December 26, 2014

Boxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித், பரிதாப இலங்கை, போராடும் இந்தியா

தமிழ் விஸ்டனுக்கான நேற்றைய எனது அலசலில், இரண்டு போட்டிகள் இன்று தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைக்கேற்ற மாற்றங்கள், மேலும் சில புதிய குறிப்புக்களுடன் இந்த இடுகை..

-----------------------------

நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட்.
தென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட்.
இந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன.

ஆனால், 
கிரைச்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ள நியூ சீலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியானது இவற்றிலிருந்து வேறுபட்டு தொடரின் முதல் போட்டியாக அமைகிறது.
ஆனால், ஆடுகளத் தன்மைகள், தட்ப வெப்ப நிலைகள், அணியின் நிலைகள் ஏன் அனுபவ நிலைகளில் கூட, போட்டியை நடாத்தும் நாடு தான் வாய்ப்பு அதிகம் உடையதாகக் காணப்படுகிறது.கிரைஸ்ட்சேர்ச்  நகரம் டிசெம்பர் 26 கிரிக்கெட் போட்டி என்றவுடன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான ஒரு Boxing Day நாளில் வந்த சுனாமி பேரழிவு நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.
இன்றும், நேற்றிரவும் இலங்கையில் காணப்படும் மாறுபட்ட காலநிலை அறிகுறிகள் வேறு பயமுறுத்துகின்றன.
(ஆனால் இதையெல்லாம் விட, இன்று நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலமின் துடுப்பாட்ட சூறாவளி தான் இலங்கைக்கு அதிக பாதிப்பு)

ஆனால் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நில அதிர்வு அனர்த்தங்களினால் முன்னைய கிரைஸ்ட்சேர்ச் - லங்காஸ்டர் பார்க் சேதமாகிவிட, அண்மைக்காலத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டும் நடத்தியுள்ள புதிய மைதானமான ஹக்லி ஓவல் (Hagley Oval) முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றை அரங்கேற்றுகிறது.
இப்போதைக்கு ஆடுகளத் தன்மைகள் பற்றி வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நியூ சீலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை காணப்படுவதாகத் தெரிகிறது.

டிம் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர்  ஆகிய மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சகலதுறை வீரர்களான மித வேகப்பந்துவீச்சாளர்களையும் சேர்த்துக்கொண்டு தாக்குதல் மழை பொழிய தயாராகிறது நியூசிலாந்து என்று நான் சொன்னது சரியாக அமைந்தது.

மறுபக்கம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு இளையது,அனுபவக் குறைவானது.
ஆனால் ஷமிந்த எறங்க, சுரங்க லக்மால், தம்மிக பிரசாத் ஆகிய மூவரும் சாதகமான சூழ்நிலைகளில் எந்த அணிக்கும் ஆச்சரியத்தை பரிசளிக்கக்கூடியவர்கள். (மூவரும் ஆரோக்கியமாக சேர்ந்தே விளையாடுவது மகிழ்ச்சி)
இங்கிலாந்து(ஹெடிங்க்லே), துபாய் டெஸ்ட் போட்டிகள் நல்ல உதாரணம்.

இன்று ஆரம்பத்தில் ஆடுகளத் தன்மைகளை ஓரளவு சாதகமாக்கி சிறப்பாகப் பந்துவீசிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் மக்கலமின் வருகையோடு தடுமாறிப்போனார்கள்.

ஆனால் ஹேரத் உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு. புதிய சுழல்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் எப்படியான ஒரு தாக்கத்தை வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது.
இன்று ஆரம்பத்திலே மிகக் கடுமையான மக்கலம் தாக்குதலுக்கு உள்ளான கௌஷால் மக்கலமையே தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டாக எடுத்தது சற்று ஆறுதல்.

ஆனால் இப்படியான அளவில் சிறிய மைதானங்களில், மக்கலம் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக அறிமுகம் ஆவது மனநிலையை சிதைத்துவிடும்.

டில்ஷான், மஹேல ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் சங்கக்கார, அணித் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரிடம் அதிகமாகத் தங்கியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக நம்பிக்கை தந்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அணியின் உப தலைவர் லஹிறு திரிமான்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணரவேண்டிய காலம் இது.
இந்திய அணியின் கோளி, விஜய், ரஹானே, புஜாரா போன்றோர் சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன் ஆகியோர் விட்டுப்போன இடங்களை மிகச்சிறப்பாக நிரப்பியது போல இலங்கை அணிக்கும் இது அத்தியாவசியத் தேவை ஆகிறது.

அத்துடன் பிரசன்ன ஜெயவர்த்தன மீண்டும் அணிக்குள் வந்திருப்பது துடுப்பாட்ட வரிசைக்கு ஓரளவு திடத்தைக் கொடுக்கும் எனலாம்.

மறுபக்கம் நியூ சீலாந்தோ அண்மைக்காலமாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் மூன்று துடுப்பாட்ட வீரர்களோடு மிகப் பலமாக நிற்கிறது.
அணித் தலைவர் பிரெண்டன் மக்கலம், ரோஸ் டெய்லர், இளம் வீரர் கேன் வில்லியம்சன் ஆகிய மூவருமே சதங்கள், அரைச் சதங்கள் என்று தொடர்ந்து குவித்து வருகிறார்கள். 

இன்று பிரெண்டன் மக்கலமின் அதிரடி, இந்த வருட ஆரம்பத்திலே இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற இரட்டைச் சதம் மற்றும் முச்சதம் ஆகியவற்றை ஞாபகப்படுத்தியது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கடந்த மாதம் இரட்டைச் சதம் பெற்றிருந்தார்.
இன்று ஆரம்பம் முதல் மக்கலமின் அதிரடி இலங்கையினால் கட்டுப்படுத்த முடியா அளவுக்கு மிக ஆவேசமானதாக இருந்தது.
நியூ சீலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் வேகமான சதம் பெற்ற மக்கலம் (74 பந்துகள்), 11 ஆறு ஓட்டங்கள், 18 நான்கு ஓட்டங்களோடு வெறும் 134 பந்துகளில் 195 ஓட்டங்களை எடுத்து அபார ஆட்டம் ஆடியிருந்தார்.

வெறும் 5 ஓட்டங்களாலும், ஒரேயொரு சிக்சராலும் மூன்று வேறு சாதனைகளைத் தவறவிட்டார்.

1.வேகமான டெஸ்ட் இரட்டைச் சதம் - இப்போதும் ஒரு நியூ சீலாந்து வீரரிடம் தான் இந்த சாதனை இருக்கிறது. 
நேதன் அஸ்ட்டில் - 153 பந்துகள் இங்கிலாந்துக்கு எதிராக 2001/02

2. ஒரு வருடத்தில் 200+ நான்கு பெறுபேறுகள் பெற்ற மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமப்படுத்த முடியாமல் போனது.

3.ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் பெறப்பட்ட அதிக சிக்சர்கள் - 
வாசிம் அகரம் சிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர்கள்.
மக்கலம் இதே மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராகவும் 11 சிக்சர்களை கடந்த மாதம் பெற்றிருந்தார். மீண்டும் தவற விட்டார்.

ஆனால் மக்கலமின் துணிகரமான அதிரடியும் பின்னர் ஜிம்மி நீஷமின் வேகமான ஓட்டக்குவிப்பும் இலங்கையை முதல் நாளில் பின்னால் தள்ளியுள்ளன.
எனினும் மத்தியூஸ் பெற்ற இரு விக்கெட்டுக்கள மூலம் ஆட்ட முடிவில் ஓரளவு சமாளித்துள்ளது இலங்கை.

இனி இலங்கை துடுப்பாடும்போது இதே மாதிரி ஓட்டங்களைக் குவிக்குமா என்பதும், இந்த ஆடுகளத்தில் நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாளுமா என்பதும் தான் முக்கியமான கேள்விகள்.

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றி 1995இல் நியூசிலாந்து மண்ணில் வைத்தே ஈட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  எனினும் அதன் பின்னர் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் 2006இல் பெறப்பட்ட ஒரேயொரு வெற்றி மாத்திரமே இலங்கைக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும்.

நான்கு தோல்விகளும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவும் இலங்கையின் அனுபவத்துக்கு திருப்தியானதல்ல.


கடந்த முறை ICC உலக டெஸ்ட் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்ட மத்தியூஸ் இளைய அணியை பலம் வாய்ந்த மக்கலமின் அணிக்கு எதிராக எவ்வாறு வழிநடத்துவார் என்பதை ஆர்வத்தோடு அறியக் காத்திருப்போம்.

-------------------
அவுஸ்திரேலிய - இந்திய அணிகள் இரண்டுக்குமே காயங்கள், உபாதைகள் தொல்லை தரும் ஒரு தொடராக அமைந்துள்ள இந்தத் தொடரில் இனி அவுஸ்திரேலியா தோற்க வழியில்லை.
இந்த Boxing Day டெஸ்ட்டில் தோற்காமல் இருந்தாலே தொடர்வெற்றி வசப்படும்.

புதிய அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இதை விட வேறு மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்?

ஆனால் இந்திய அணித் தலைவர் தோனிக்கு இன்னொரு முக்கியமான போட்டி. அவரது டெஸ்ட் தலைமைத்துவம் மற்றும் அணியில் இருப்பு ஆகிய இரண்டுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அழுத்தத்துடன் விளையாடவேண்டி இருக்கிறது.

இதற்குள் அணிக்குள் கோளி மற்றும் தவானுக்கு  இடையில் மோதல் என்று வேறு பரபரப்பு.

புவனேஷ்குமார் மீண்டும் விளையாடவருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்க, A தர ஒப்பந்தம் வழங்கப்பட்ட அவருக்குப் பதிலாக வருண் ஆரோனை நீக்கி மீண்டும் மொஹமட் ஷமியை இன்று விளையாடவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் மோசமான பெறுபேறுகளை அடுத்து அவரை நீக்கி சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க, A தர ஒபந்தம் வழங்கப்பட்ட அவரையும் அணியில் சேர்க்காமல் லோகேஷ் ராகுல் என்ற கர்னாடக இளைய வீரருக்கு அறிமுகம் வழங்கியிருக்கிறது.

இந்த ராகுல், இந்திய சுவர் - சிரேஷ்ட ராகுலினால் (டிராவிட்) பெரிதும் போற்றப்பட்டவர். அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய A அணிக்காக பிரகாசித்தவரும் கூட.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இளம் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பதால் இளம் துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ் இப்போட்டியில் அறிமுகம் ஆகிறார்.
இவ்வருடம் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தும் 5வது புதிய வீரர் பேர்ன்ஸ்.

இன்று சிறப்பாக ஆரம்பித்த பேர்ன்ஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதே போல ரொஜர்ஸ் மற்றொரு அரைச்சதம்.ரொஜர்ஸ் பெற்ற தொடர்ச்சியான அரைச்சதம். ஆனால் அரைச்சதங்களைப் பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாதது அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இழப்பே.

அதேபோல ஷோன் மார்ஷ். இன்றுமொரு முப்பது. தனது ஆரம்பங்களை பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.

டேவிட் வோர்னர், ஷேன் வொட்சன் ஆகியோர் வலைப் பயிற்சிகளின்போது கண்ட காயங்கள், உபாதைகள் குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ரயன் ஹரிசுக்கு வழிவிட்டுள்ளார்.

'சகலதுறை வீரர்' என்ற மகுடத்துடன் தான் அறிமுகமாகி 10 வருடங்களைப் பூர்த்தி செய்யும் ஷேன் வொட்சனுக்கும் நாளைய போட்டி ஒரு பரீட்சை தான். மிட்செல் மார்ஷ் போன்ற இளைய வீரர்களால் அவரது இடத்துக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கிறது.
இன்று சிறப்பாக ஆடி அரைச்சதம் பெற்றாலும் இது அவரது இடத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க போதாது.

தொடர்ந்து ஓட்டங்களை மலைபோல் குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், முரளி விஜய் ஆகியோரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.


ஸ்மித் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடையும் வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களோடு நிதானமாக ஆடிவருகிறார்.
25வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்த இளைய அவுஸ்திரேலிய தலைவருக்கு 2000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 18 ஓட்டங்கள் தேவை.

இந்தியா இந்த மெல்பேர்ன் மைதானத்தில் இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. எனினும் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கூறுகிறார் "இந்தியா இத்தொடரில் ஒரு போட்டியில் வெல்வதாக இருந்தால், அது இந்த டெஸ்ட்டில் தான்"
காரணம், சுழல் பந்து மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்கள் போன்றது நாளைய மெல்பேர்ன் ஆடுகளம்.
ஆனால் அடிலெய்டிலும் இவ்வாறே சொல்லி, இறுதியாக இந்தியா மண் கவ்வியது.

டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன், கும்ப்ளே இருந்த காலகட்டத்தில் கூட இந்தியா மெல்பேர்னில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல மட்டுமில்லை, வெற்றி தோல்வியின்றிய முறையில் கூட போட்டிகளை முடித்துக்கொள்ள முடியவில்லை.
இங்கே இந்தியா போட்டியொன்றை வென்று 33 வருடங்கள் ஆகிறது.

அவுஸ்திரேலியா கடந்த 16 ஆண்டுகளில் மூன்றே தரம் தான் தோற்றுள்ளது. இரு தடவை இங்கிலாந்திடம், ஒரு தடவை தென் ஆபிரிக்காவிடம்.
17 ஆண்டுகளாக ஒன்றில் வெற்றி அல்லது தோல்வியை மட்டுமே தந்து வருகிறது மெல்பேர்ன் டெஸ்ட் போட்டிகள்.

ஸ்டீவ் ஸ்மித்தின் ஆசை போல 4 -0 என வெள்ளை அடிக்கப்படுமா, இந்தியா புதிய வரலாற்றை மாற்றி தோனியின் தலைமையைக் காப்பாற்றுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

----------------------
ஹாஷிம் அம்லா, ஏபீ டி வில்லியர்ஸ் என்ற துடுப்பாட்ட எந்திரங்கள், ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சு சூறாவளிகளை எதிர்த்து முக்கியமான வீரர்களை மட்டுமன்றி, முக்கியமாக தன்னம்பிக்கையே இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தினேஷ் ராம்டின் தலைமயிலான மேற்கிந்தியத்தீவுகள் என்னும் கப்பல்.


சந்தர்போல் என்ற நாற்பது வயது போராளி துடுப்பாட்ட நங்கூரமாக நின்றாலும், சாமுவேல்ஸ், ஸ்மித், ராம்டின் போன்றோர் நம்பிக்கை தந்தாலும், வேகப்பந்துவீச்சாளர் கமர் ரோச்சின் காயமும் புதிய சிக்கலைக் கொடுக்கிறது. ஜெரோம் டெய்லர் மட்டுமே மற்ற அனுபவமுள்ள பந்துவீச்சாளர்.
தென் ஆபிரிக்கா முதலாவது போட்டி போல இலகுவான வெற்றியைப் பெறாவிட்டாலும் மேற்கிந்தியத் தீவுகள் போராடக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.

டீவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகிய இருவருக்கும் இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டி மைல் கல் போட்டிகளாக அமைகின்றன.
96 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை படைத்த அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை நாளைய டெஸ்ட்டில் முறியடிக்கவுள்ளார் AB.

இன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் தென் ஆபிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை மக்காயா ந்டினியிடம் இருந்து பறிப்பார் டேல் ஸ்டெயின்.

அத்துடன், முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்டியான் வான் சைல் சதம் அடித்து சாதனை படைத்த உற்சாகத்தோடு, காயமடைந்துள்ள விக்கெட் காப்பாளருக்குப் (குவின்டன் டீ கொக்) பதிலாக இன்னொரு இளம் துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா அறிமுகமாகிறார். இவர் ஒரு கறுப்பின வீரர் என்பது கூடுதல் பெருமை.

தென் ஆபிரிக்காவுக்காக டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ள முதலாவது கறுப்பின வீரர் என்ற பெருமையும் பவுமாவுக்குக் கிடைக்கவுள்ளது.
ஹெர்ஷல் கிப்ஸ், டுமினி, அல்விரோ பீட்டர்சன் போன்ற வீரர்கள் எல்லோரும் கலப்பினத்தவர்.


மாற்றங்களை தகுந்த முறையில் உள்வாங்கி வரும் தென் ஆபிரிக்கா இலகுவான தொடர் ஒன்றில் இதை நிகழ்த்துவதில் கூடுதல் வெற்றிகண்டுள்ளனர்.
--------------------இலங்கையில் இருந்து புதிதாக இயங்கிவரும் தமிழ் விஸ்டனுக்காக நான் இதுவரை எழுதிய முன்னைய கட்டுரைகளை கீழ்வரும் இணைப்புக்கள் மூலம் வாசியுங்கள்.

2 comments:

கரிகாலன் said...

தமிழ் விஸ்டன் என்றால் என்ன ?
இணைய தளமா ?

ARV Loshan said...

Wisden எனப்படும் கிரிக்கெட்டின் சகல தரவுகளும் அடங்கிய நூல் - இது கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படுவதுண்டு- பற்றி அறிந்திருப்பீர்கள் தானே?

அது இணைய வழியாகவும் சில ஆண்டுகள் வருகிறது.
முதல் தடவையாகத் தமிழில் விஸ்டன் இணைய வழியில் இலங்கையில் இருந்து வெளிவருகிறது.
அதைத் தான் தமிழ் விஸ்டன் என்றேன்.

தொடுப்பு என்னுடைய பதிவிலேயே இருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner