January 10, 2013

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்

இலங்கை அணியின் தலைவராக இரு வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கிய மஹேல ஜெயவர்த்தன இரண்டாவதும் இறுதியுமான தடவையாகத் தனது தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறார்.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான சிட்னி டெஸ்ட் போட்டியின் பின்னதாக மஹேல தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும், அதன் பின்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஒருநாள் தலைமையிலிருந்தும் விலகுவதாக இந்த இரண்டாம் முறை தலைமைப் பதவியை ஏற்கும்போதே மஹேல அறிவித்திருந்தார்.

தலைவராகக் கடுமையான சவால்களை எதிரணியிடமிருந்து மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபையின் அரசியலிலிருந்தும் மஹேல எதிர்கொண்டிருந்தார். அப்படியிருந்தும் இலங்கை கிரிகெட் அணியின் மிகச் சிறந்த தலைவராக எப்போதும் கருதப்படக்கூடிய அர்ஜுன ரணதுங்கவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைவராக மஹேல ஜெயவர்த்தன இருக்கிறார்.

தரவுகளையும் பெறுபேறுகளையும் வைத்து இலங்கையின் தலைவர்களை நாம் பார்த்தால்... (இப்போது நடைபெற்று வரும் சிட்னி டெஸ்ட் போட்டியைக் கருத்தில் எடுக்கவில்லை) 


இலங்கையின் மிகக் கடினமான காலகட்டத்தில் தலைமை தாங்கிய மிகச் சிறந்த தலைவராக மஹேலவை நாம் கருதலாம். மஹேல இலங்கை அணியில் இளவயது வீரராக அணிக்குள் வரும்போதே எதிர்கால அணித்தலைவர் என்ற எதிர்பார்ப்பு இவர் மீது வைக்கப்பட்டிருந்தது. இளம் வயதிலேயே அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் துடுப்பாட்டம் சற்றுத் தளம்ப ஆரம்பிக்க, உப தலைமைப் பதவி பாரத்தை நீக்கிக் கொண்டார்.

மீண்டும் 2006இல் தலைவராக ஆரம்பித்த மஹேல, முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே பங்களாதேஷுக்கு எதிராக வெற்றியைப் பெற்றுத் தந்து மங்கலகரமாக ஆரம்பித்து வைத்தார். (முரளிதரனின் 1000ஆவது சர்வதேச விக்கெட்டும் அதே போட்டியிலேயே வீழ்த்தப்பட்டது)

அடுத்து இலங்கையில் வைத்து பாகிஸ்தானிடம் தோல்வி. எழுந்த விமர்சனங்களுக்கு மஹேல பதிலளிக்க எடுத்துக்கொண்ட களம், இங்கிலாந்து. முதலாவது போட்டியில் இனிங்சினால் தோல்வியடைய இருந்த இலங்கை அணியைத் தனியொருவராக, தலைவராக நின்று காப்பாற்றி வெற்றி தோல்வியற்ற நிலையைப் பெற்றுக் கொடுக்கிறார் மஹேல. முதலாவது இனிங்சில் 61. இரண்டாவது இனிங்சில் 119.

இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணி தோற்றாலும், மூன்றாவது டெஸ்ட்டில் வென்று இலங்கை தொடரை சமப்படுத்திப் பெருமையோடு நாடு திரும்ப - இலங்கை அணியின் புதிய பொற்காலத்தை உருவாக்கும் ஒருவராக மஹேல கணிக்கப்படுகிறார். அதை நிரூபிப்பது போலவே மஹேலவின் தலைமையில் வெற்றிகள் கிடைத்தன.


ஆசியக் கிண்ண வெற்றியும், டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளின் வெற்றிகளும் (இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வைத்தே 5-0 என்று வெற்றிகொண்டது உட்பட) இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைப்பது போல 2007ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தில் இலங்கையின் அதிரடியும் குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன அபாரமாக ஆடி வென்று கொடுத்த அரையிறுதி ஆட்டம் இன்னும் யார் மனதிலும் நீங்காது.

இலங்கை அணி இறுதிப் போட்டிவரை வந்தது பலருக்கும் இலங்கை அணி மீது பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருந்தது. துடுப்பாட்டத்தைத் தலைமைத்துவ அழுத்தம் பாதிக்கவில்லை எனும் அளவுக்கு அணிக்கான தனது துடுப்பாட்டப் பங்களிப்பையும் வழங்கியிருந்தார். அணியின் பெறுபேறுகளும் மற்றைய அணிகளுடன் ஒப்பிடுமளவுக்கு மிகச் சிறப்பாகவும் ஒற்றுமையாகவுமே இருந்து வந்தன.

எனினும் அர்ஜுனவுக்குப் பிறகு இலங்கை அணியில் தலைவர்களுக்கு இருந்துவந்த பெரிய சிக்கலான கிரிக்கெட் சபையுடனான பிரச்சினைகளும், அரசியல் நேரடி, மறைமுகத் தலையீடுகளும் மஹேலவையும் தொல்லைப்படுத்தியே இருந்தன.

பொதுவாகவே மென்மையான அணுகுமுறை உடையவராக மஹேல இருந்தாலும், அவர் தனது தலைமைத்துவத்திலும் பேச்சு அணுகுமுறைகளிலும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்துவந்த ஒருவர்.

2009இல் இலங்கைக்கு வந்திருந்த இந்திய அணி, முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணியை வெற்றி கொண்ட நேரத்தில் மஹேல முதல் தடவையாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். ஆனாலும் தலைமைப் பதவியைக் காவுகொள்ளும் அளவுக்கு அவை எவையுமே இருக்கவில்லை.

ஆனாலும் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி ஓர் ஆறுதல் வெற்றியைப் பெற்ற பின்னர் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் மஹேல ஜெயவர்த்தன தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

புதிய தலைவராக குமார் சங்கக்கார பொறுப்பெடுத்த பின்னர் ஒரு சிரேஷ்ட வீரராக ஆலோசனைகளில் மஹேலவின் பங்களிப்பு புதிய தலைவருக்கு மிகப் பயனுடையதாக அமைந்ததோடு துடுப்பாட்ட வீரராக மேலும் பரிணமித்தது.

அணிக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பதை மஹேல நிரூபித்த மற்றொரு சந்தர்ப்பம் 2011 உலகக்கிண்ணம். சங்கக்காரவைப் பலப்படுத்த மஹேல அனுபவம் குறைவான இலங்கை அணியின் உபதலைவராகவும் பணியாற்ற சம்மதித்தார்.இலங்கை கிரிக்கெட்டின் விதி... உலகக்கிண்ணத்தின் இன்னொரு இறுதிப்போட்டித் தோல்வி... அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அடங்க முன்னரே சங்கக்கார தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

அதற்குப் பின் இலங்கை கிரிக்கெட்டின் குழப்பமான காலம்... டில்ஷானின் தலைமை, உறுதியற்ற அணி, வெற்றிகள் வறண்டு போயின... தென் ஆபிரிக்காவிலே கன்னி டெஸ்ட் வெற்றியொன்றைப் பெற்றாலும், அதன் பின்னர் டில்ஷான் பதவி விலகிக் கொண்டார்.

தலைமைத்துவத்துக்கான நீண்ட காலத் தேடலுக்கு முன்னதாக இலங்கை அணியை ஸ்திரப்படுத்தவும், புதிய ஒரு தலைவரை இனம் காணவும் மீண்டும் இலங்கைக்குக் கிடைத்த விடை/தீர்வு மஹேல மட்டும் தான்...

அணிக்காக முள் முடியை மீண்டும் தரித்துக்கொண்ட மஹேலவுக்கு முதலாவது பணியிலேயே பெரும் பாராட்டுக்கள். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் பெற்ற வெற்றிகளும், இறுதிவரை இலங்கை அணி வந்ததும் மஹேலவின் தலைமையில் மீண்டும் இலங்கை அணி எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருந்தன.

தான் மீண்டும் தலைமை தாங்கிய முதலாவது போட்டியிலேயே இங்கிலாந்துக்கெதிராக 180 ஓட்டங்களையும் அபாரமாகப் பெற்ற மஹேல இலங்கைக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுக்கிறார். மீண்டும் வெற்றியுலா...

ஆனால், 2013ஆம் ஆண்டின் ஆரம்ப அவுஸ்திரேலியத் தொடருடன் தான் மீண்டும் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தே பதவியேற்ற மஹேல அணியை ஒற்றுமைபடுத்தியும் இருந்தார்; வெற்றிகளையும் இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்திருந்தார்; எதிர்காலத்துக்கான இலங்கை அணியொன்றையும் உருவாக்கியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் விலையாக இவரது துடுப்பாட்டம் அண்மைக்காலத்தில் தடுமாறுகிறது... குறிப்பாக வெளிநாடுகளில்.

அத்துடன் கிரிக்கெட் சபையுடனும் தெரிவாளர்களுடனும் இவரது நேரடி, மறைமுக மோதல்கள் நிச்சயமாக நிம்மதியான தலைமைத்துவ காலத்தை வழங்கியிருக்காது.

அண்மையிலும் கூட கிரிக்கெட் சபை மீது தான் நம்பிக்கை இழந்ததாகப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். 

அத்துடன் பல இளம் வீரர்களை நம்பிக்கையாக அணியில் சேர்த்து அவர்களுக்கு ஒரு தந்தை போல, மூத்த சகோதரன் போல வழிகாட்டியாக நம்பிக்கை கொடுத்து உருவாக்கி விட்டவர். முரளி, வாஸ் ஆகியோருக்குப் பிறகு இலங்கை என்ற கேள்விக்குறிக்கு விடையாக மஹேல கொடுத்த நம்பிக்கை மூலமாக ஹேரத், மாலிங்க, குலசேகர இன்னும் மஹேல கண்டுபிடித்த அகில தனஞ்செய என்று பலர் உருவாகியுள்ளார்கள்.

ஆனால், மஹேலவின் இரண்டாவது கட்டத் தலைமையின் மிக உச்சபட்ச தருணம் இலங்கையில் இடம்பெற்ற உலக Twenty 20 போட்டித் தொடர். இலங்கைக்கான மிகப் பெரிய வாய்ப்பாக இந்த உலகக் கிண்ண வெற்றி அமைந்திருக்கும்.

மஹேல ஒரு தலைவராக மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி, துடுப்பாட்ட வீரராகவும் பிரகாசித்திருந்தார். இவரது தலைமைத்துவம் பல கட்டங்களில் வியந்து பாராட்டப்பட்டது.

ஆனால் இறுதிப் போட்டியின் தோல்வி எல்லோரையுமே நிலைகுலைய வைத்தது.

அதைவிட, மஹேல உடனடியாகவே Twenty 20 தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். முதலிலே தீர்மானித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது டெஸ்ட் தலைமையிலிருந்தும் அதன்பின்னர் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரின் பின்னர் முழுமையாகவும் தலைமையிலிருந்து விடைபெறுகிறார் மஹேல.

அவர் விட்டுச் செல்லும் நிலையிலிருந்து மத்தியூஸ் அணியைத் தொடர்ந்து அழைத்துச் செல்வாரா என்பது ஒருபக்கம், மஹேல தனியொரு துடுப்பாட்ட வீரராக எவ்வளவு காலம் தொடரப் போகிறார் என்பது மறுபக்கம் என்று கேள்வி தொக்கி நிற்கிறது.

ஆனால், ஒரு சிரேஷ்ட வீரராக இனி தலைவராகப் பயணிக்க இருக்கும் மத்தியூசுக்கு இவரது அனுபவ ஆலோசனைகள் எவ்வளவு தேவைப்படுமோ, அதேபோல இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கும் மஹேல நல்ல வழிகாட்டியாக இருக்கப் போகிறார்.

*தமிழ் மிரருக்காக நான் எழுதிய கட்டுரை. இங்கே மீள் பிரசுரம் செய்துள்ளேன் 

மஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner