September 17, 2014

ஐ பாடல்கள் - ஐ !! மெரசல் !! இசையின் புது தமிழ் உரசல் !!


'ஐ' பாடல்களின் Track listஐ இயக்குனர் ஷங்கர் வெளியிட்டபோதே நான் Facebook இல் இட்ட பதிவு..

வைரமுத்து இல்லை 

கார்க்கியின் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' மீதும்,
சிட் ஸ்ரீராமின் முன்னைய 'கடல்' ஹிட் 'அடியே'க்காக கபிலன் எழுதியுள்ள என்னோடு நீ இருந்தால் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு..

நம்ம A.R. Rahman ஏமாற்றமாட்டார் என்று நம்புவோம்..
இது சர்வதேச இசைப்புயலாக இல்லாமல், ஷங்கர் பட ரஹ்மானாக வருவார் 
Shankar

நான் கேட்ட அனிருத் சிங்கிள் பிடிக்கவில்லை 
#I track list

நினைத்தது வீண்போகவில்லை.
ரஹ்மானும் ஏமாற்றவில்லை(மாற்றியுள்ளார் தனது இசைப்பாணியை)
கார்க்கியும் எதிர்பார்த்ததற்கு அதிகமாக ஐ! என ஆச்சரியப்படுதியிருக்கிறார்.

'ஐ' பாடல்களை நான் கேட்க ஆரம்பித்து இன்றோடு நான்கு நாட்கள்.
ரஹ்மானின் பாடல்கள் கேட்கும் ஆண்டாண்டு கால நியதிப்படி ஒவ்வொன்றாகப் பிடித்துப் போய், இப்போது எல்லாமே நல்லா இருக்கே என மனமாற்றம்.

"விமர்சனங்கள் / சித்தாந்தங்கள் காலவோட்டத்தில் மாறிப்போனால், நீ கொள்கை மாறினாய் என்று அர்த்தமல்ல. நீ பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய் என்று பொருள் கொள்" - பேராசிரியர். கா. சிவத்தம்பி 

(அடிக்கடி கேட்டால் எந்தப் பாட்டுத் தான் பிடிக்காமல் போகாது என கு-தர்க்கம் பேசுவோருக்கு - உங்களுக்கு சற்றும் பிடிக்காத கர்ணகடூரக் குரலில் ஏதாவது பாடலை/அல்லது போயா நாட்களில் நாள் முழுக்கக் காத்து குடையும் பணை மாதிரி ஒரு விஷயத்தை வருஷம் முழுக்கக் கேட்டு பிடிக்குதா என்று பாருங்களேன்.
சகித்துக் கொள்ளலாமே தவிர, ரசிக்கப் பழகிடும் என்பது சுத்தப் பொய்.)


பல்லவி, சரணம் என்பவற்றையெல்லாம் முன்பே A.R.ரஹ்மான் தன் பாடல்களில் கட்டுடைத்து, புதுவித பாடல் உருக்களை உருவாக்கியிருந்தார்.
'ஐ' பாடல்களில் இன்னும் என்ன புதுமை என்று எதிர்பார்த்திருந்த எமக்கு முற்றிலும் வேறுபட்ட பாடல் வடிவங்களை, இசையில் மட்டுமல்ல, குரல்கள் வழியாகவும் தந்து செவிகளை இனிக்கவும், மனங்களை திருப்திப்படவும் வைத்திருக்கிறார்.

--------------------------------

கார்க்கி - 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' இல் ஏமாற்றவில்லை...'ஐ' ஐயாக அடுக்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
ஷ்ரேயாவின் குரலும் சேர்ந்து மயக்கி விடுகிறது.
Hats off to A.R. Rahman & Madhan Karky

தொடர்ந்தும் ஹரிச்சரனின் குரல் இசைப்புயலின் பாடல்களுக்கு சற்று ஆயாசம் கொடுக்கிறது போல் தெரிகிறது.
ஹரிஹரன், கார்த்திக், விஜய் பிரகாஷ், பென்னி தயாள் குரல்கள் கொஞ்சம் refreshing ஆக இருந்திருக்கும்...
கொஞ்சம் ரசிகரின் விருப்பத்தையும் கவனியுங்க புயலே.

ஆனால் ஷ்ரேயாவின் குரலில் தேன்.
தமிழுக்கு நோகாமல் காதோரம் காதலை வடித்துச் செல்கிறார்.

கார்க்கியின் வரிகளில் ஐயம் இல்லாமல் ஐ அழகாக ஓடுகிறது...

"ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா?

ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா?

ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும் 
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை 
அவள் தந்துவிட்டாள்! 
அவள் வந்துவிட்டாள்!"

'ஐ' களின் அர்த்தங்களை அடுக்கிய கவிஞரின் ரசனையை மனதில் எடுத்துக்கொண்டு ரஹ்மான் தந்துள்ள உயிரோட்டமான இசை மனதோடு பேசுகிறது.

கேட்ட கணத்திலேயே சரேல் என்று இசையும் மெட்டும் மனதுக்குள்ளே உட்கார்ந்து விடும் ரஹ்மானின் அதிசயம் காவியத் தலைவன் பாடல் 'யாருமில்லா தனியறையில்' போலவே இந்தப் பாடலிலும்...

கதையை ஆங்காங்கே தொட்டு உணர்த்தி காதலை உணர்த்தும் பாடலிலும் கார்க்கி கதாநாயகனின் ஆண்மையைக் கவிதையாய்த் தொட்டுவிட்டார்.

"ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா?"


இனி ஐ போனைக் கண்டாலும் கார்க்கி சொன்ன 'ஐ' களில் இது எந்த ஐ என்றே மனம் ஐயுறும்.
---------------


'அடியே' அளவுக்கு அடியோடு ஆளைத் தூக்கி அசத்தாவிட்டாலும் சிட் ஸ்ரீராம் என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன் மூலம் மீண்டும் காதுக்குள்ளால் மனதுக்குள் இறங்கிவிட்டார்.
இசைப்புயலின் இசைக்கலவையின் magic இந்தப் பாடலின் ஸ்பெஷல் என்பேன்.

‘‘என்னோடு நீயிருந்தால் 
உயிரோடு நானிருப்பேன் 
உண்மைக் காதல் யாதென்றால் 
உன்னை என்னைச் சொல்வேனே.. 
நீயும் நானும் பொய்யென்றால் 
காதலைத்தேடிக் கொல்வேனே"

கபிலன் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

வரிகளின் சிலிர்ப்பை அனுபவித்துக்கொண்டே சிட்டின் குரலில் சொக்கிப் போகிறோம்.

இந்தப் பாடலிலும் பாடகர்களுக்கு A.R.ரஹ்மான் வழங்கும் சுதந்திரத்தின் சுகத்தை உணரக்கூடியதாக உள்ளது.
(பாடகர்களை அவர்கள் இயல்பில் பாடவிட்டு அதிலிருந்து தனக்குத் தேவையான, பாடலுக்குப் பொருத்தமான வடிவங்களை ரஹ்மான் எடுத்துக்கொள்வார் என அறிந்துள்ளேன். ஸ்ரீனிவாஸ், கார்த்திக் ஆகியோரை நான் எடுத்த பேட்டிகளில் ரஹ்மான் வழங்கும் இந்த சுதந்திரம் ஒவ்வொரு பாடலையும் உயிர்ப்புடையதாக உருவாக்குகிறது என்று வியந்திருந்தார்கள்.
இந்த இயல்பும் ஐ பாடல்களின் புதிய பாடகிகள் பாடியுள்ள மற்றப் பாடல்களிலும் தொனிக்கிறது.
குறிப்பாக ஐலா பாடலுக்கே ஒரு புது வண்ணம் கொடுத்துள்ளது)

உச்சஸ்தாயி வரை சென்று சும்மா லாவகமாக உலா வந்து தான் அனுபவிக்கும் அந்த இசை சுகத்தை எங்கள் மனமெங்கும் வியாபித்துவிடுகிறார் பாடகர்.

கடல் - அடியே பாடலிலும் கண்ட அதே இசை சொர்க்கம்.
ஆரம்ப வரிகளில் தடுமாறும் தமிழ் செம்மையாகிறது பாடல் பயணிக்கும்போது..

இதே பாடல் சின்மயியின் குரலில் மென்மையும் இனிமையும் சேர்ந்த கலவை.
ரஹ்மானின் இசையில் எப்படி உதித் நாராயணனிடமிருந்தும் தமிழ் தமிழாக வரும் அதிசயம் நிகழ்கிறதோ, அதே போல சின்மயியின் குரலும் மேலும் பல மடங்கு இனிமையாகி விடுகிறது.
இந்த பெண் குரல் "என்னோடு நீயிருந்தால்" இரவுகளின் தாலாட்டு.கேட்டவுடனே repeat modeக்கு கொண்டு போன #ஐ பாடல்கள் இவையிரண்டு தான்.

ஆனால் மற்ற 4 பாடல்களும் (மெர்சல் ரீமிக்ஸும் சேர்த்தே மொத்தமாக 7 பாடல்கள்) இப்போது பிடித்தவையாகி இருக்கின்றன.
இசைப்புயல் புதியவற்றையும் ரசிப்பதாக வழங்கியிருக்கிறார், தனது சோதனைக் களத்திலிருந்து.

------------------------------

Ladio பாடல் துள்ள வைக்கிறது.
குரலின் புதுமை பாடலுக்கு புதிய அனுபவம் கொடுக்கிறது.
நிகிதா காந்தி - ரஹ்மானின் ஆயிரத்தை அண்மிக்கும் புதிய குரல் அறிமுகங்களில் இன்னொரு வசந்தம்.

கார்க்கியின் தேடலும், தமிழின் வளமையும், ஷங்கரின் புதிய முயற்சிகளுக்கான ஆதரவும் சேர்ந்து 1990கள், 2000களில் நாம் இலங்கையின் வட பிராந்தியங்களில் புழக்கத்தில் இருந்து புளகாங்கிதப்பட்ட 'தமிழ்'ச் சொற்களை இசைப்புயலின் மேற்கத்தைய இசையுடன் ரசிப்பதும் சுகானுபவம் தான்.
ஆனால் நிகிதா காந்தி இன்னும் கொஞ்சம் தமிழாகப் பாடியிருந்தால் கார்க்கியின் தமிழும் புதுமையும் இன்னும் வாழ்ந்திருக்கும்.பனிக்கூழ் - ice cream
குளம்பி - coffee
உருளைச் சீவல் - potato chips
காவிக்கண்டு - chocolate மெல்லும் கோந்து - chewing gum
பைஞ்சுதை பாதை - concrete road
மகிழ்வுந்து (or மகிழுந்து ) - car (sedan)
வழலை - சவர்க்காரம் (soap)
பூத்தூள் - மகரந்த மணிகள் (pollen)
காற்பதனி - air conditioner 
நுண்ணலை பாயும் அடுப்பு - microwave oven/cooker 
(தம்பி கோபிகரனின் Facebook status செய்த உதவிக்கு நன்றி)

இந்த தூய தமிழ்ச் சொற்களையெல்லாம் ஒரு துள்ளாட்ட, மேலைத்தேய இசைப் பின்னணியுடன் அமைந்த பாடலில் கொண்டு வரும் துணிவும் திறமையும் கார்க்கிக்கே இப்போதைய பாடலாசிரியர்களில் உண்டு.

அந்தத் துணிச்சலுக்கான திறவுகோலைத் தந்துள்ள ஷங்கர், இசைப்புயல் ஆகியோர்க்கும் பாராட்டுக்கள்.
இதுவரை பலர் அறிந்திராத தமிழ்ச் சொற்கள் லேடியோ மூலமாக தமிழரின் வாய்களில் அமரும்.

பாடல் ஆரம்பிக்கும் 'கசடதபற' - வல்லின, இடையின, மெல்லின வரிசைப்படுத்தல்களையும் ரசித்தேன்.

------------------------------------

ஐலா பாடல்...
அன்றைய 'திருடா திருடா' 'கொஞ்சம் நிலவு' பாடலுக்குப் பின் அதே வகையறாவில் இசைப்புயலின் புதிய அசத்தல் பிரம்மாண்டம்.

'Made in வெண்ணிலா' வரியில் ஆரம்பிக்கிறது பாடலின் வரிகளை உன்னிப்பாக அவதானிக்கச் செய்யும் எண்ணம்.

பாடல்களின் 'லா' சொற்கள் லாவகமாக சுவாரஸ்யமாக தூவப்பட்டு, கோர்வைப்படுத்தப்பட்ட விதத்தில் கார்க்கி மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்கிறார்.

தெரிந்தெடுத்த சில புதிய வார்த்தைகளைப் புகுத்தி, ரஹ்மான் குரல்களில் தந்த புதமைக்கும், இசையில் தந்துள்ள புதுமைக்கும் போட்டியை தமிழில் வழங்கியிருக்கிறார்.

முதல் தரம் கேட்டபோது பெரிதாக ஸ்பெஷலாக உணராத இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க, ஒவ்வொரு முறையும் புதுபுது அர்த்தங்கள்...

புதிய குரல் ஆதித்யா ராவின் மென்மையான

"உன் பிடியிலே என் உயிரும் இருக்க,
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ
எனில் முட்கள் கொய்தாய்!

காலை உந்தன் முத்தத்தில் விடியும், 
நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ
எனை மென்மை செய்தாய்!" 

சரேலென்று நிமிரச் செய்தது.

ஆணின் மென்மையாகும் தருணம் பாடல் வரிகளில் மட்டுமல்ல, குரலிலும்.

வைரமுத்து + ரஹ்மான் பாடல் ரசாயனம் இப்போது பரம்பரை வழியேயும் தொடருதோ?
புதுமையாகத் தான் வேண்டும் என்று தான் சீனியர் வேண்டாம் என்று குட்டி வேங்கையை ஷங்கரும் ரஹ்மானும் பிடித்துக் கொண்டனரோ?

அந்த எண்ணமும் வீண் போகவில்லை.

சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள் - உன்
கீழே பூக்கும் வெண் பூக்கள் 
பூக்கள் இல்லை, நிழல்!

மதன் கார்க்கி டச்.

அதிலும் பாடலின் ஏற்ற இறக்கங்கள், இசை நளினங்களின் மாற்றங்கள் என்று இசைப்புயலின் பிரத்தியேக ஸ்பெஷல் பாடல் எங்கணும்.
முடிவடையும்போது எங்கேயோ உயரக் கோபுரத்தில் எம்மை ஏற்றிவிட்டு போய் விடுகிறதே அந்தக் கனேடிய பாடகியின் குரல்.

-----------------


மெரசலாயிட்டென் முதல் கேட்டபோது ரஹ்மானின் இசையா இது என்றும் இதுவா ரஹ்மானின் இசையா என்றும் கேட்கவைத்த பாடல்....

ஆனால் நேற்று முதல் உதடுகள் இப்பாடலை முணுமுணுக்க வரிகளின் ஈர்ப்பு ஒரு காரணம் ; இசையின் புதுமை /மேட்டின் புதுமை இன்னொரு காரணமோ?

கவிதையிலேயே கலாய்த்து நாயகனின் இடம், நாயகியின் உயரத்தை சொல்லும் கபிலனுக்கு கைலாகு கொடுக்கலாம்...

நேற்றைய எனது Facebook status தான் இப்பாடல் பற்றிய எனது வியப்பு..

"தோசை கல்லு மேல வெள்ளை ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திபுட்டாளே..."
முதல் தபா கேட்டப்போ இன்னாபா இது ரஹ்மான் பேஜார் பண்ணிக்கீறார்னு பார்த்தா,
Techno குத்துல குடைஞ்சு எடுத்து கும்மாங்குத்து போட்டு செம்மையா ரசிக்க வச்சிருக்கார் மாஸ்டர்.

மெட்ராஸ் தமிழில நம்ம குழப்படி கிஸ் அடி பையன் அனிருத் இன்னாமா பொளந்து கட்டிகீரான்.

கவுஜ எழுதின கபிலன் கலக்கிட்டாருப்பா..
"நா கரண்டு கம்பி காத்தாடியா மாட்டிபுட்டேனே"

கையக் குடு வாத்தியாரே..
ரசிச்சு சிரிக்கவும் வச்சிருக்கே

இத்தால சொல்றது இன்னான்னா நானும் மெரசலாயிட்டென்பா
#I
A.R. Rahman
Anirudh Ravichander
 — feeling நானும் மெரசலாயிட்டென்.


------------------------------

இசைப்புயலின் 'ஐ' திருப்தி..
அது ஷங்கரின் இசைப்புயலை - எங்களின் இசைப்புயலாகக் கொண்டுவந்த திருப்தி.

இனி ஆர்வத்தோடு ஷங்கரின் 'ஐ' & விக்ரமின் உழைப்பின் 'ஐ'க்காக வெயிட்டிங்.

யார் என்ன கதை, எப்படி என்று சொன்னாலும் ஷங்கரின் பதில் பிரம்மாண்டமாக மட்டுமல்ல, வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்தக் காத்திருப்பு அர்த்தமானது.

அத்தோடு சுஜாதா இல்லாத ஷங்கரின் முதல் தனித்த முயற்சி என்ற 'பரீட்சை' என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.

--------------------

இன்று பிற்பகல் வெளியான 'மெரசலாயிட்டேன்' புகழ் அனிருத்தின் இசையில் கத்தி பாடல்கள் கேட்டேன்...

இப்போதைக்கு என் கருத்து

விஜய்யின் குரலில் ‪#‎SelfiePulla‬ எதிர்பார்த்தது மாதிரியே சூப்பர். 
அணிருத் பாடியுள்ள 'பக்கம் வந்து' - புது trend. OK ரகம்.
‪#‎கத்தி‬ ‪#‎Theme‬ mass.
மிச்சப் பாட்டெல்லாம் ரஹ்மானாக அனிருத் மாறுகிறார் என்று சொல்லுதோ?
ஐ மீன் கேட்க கேட்க தான் பிடிக்கும் ரகம்.
‪#‎Kaththi‬
4 comments:

தனிமரம் said...

இனித்தான் கேட்க வேண்டும் அண்ணாச்சி ஐ பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

V.Aravinthan said...

Superb
Nice review. I agree with you.

யோ வொய்ஸ் (யோகா) said...

//அத்தோடு சுஜாதா இல்லாத ஷங்கரின் முதல் தனித்த முயற்சி என்ற 'பரீட்சை' என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.//

I think sujatha not worked with shanker in Gentlemen, as per my memory Balakumaran worked with him in that film

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner