்தியாவில் வைத்து வெற்றி பெறுவதற்கு நெருங்கி வந்த ஒரு சந்தர்ப்பமும் இங்கே குறிப்பிடப்படவேண்டியது. 
இதுவரையான இறுதி இந்திய சுற்றுலாவாக அமைந்துள்ள 2009இல் அஹமதாபாத் டெஸ்ட் போட்டியில் முதலாம் இன்னிங்சில் இலங்கை இந்தியாவின் முதல் 4 விக்கெட்டுக்களை 32 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி தடுமாற வைத்திருந்தது. எனினும் டிராவிட், தோனி  ஆகியோரின் சதங்கள்  மூலமாக இந்தியா 400 ஓட்டங்களைக் கடந்தது.

இலங்கை இந்தியாவை விட 334 ஓட்டங்களைப்  பெற்றது. இலங்கை பெற்ற 760 ஓட்டங்களே இந்தியாவில் வைத்து இவ்விரு அணிகளுக்கிடையிலான தொடரில் இந்திய மண்ணில் பெறப்பட்டுள்ள அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
(மஹேல 275 ஓட்டங்கள், பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 154, டில்ஷான் 112) மஹேல - பிரசன்னாவின் இணைப்பாட்டமும் ஒரு உலக சாதனையாகும்.

இரண்டாம் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுக்களை எடுக்க இலங்கைக்கு 130 ஓவர்கள் இருந்தபோதிலும் கம்பீர், டெண்டுல்கரின் சதங்களோடு போட்டியை இந்தியா சமநிலைப்படுத்தியது.


முரளிதரன், ஹேரத் இருவரும் சேர்ந்து விளையாடிய வெகுசில போட்டிகளில் ஒன்று இது. எனினும் அரிய  வாய்ப்பு தவறிப்போனது.

அந்தப் போட்டியில் விளையாடிய மத்தியூசும், ஹேரத்தும் மறக்கமாட்டார்கள் அந்த அனுபவத்தை.

இன்றைய நாளில் இதுவரை ஆரம்பமும் இதேபோன்று இலங்கை ஆரம்ப விக்கெட்டுக்களை உடைத்து எறிந்துள்ளது.

எனினும் அப்போதைய நட்சத்திரங்கள் விளையாடிய அணியை விட விராட்கோலி தலைமை தாங்கும் இந்த அணி மிகப் பலம் வாய்ந்தது.
சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வை வழங்கி, மாற்றுப் பந்துவீச்சு வரிசையை பரிசீலிக்கும் அளவுக்கு பலத்துடன் இருக்கிறது.
காயத்திலிருந்து மீண்டு வரும் முரளி விஜயை அணியில் சேர்ப்பதா ராகுலைத் தொடர்ந்து விளையாடவிடுவதா என்பது பற்றிய ஆரோக்கியமான வாதங்கள் இடம்பெறுகின்றன.
அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் மிகச் சிறப்பான ஓட்ட சேகரிப்பு Form இல் இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டிகளில் வெளுத்து வாங்கும் ரோஹித் ஷர்மா அணியில் இணைவதற்கு இன்னமுமே போராடவேண்டி இருக்கிறது.

பந்துவீச்சாளர்களுக்கு இடையிலும் கடுமையான போட்டி.
டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடங்களில் உள்ள அஷ்வினும் ஜடேஜாவும் மட்டுமன்றி அடுத்தகட்ட சுழல்பந்து வீச்ச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராக இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களிலும் கடுமையான போட்டி. ஒருநாள், T20 போட்டிகளில் பிரகாசித்து வரும் பும்ராவுக்கு டெஸ்ட் அணியில் நுழைய முடியாமல் இருக்கிறது.

பலவீனம் என்பதை அடையாளப்படுத்த முடியாத அணியாக இருப்பதே இந்திய அணியின் சிறப்பு. 
இலங்கை அணியோ யாரை சேர்த்து அணியைத் திடப்படுத்துவது என்பதில் குழப்பத்தை எதிர்கொண்டுள்ள அணி.

எனினும் இந்த வருடத்தில் ஒரு சிறப்பான, நம்பிக்கை மிகுந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்கும் டிமுத் கருணாரத்ன இலங்கையின் இப்போதைய நம்பிக்கை.
இந்த வருடத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 60 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
அணியின் தலைவர் சந்திமால் டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது சிறப்பாகவே ஆடிவருகிறார்.
முன்னாள் தலைவர் மத்தியூஸுக்கு 5000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு 282 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. தன்னை மீண்டும் நிரூபிக்கவேண்டிய தேவையும், நீண்ட காலத்துக்குப் பின்(இரண்டு வருடங்கள்) டெஸ்ட் சதம் ஒன்றைப் பெறவேண்டிய கட்டாயமும் அவருக்கு இருக்கிறது. சிரேஷ்ட துடுப்பாட்ட வீரராக மற்ற இளைய வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கவேண்டியவரும் இவரே.
விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றொரு நிச்சயமான வீரர்.
பயிற்சிப் போட்டியில் காட்டிய திறமையினால் இளம் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக விளையாடுவார் என்பது உறுதியாகிறது.

அடுத்த 3ஆம் இடம் தான் இப்போதைக்கு ஆடிக்கொண்டிருக்கிறது. இளம் துடுப்பாட்ட வீரராக நம்பிக்கை தந்த குசல் மெண்டிசை அழைத்துச் செல்லாமல் விட்டதே தவறு என்று எல்லா விதமான விமர்சனங்களும் வந்துகொண்டிருக்க திரிமன்னவா, தனஞ்சய டீ சில்வாவா என்ற கேள்வி இப்போது முன்னிற்கிறது.

இன்று திரிமன்னேவை அணியில் கொண்டுவந்து ரசிகர்களின் சாபத்தை வாங்கிக்கட்டியுள்ளனர் தேர்வாளர்கள். எனினும் திரிமன்னே ஒரு லாவகமான துடுப்பாட்டவீரர் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.தனது பொறுப்பை உணர்ந்து ஆடினால் ஒரு புதிய சங்கக்காரவாக மாறுவார். அப்படி ஆடி இலங்கை அணி ரசிகர்களின் எதிர்ப்பை தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்வார் என்றால் அது பெரிய வரமே..

பந்துவீச்சாளர்களில் ஹேரத், டில்ருவான் பெரேராவுடன் இன்னும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் + ஷானக என்பது சந்திமால் எதிர்பார்ப்பது போல 'பெரிய' அணிகளை வெற்றிபெற இலங்கை எதிர்பார்க்கும் ஐந்து பந்துவீச்சாளர் வியூகமே.மறுபக்கம் இதுவரை தான் தலைமை தாங்கிய 29 போட்டிகளில் 19 வெற்றிகளைப் பெற்றுள்ள கோலி, இந்திய டெஸ்ட் தலைமைத்துவ சாதனையாக இரண்டாமிடத்தில் உள்ள கங்குலியின் 21 வெற்றிகளை முறியடிக்க இந்தத் தொடரை வெள்ளையடிக்க வேண்டியுள்ளது.
முதலாமிடம் மகேந்திர சிங் தோனி - 60 டெஸ்ட் போட்டிகளில் 27 இல் வெற்றிகள்.
எனினும் கோலி இரண்டு போட்டிகளின் பின் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ளவிருக்கிறார் என்பது கவனிக்கக்கூடியது.
கங்குலி இந்த 21 வெற்றிகளைப்பெற 49 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கவேண்டிஇருந்தது.

சில மைல் கற்கள் & சாதனைக்குக் காத்திருக்கும் வீரர்கள்..
அஷ்வினுக்கு 300 விக்கெட்டுக்களைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொடரில் இன்னும் 8 விக்கெட்டுக்களே தேவைப்படுகின்றன. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளுக்குள் இந்த இலக்கை அடைந்தால் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை அடைந்தவர் என்ற உலக சாதனை அவர் வசமாகும்.


இப்போது 52 போட்டிகளில் 292 விக்கெட்டுக்களை அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ 56 போட்டிகளிலும், நம்மவர் முரளிதரன் 58 போட்டிகளிலும் இந்த 300 விக்கெட்டுக்களை எட்டியிருந்தனர்.

இந்திய சாதனை - அனில் கும்ப்ளே - 66 டெஸ்ட் போட்டிகள்.இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 3000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய  இன்னும் 70 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.நூறு டெஸ்ட் விக்கெட்டுக்கள் என்ற இலக்கை அடைவதற்கு டில்ருவான் பெரேராவிற்கு இன்னும் 7 விக்கெட்டுக்களும், லக்மலுக்கு 9 விக்கெட்டுக்களும்தே, உமேஷ் யாதவிற்கு 6 விக்கெட்டுக்களும் வைப்படுகின்றன.


இலங்கை அணிக்கு இழக்க எதுவுமில்லை. போராட்ட குணத்தை உலகின் மிகச்சிறந்த அணிக்கு எதிராக வெளிப்படுத்த, சந்திமால் தனது அணி மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கான மிகச்சிறந்த தருணம் இது.
இதுவரை 99 டெஸ்ட் தோல்விகளை (265 போட்டிகளில்) பெற்றுள்ள இலங்கை அணிக்கு 100வைத்து தோல்வியைத் தள்ளிப்போட முடியுமா ?

இன்றைய முதல் நாளில் செலுத்திய ஆதிக்கத்தைக் கொண்டு சென்று அதிர்ச்சியை வழங்கமுடியுமா?
காத்திருப்போம் தெரிந்துகொள்ள...


August 29, 2017

விவேகம் !!! - என்ன ? ஏன் ? எதற்கு?

பெரிதாக ஆச்சரியமோ, ஏமாற்றமோ இல்லை.
விவேகம் பற்றிய எக்கச்சக்க build up கள் வந்துகொண்டிருந்தபோதே எனது நண்பர்களிடம் "இது அடுத்த பில்லா 2, அசல் மாதிரி தான் வரும் போல கிடக்கு" என்று சொல்லியிருந்தேன்.
படம் பார்த்தவுடன் கடுப்பு + ஏமாற்றத்தின் எரிச்சலில் ஒரு status போட்டாலும் அடுத்த நாள் கொஞ்சம் சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் விவேகத்தை விடவும் மோசமான படங்கள் வந்திருக்கே.. இது ஒன்றும் ஒரேயடியாகக் கழுவியூற்றக்கூடிய படமா என்று யோசித்தேன்..
என் மாதிரியே யோசிக்கக்கூடிய பலருக்கும் சேர்த்து கொஞ்சம் விரிவு + விளக்கமாக..
Believe in Yourself - உன்னிப்பாக அவதானித்தால் BE YOU எல்லாம் நல்லாத்தான் இருந்தது.
முதலாவது அகோரத் தாக்குதலுக்கு (அந்தக் கொடுமை தான் அறிமுகம்.. ) பின் தல ரசிகர்களின் பெரிய கரகோஷங்களுடன் அறிமுகமாகிறார்.
அதற்குப் பிறகு அதைவிடக் கொடுமையான பாலப் பாய்ச்சலுக்குப் பின் James Bond பாணியிலான Title + song.
தமிழுக்குப் புதிதாக பல விடயங்களை முயன்றதற்கு சிவாவைக் கொஞ்சம் மெச்சலாம்.

One Man army - James Bond like movie என்று முடிவெடுத்த பிறகு, அதிலும் அஜித் தான் நாயகன் என்று தீர்மானித்த பிறகு stylish making & technical perfection இல் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று இயக்குனர் சிவா முடிவெடுத்திருக்கிறார் போலும்.
அஜித்தின் நடை+ அந்த ஆழமான குரலில் அழுத்தமாகப் பேசும் punch dialogue - பில்லா முதல் ரசிகர்களால் பெரிய வரவேற்புடன் கொண்டாடப்படும் தல ப்ளஸ்களையே தல அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களே வெறுக்கவைக்கும் அளவுக்கு மாற்றிய கைங்கர்யம் செய்த இயக்குனர் சிவா.
நடக்கச் செய்து செய்து அஜித்தை நடராஜாவாகவே மாற்றிய மற்ற இயக்குனர்கள் வரிசையில்,
(இதிலும் பாடல் காட்சிகளில் நடக்கிறது பரவாயில்லை, அக்ஸராவை துரத்தும்போதும் நடக்கத்தான் வேண்டுமா?)
வசனங்களாக அழுத்தமானவற்றை இழுத்து இழுத்து பேசச் செய்து, அதிலும் விறுவிறுப்பாகக் காட்சிகள் போய்க்கொண்டிருக்கையில் speed breakers ஆக பஞ்ச் வசனங்களை மாற்றி வைத்த சிவா வித்தியாசமானவர் தான்.
அதிலும் மனைவியோடு பேசும்போது கூட அதே தொனி?
முடியல நண்பா சிவா.
அத்தோடு மற்ற படங்களிலெல்லாம் ஹீரோவோடு கூடவே புகழ்பாட வரும் காமெடியனுக்குப் பதிலாக வில்லன் விவேக் ஓபராயை வைத்து 'தல' புகழ் பாட வைத்து சலிப்பு ஏற்படுத்தியதும் கொடுமை.
அஜித் என்ற magic icon மீண்டும் நம்பி நாசம் + மோசம் போயுள்ளது. இப்படியே இன்னொரு படம் வந்தால் இந்த எதிர்பார்ப்பு எல்லாமே நீர்த்துவிடும்.
கமலின் படங்களில் கூட வந்திராத very detailed Technical advancements, latest technology விஷயங்கள் (reverse hacking, hologram imaging, Morse code, mobile signal jamming, tracking with pacemaker) என்று மினக்கெட்ட சிவா & team, அஜித்தின் அர்ப்பணிப்பு + உழைப்பு, வெளிநாட்டில் படப்பிடிப்புக்குக்காக கொட்டிய கோடிகளையும் இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கலாம்.
பாலம், அக்சரா கொல்லப்படும் சண்டை, climax எல்லாம் சலிப்புத் தட்டும் அளவுக்கு திகட்டல்.
அதிலும் பொங்கியெழு மனோகரா பாணியில் காஜல் பாட, அஜித் வெறியேறி ஆட.. சொர்ரி அடிக்க..
உஸ்ஸ்ஸ்..
அதிலும் நேரம் வேறு டிக்,டிக்,டிக்...
அஜித்தின் கடின உழைப்பு, தன்னை வருத்தி இந்தப் பாத்திரமாக மாற்றியது, வெற்றியின் ஒளிப்பதிவு, ரூபனின் நேர்த்தியான எடிட்டிங், அனிருத்தின் பின்னணி இசையின் பிரம்மாண்டம், சிவாவின் வசனங்கள் சில, லொக்கேஷன் தெரிவுகள் (அத்தனை அழகும் ஒருவித freshness உம்), தொழிநுட்ப பிரம்மாண்டம் + CG என்று பாராட்டக்கூடிய விடயங்கள் பல தான்.
இன்னொன்று அந்த AK பெயராக பயன்படுத்தப்படும் விதம்.
(ஆனால் சுவரில் சுட்டு செதுக்குவது எல்லாம் ஓவர் நண்பா)
லொஜிக், மஜிக் எல்லாம் இப்படிப் படங்களில் பார்க்கத் தேவையில்லை என்று சொல்வதையும் சரி நண்பா என்று எடுக்கலாம்..
ஆனால் அதுக்காக தனியொருவனாக கையிரண்டில் துப்பாக்கி தாங்கி சடபட என்று ஆயிரக்கணக்கில் வேட்டையாடுவதும் ஆயிரக்கணக்கில் சுடப்பட்டும் ஒன்று கூட உரசிச்ச செல்லாததும், பனி மலையில் தனியொருவனாகக் காய்ந்து கிடப்பவர் திடீரென்று அத்தனை ஆயுதங்களோடு அவதாரம் எடுப்பதெல்லாம் என்ன நண்பா?
நேரக்கணக்கு எல்லாம் Mission Impossible, 24 (English) கணக்கில் இருந்தாலும் கொஞ்சம் ஓவராகவே...
அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும், A பிரிவு ரசிகர்களுக்கு ஏற்றது.. இதெல்லாம் ரசிகர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் சில ஆறுதல்களே.
உண்மையாக அஜித்திடம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று யார் யார் ஏற்றுக்கொள்கிறீர்களோ அவர்கள் என் கட்சி.
ஆனால் அடிக்கடி நான் சொல்லும் 'மனம் போல வாழ்வு' என்பது
"எண்ணம் போல் வாழ்வு" என்று வந்த இடம் மனதோடு ஒட்டிக்கொண்டது.
ஆனால் ஒன்று, இனி பல்கேரியா, அல்பேனியா, சேர்பியா இவை பற்றி எங்கு, என்ன கேட்டாலும் விவேகமும் துப்பாக்கிகளும் தான் ஞாபகம் வரப்போகுது.

நிற்க, அடுத்த படமும் சிவாவோடு தானாமே..
இன்னொரு V பெயர்..
வீரம் - 
தமிழ்நாடு 
வேதாளம் - இந்திய அளவு 
இப்போது விவேகம் - சர்வதேச அளவுக்குப் போயாச்சு.
இந்தியாவுக்குள் எட்டிப் பார்க்கவில்லையே..
அப்போ... 
அடுத்த subject Space, UFO அப்படியேதாவது?? 🤔😯


June 18, 2017

CT 17 - இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் - பலப் பரீட்சையில் ஜெயிக்குமா பாகிஸ்தான்?


ஒரு இந்திய - பாகிஸ்தான் மோதல்..
எனினும் முன்னைய ஷார்ஜா, டொரொண்டோ, ஏன்  ஆசியக் கிண்ண மோதல் அளவுக்கு பரபரப்பும் எதிர்பார்ப்பும் இல்லை.
காரணம் அண்மைக்கால இந்தியாவின் எழுச்சி + ஆதிக்கம் & பாகிஸ்தானின் சரிவும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சரணாகதியாகும் அளவுக்கான தடுமாற்றம்.

எனினும் இந்தப் பாகிஸ்தான் அணி கொஞ்சமாவது எதிர்பார்க்க வைக்கிறது.
காரணம் கறுப்புப் பக்கங்களோடு சம்பந்தப்பட்ட ஒரு சில வீரர்கள் பாக்.அணியில் இருந்தும் அதை விட துடிப்பான இளைய இரத்தம் பாய்ச்சப்பட்டு சப்ராஸ் என்ற ஒரு போராளி தலைவராக இருப்பது.

இந்தியாவுக்கோ நிதானமும் அனுபவமும் சேர்ந்த தோனி  அணியைத் தேவையான போது திடப்படுத்த ஆக்ரோஷமும் மோதும் ஆற்றலும் கொண்ட கோலியின் தலைமையிலான இந்தியா முழுக்கவே புதியது.
எந்த அணியாக எதிரணி இருந்தாலும் வெல்ல முயற்சிக்கும்.

அமீர் மீண்டும் பாகிஸ்தான் அணியில்..

300+ ஆடுகளம் ஒன்றில் இரண்டு அணிகளுமே தங்களது உறுதியான பந்துவீச்சாளர்களின்  30 முக்கியமான ஓவர்களை இறுக்கமாக்கிக் கொள்ளவே பார்க்கின்றன.

பாகிஸ்தானுக்கு இமாத் வசீம் தன்னை ஒரு விக்கெட்டுக்கள் பறிக்கும் சகலதுறை வீரராகவும், இந்தியாவுக்கு அதே பாத்திரத்தை ஜடேஜா ஏற்பதிலுமே இன்றைய போட்டியின் சாதகத்தன்மை தங்கியுள்ளது என்பேன்.
அஷ்வினின் சுழலையும் இன்று இந்தியா அதிகமாக எதிர்பார்க்கும்.
பாகிஸ்தானுடன் முதலாவது போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய உமேஷ் யாதவ் அஷ்வினுக்குப் பதிலாக விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்தேன்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் கலக்கும் அணி என்றால் இந்தியா துடுப்பாட்ட அணி.
அதிகூடிய ஓட்டங்களைக் குவித்துள்ள முதலிருவரும் (தவான், ரோஹித் ஷர்மா) இந்தியரே. இவர்கள் இருவருடன் இலங்கையுடன் பூஜ்ஜியம் பெற்றாலும் மற்ற மூன்று போட்டியிலும் அரைச்சதங்கள் பெற்ற அணித்தலைவர் விராட் கோலியும் அசுர ஓட்டக்குவிப்பில் இருக்கிறார்கள்.
Dhawan, Rohit & Kohli vs Junaid, Amir & Hasan Ali

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள ஹசன் அலி 15 - 40 வரையான ஓவர்களைத் தீர்மானிக்கப்போகும் சூத்திரதாரி.
இந்த ஓவர்களில் தக்கவைக்கும் விக்கெட்டுக்களும், சேகரிக்கப்போகும் ஓட்டங்களும் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும்.

300 ஓட்ட ஆடுகளம் என்பதால் பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள் குறிவைக்கப்படுவார்கள்.
அதிலே இந்தியாவின் பலம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் அடிக்கடி Panickstan ஆவதால்..
இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை நீண்டதும் நம்பிக்கையானதுமாகத் தன்னை நிரூபித்திருப்பது.

சப்ராஸ் இலங்கைக்கு எதிரான போட்டியில் காட்டியது போன்ற பொறுமையையும், அசார் அலி அரையிறுதியில் காட்டிய நிதானத்தையும் இன்று காட்டவேண்டும்.
புதியவர் ஃபக்கார் சமான் பாகிஸ்தானின் ஆரம்பத் தலைவலியைப் போக்க வந்திருக்கும் வரம்.
அதே போல இந்தியாவின் ஆரம்ப ஜோடியும் பாகிஸ்தானின் அமீர்- ஜுனைத்த்தை தாண்டுவதில் இன்றைய போட்டியின் போக்கு இருக்கும்.

களத்தடுப்பு என்னும் பலவீனம் இரு அணிகளிடம் இருந்தாலும் ஜடேஜா, பாண்டியா போன்றோரால் இந்தியா மேவி நிற்கிறது.

தலைவர்களில் கோலியை விட சப்ராஸ் உணர்ச்சிவயப்படுத்தலைக் கட்டுப்படுத்தி நிதானமாக நிலைமையைக் கையாளக் கூடியவர். எனினும் கோலியின் ஆக்ரோஷமான, கவனம் சிதறாத துடுப்பாட்டம் மூலம் இந்தக் குறையை கோலி நிவர்த்தி செய்துவிடுகிறார்.
விக்கெட் எடுத்தால் கொண்டாடும், தனது சாதுரியப் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களைத் தடுமாற வைக்கும் ஹசன் அலி- கோலி  மோதல் இடைப்பட்ட ஓவர்களில் சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படியான முக்கிய போட்டிகளின் அனுபவத்தில் இந்தியா முந்தி நிற்பதும், இந்தியாவுடனான போட்டிகள் என்றவுடனேயே பாகிஸ்தான் பயந்து நடுங்கியோ, காரணமின்றிய ஒரு அழுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமாவதை அடிக்கடி கண்டபிறகு இந்தியாவுக்கே இன்று அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கிறேன் :)

அத்துடன் நாணய சுழற்சி வெற்றியும், இந்தியாவின் அண்மைக்கால பலமான துரத்தியடித்தலும் சேர்ந்துகொள்கிறது இன்று. பாகிஸ்தான் இந்தியாவின் அதிரடி விளாசலில் இருந்து தப்பிக்கவேண்டுமாக இருந்தால் 300+ ஓட்டங்களைப் பெறுவதோடு ஆரம்ப விக்கெட்டுக்களை உடைக்கவேண்டும்.
பாகிஸ்தானின் ஓட்டக் குவிப்பைத் தடுக்க இந்தியாவின் ஆரம்ப ஓவர்களில் இன்று உமேஷ் யாதவ் இன்மை இந்தியாவைப் பாதிக்கும்.
எனினும் இந்தியாவின் வாய்ப்பே இன்று அதிகம்.

பி.கு - வரலாறும் அவ்வாறே சொல்கிறது ;)

இவ்விரு அணிகளும் தம்மிடையே மோதிய 128 போட்டிகளில் 72 தடவை பாகிஸ்தானும் 52 தடவை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. (4 போட்டிகள் முடிவில்லை)

எனினும் ICC தொடர்களில் 8 க்கு 2 என்னும் கணக்கில் இந்தியா முன்னிலை பெறுகிறது.
(T 20 போட்டிகளையும் சேர்க்கையில் அது 13 -2 என மாறுகிறது)
ஆனால் (ஷார்ஜா போட்டிகளின் கைங்கர்யத்தில்) ஒரு நாள் போட்டிகளின் இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் 7 போட்டிகளையும் இந்தியா 3 போட்டிகளையும் வென்றுள்ளன.

மேலதிகமாக இந்தியாவின் அரையிறுதி வெற்றி போலவே, Michael Vaughanஉம் இன்று இந்தியாவே வெல்லும் என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைய இறுதிப் போட்டி பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை, தரவுகள் + விளக்கங்களுடன் ஒரு புதிய இணையத் தளத்துக்காக இங்கே எழுதியுள்ளேன்.
வாசித்துப் பகிருங்கள்..
உங்கள் விமர்சனங்களையும் வழங்குங்கள்.


June 15, 2017

இந்தியாவுக்கு இலகுவா? பழி தீர்க்குமா பங்களாதேஷ்? #CT17 - நேற்று பாகிஸ்தான்.. இன்று?

நேற்று பாகிஸ்தான்.. இன்று?
ஒரு மாதிரி ஆனானப்பட்ட இங்கிலாந்தையே வீட்டுக்கு அனுப்பீட்டிங்கள்ள என்று தகவல் அனுப்பி, கருத்திட்ட அன்புள்ளங்களுக்கு நன்றிகள் 
நம்ம விக்கி - (அச்சச்சோ விக்கிரமாதித்தன் என்று சொல்வதே இந்தக் காலகட்டத்தில் நல்லது. ) யின் ஆற்றல் இப்படித்தான் சில நேரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.
பாகிஸ்தானின் அசத்தல் அப்படி.. வாழ்த்துக்கள்.
அவர்களால் எதுவும் முடியும்.. அவர்களே நினைத்து, விரும்பினால் என்பதை நேற்று(ம்) நிரூபித்திருந்தார்கள்.

இங்கிலாந்துக்குத் தான் கிண்ணம் என்று நான் உட்பட எண்ணி வைத்திருந்த அத்தனை பேர் முகத்திலும் கிலோக்கணக்கில் கரியை அப்பிப் பூசி விட்டனர் பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள்.

இங்கிலாந்து அணியைத் தடுமாற வைத்தது பாகிஸ்தானின் மத்திய நேர ஓவர்கள் தான்.
குறிப்பாக நேற்றைய நாயகன் ஹசன் அலி தான். இலங்கை அணியையும் சிதறடித்த ஒரு முக்கிய பந்துவீச்சாளர். துல்லியமான குறியுடன் அபரிதமான வேகமும் கொஞ்சம் reverse swing உம்  சேர்ந்தால் இந்த ஹசன் அலி.
விக்கெட் எடுத்த பிறகு இவர் எடுக்கும் திருவிழா தான் கொஞ்சம் கடுப்பேற்றும் விடயம்.


தவிர, அமீரின் உபாதை காரணமாக நேற்று அறிமுகமான ருமான் ரயீஸின் துல்லியமும் கவனிக்கக்கூடியது.
ஜுனைத் கான் இன்னொரு பக்கம் திடமாக, தூணாக.
இங்கிலாந்து அணியின் தடுமாற்றம் எந்தவொரு கட்டத்திலும் நேற்று அவர்களை தலை நிமிர விடவில்லை.
எந்தவொரு துடுப்பாட்டவீரரும் அரைச்சதம் பெற முடியாமல் போன அளவுக்கு பாகிஸ்தான் மிகத்துல்லியம்.

எனினும் பாகிஸ்தான் வழமையாக செய்வது போல துடுப்பாட்டத்தில் சிறிய இலக்காக இருந்தாலும் தடுமாறி தாமாகவே விக்கெட்டுக்களைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தது நேற்று நடக்காமல் போனது.
இலங்கைக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டமும் சப்ராசும் காப்பாற்றியது போல தேவையின்றி இலகுவான வெற்றி.
இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களால் எந்தவொரு சிறு அழுத்தத்தையும் கொடுக்க முடியவில்லை.

அடித்தளம் போட்டுக்கொடுத்த ஆரம்ப ஜோடி பாகிஸ்தானின் நீண்ட தலைவலிக்கு மிகப்பெரிய நிவாரணி.
ஃபக்கார் சமான்  பாகிஸ்தானுக்கு ஒரு வரம் தான். நிதானமான அசார் அலிக்கு பொருத்தமான ஒரு ஜோடி.
1999க்குப் பிறகு முக்கியமான ஒரு தொடரின் இறுதியை எட்டியுள்ளது பாகிஸ்தான்.

அத்துடன் Champions Trophy வரலாற்றில் இரண்டாவது தடவையாக இரு ஆசிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இது.
2002இல் இதற்கு முதல் இந்தியாவும் இலங்கையும் சந்தித்த இறுதிப்போட்டி மழையினால் கழுவப்பட்டு இரு அணிகளும் கிண்ணம் பகிரப்பட்டது.

எல்லாம் சரி..
பாகிஸ்தானின் ஆற்றல், அபாரமான ஆட்டத்தை வாழ்த்தாமல், ஆடுகளத்தன்மை தமக்கு சாதகமாக அமையவில்லை என்று குறைப்பட்டுக்கொண்ட இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கனை என்னவென்பது?
அவர் மீதான மதிப்பு அப்படியே சரேலென இறங்கிட்டது.

இங்கிலாந்து ஆடுகளம் ஒன்றிலேயே அவர்களது வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை என்று தாங்கள் முன்பு ஆடிய ஆடுகளங்கள் போல அமையவில்லை என்று குறைப்பட்டு நொண்டிச் சாக்கு சொல்லி இவர் மீது நாம் அனைவருமே வைத்திருந்த மிகப்பெரிய பிம்பத்தை சிதைத்துக்கொண்டார்.

உண்மை தான் எமக்கே இங்கிலாந்தின் தோல்வி அதிர்ச்சியைத் தந்தது என்றால் ஒரு இலட்சிய அணியை 2019 உலகக்கிண்ணம் நோக்கி உருவாக்கி வரும் மோர்கனுக்கு அடித்து மிகப்பெரிய தாக்கமாக தான் இருந்திருக்கும்.
ஆனால் நேற்று மோசமாக விளையாடியதை ஆடுகளத்தை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஏற்றுக்கொள்வதே சரியானதாகும்.

பாகிஸ்தானின் நேற்றைய வெற்றியும்  இந்த உத்வேகமும் கிண்ணம் மீதான அவர்களது ஒரு குறி இறுகியிருப்பதைக் காட்டுகிறது. ஆனால் இன்னமும் இவர்கள் அடுத்த போட்டியில் எப்படி சொதப்புவார்களோ என்ற ஒரு அவநம்பிக்கையைத் தராமல் இல்லை.
அதிலும் இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்தால் பேய். பிசாசைக் கண்டது போல பதறித் துடித்து தாமாகவே வீழ்ந்து போவது எப்போது மாறும்?

-------------------------

 இன்றைய அரையிறுதி பங்களாதேஷ் அணியைப் பொறுத்தவரையில் முதலாவது. ICC தொடர்களில் அவர்கள் இதுவரை எட்டிப் பார்க்காத ஒரு கட்டம் இது.
இரு தடவைகள் வங்கப் புலிகள் இப்படியான கட்டத்தை எட்ட நினைத்தவேளையில் அவர்களது கனவைக் கருக்கிய, கிட்ட வந்த வாய்ப்பை இல்லாமல் செய்த அதே எதிரியை இன்று அரையிறுதியில் சந்திக்கிறார்கள்.
இறுதியாக இவ்விரு அணிகளும் ICC தொடர் ஒன்றின் முக்கிய போட்டியில் மோதியபோது நடந்தது சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் ஞாபகமுள்ள ஒரு விடயமே..
அவசரப்பட்டு கொண்டாடி ஒரே ஒரு ஓட்டத்தினால் பங்களாதேஷ் தோற்றுப் போனது.

http://www.espncricinfo.com/…/eng…/current/match/951353.html
அதற்கு முதல் 2015 உலகக்கிண்ணக் காலிறுதி..
ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பு சர்ச்சை, பின்னர் இரு அணிகளின் ரசிகர்களின் சமூக வலைத்தள மோதல்கள் என்று இன்று வரை கசப்பு தொடர்கிறது.
எனினும் இப்போது பங்களாதேஷ் அடைந்துள்ள முன்னேற்றம், 2015 உலகக்கிண்ணத்துக்குப் பின்னர் படிப்படியாகக் கண்ட முன்னேற்றங்களின் காரணகர்த்தாவாக ஒரு இலங்கையர் - பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க காரணமாக இருந்தாலும், இந்த மாற்றத்தின் விதை இன்று சந்திக்கவுள்ள இந்தியாவுடனேயே விதைக்கப்பட்டது என்பது பலரும் அவதானிக்காத ஒரு விடயம்.


2015இல் இந்தியா பங்களாதேஷுக்கு விஜயம் செய்து விளையாடிய ஒருநாள் தொடர் தான் அது.
தோனியின் தலைமையிலான முழுப்பலம் வாய்ந்த இந்திய அணியைத் துவம்சம் செய்ய பங்களாதேஷ் எடுத்த ஆயுதம் தான் நான்கு முனை வேகப்பந்துவீச்சு.
முஸ்டபிசூர் ரஹ்மான் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் முறையே 5,6 என்று விக்கெட்டுக்களை அள்ளியெடுத்து இந்தியாவை சுருட்டியிருந்தார்.
அதன் பின்னர் தான் வங்கப் புலிகள் சொந்த மண்ணில் வந்த அணிகளையெல்லாம் வேட்டையாடி மகிழ்ந்து பலம் பெற்று, பின் இலங்கையில் வைத்தே சிங்கங்களை சிதறடித்துவிட்டு தங்கள் பலம் அப்படியொன்றும் திடீரெனக் கிடைத்த மாயாஜால வரம் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள்.
படிப்படியாகக் கட்டமைக்கப்பட்ட பங்களாதேஷ் அணிக்கு இந்த Champions Trophy இல் தங்கள் எழுச்சியை அடையாளப்படுத்திக்கொள்ள நியூசீலாந்து அணிக்கெதிரான வெற்றி உதவியிருக்கிறது. இன்றைய போட்டி பங்களாதேஷின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை எழுத உதவலாம்.

எனினும் கோலி தலைமையிலான இந்தியா இலங்கை அணியுடன் கண்ட சறுக்கல், கொஞ்சம் மிதப்பில் இருந்த நடப்புச் சாம்பியன்களுக்கு விழிப்பைக் கொடுத்துள்ளது போல தெரிகிறது.
ஏற்கெனவே துடுப்பாட்டத்தில் தனது வலிமையை நம்பியுள்ள இந்தியா அண்மைக்காலமாகஆடுகளங்களுக்கு ஏற்ப பந்துவீச்சின் வியூகங்களை மாற்றும் திடத்தைக் கொண்டுள்ளது.

இந்திய, ஆசிய ஆடுகளங்கள் என்றால் (பகுதி நேரப் பந்துவீச்சாளரையும் சேர்த்து) சமயத்தில் நான்கு சுழலையும் பயன்படுத்துவதும், வெளிநாடுகளில் புவனேஷ்குமார், பும்ரா, யாதவ், பாண்டியா என்று வரிசையாக அடுக்கக்கூடிய நம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது.
இன்றும் இந்திய அணிக்கான வாய்ப்புக்களே மிக அதிகம் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
தமீம் இக்பாலின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், கடைசியாக நடந்த போட்டியில் ஷகிப், மஹ்மதுல்லாவின் சதங்கள் என்று பங்களாதேஷ் ஓட்டங்களோடு உலா வர, தவானின் உச்சபட்ச உற்சாக ஓட்டங்களும், மீண்டும் எழுந்துள்ள கோலியின்துடுப்பாட்ட அதிரடியும் இந்தியாவுக்கு திடம் அளித்துள்ளது. இது தவிர தோனியின் அனுபவம் ஒரு பக்கம், இன்று முன்னூறாவது போட்டியில் ஆடும் யுவராஜ் சிங்கின் அடித்து நொறுக்கும் அதிரடி form என்பன மேலும் பெரிய பலங்கள்.
முக்கியமாக இப்படியான அழுத்தம் நிறைந்த போட்டிகளை சமாளிக்கும் அனுபவத்திறன் இந்திய அணிக்கு அதிக சாதகத் தன்மையை இன்றைய நாளில் வழங்கலாம்.
எனினும் இதைக் குறித்துக்கொள்ளுங்கள்...
ஆரம்ப ஓவர்களில் பறிக்கப்படும் விக்கெட்டுகளும், 20 - 40 ஓவர்களில் சேர்க்கப்படும் ஓட்டங்களும் தான் போட்டியின் போக்கை தீர்மானிக்கும்.
இதற்கு களத்தடுப்பு முக்கியமாக அமையும்.
முக்கியமான பிடிகளைத் தவறவிடும் அணி (இலங்கையைப் போல), ரன் அவுட் வாய்ப்புக்களை நழுவவிடும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பது உறுதி.

கால்பந்து உலகக்கிண்ணத்தில் ஒக்டோபஸ் போல இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோன் வேறு இன்று இந்தியா வெற்றிபெறும் என்று ஆரூடம் சொல்லி இந்திய ரசிகர்களின் சாபத்தை வாங்கிக் கட்டியுள்ளார் 

நான் அப்படியெல்லாம் இல்லாமல் - நேற்று சொன்ன மாதிரியே பலத்தை அடிப்படையாக வைத்தே ஏன் கணிப்பை முன்வைத்துள்ளேன். (நம்புங்கப்பா..
டீல் பேசலாம் என்று சொல்லியும் யாரும் சீரியசாக அணுகவில்லை என்பது பயங்கர ஏமாற்றமே)
நாணய சுழற்சி வெற்றி மூலம் இந்தியா முதலாவது வாய்ப்பைத் தனதாக்கியுள்ளது.
ஆடுகளத்தின் சாதகத்தை தனது பந்துவீச்சாளருக்கு முதலில் விக்கெட்டுக்களை எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
பங்களாதேஷ் 320 ஓட்டங்களையாவது குவித்துக்கொண்டாலே தங்கள் நான்கு வேகப்பந்துவீச்சாளரோடு இந்த உலகக்கிண்ணத்தின் மற்றொரு upsetஐ நிகழ்த்தலாம்.
(இந்தியாவோடு எப்போதுமே சிறப்பாக செய்யும் ருபெல் + முஸ்டாபிசூர் ஆகியோரைக் கவனியுங்கள்)
இல்லாவிடில் இந்தியா வெறியோடு துரத்தி அடிக்கும்.
(பதிவு அடித்து ஏற்றும் இந்த நேரம் ஷகிப் அல் ஹஸனின் விக்கெட்டும் போயிருப்பது போட்டியை இந்தியாவின் பக்கம் நகர்த்தியுள்ளது என நம்புகிறேன். 280 வரை ஓட்ட எண்ணிக்கையைக் கொண்டுபோனால் மேக  மூட்டமான சூழ்நிலையில் மின்விளக்குகளும் ஒளிரும் நிலையில் பங்களா பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் அழுத்தங்களை ஏற்படுத்தலாம்)

இன்று அது நடந்தால்... Champions Trophy இன் சரித்திரத்தின் மிகப்பெரிய தலைகீழ் முடிவாக அமையும்.
இந்தியா வென்றால் இந்தோ - பாக் மோதலுக்கு கிரிக்கெட் உலகமும் சமூக வலைத்தளங்களும் தயாராகிவிடும் 
இன்றைய மழை கலந்த காலநிலை போட்டியின் முடிவில் Duckworth Lewis ஐ அழைக்கும் வாய்ப்பும் நிறையவே இருப்பதாகவே தெரிகிறது.
இன்றைய நாள் இனிதாகட்டும் 

June 14, 2017

CT 17 யாருக்கு? யார் கிண்ணத்தை வெல்லவேண்டும்?


இலங்கையின் கிண்ணக் கனவு கலைந்தது..
(மெல்லிய கோடாக மட்டுமே இருந்த நம்பிக்கைக்கு இந்தியாவுக்கு எதிரான வெற்றியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கட்டங்களும் சின்னதொரு ஆசையை ஊட்டியது காலத்தின் கோலம் தான் )
*இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம், குறிப்பாக தடுமாறும் பந்துவீச்சு பற்றி விரிவான ஒரு இடுகையை Champions Trophy தொடர் முடியும் நேரம் தரலாம் என்று நம்பியிருக்கிறேன்.

ஆனால் மூன்று ஆசிய அணிகளோடும் போட்டிகளை நடத்தும் நாடும் அதிக வாய்ப்புடைய நாடும், இந்தத் தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோற்காத ஒரே அணியுமான இங்கிலாந்தோடும் இன்றும் நாளையும் அரையிறுதிகள்.
நிறையப்பேருக்கு இப்போதிருக்கும் ஆர்வம், என்னைப்போன்ற இலங்கை ரசிகர்கள் எந்த அணிக்கு ஆதரவு என்று..
அநேகரின் ஊகம் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடாது என்று எல்லா இலங்கை ரசிகர்களும்வேண்டிக்கொள்வார்கள் என்பதே,,
காரணம் கலாய்த்தல்கள், கேலிகளாக ஆரம்பித்து துவேசம் கக்கி, தூசன மோதலாக தனிப்பட்ட பகைத் தாக்குதல்களாக மாறி நிற்கிறது இலங்கை - இந்திய ரசிகர் மோதல்கள்.
ஆனால், நான் முன்னரே சொன்னது போல இம்முறை அதிக வாய்ப்புடைய இரு அணிகளாக Champions Trophy ஆரம்பிக்க முதலே நான் சொல்லி வைத்த இரு அணிகளான இந்தியா - இங்கிலாந்து (2013 இறுதி போல) சந்திக்கத் தான் அதிக வாய்ப்புத் தெரிகிறது.

எனினும் இதுவரை கிண்ணம் வெல்லாத அணிகளில் ஒன்று - பாகிஸ்தான் தவிர்த்து வெல்வதே எனக்கு இப்போது விருப்பம்.
(பாகிஸ்தான் அந்த அணியின் நிறைந்து கிடக்கும் திறமை, உத்வேகம் தாண்டி ஊழல், சந்தேகம் ஆகியவற்றின் நிழல் இன்னும் படிந்து கிடப்பதாலும் முக்கியமான போட்டிகளில் நம்பமுடியாமல் சொதப்பிவிடுவதாலும் வேண்டாம்)
இந்தியாவுக்கும் வேண்டாம்..
போன முறை வென்றார்களே..
இப்போது இந்திய ரசிகர்கள் - Indian hater இடம் இதைத் தானே எதிர்பார்க்கலாம் என்று சிரிப்பது தெரிகிறது.
இருக்கட்டும்..
நடப்புச் சம்பியன்கள் மீண்டும் வெல்வதை விட, புதிய அணி ஒன்று வெல்வது கிரிக்கெட்டுக்கும் நல்லது இல்லையா?


2015 உலகக்கிண்ணம் முதல் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, அனேக அணிகளை சொந்த மண்ணிலும், வெளி மண்ணிலும் வீழ்த்தி,எழுச்சி கண்டு வரும் பங்களாதேஷுக்கு இந்த வெற்றிக்கிண்ணம் 1996 உலகக்கிண்ணம் இலங்கைக்குக் கொடுத்த உத்வேகத்தையும் புத்தெழுச்சியையும் கொடுக்கும்.
ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹீம், தமீம் இக்பால் போன்ற இப்போது அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களோடு, அணித் தலைவர் மோர்ட்டசாவுக்கும் இத்தனை காலம் பட்ட கஷ்டங்களுக்கும் இட்ட முயற்சி விதைகளுக்கும் நல்ல அறுவடையாக அமையும்.

பலருக்கு பங்களாதேஷ் அணியைப் பிடிப்பதில்லை - அவர்களது ரசிகர்களின் அளவுகடந்த அலப்பறை காரணமாக.
அந்த ஆர்வக்கோளாற்றுக்கு காரணம் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்.
சகல துறையிலும் நேர்த்தி பெற்ற அணியாக சர்வதேசத் தரம் வாய்ந்த இளம் வீரர்களோடு பங்களாதேஷ் எழுந்து வருகிறது.
இது புலிகள் அவர்களுக்கான நேரம்.

ஆனால், பங்களாதேஷை விட இந்த CT 2017 ஐ வெல்ல மிகப் பொருத்தமான அணி இங்கிலாந்து.

2010இல் இதுவரை இங்கிலாந்து வென்றுள்ள ஒரேயொரு உலகக்கிண்ணமான World T20 வென்ற Collingwood இன் தலைமையிலான அணியை விட உறுதியான அணி.
பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என்று சகலதுறையிலும் பலம் பொருந்திய அணி.
அடுத்த உலகக்கிண்ணத்தைக் குறி வைத்து பொறுக்கி எடுத்து உருவாக்கப்பட்ட அணி.
கடந்த ஒன்றரை வருடகாலமாக எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் அணி.
ஒருநாள் துடுப்பாட்டத்தில் உலகின் மிகச்சிறந்தவரிசை இங்கிலாந்தினுடையது என்று அடித்துச் சொல்வேன்.
மற்ற அணிகளில் இப்படியொரு அதிரடி ஆட்டம் ஆடும் Bairstow போன்ற வீரரை இன்று வரை அணிக்கு வெளியே வைத்திருக்க மாட்டோம்.
முதற்தர தெரிவான சகலதுறை வீரர் வோக்ஸ் காயமடைந்து இரண்டு ஓவர்களோடு முதல் போட்டியிலேயே வெளியேற தடுமாறாமல் அவரது பிரதியீடு ஜேக் போல் அள்ளிஎடுக்கிறார் விக்கெட்டுக்களை.
இம்முறை வெல்லாவிட்டால் வேறு எப்போது என்னும் அளவுக்கு சொந்த மண்ணில் வாய்ப்புக் காத்துக் கிடக்கிறது.
வெல்லட்டும் மோர்கனின் அணி.

(CT17 தொடர் ஆரம்பிக்க முதலே இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் மீதான நம்பிக்கையீனமும் சேர்ந்துகொள்ள நமக்கு நெருக்கமான நண்பர்களிடம் "இங்கிலாந்து அணிக்குக் கிண்ணம் கிடைப்பதே பொருத்தமானதும் அந்த அணி அண்மைக்காலமாகக் காட்டிவரும் அதீத ஈடுபாடு + அர்ப்பணிப்புக்கும் பரிசுமாகும்" என்று சொல்லி வைத்திருந்தேன்)

இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் இறுதிப்போட்டி ஒரு சுவாரஸ்யமானதாக அமையும்.
இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் தான் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை நம்பி இந்த ஆடுகளங்களில் பயன்படுத்தும் ஒரே அணி.
ஆசிய அணி ஒன்று இப்படி உறுதியான முடிவோடு விளையாடுவது அந்த அணியின் மீதும் ஹத்துருசிங்க, மோர்ட்டசா மீதும் மதிப்பை ஏற்றி வைக்கிறது.

ஆனால், கணிப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தாண்டி கிரிக்கெட்டில் எதிர்பாராதவை நடைபெறுவதும் உண்டு.
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியை விரும்பும் 'போர்' விரும்பிகளும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் ஆதிக்கமும் அசுர பலமும் எல்லோரும் அறிந்தவை.

கோலி என்ற ஆக்ரோஷம் மிக்க தலைவரே போதும், தரையோடு தரையாக வீழ்ந்து கிடக்கும் அணியைத் துள்ளிப்பாயும் வேங்கைகளாக மாற்றிவிட.
தோனியின் சாதுரியமும் அனுபவமும் சேர்ந்துகொள்ள அவர்களது துடுப்பாட்டப் லமும் துணையாக இருக்கிறது. கூடவே பந்துவீச்சு - இலங்கை அணி துரத்தி அடித்த அந்தப் போட்டி தவிர இதுவரை காலமும் ஒருநாள் போட்டிகளின் ஸ்திரமான பந்துவீச்சாகத் தெரிந்ததும் தெரிவதும் இதுவே. எந்த அணியையும் தடுமாற வைக்கக்கூடியது.

2013 இறுதிப்போட்டி போல இந்தியாவின் வெற்றி அலை தொடரலாம்.

அல்லது தோல்விகளிலிருந்து மீண்டு 1992இல் கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தியது போல பாகிஸ்தான் சப்ராசின் தலைமையில் எழுந்தாலும் அதிசயமில்லை.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு அதிரடியும் ஓட்டக்குவிப்பும் கலந்த ஆரம்ப ஜோடி கிடைத்துள்ளது. ஹபீஸ், ஷோயிபின்  அனுபவம், அசார் அலியின் நிதானம், இளைய வீரர்களின் அதிரடி, சப்ராஸின் கூலான அணுகுமுறை, பலமும் பயங்கரமும் நிறைந்த வேகப்பந்துவீச்சு.
இதை விட ஒரு பாகிஸ்தான் அணி எப்படியிருக்கவேண்டும்?
ஆனால் எதிராணிகளால் சுருட்டப்படுவதை விட பாகிஸ்தான் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்வது தான் அதிகம். சப்ராஸ் + அமீரினால்  இலங்கைக்கு எதிராக அப்படியொரு  தோல்வியடையாமல் தப்பித்துக்கொண்டது. ஆனால் கடந்த போட்டியின் நாயகர்களில் ஒருவரான மொஹமட் அமீர் உபாதை காரணமாக இன்று விளையாடவில்லை.

சுருக்கமாக - திறமையை அந்தந்த நாளில் காட்டும் அணிகளில் ஒன்று வெல்வதில் நாம் என்ன சொல்ல முடியும் 
கொள்ளுப்பிட்டி பிலாவூஸ் மட்டன் கொத்து மொரட்டுவையில் உள்ள திசர பெரேரா (இது வேற திசர) வீட்டு நாய்க்குத் தான் கிடைக்கும் என்றால் அதை யாராவது மாற்ற முடியுமா? 

*எனது Facebook நிலைத்தகவலாக இன்று பகிர்ந்ததை மேலும் விரித்து இங்கே பதிவிட்டுள்ளேன்.

January 06, 2017

M.S.தோனி 'திடீர்' பதவி விலகல் - காரணங்கள்? மர்மங்கள்?? ஒன்றா இரண்டா...

"தோனியின் ஓய்வு - தவறான நேரத்தில் ஒரு சரியான முடிவு !!! "

​2014இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ​ஒய்வு பெறும் செய்தி தெரிந்தவுடன் எழுத ஆரம்பித்த கட்டுரையின் தலைப்பாக நான் எழுதிய வரிகள்.

இப்போது ஒருநாள் + T20 தலைமையை விட்டு தோனி விலகியிருக்கும் நிலையில் -

தக்க நேரத்தில் சாதுரியமான முடிவு என்று சொல்லவேண்டியுள்ளது.


கோலியின் அமர்க்களமான ஓட்டக் குவிப்பும், தொடர்ச்சியான வெற்றிகளும் (அவை இந்தியாவிலே மட்டுமே இதுவரை எனினும் - வெளிநாட்டு போட்டிகளில் மிகப்பெரும் சவால் இருக்கும் என்பது சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தாலும்) தோனிக்கு கொடுத்த அழுத்தம் இந்த முடிவுக்கான பிரதான காரணியாக இருந்தபோதிலும்,

அனுராக் தாக்கூருக்கு விழுந்த ஆப்பு, BCCI தலைவராக வரப்போவராக எதிர்பார்க்கப்படும் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிகளின் எழுச்சி, கோலியின் பின்னால் திரண்டு நிற்கும் பயிற்றுவிப்பாளர் கும்ப்ளே மற்றும் அணியின் முக்கிய வீரர்கள், சிம்பாப்வேயில் வைத்து அணியாகவும் வீரராகவும் தடுமாற்றம், அமெரிக்காவில் WI உடன் T20 தொடர் தோல்வி, சொந்த மைதானங்களில் வைத்து, முழுமையான அணியிருந்தும் நியூ சீலாந்துடன் திக்கித் திணறி கடைசிப் போட்டியில் வைத்தே தொடரை வெல்லவேண்டியிருந்தது என்று பல துணைக்காரணிகளும் (இவற்றைவிட சற்றே பழைய CSK, ஸ்ரீனிவாசன் பூதங்களும் ஆவிகளும் மேலதிகமானவை) பின்னணியில் இருக்கின்றன.

M.S. Dhoni: The Untold Story
படம் போலவே தோனி என்ற ராசிக்கார, வெற்றிகரமான Finisherஇன் முன்னைய வெற்றிகளின் வெளிச்சத்தில் அண்மைய சறுக்கல்களும் - திடீர் அறிவித்தலுக்கான உண்மைப் பின்னணியும் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை.

இங்கிலாந்துக்கு எதிரான சிறு சறுக்கல் கூட, அணியை விட்டு finisherஐ finish பண்ணவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும். அண்மையில் கூட 2019 உலகக்கிண்ணம் வரை (தலைவராகவும்) விளையாடவிருப்பதாக திடமாகக் கூறியிருந்தவர் கோலி தலைமையிலான அமோகமான வெற்றிகள் மூலம் வியூகத்தை மாற்றவேண்டியவராகியிருக்கிறார். மற்றும்படி இளவல் கோலிக்காக, இந்தியாவின் எதிர்காலத்துக்காக என்பதெல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சமே..

இனி ஆரம்பகால அதிரடியைத் துடுப்பாட்ட வீரர் தோனியாகக் காட்டாவிட்டால், இந்த முன்னாள் அணித்தலைவர் 2019 உலகக்கிண்ணம் என்ன, இந்தாண்டு Champions Trophyக்கு முன்னதாகவே 'திடீர்' ஓய்வையும் அறிவிக்கவேண்டி வரலாம்.

​மற்றும்படி,
தோனி என்கின்ற சாமர்த்தியமும் அதிர்ஷ்டமும் வாய்த்த ஐடியாக்காரரின் (ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தது போல) இன்னொரு But I had other ideas வகை அறிவிப்பும் (தோனி ரசிகர்களுக்கு) ஆச்சரியமும் தான் இந்த 'விலகல்'.

இனி வியூகம் வகுக்கும் கப்டனை பார்க்காவிட்டாலும் ஹெலி பறக்கவிடும் முன்னைய அதிரடி பினிஷரை பார்த்து ரசிக்க (நமது அணிகள் எதிராக விளையாடும்போது சபிக்க) கிடைத்தால் மகிழ்ச்சி தான்.

வாழ்த்துக்கள் தோனி.


Loshan Facebook Post
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified