November 18, 2013

ஆரம்பமும் அழகுராஜாவும் இவை தாண்டி சிலவும் சச்சினும்

அஜித்தின் படமொன்று வெளியாகி இத்தனை நாளுக்குப் பின்னர் நான் பார்த்தது என் வரலாற்றிலேயே (!!) முதல் தடவை.
அலுவலக  ஆணிகள், அலவாங்குகளை சமாளித்து ஆரம்பம் ஓட ஆரம்பித்து பத்து நாட்களின் பின்னரே பார்க்கக் கிடைத்தது.
பார்த்தும் ஐந்து நாளுக்குப் பிறகு தான் பதிவேற்றவும் கிடைப்பது நிச்சயம் காலக்கொடுமை தான்.
பழியும் புகழும் Sooriyan MegaBlast, CHOGM, Sachin என்று பலதுக்கும் பலருக்கும் போய்ச்சேரட்டும்.

இத்தனை நாட்கள் பின்னர் எனது வழமையான நீட்டி முழக்கும் நீ.....ண்ட 'விமர்சனம்' போல இதை எடுத்துக்கொள்ளாமல், போறபோக்கில் சும்மா எடுத்துவிட்டுப் போகிற ட்வீட்களில் சிலவாக எடுத்துக்கொள்ளுங்கள்.


 அஜித் + விஷ்ணுவர்த்தன் + யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி பில்லாவுக்கு பிறகு மீண்டும் எப்போது சேர்வார்கள் என்று எதிர்பார்க்கவைத்த ஒரு கூட்டணி.
இம்முறையும் ஏமாற்றவில்லை.

பில்லா 2இல் விஷ்ணுவர்த்தனை மிஸ் பண்ணியதை இப்போது நினைத்துக்கொள்வார் அஜித்.

தல கலக்கல், மாஸ், awesome, தாறுமாறு , அப்படி இப்படியென்று ஆயிரக்கணக்கில், விதவிதமாக நம்மவர்கள் அஜித்தைப் புகழ்ந்ததில் தப்பில்லை என்றே தெரிகிறது.
பட ஆரம்பத்திலேயே Ultimate Star, தல என்று எதுவுமே இல்லாமல் வெறும் அஜித்குமார்.
ஓவர் பில்ட் அப் இல்லாமல் ஆனால் அதிரடியான அறிமுகம்.
'தல' இமேஜுக்காக காட்சிகளை உருவாக்காமல் அந்தப் பாத்திரத்துக்கேற்ப அஜித்தை செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

ஈவிரக்கம் இல்லாமல் கொலைகள் செய்துவிட்டு செல்வதும், திமிரான மிரட்டலும், அலட்சிய சிரிப்பும் அஜித்துக்கு 'வாலி' காலத்திலிருந்து கைவந்த கலை.

நரை முடி செறிந்து கிடக்கும் salt and pepper hair style இந்தப்  படத்தின் கதைக்கு அத்தியாவசியத் தேவை என்றில்லைத் தான்.
ஆனால் அஜித்தின் பாத்திரத்துக்கு அதுவும் அந்த நரையுடன் கூடிய தாடியும் கொடுப்பது இன்னொரு extra கம்பீரம்.


இது தமிழில் ரஜினிக்கு (தர்மதுரை, அண்ணாமலை, படையப்பா) மட்டுமே வாய்த்திருக்கக் கூடிய ஒன்று.

அஜித்தின் உடம்பும் கட்டுக்கோப்பாக இருக்கிறது. பொருத்தமான ஆடைத்தெரிவுகளோடு.
ஆர்யா அளவுக்கு ஆஜானுபாகுவாக இல்லாவிட்டாலும் கம்பீரம். ஆனாலும் அந்த மும்பாய் போலீஸ் சஞ்சயுடன் வரும் காட்சிகளில் அஜித் குறுகித் தெரிகிறார்.

ஆரம்பம் படத்திலும் அஜித்தின் காவடி/பக்தி பாடலும் ஆடலும் சென்டிமென்ட் வெற்றியளித்துள்ளது.
இதற்கு முதல் அமர்க்களம் - காலம் கலிகாலம்
பில்லா - சேவற்கொடி
பில்லா படத்தில் அஜித்தை கிலோமீட்டர் கணக்கில் நடக்க வைத்தே ஓட்டிய விஷ்ணுவர்த்தன், இம்முறை அளவாக நடக்கவும், அழகாக (அஜித்துக்கு ஒத்துவரும் விதத்தில்) ஆடவும், அதிகமாக நடிக்கவும் வைத்துக் கலக்கியிருக்கிறார்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்
என்ற குறள் இந்தப் படத்துக்கும் பொருந்தி விடுகிறது.

இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிக, நடிகையர் தேர்வு என்று அத்தனை விடயங்களும் சரியான set pieces சரியான இடங்களில் பொருத்தியதாக இருக்கிறது.
ஆர்யா, நயன்தாரா முதல் அந்த ஹிந்தி அரசியல்வாதி வில்லன் வரை பொருந்திப்போகிற பாத்திரங்கள்.

ஆர்யாவை விட்டால் அந்த ஜாலியான, dont care, romantic Hacker பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்த மாட்டார்கள்.
கலக்குகிறார்; ரசிக்கவும் வைக்கிறார்.

நயன்தாரா, ராஜா ராணியில் ஆர்யாவுக்கு அக்கா போல தெரிந்தவர், அஜீத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆனால் படத்தில் காதலில் அஜித் - நயன்தாராவை விழவைத்து டூயட் பாடாமல் செய்தது பெரியதொரு ஆறுதல்.

கதையோடு இயக்குனர் பயணித்தது படத்தின் வேகத்துக்கு உதவியிருந்தது.

எடுத்தெறியும் திமிர்ப்பார்வையும், அலட்சியமான உதட்டசைவும், மிடுக்கான நடையும்.. எதிர்காலத்தில் யாராவது ஜெயலலிதாவைப் பற்றிப் படமொன்று எடுத்தால் நயன்தாராவை விட வேறு யாரும்  ஜெ ஆக நடிக்கப் பொருத்தமாக  இருக்கப்போவதில்லை.

என்னதான் விஷ்ணுவர்த்தனின் Trademark ஆன, stylish making பில்லாவைப் போல ஆரம்பத்திலும் இருந்தாலும், கதை +திரைக்கதை தான் இங்கே பிரதான இடத்தை எடுத்துக்கொள்கிறது.

அதனால் தான் இத்தனை கொலைகள் + வன்முறைகளையும் ரசிக்க (?) முடிகிறது.


முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இருவர் இசையமைப்பாளர் யுவன் & ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
அஜித்துக்கும் அவர் பாணி ஸ்டைலிஷ் படங்களுக்கும் (நடைக்கும் சேர்த்தே) மிகப் பொருத்தமான இசையமைப்பாளர் என்றால் அது யுவனே தான்.
சும்மா மிரட்டுகிறார்.

நாணயம், வெப்பம், சூடவா, நீ தானே என் பொன் வசந்தம்  போன்ற திரைப்படங்களில் வியந்து ரசித்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அவருக்கு ஒரு வித்தியாசமான சவால்.
மும்பையை பல்வேறு வடிவங்களில் கொண்டுவருவதாக இருக்கட்டும்,டுபாயை ரசிக்கும் விதமாக படமாக்குவதிலாகட்டும் பாராட்டுக்கள் ஓம் பிரகாஷ் கலக்கியிருக்கிறார்.

வசனங்கள் நறுக், சுருக் & சில இடங்களில் திடுக்.
சுபா.
தேவையான இடங்களில் பஞ்ச் வைத்து, மற்ற இடங்களில் பட்டுத்தெறிக்கும் வசனங்கள்.
என்னைப் பொறுத்தவரை கனாக்கண்டேன், அயன் படத்துக்குப் பிறகு சுபாவின் வசனங்கள் கூடுதலாக ரசிக்கப்பட்டதும், பொருத்தமாக அமைந்ததும் ஆரம்பத்திலேயாகத் தான் இருக்கவேண்டும்.

 John Travolta, Hugh Jackman ஆகியோர் நடித்த SwordFish படத்தின் சில காட்சிகள் (ஹக்கிங், வங்கிக் கணக்கின் பணப்பரிமாற்றக் கடத்தல்) நாசூக்காக உருவப்பட்டாலும், (லொஜிக் ஓட்டைகள் பார்க்கப்போனால் நிறைய நொட்டைகள் சொல்லலாம்) 26/11 மும்பாய் தாக்குதலில் இன்று வரை அவிழ்க்கப்படாத சில மர்மங்களை லேசாகத் தொட்டு, அதை வைத்து பின்னியிருக்கும் திரைக்கதை என்பதும் நகைச்சுவையோ, வேறெதுவும் தேவையற்ற திசைதிருப்பிகள் இல்லாமல் கொண்டுபோயிருக்கும் விஷ்ணு வாழ்த்துக்களுக்கு உரியவராகிறார்.

ஆனாலும்... அஜித் இல்லாமல் இதே படத்தை நினைத்தால், அப்பளம் தான்.

அஜித் நம்பி இன்னொரு படத்துக்கு அச்சாரமாக விஷ்ணுவுக்கு கார் ஒன்று பரிசளிக்கலாம்.
ஆனால் இனி அஜித் தன் படக்கதைத் தெரிவுகளில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போதும்.
பில்லாவுக்கும் மங்காத்தாவுக்கும் இடையிலும் மங்காத்தாவுக்கும் ஆரம்பத்துக்கும் இடையிலும் வந்தவை போல 'தல' வலிகள் வேண்டாமே?
'வீரம்' பார்த்தவரை முன்னோட்டங்கள், படங்கள் நல்லாத் தான் இருக்கு.
அட்டகசத்தின் part 2 வாக வந்தால் பரவாயில்லை; ஜனா மாதிரி... நினைத்தாலே உதறுகிறது.

ஆரம்பம் பற்றி கேட்டவரை பார்த்தவர்கள் "ஆகா, ஓஹோ, அற்புதம்" என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.
ஆரம்பம் 'ஆ!!' 'ரம்பம்' ஆகத் தான் இருக்குமோ என்ற பயத்தோடே சென்ற எனக்கும் திருப்தியே..

ஆரம்பம் - 'தல' ஆட்டம்.

---------------------------
அழகு ராஜா - ஏற்கெனவே அலெக்ஸ் பாண்டியனிலும் வாங்கிக்கட்டியும் திருந்தாத கார்த்திக்கும், மாற்றிக்கொள்ள வேண்டிய காலம் வந்திருப்பதை உணராமல் தான் ஆரம்பித்து வைத்த பாணியை பின்னுக்கு வந்த சிலர் upgrade செய்து அடுத்த லெவலுக்குக் கொண்டுபோயிருப்பதை உணராமல் முதல் தடவை இயக்குனராக வாங்கிக் கட்டியிருக்கும் M.ராஜேஷுக்கும் பாடம் இந்த 'அறுவைப்'படம்.

சந்தானம் இருந்தும் ப்ரேக் இல்லாமல் தறிகெட்டோடும் வண்டியாக...
வசனகர்த்தாவாக வெளுத்து வாங்கும் ராஜேஷ், தன் வழமையான யுக்திகளை விழலுக்கு இறைத்த நீராக விட்டிருக்கிறார்.
இளைய பிரபுவாக கார்த்தி, 1980 Flashback ஐடியா மாதிரி சின்ன சின்ன சுவாரஸ்ய விஷயங்கள் இருந்தும் வளவள கதையும், அதை விட கொளாகொளா திரைக்கதையும் கவிழ்த்துவிட்டன படத்தை.
ஆல் இன் ஆல் அலுப்பு ராஜா .

-------------------------
என்ன தான் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மாநாட்டை இலங்கையில் நடத்தி, எவ்வளவு தான் கத்துங்கடா, நான் தான் ராஜா என்று நம்ம ராஜா தொடை தட்டி, மார்தட்டினாலும், இந்த இரண்டு, மூன்று நாட்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, உலகம் முழுக்க மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டவர்கள் சில பிரித்தானியர்கள்.

கலும் மக்ரே, ஜோன் ஸ்நோ, பென்ட் பியர் ஆகிய ஊடகவியலாளர்கள்.
இவர்கள் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பையும் துணிச்சலையும் எங்களுக்கெல்லாம் பாடமாகக் கற்பித்துப்போனால், இவர்களால் தெரிவுசெய்யப்பட்டவர்...'அரசன் எவ்வழி அம்மக்களும் அதே வழி' என்பதாக உதாரண புருஷராக துணிச்சலோடு வடக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன்.
மரியாதையான வாழ்த்துக்கள் & நன்றிகள்.
எங்கள் மூளைகளும் வாயும் கரங்களும் கட்டிப்போட்டிருக்க எங்களால் முடிந்தது மனதார இவர்களை மனங்களின் சிம்மாசனத்தில் ஏற்றிவைப்பது தான்.

இவர்களால் வெளிப்படுத்தப்படுவன என்ன, இனி இவற்றால் என்ன பலன் என்று எதிர்காலத்தை எதிர்பார்த்திருப்பது ஏமாற்றமாக சிலவேளை அமைந்தாலும் கூட, இவர்களின் தன்னலமற்ற முயற்சிகள் வாழ்த்தப்படவேண்டியவை.
அதற்கான இவர்களின்  உலகாளும் மொழி ஆளுமையும் எம்மவரிடம் வாய்க்காத ஒன்று தான்.
என்றோ ஒருநாள் நானோ, என் வழிவருபவரோ இவற்றுள் பத்து வீதமாவது செய்வோம் என்பது என் நம்பிக்கை.
டேவிட் கமெரோன் முரளியுடன்...
உலக சாதனை விளையாட்டு வீரராக மட்டும் அவரோடு விளையாட்டாக உரையாடினால் மட்டும் போதும் மதிப்புக்குரிய பிரதமரே.

-------------------

சச்சினின் ஒய்வு...

இன்று ட்விட்டரில்  ஒரு விஷயம் பகிர்ந்திருந்தேன்.
"மிகப்பிடித்த வீரராக எல்லோருக்கும் இல்லாவிடினும், யாராலும் வெறுக்கப்பட முடியாதவர் சச்சின்"

24 வருடங்களாக கிரிக்கெட்டின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக இருந்தவர் இன்று விடைபெற்ற அந்த இறுதிக் கணங்கள் நிச்சயம் மனத்தைக் கொஞ்சம் நெகிழ வைத்தவை.
நான் எப்போதுமே சச்சின் ரசிகனாக இருந்தவனில்லை.

அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா ஆடும்போது சச்சினின் விக்கெட் விரைவாக விழவேண்டும் என்று விரும்புபவனாக இருந்தாலும் என்றும் சச்சினை வெறுத்தவன் கிடையாது.
ஆனாலும் கடந்த உலகக் கிண்ணத்தொடு சச்சின் ஒய்வு பெற்றிருந்தால் அது அவருக்கான மிகப்பெரும் கௌரவமாக இருந்திருக்கும் என்பது இன்றும் எனது எண்ணம்.

சச்சின் பற்றி நீண்டதாக நிறைய எழுதவேண்டும்; நேரம் கிடைக்கட்டும்.

1989 முதல் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து அவதானித்தவன் என்ற வகையில் இன்று அவர் கண்ணீர் மல்க விடைபெற்றதும், அவரது நீண்ட உணர்ச்சிவயப்பட்ட , ஆனால் அலட்டல் இல்லாத இறுதி உரையும் அவர் மேலான மதிப்பை மேலும் உயர்த்திவிட்டன.
தந்தை, தாய், சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள் முதல் அத்தனை போரையும் வரிசையாக மனம் திறந்து அவர் சொன்ன வார்த்தைகள் இனி வாழ்வை வாழ்வோருக்கான பாடங்கள்.

'பாரத ரத்னா' தனக்கு உரியவரைப் போய்ச் சேர்ந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சச்சின்.

நீங்கள் இவ்வளவு நாள் கிரிக்கெட் ரசிகர்களாக எங்களை உச்சபட்ச உயர்தர விருந்து வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றிகள்.
உங்கள் சாதனைகள் உங்களை விட மிகப் பொருத்தமானவரால் முறியடிக்கப்படுவதானால் அது என் வாழ்நாள் காலத்தில் நடக்க வாய்ப்பில்லை; எனக்கு அதில் விருப்பமுமில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

சச்சின் டெண்டுல்கரின் முதலாவது சர்வதேசப் போட்டியை இதே போன்றதொரு நவம்பர் 16இல், 24 ஆண்டுகளுக்கு முதல் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் பார்த்ததும் இன்று சச்சினின் இறுதி சர்வதேசக் கிரிக்கெட் நாளைப் பார்த்ததும் ஒரு வரம் தான்.

சச்சின் மட்டுமன்றி எங்கள் தலைமுறையின் கிரிக்கெட் வாழும் வரலாறுகளான முரளிதரன், பிரையன் லாரா, ரிக்கி பொன்டிங், ஷேன் வோர்ன், டிராவிட், கங்குலி ஆகிய அனைவரதும் முதல் மற்றும் இறுதி சர்வதேசப் போட்டிகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு ஒரு கிரிக்கெட் ரசிகனாக வாய்த்திருக்கிறது.

அதிலும் முரளியின் முதலாவதும் கடைசியுமான போட்டிகளை மைதானத்திலேயே பார்க்கக் கிடைத்ததும் பெரிய பேறுகள்.
(ஆனால் மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்)
அப்பாவுக்கும் வாய்த்த என் தொழிலுக்கும் நன்றிகள்.

சச்சின் பற்றி பிறகு 'பெரிதாக' எழுதும் வரை, என் முன்னைய சச்சின் பற்றிய இடுகைகள்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு அலசல்
சச்சின் 200 - சாதனை மேல் சாதனை8 comments:

Unknown said...

உலக சாதனை விளையாட்டு வீரராக மட்டும் அவரோடு விளையாட்டாக உரையாடினால் மட்டும் போதும் மதிப்புக்குரிய பிரதமரே.Superb :)

Unknown said...

வீரன் அவர் விளையாட்டில் மட்டுமல்ல அவரின் மனசிலும்

lalithsmash said...

Why மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்

Unknown said...

இங்கே சொல்லப்பட்ட தலைப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இரத்தின சுருக்கமாக ஆழமான பொருட்களை தருவதாக அமைந்து இருந்தது. உங்களுடைய ரசிகன் என்ற முறையில் எல்லா இடுக்கைகளையும் வாசிப்பவன் என்கிற வகையில் இந்த இடுக்கை short and sweet ஆக ஆரம்பம் படத்தைப்போல மிகவும் ரசிக்ககூடியதாக இருந்தது.சச்சின் இன் உரையை கேட்கும்போது உங்களுக்கு தோன்றிய அதே மன நிலை எங்களுக்கும் ஏற்பட்டது,அதை எங்கள் மொழில் sanka speech உங்களுடைய சகோதரர் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு உங்களுடைய குரலில் கேட்டதுபோல இதுவும் செய்யபட்டிருந்தால், செய்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும் ..... நன்றி

Unknown said...

இங்கே சொல்லப்பட்ட தலைப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இரத்தின சுருக்கமாக ஆழமான பொருட்களை தருவதாக அமைந்து இருந்தது. உங்களுடைய ரசிகன் என்ற முறையில் எல்லா இடுக்கைகளையும் வாசிப்பவன் என்கிற வகையில் இந்த இடுக்கை short and sweet ஆக ஆரம்பம் படத்தைப்போல மிகவும் ரசிக்ககூடியதாக இருந்தது.சச்சின் இன் உரையை கேட்கும்போது உங்களுக்கு தோன்றிய அதே மன நிலை எங்களுக்கும் ஏற்பட்டது,அதை எங்கள் மொழில் sanka speech உங்களுடைய சகோதரர் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு உங்களுடைய குரலில் கேட்டதுபோல இதுவும் செய்யபட்டிருந்தால், செய்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும் ..... நன்றி

Anonymous said...

(ஆனால் மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்)

Well Said.

Unknown said...

Superb Anna.

Unknown said...

Superb Anna . Great!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner