உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்....
கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை.
இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே என்று கேட்டு சந்தோசத்தில் மிதக்கும் அன்பு நண்பர்கள்....
கடமையில் என்றைக்கும் கண்ணாய் இருக்கும் உங்கள் லோஷன் தமிழ் மிரரில் உலக T20 கிண்ணம், உலக T20 கிண்ண இறுதி பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.
மேற்கிந்தியத்தீவுகள்: கொண்டாடப்படவேண்டிய கோலாகலச் சாம்பியன்கள்
இந்த உலகக் கிண்ண இறுதியிலும் இலங்கை அணி தோற்றதன் பின்னர் எழுந்த பரவலான கருத்துப் பகிர்வுகள், தொடர் நக்கல்கள், எதிர்வு கூறல்கள், எதிர்ப்புக்கள், விமர்சனங்கள், விவாதங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வாசித்து, அவதானித்து, பங்குபற்றி வந்தவன் என்ற அடிப்படையில் சில விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பகிர்ந்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கின்றேன்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு எனும் தளத்தில் நான் நிற்பதால் சிலருக்கு (வெகு சிலருக்கு) நான் துரோகி, எதிரி & கோமாளி.
அது பற்றி பரவாயில்லை.
அரசியல் ரீதியாக ஒரு அணியை , அதிலும் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது பொருத்தமற்றது என்பதே என் வாதம்.
எங்கள் அடையாளமாக இருக்கப் போகிற இலங்கையன், இலங்கையில் பிறந்தவன் என்பது எப்போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கான எனது ஆதரவுக்குக் காரணங்களில் ஒன்று.
சரி, இலங்கை கிரிக்கெட் அணியை விட மற்ற அணிகளைப் பிடித்திருந்தால் அந்த அணிகளுக்கான ஆதரவை வழங்குவதில் தவறேதும் இல்லை; ஆனால் இலங்கை அணி தோற்கவேண்டும்; இலங்கை அணி எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் எதிர்க்கவேண்டும் என்ற எண்ணப் பாங்கில் பலர் இருப்பதை அவதானிக்கிறேன்.
அரசியல் காரணங்கள், இலங்கை அரசாங்கம், இராணுவத்தைப் பலர் இதற்கான காரணங்களாக சுட்டி பலர் வாதிட்டதை அவதானித்தேன்.
இதில் அளவுக்கதிகமாக இறங்கி என்னை 'துரோகி' ஆக்கிக்கொள்ள எனக்கு ஆசையில்லை.
ஆனால் தமிழ்த் தேசியம், தமிழருக்கான விடுதலை ஆகியவற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தே ஆகவேண்டும்; இந்த எதிர்ப்பு உலகம் முழுதும் தொனிப்பதால் தமிழருக்கான சர்வதேச ஆதரவும் தமிழர் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.
எங்கள் ஆழமான, உணர்வுபூர்மான போராட்டம், கிரிக்கெட்டை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் கொண்டாடி ஆறுதல் படும் அளவுக்கு மழுங்கிவிட்டதா என்ற கவலை என்னைப் போல் பலருக்கு.
சிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா, அன்டி பிளவர் போன்றோர் கறுப்புப் பட்டி அணிந்து போராடியதை ஒரு சிலர் உதாரணம் காட்டியிருந்தார்கள்.
அதன் அடிப்படை விடயத்தை மறந்தார்களா தெரியவில்லை...
நான் இதில் இன்னும் விளக்கவோ, விவாதிடவோ தயாராக இல்லை.
என் நிலைப்பாடு மிகத் தெளிவானது...
இலங்கை கிரிக்கெட் அணிக்கான என் ஆதரவானது எந்த விதத்திலும் இலங்கியில் நடந்த இனப்படுகொலையை மறைக்க ஒரு ஆயுதமாக இருக்கப் போவதில்லை.
இலங்கை அணிக்கான ஆதரவு ஜனாதிபதிக்கான ஆதரவும் கிடையாது.
இலங்கை கிரிக்கெட் அணியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அதைவிட முப்பது வருடங்களாக வெளியுலகத்தை எட்டிப் பார்க்கவைத்த எக்கச்சக்கமான விடயங்கள் செய்யாததையா இவை செய்துவிடப் போகின்றன?
அடுத்து பேஸ்புக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் 'கொண்டாடி' மகிழ்ந்து இலங்கை அரசின் இனப்படுகொலை, தமிழரை ஒதுக்குவது பற்றிய விடயங்களால் தான் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்ப்பதாகச் சொன்ன பலரில் சிலரது Facebook Wallஐப் பார்த்தேன்.... பூராக இந்திய அணியின் ஆதரவு நிலைத் தகவல்கள், படங்கள், ஆதரவு கோஷங்கள்..
இனி நான் ஏதாவது சொல்லணுமா?
சிலருக்கு சிலதைப் புரியவைப்பதை விட நாம் முட்டாள்களாக, முரடர்களாக, கெட்டவர்களாக, சுயநலவாதிகளாக, துரோகிகளாக அல்லது கோழைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.-------------------------------
இன்னொரு விடயத்தையும் நான் தெளிவுபடுத்த வேண்டும்...
ஒரு ஊடகவியலாளனாக, ஒலிபரப்பாளனாக நான் எந்த செய்திகளுக்கும் (விளையாட்டு செய்திகளுக்கும் கூட) நான் நடுநிலையாளன் தான்.
ஆனால் இலங்கையில் இருந்து இயங்கும் எமது அடையாளம் இலங்கை. இதனால் இலங்கைக்குத் தான் செய்திகளில், அது விளையாட்டு செய்தியாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது இலங்கைக்குத் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்க.
விளக்கம் தேவையாயின் ஒலிம்பிக் நேரத்தில் BBC பிரித்தானிய அணிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், NDTV, Cricinfo, TOI, Star Networks முதலாயன இந்தியாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பாருங்கள்.
அதே போல இந்த வலைத்தளத்தில் நான் என் சொந்த விருப்பு வெறுப்புக்களை மட்டுமே பொதுவாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
----------------------------------
இந்த உலக T20 யின் பின்னர், மஹேலவின் T20 தலைமைப் பதவித் துறப்பு இலங்கை அணிக்கு ஒரு புதிய தலைமைத்துவத்தையும், புதிய வழியில் இலங்கை இனி பயணிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதையும் காட்டி இருக்கிறது.
மஹேல ஜெயவர்தன மீண்டும் தலைமைப் பதவியை ஏற்கும்போதே சொன்னது போல வருகின்ற டிசெம்பர் மாதத்துடன் டெஸ்ட், ஒருநாள் தலைமைப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக உள்ளார்.
மத்தியூசைத் தலைமைப் பதவிக்குத் தள்ளி இனிப் பழக்கத்தான் வேண்டும்.. ஆனால் தடுமாற்றம் கொஞ்சக் காலத்துக்கு இருக்கத் தான் போகிறது.
சாம்பியன்கள் ஆன மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் டரன் சமியை இனிக் கொஞ்சக் காலத்துக்காவது யாரும் இவ்வளவு காலமும் கிண்டலடித்துத் தள்ளியது போல Non playing captain என்று சொல்லமுடியாது.
நல்லதொரு ஆளணி முகாமைத்துவம் தெரிந்த ஒருவராக சமி தன்னை ஆரம்பம் முதல் நிரூபித்து வந்திருக்கிறார் என்பதை நான் மீண்டும் நினைவூட்டுகிறேன்.
ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியும் கடைசியாக அடித்த ஒரு அரைச்சதம் மூலமாகத் தன் இருப்பைக் கேள்வி கேட்டவர்களைக் கொஞ்சமாவது மௌனிக்க வைத்திருக்கிறார் போலும்.
இந்தியாவின் அரையிறுதிக்கு முன்னதான வெளியேற்றத்தை அடுத்து தோனி மீது மீண்டும் விமர்சனங்கள்.. துடுப்பாட்ட வரிசையில் முன்னே ஏன் அவர் வரவில்லை; துடுப்பாட்ட வரிசை அடிக்கடி மாற்றப்படுவது, அணி வரிசை மாற்றப்படுவது என்றெல்லாம் இனிப் புதிது புதிதாய்க் கிளம்பும்..
அதற்கெல்லாம் சேர்த்துத் தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் தான் விளையாடப்போவதில்லை என்று உறுதிபட தோனி அறிவித்துவிட்டார்.
மற்றைய அணித்தலைவர்களுக்கு இத்தொடரின் வெற்றி-தோல்விகள் பெரிதாக தாக்கம் எதையும் கொடுக்கப் போவதில்லை.
--------
நடந்து முடிந்த உலக T20 கிண்ணம் தொடர்பான இன்னும் சுவாரஸ்யங்கள், சாதனைகள், முக்கியமான விடயங்கள் குறித்து தமிழ் மிரரில் இன்னொரு கட்டுரை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.
பருவப்பெயர்ச்சி மழை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளைப் பதம் பார்க்கப் போகிறது என்று பதறிக்கொண்டிருந்த எமக்கு, அதை விட, இறுதிப் போட்டியில் மழை வந்து விளையாடிவிடப் போகிறது என்று மஹேல ஜெயவர்தன உட்பட நாம் அனைவருமே தேவையற்று டென்ஷன் ஆனாலும் மழை விட்டுக்கொடுத்திருந்தது.
அதற்குப் பிறகு கொட்டிய மழையும், கிழக்கு மாகாணத்தில் தொடர் மழையும் இப்போது எப்பூடி என்று கேட்க வைத்திருக்குமே ,....
அதற்கிடையில் கிரிக்கெட் மழை விடாமல் தொடர்கிறது. தென் ஆபிரிக்காவில் சம்பியன்ஸ் லீக்.
உலக T20 கிண்ணம் போல இதனைத் தீவிரமாகத் தொடராவிட்டாலும் பார்க்கிறேன்..
இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த ஊவா நெக்ஸ்ட் தகுதிகாண் சுற்றோடு வெளியேறியிருக்க, இனி பத்து அணிகள் மோதுகின்றன....
தத்தம் நாடுகளுக்காக உலக T20 யில் ஒன்றாக விளையாடிய சர்வதேச வீரர்கள் நான்கு இந்திய அணிகள், இரு ஆஸ்திரேலிய அணிகள், இரு தென் ஆபிரிக்க அணிகள், நியூ சீலாந்து, இங்கிலாந்திலிருந்து தலா ஒவ்வொரு அணிகளுக்காக எதிரிகளாக விளையாடப் போகிறார்கள்..
ரசிக்கலாம்...
35 comments:
//இலங்கை அணி எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் எதிர்க்கவேண்டும் என்ற எண்ணப் பாங்கில் பலர் இருப்பதை அவதானிக்கிறேன்//
நீங்களும் இந்தியா விளையாடும் போது இதையே தானே பண்றீங்க.இந்தியாவ விடுங்க,சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும்போது சுரேஷ் ரைனாவுக்கு ஷோர்ட் பிட்ச் போட்டு மண்டைய உடைகணும்னு கமெண்ட் போடுறது எல்லாம் எந்த விதத்துல நியாயம்?
தம்பி வித்யன், இது தான் விதண்டாவாதம் என்பது....
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இந்தியர்கள் யாராவது தம் இந்தியா தோற்கவேண்டும் என்று விரும்புவதையோ, இந்தியா தோற்றால் கொண்டாடுவதையோ கண்டுள்ளீர்களா?
அதுசரி, நீங்கள் இலங்கையில் பிறந்தவர் தானே? கடவுச் சீட்டில் உங்கள் அடையாளம் இலங்கை தானே?
இந்தியாவுக்குப் போனாலும் நீங்கள் இலங்கையன்/ சிலோன்காரன் தானே?
இலங்கை கிரிக்கெட் அணியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அதைவிட முப்பது வருடங்களாக வெளியுலகத்தை எட்டிப் பார்க்கவைத்த எக்கச்சக்கமான விடயங்கள் செய்யாததையா இவை செய்துவிடப் போகின்றன?""""""billion doller sentence ...big salute!!!!
உங்கள் வாதம் மிக தவறானது ...எங்களை விட வயதில் மூத்தவரான நீங்கள் ஒரு ஊடகவியல் நபராக இருந்தும் இலங்கை கிரிக்கெட் தொடர்பான கருத்துகள் கேவலமானது ....உங்களை விட மிக மோசமாக இலங்கை அணியை பாடசாலை காலங்களில் ஆதரித்தவர்கள் நாங்கள் ...ஆனால் இன்று மனதளவில் அப்படி செய்ய முடிய வில்லை ....தனி வீரர்களாக மஹேல,சன்காவை ரசிக்க முடிகிறதே தவிர ஒட்டு மொத்த இலங்கை அணியை ரசிக்க முடியவில்லை ....இலங்கையர் என்னும் அடையலாம் பற்றி நீங்கள் பேசுவது உங்களை நீங்களே ஏமாற்றும் செயல் ....இலங்கையராக எங்களை வாழுவதற்கு என்றைக்குமே சின்ஹலம் அனுமதித்து கிடையாது...கல்வி ,வேலை வாய்ப்பு ...வள பங்கீடு சம சந்தர்பங்கள் என எல்லா இடங்களிலும் நாங்கள் தூரத்த பட்டோம் .....இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது என உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ..ஆனால் இலங்கை என நீங்கள் கொடி பிடித்து கொண்டு நின்ற அதே நாளில் அப்பாவி பெண்களும் குழந்தைகளும் காடுகளுக்கு துரத்த பட்ட கொடுமை நடந்தது ....தமிழர்களின் காணிகள் பறிக்கபட்ட அவலம் இருந்தது ....இங்கே விளையாட்டுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என நீங்கள் வாதிடலாம் ....அது உங்கள் அறியாமை ..இலங்கை கிரிகெட் அரசியல் சூழ்ந்த இடம் ....இன்றைய ஆட்சியாளர்கள் விளையாட்டு வெற்றிகளை கூட தங்கள் அரசியல் நகர்வுகளுக்கு பயன்படுத்த வில்லை என உங்களால் மறுக்க முடியுமா ????....எங்களை கொலை செய்த கடத்திய கொடியவர்களின் அரசியல் வெற்றிகளுக்கு பயன்படும் எதனையும் எங்கள் மகிழ்ச்சியாக கொள்ள முடியுமா ???/ இலங்கை கிரிகெட் நிறுவனம் மிக மோசடியான அரசியல் சார் இடம் என்பதை இலங்கை பாரளமன்ற குழுவே சொல்லி இருக்கிறது ....இன ரீதியாக சிந்திக்கும் கோமாளிகளின் இருப்பிடம் இது ..ஒரு ஊடக போராளியாக உங்களுக்கு இது தெரியாமல் போனது எப்படி ??/..அரசியல் இன ரீதியாக சிந்திக்கும் ஒரு அரச அமைப்பு அது .....இந்த அமைப்பு அணி தெரிவில் கூட காலம் காலமாக இன மாவட்ட பாகுபாடுகள் காட்ட பட்டு வருகிறது ....எதில் சின்ஹல பிரதேசத்தை சேர்ந்தவர்களும் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் .....தனியே கடவு சீடில் இலங்கையர் என்று இருப்பதால் இலங்கையர் என்ற அடையலாம் கிடைக்காது ...உலக கிண்ண போட்டி தொடர்பான எந்த ஆவணங்களும் இப்போது அங்கெ இல்லை ...அவளவு தூரம் மோசடி அரசியல் சூழ்ந்த இடம் அது ..
என்னை பொறுத்தவரை எங்களை கொன்றவர்கள் எந்த இடத்திலும் தங்களை நிலை நிறுத்தி கொள்ள கூடாது .....தென் ஆபிரிக்க இன வெறி சமரில் என்ன நடந்தது ..அந்த அணி தடை செய்ய பட வில்லையா???? அந்த வகையில் இலங்கை அணியும் தடை செய்ய பட வேண்டும் ...
பல்கலை கழக தேசிய அணி முன்னால் தலைவர் பேராசிரியர் நடராஜசுந்தரம் முதல் இன்று வரை இலங்கை அணியை பிரநிதித்துவம் செய்ய கூடிய தகுதி வாய்ந்த எத்தனயோ வீரர்கள் இருந்தும் இன பகு பாடு என்ற ஒற்றை சொல்லில் தூரத்த பட்ட வரலாறு உங்களுக்கு மறந்தது எப்படி ??//
தமிழ் தேசியம் விடுதலை என்பது ஒரு உணர்வு ....தங்கள் இளமை தொலைத்து உயிர் தந்த எத்தனையோ ஆயிரம் இளையவர்களின் கனவு ...அது உங்களை போல பொழுது போக்கக்கா பேசும் விடயம் கிடையாது ...நீங்கள் உட்பட நாங்களும் நேசிக்கும் இலங்கை வீரர்களே எங்கள் தியாகங்களை பயங்கரவாதமாக சொல்லி வருணிக்கிறார்கள் ..சங்கா கூட கடந்த லோட்ஸ் அறிக்கையில் சொன்ன விடயங்கள் உங்களுக்கு மறந்து இருக்கலாம் ...எங்களை ..எங்கள் தியாகங்களை பயங்கரவாதமாக சொல்லுபவர்களை ஆதரிப்பது எப்படி ????......இதற்காக நாங்கள் இந்தியாவை ஒரு போதும் ஆதிரிக்க வில்லை ....இலங்கை வெற்றியை ரசிக்க முடியவில்லை ...ஆனால் இந்திய வெற்றியை ஒரு போதும் விரும்பவும் இல்லை ......http://www.padalay.com/.....வாசித்து பாருங்கள் ..நாங்கள் ரசித்த கிரிகெட் ..எம்மவரின் சாதனைகளை ...சந்தர்பங்கள் தரப்பட்டு இருந்தால் ..வளங்கள் சரியாக ஒதுக்க பட்டு இருந்தால் நாங்களும் தேசிய அணியில் இருந்து இருக்கலாம் ...
மனவருத்தமாக இருக்கிறது ....போலி கிரிகெட் ரசனையில் எங்களை நீங்கள் காட்டி கொடுகிரிர்கள் ....நாங்கள் வெற்றியை ரசிக்காமல் இருப்பதால் எதுவும் நடக்காது தான் ...ஆனால் எங்கள் உயிர் பிரித்த கோமாளிகள் தங்கள் அரசியல் நடத்த முடியாது என்பதில் சிறு சந்தோசம் ......அண்ணா....இது உணர்வு
தமிழ்நாட்டுகாரர்களுக்கும் இந்திய அரசின் மீது ஈழ அழிப்பில் உதவி புரிந்தது, மீனவர் படுகொலைகளை தட்டி கேட்கமை முதற்கொண்டு சமீபத்திய கூடங்குளம் வரை ஆயிரம் விமர்சனங்கள், எதிர்ப்புகள், கோபங்கள் இருந்தாலும், கிரிக்கெட்டில் இந்திய அணியை ஆதரிப்பதை யாரும் விமர்சிப்பதில்லை...
:-)
For follow up comments.
----
Loshan நீங்கள் எது சொன்னாலும் விளையாட்டிலும் அரசியல் கலந்துள்ளது என்பது உண்மையே.. இலங்கையை பொறுத்த வரையில் அது முற்றிலும் அரசியல் சார்ந்தது..தற்சமயம் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் பலவேறன போர் குற்றசாட்டை முன்வைத்துள்ளது..அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவை இலங்கை அரசுக்குள்ளது.. அதுக்கு ஒரு ஆயுதமாக இதைபயன்படுத்த்தும் என்பதி யாருக்கும் இரண்டாம் நிலை இல்லை..2 நீங்கள் கூறியது போல நாம் இலங்கையர்தான் என்று நாம் சொலிக்கொண்டு இருக்கிறோம்.. ஆனால் அது சிங்கள மக்களிடம் இல்லையே..? அவர்களிடம் முன்னர் இருந்ததை விட இனத்துவேச வெளிப்பாடு அதிகம்.அதிகமான சிங்கள ஆங்கில ஊடகங்கள் நாளுக்கு நாள் இனத்துவேசத்தை வளக்கின்றன. 3 ஆம் நீங்கள் சொல்வது போல 85% தமிழர்கள் இந்தியாவை ஆதரிப்பது உண்மையே.. ஆனால் அதற்கு பலகாரணங்கள் உண்டு.. 1. எமது கலாச்சார, மத, அரசியல் விழுமியங்கள் முற்றிலும் இந்தியாவுடன் ஒன்றியுள்ளது..2. சினிமா, நாடகம் போன்ற கலைகளிலும் தமிழ் மண் சார்ந்துள்ளது.. இவ்வாறாக பலகாரணங்கள் சொல்லலாம்..இலங்கையில் தமிழர்களுக்கு சம அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த நாடு "Wonder of Asia" தான்.. இப்போது கூட அதைச்செய்ய விருப்பமில்லை அவர்களுக்கு..என்னுடைய நிலத்தை சிங்களவன் பறித்து விவசாயம் செய்யும் போது எப்படி ஐயா நான் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பேன்..நீங்கள் சொல்லலாம் என்னெனில் நீங்கள் தமிழர் படும் வேதனைகளை பத்திரிகை இணையத்திலும் தான் பார்க்கும் போது தெரிவதில்லை..நான் பூர்வீகமா வாழ்ந்த மண்ணில் சிங்களவன் வாழ்கிறான் நான் நடுத்தெருவிலுள்ள போது எப்படி ஐயா?.. சிலர் சொல்கிறாக்கள் தமிழர்களுக்கு இலங்கை மீது தேசப்பற்று இல்லை என்று.. அவர்களிடம் நான் கேட்கிறேன் அப்படி இல்லாமலா இலங்கைக்கு சுதந்திரத்தை தமிழர்கள் பெற்றுக்கொடுதர்கள்?.. இன்று தமிழர்கள் பலர் இலங்கையர் என்று சொல்லவே வெட்கப்படுகிறாக்கள்/பயப்பிடுகிறார்கள்.. வரலற்றுப்புத்தகத்தில் எல்லாளனை துட்டகைமுனு எப்படி வென்றான் என்று சிங்கள துவேச உணர்வு பிஞ்சிலே வளர்க்கப்படுகிறது..[வடக்கே தமிழன்..தெற்கே..].. சிங்களவர்களுக்கு தமிழர் மேல் துவேச உணர்வு இருக்கும் போது மானமுள்ள தமிழன் எப்படி ஐயா?.. கல்வியில் ஒதுக்கல்.. அரச சேவையில் ஒதுக்கல்.. இப்படியாக தமிழன் எல்லா விதத்திலும் அடிமையாக்கப்பட்டுல்லான்..1956 ல் அரச சேவையில் தமிழர்களின் பங்கு 87% தற்போது 8% இதுக்கு அப்புறமுமா? அண்மையில் T20 Ticket எடுக்க போன போது அங்கும் சிங்களத்தில் தான்.. //சிலருக்கு சிலதைப் புரியவைப்பதை விட நாம் முட்டாள்களாக, முரடர்களாக, கெட்டவர்களாக, சுயநலவாதிகளாக, துரோகிகளாக அல்லது கோழைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்// என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.. அதைவிட.. நான் பலமுறை எனது நண்பர்களுக்கு கூட சொல்லுவேன்.. வேறெந்த வானோலிளும் தமிழர்களின் முன்னைய வரலாற்று பதிவு சொல்வதில்லை ஆனால் வெற்றியில் Loshan மட்டும் தான் சொல்வர் என்று.. ஆனால் அந்த உணர்வு கூட இப்போ எம்மை சந்தேகப்பட வைத்துள்ளது உள்ளது.. ஆனால் நீங்கள் எந்த அணிக்கும் ஆதரவு கொடுங்கள் ஆனால்.. நீ இதுக்குத்தான் ஆதரவு கொடு என்று யாரையும் வற்புறுத்த வேண்டாம்..
sabash sariyaana nearatthil sariyana aakkam!
karuppu kannadi pottu paarpevarkalukku vellai kaakithamum karuppu thane Anna!
I Love Sri Lanka!
but
I Like Pakistan Cricket Team!
(Hey I only Support that Team yah! not to that country)
i hate who hate my mother country Sri Lanka!
//தம்பி வித்யன், இது தான் விதண்டாவாதம் என்பது....
நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இந்தியர்கள் யாராவது தம் இந்தியா தோற்கவேண்டும் என்று விரும்புவதையோ, இந்தியா தோற்றால் கொண்டாடுவதையோ கண்டுள்ளீர்களா?
அதுசரி, நீங்கள் இலங்கையில் பிறந்தவர் தானே? கடவுச் சீட்டில் உங்கள் அடையாளம் இலங்கை தானே?
இந்தியாவுக்குப் போனாலும் நீங்கள் இலங்கையன்/ சிலோன்காரன் தானே?//
கேள்வி கேட்டா விதண்டாவாதம் னு சொல்றீங்களே..ஆமா நான் இலங்கையில பொறந்தவன் தான். இங்க தான் படிச்சேன், சாப்பிட்டேன், வளர்ந்தேன் அதெல்லாம் சரி. ஆனா இந்த நாட்டுல தமிழனுக்கு என்னைக்குமே அபிவிருத்தி மட்டும் தானே, சம உரிமை கிடையாதே. பெரும்பான்மைக்கு நாங்க இந்த பொது வசதி( சுகாதாரம் , கல்வி , பாதுகாப்பு) எல்லாம் குடுததிருகோம், அதில நீங்களும் வந்து ஓட்டிகுங்க னு சொல்றது தானே வழக்கம். தமிழன் னு ஒருத்தன் இந்தா நாட்டில இல்லன்குற மாதிரி தானே பாக்குறாங்க. நாங்க எல்லாரும் சிங்களம் வாசிக்க எழுத தெரிஞ்சிவைத்த்திருகோம். அவங்க எல்லாரும் அப்டியா? எல்லாத்துலயும் நம்மள ஒதுகுறாங்க. நாங்களா தேடி போய் உரிமைகள எடுத்திகிட்ட தான் உண்டு. அதுக்கு அவங்களுக்கு கூழ கும்பிடு போட்டுகிட்டு நிக்கணும். தேசிய கீதத்த கூட தமிழ்ல பாடகூடதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம். அப்போ நாங்க அன்னியர் னு தானே ஒதுக்குற மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல தேசிய கோடி ல இருக்கிற பச்சையையும், செம்மஞ்சல்யும் தூக்கிட்டு சிங்கத்த மட்டும் வைப்பாங்க . அப்போ என்ன பண்ணுவீங்க? இப்டி எல்லாம் நடக்குறப்போ தமிழனுக்கு எங்க இருந்து வரும் நாட்டுப்பற்று? நாங்க வென்றா அது இராணுவத்துக்கு சமர்ப்பணம் னு ஒருத்தன் சொல்லும்போது கோவம் வராதா? இங்க எல்லாரும் ஸ்ரீலங்கன் தான், இங்க தமிழனோ சிங்களவனோ முஸ்லிமோ பர்கரோ கிடையாதுன்னு சொல்றத கேட்டா ரெண்டு அர்த்தம் வரும். ஒன்னு இங்க எல்லாரும் ஒன்னு தான் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் னு சொல்றமாதிரி இருக்கும். அதோட இன்னொரு அர்த்தமும் இருக்கு. அதாவது இங்க எல்லாருக்கும் எல்லாம் கிடைச்சாச்சு. இங்க எந்த குத்தமும் நடக்கல. எவனுக்கும் எந்த உரிமையும் குடுகவேண்டியதில்லன்னு தான் தோணும். இன்னும் சொல்லிட்டே போகலாம் அண்ணா. மேல ஒருத்தர் சொன்னா மாதிரி இங்க கிரிக்கட் வெற்றி ய வெளி உலகத்துக்கு காட்டினா இங்க மக்கள் சந்தோசமா இருகிராங்கனு பூசி மெழுகலாம்னு நினைக்கிறாங்க. (2011 WC இறுதி போட்டியில முரளி ய காயத்தோட விளையாட வெச்சதும் இதுனால தான்). கடைசியா நான் ஒன்னு சொல்றேன் நீங்க யாருக்கு வேணும்னாலும் ஆதரவு கொடுங்க. மத்தவங்க விருபங்கள குறை சொல்லாதீங்க, அவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள சீண்டாதீங்க.
Loshan Anna nenga solradu 100% correct.cricket ,politic include panradu romba thappu.dear indian fans one question 4 u.asin ,salman khan srilanka wanda podu awanga film tamilnadula oda vida kudadu nu sonnega.bt epdi unga india cricket team & ashwin srilanka wanda podu mattum silent irundega?
'ஹைலைட்' செய்த கருத்துக்கள் 'நச்'...
மிகவும் சரியான கட்டுரை .நானும் இதே நிலைபாட்டில் உள்ளதால் , உங்களது ஆக்கபூர்வமான இந்த கட்டுரையை எனது முகப்புத்தக குறிப்பு பகுதியில் மீள் பதிவு செய்கிறேன் பல அன்பர்களுக்காக .
நன்றி லோஷன் . உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகிறேன் .
மிகவும் சரியான கட்டுரை .நானும் இதே நிலைபாட்டில் உள்ளதால் , உங்களது ஆக்கபூர்வமான இந்த கட்டுரையை எனது முகப்புத்தக குறிப்பு பகுதியில் மீள் பதிவு செய்கிறேன் பல அன்பர்களுக்காக .
நன்றி லோஷன் . உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகிறேன் .
:)
:)
//இலங்கை கிரிக்கெட் அணிக்கான என் ஆதரவானது எந்த விதத்திலும் இலங்கியில் நடந்த இனப்படுகொலையை மறைக்க ஒரு ஆயுதமாக இருக்கப் போவதில்லை.இலங்கையில் இருந்து இயங்கும் எமது அடையாளம் இலங்கை. இதனால் இலங்கைக்குத் தான் செய்திகளில், அது விளையாட்டு செய்தியாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது இலங்கைக்குத் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்க.//
அண்ணா இவைகள் தான் யதார்த்தம்! இது புரியாத பல முட்டாள்கள் எம் இனத்தில் உள்ளார்கள். இவர்களது கருத்துகளுக்கு எல்லாம் பதிலளிப்பது முட்டாள்தனம். எம் நாட்டிலே படித்து இங்கு தொழில் செய்துகொண்டு அல்லது எமது படிப்பின் மூலம் கிடைத்த தகமையை கொண்டு வெளிநாடுகளில் இருந்து கொண்டு இப்படித்தான் இவர்களால் விமர்சிக்க முடியும் ஒரு ஊடகவியலாளராக மிக இறுக்கமான சூழ்நிலையில் நீங்கள் சூரியன் FM இல் இருக்கும் போது செயற்பட்ட விதம், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்டமை இதே எல்லாம் இவர்கள் அறிவார்களோ தெரியாது. யதார்த்தத்தை சிந்திப்பதை விடுத்து இன்னமும் பழைய பல்லவிகளை எவ்வளவு நாட்களுக்கு பாட முடியும்.
அதிலும் இவர்களில் 90% மானவர்கள் இந்திய ரசிகர்கள். அரசியல் பற்றி இவ்வளவு கதைப்பவர்கள் இந்திய அரசின் எமது இனம் தொடர்பான அரசியல் புரியாதவர்களா அல்லது புரியாதது போல நடிப்பவர்களா?
இது எவ்வாறு இருப்பினும் இது எமது நாடு எமக்கு உரிமையுடைய நாடு (அதைப் பெறுவதில் நாம் அரசியல் ரீதியாகவும் இராணு ரீதியாகவும் தோல்வியடைந்திருக்கலாம்). 1995 யாழில் இருந்து அனைத்தையும் இழந்து உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த அந்தகைய யுத்த சூழலிலும் இலங்கை இராணுவத்தின் மீது இருந்த வெறுப்பை விட நாடு உலக கிண்ணத்தை கைப்பற்றிய போது ஏற்பட்ட சந்தோசம் எனக்கு மேலானதாகவே இருந்தது. தற்போதைய நிலையிலும் பொருளாதார நோக்கங்களுக்காக தம்மை diaspora என கூறிக்கொண்டு வெளிநாடுகளில் பிச்சை கேட்கும் நபர்களுக்கு எனது நாட்டுக்கு நான் அதரவு அளிப்பதை கேட்க உரிமையில்லை.
Loshan,
Do not bother lesser minds. This is very natural for the people going through the post war hangover.
Besides, people are going to support the team who they want to support. Some people change their favourite team with time as their interest or political changes.
I was born and grew up in Jaffna and went through all the sufferings. I started playing cricket in early 90's and ever since supporting the SL team despite of all hardships and oppressions given by the government.
We all learn the text book cricket but realise that we play 'our brand ' of cricket. The 'island brand'.
It is always pleasure to watch when two island nations play the game with music and celebration.
It was a much needed victory for West Indies.
You are a human, Sri Lankan and then only Tamil or Sinhalese.
Cheers,
Bobby
சரியாக சொன்னீர்கள் அண்ணா..
இவர்களுக்கு எப்படி எடுத்து கூறினாலும் புரிந்துகொள்ளாமாட்டர்கள், தமிழீழ போராட்டம் சரியான பாதையில் சென்று முடிவு பெறாமைக்கு இப்படிபட்ட சில சில புரிந்துனர்வில்லா காரணங்களே எங்கும் பரவி இருந்தன... அதுவே அடிப்படை காரணமும் கூட. எமக்கு அரசியல் தெரியாது. ஆனால் எங்கள் இனத்திற்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. இலங்கை அணிக்கு ஆதரவு என்பது யாரும் சொல்லி வரவில்லை அதுவாகவே வந்தது ஒருவேளை இதுதான் தேசபக்தியோ.. இதற்க்கு எங்களுக்கு தேசதுரோகி என்று பட்டம். இது எங்கள் தாய்நாடு. அரசாங்கம் எதிராக இருக்கலாம், ஆள்கிறவன் எதிராக இருக்கலாம் அதற்காக என்னுடைய நாட்டின் பெயரில் இன ஒழிப்பு தவிர்த்து சமூக நல்லெண்ணங்களில் கிடைக்கின்ற வெற்றிகளை கொண்டாடாமல் இருக்கமுடியாது. முதலில் அண்ணன்தம்பிகள் நாங்கள் ஒழுங்காக இருப்போம் பிறகு அழிப்பவர்களை ஒழிப்போம்.
2007ல்ல உலககிண்ணம் வென்றால் அதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் பாதுகாப்புப் படையினருக்கு கொடுப்பேன் என்ற மஹேலவின் கூற்றை மறைத்த புத்திசாலித்தனத்திற்க்கு வாழ்த்துக்கள்
//சிலருக்கு சிலதைப் புரியவைப்பதை விட நாம் முட்டாள்களாக, முரடர்களாக, கெட்டவர்களாக, சுயநலவாதிகளாக, துரோகிகளாக அல்லது கோழைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.//
இது அனைவருக்கும் பொருந்தும்.. ஒவ்வொருவர் சட்டத்தில் அவர்களது பார்வையில் அவர்கள் செய்வது அநேகம் சரியாகத் தான் தோன்றும்.. புரிதல் என்பதற்கு ஒரு சரியான அளவுகோல் இருந்திருந்தால் யார் சொல்வது சரி, யார் சொல்வது பிழை என அளந்து பார்த்திருக்கலாம்..
இலங்கை அணியின் தோல்வியில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் குதூகலிப்பது அற்பத்தனமானது தான். அத்துடன் அப்படிச் செய்பவர்கள் இந்தியாவை ஆதரிப்பதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை..
பெரும்பான்மையினத்தவர்கள் இந்தியா என்றால் தமிழ்நாடு தான் என்று கருதி துவேசத்துடன் இந்திய கிரிக்கட்டை எதிர்ப்பது எம்மில் பலருக்கு இந்திய அணி மீது ஈர்ப்பு வரக் காரணமாக அமைந்திருக்கிறது.. ஆனால் அதற்காக இலங்கை அணியை எதிர்ப்பவர்கள் அர்த்தப்படுத்தி விட முடியாது..
ஆனால் இலங்கை அணி வெல்லும் போது ’நாம் இலங்கையர்’ , ’நாம் சிங்கங்கள்’, ‘எம்மவர்கள் வென்றார்கள் நாம் பெருமிதமடைகிறோம்’ என்று தமிழர்கள் கூக்குரலிடும் போது தாங்கமுடியவில்லை.. எமக்கு ஈழம் வேண்டாம் , தேசியம் வேண்டாம்.. கொடுத்த விலைகள் போதும்.. ஆனால் நாளை நம் சமுதாயம் எங்களுடைய கலாச்சார விழுமியங்களுடன் தமிழ் பேசி வாழவாவது ஒரு கொஞ்ச சுயநிர்ணயம் எமக்குத் தேவையல்லவா ? சிங்களவர்களுடன் (கிரிக்கட் வீரர்களையும் சேர்த்துத்தான்) இதனைப்பற்றிப் பேசினால் அநேகம் பேரும் கேட்பார்கள் ஏன் நாம் ஒன்றாக வாழமுடியாது ? உங்களுக்கு என்ன தான் பிரச்சினை என்று (பத்துக்கு ஒன்று என்று தண்ணியையும் பத்துக்கு ஒன்பது என்று பாலையும் கலந்தால் அது கடைசியில் பாலாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு புரியுமா ?).. அவர்கள் எங்கள் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை, ஆனால் எங்களை மனிதர்களாகப் பார்க்கிறார்கள் (அது உண்மை).. போரின் வெற்றியை முன்னிறுத்தி சிங்கள தேசியத்தை வலியுறுத்தி வாக்குக் கேட்ட அரசாங்கத்துக்கு அவர்கள் அமோக ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் , இன்றும் தமது இராணுவத்தையும் அவர்களது தியாகத்தையும் போற்றுகிறார்கள். ஆக அரசாங்கத்தை , இராணுவத்தை , மக்களை , அவர்களது நாட்டுப்பற்றை எந்த வகையில் நீங்கள் வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. அதே நாட்டுப்பற்று தமிழர்களுக்கு எவ்வாறு வரமுடியும் ?
அடிப்படையில் நாம் அனைவரும் இலங்கையர்கள் தான், இலங்கையில் பிறந்தோம், இலங்கையின் இலவசக் கல்வியை சுகாதாரத்தை பெற்றுக்கொண்டோம்.. பொருளாதாரத் தடையில் நசுங்குண்டோம் , வான்கலங்களுக்கு அஞ்சி ஓடினோம் , வேட்டுக்களுக்கு இரையாகினோம். இத்தனையும் தாண்டி எந்த வகையில் உண்ர்வுபூர்வமான இலங்கையனாவோம். அடிப்படைக் காரணங்கள் தவிரவும் வேறு எதாவது நியாயங்களை முன்வைப்பீர்களா ? 'i mean a Sri Lankan with Passion' இன்றும் சீருடைக்காரரை கண்டால் எங்களில் பலருக்கு இனம் புரியாத ஒரு பய உணர்வு வரும். இந்த நிலையில் நான் இலங்கையன் என எவ்வாறு மார்தட்டிக் கொள்ள முடியும் ?
நாம் இலங்கையர், உண்மை.. ஆனால் எப்பொழுது அதற்குரிய தகுதியைப் பெறுவோம் ? அவர்கள் தருவார்களா ? நான் தமிழ் தேசியம் பேசவில்லை.. பேச எனக்கு ஒரு அருகதையும் இல்லை.. நீங்கள் இலங்கையணியை மானசீகமாக ஆதரியுங்கள். அதற்காக கிரிக்கட்டில் அரசியல் இல்லை , கிரிக்கட் வீரர்கள் அரசியல் கலப்பற்றவர்கள் என்றெல்லாம் சொல்லாதீர்கள். கிரிக்கட்டில் நம்மெல்லாராலும் மிகவும் மதிக்கப்பட்ட அர்ஜுன பின்னொரு காலத்தில் இனவாதக் கட்சியில் இணைந்து இனவாதம் கக்கினார் என்பது உண்மை, சங்கக்கார தனது உரையில் இலங்கை மக்கள் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவற்றையெல்லாம் தனது உரையில் குறிப்பிட்டார். எங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னாரா ? (அவர் அரசியல் பேசியிருப்பதால் அதனை முழுமையாகப் பேசியிருக்க வேண்டும்)
இலங்கையணி வெல்லும் போது மகிழ்வது வேறு விடயம் ஆனால் அதனை நாட்டுப்பற்றுடன் ஒப்பிட்டு பின்னர் அதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என உரைப்பது ஏன் என எனக்குப் புரியவில்லை.
Patriotism is supporting your country all the time and your government when it deserves it. - Mark Twain //
Just saying!
மாற்று கருத்துகளை வெளியிடும் போது நாம் எவ்வளவு தான் வேறுபட்டவழி முறைகளில் பங்களித்திருந்தாலும் உடனே 'இனதுரோகி' பட்டம் தரும் நபர்களில் பெரும்பாலோனோர் மகிழ்வது இலங்கை அணியின் தோல்வியை விட அண்டை நாட்டு அணியின் வெற்றிகளிலேயே உள்ளது.நீங்கள் எந்த அணிக்கு வேண்டுமானாலும் ஆதரவளியுங்கள்.அது உங்களின் தனிப்பட்ட விடயம்.அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத,வழிகள் நிறைந்த போராட்ட முறைமைக்குள் உட்படுத்தாதீர்கள்.'பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்' அண்டை நாட்டு அரசியல் காரணமாக நாம் சந்தித்த பல இழப்புகளை சகோதர படுகொலைகள்,இந்திய அமைதிப் படை என்ற பெயரில் இங்கு வந்து புரிந்த அட்டூழியங்கள்,அன்று முதல் இன்று வரை தொடரும் ஆள்,ஆயுத உதவி ,இராணுவ பயிற்சிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.அப்படிப்பட்ட நாட்டு அணிக்கு நீங்கள் பெரும்பாலோனோர் ஆதரவளிக்கும் போது உரிமைகள் மறுக்கப் பட்டாலும் பங்காளிச் சண்டைகள் இடம்பெற்றாலும் இதுவே எங்கள் தாய்நாடு.இதை விட்டால் எங்களுக்கு வேறு நாதியில்லை.விளையாட்டில் இலங்கை அணி தோற்பதால் சர்வதேச பார்வை எம்பக்கம் திரும்பி உரிமைகள் கிடைக்கும் என்றால் எம் போராட்டம் ஒன்றும் 'லகான்' திரைப்படமில்லை.
மாற்று கருத்துகளை வெளியிடும் போது நாம் எவ்வளவு தான் வேறுபட்டவழி முறைகளில் பங்களித்திருந்தாலும் உடனே 'இனதுரோகி' பட்டம் தரும் நபர்களில் பெரும்பாலோனோர் மகிழ்வது இலங்கை அணியின் தோல்வியை விட அண்டை நாட்டு அணியின் வெற்றிகளிலேயே உள்ளது.நீங்கள் எந்த அணிக்கு வேண்டுமானாலும் ஆதரவளியுங்கள்.அது உங்களின் தனிப்பட்ட விடயம்.அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத,வழிகள் நிறைந்த போராட்ட முறைமைக்குள் உட்படுத்தாதீர்கள்.'பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்' அண்டை நாட்டு அரசியல் காரணமாக நாம் சந்தித்த பல இழப்புகளை சகோதர படுகொலைகள்,இந்திய அமைதிப் படை என்ற பெயரில் இங்கு வந்து புரிந்த அட்டூழியங்கள்,அன்று முதல் இன்று வரை தொடரும் ஆள்,ஆயுத உதவி ,இராணுவ பயிற்சிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.அப்படிப்பட்ட நாட்டு அணிக்கு நீங்கள் பெரும்பாலோனோர் ஆதரவளிக்கும் போது உரிமைகள் மறுக்கப் பட்டாலும் பங்காளிச் சண்டைகள் இடம்பெற்றாலும் இதுவே எங்கள் தாய்நாடு.இதை விட்டால் எங்களுக்கு வேறு நாதியில்லை.விளையாட்டில் இலங்கை அணி தோற்பதால் சர்வதேச பார்வை எம்பக்கம் திரும்பி உரிமைகள் கிடைக்கும் என்றால் எம் போராட்டம் ஒன்றும் 'லகான்' திரைப்படமில்லை.
மாற்று கருத்துகளை வெளியிடும் போது நாம் எவ்வளவு தான் வேறுபட்டவழி முறைகளில் பங்களித்திருந்தாலும் உடனே 'இனதுரோகி' பட்டம் தரும் நபர்களில் பெரும்பாலோனோர் மகிழ்வது இலங்கை அணியின் தோல்வியை விட அண்டை நாட்டு அணியின் வெற்றிகளிலேயே உள்ளது.நீங்கள் எந்த அணிக்கு வேண்டுமானாலும் ஆதரவளியுங்கள்.அது உங்களின் தனிப்பட்ட விடயம்.அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத,வழிகள் நிறைந்த போராட்ட முறைமைக்குள் உட்படுத்தாதீர்கள்.'பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்' அண்டை நாட்டு அரசியல் காரணமாக நாம் சந்தித்த பல இழப்புகளை சகோதர படுகொலைகள்,இந்திய அமைதிப் படை என்ற பெயரில் இங்கு வந்து புரிந்த அட்டூழியங்கள்,அன்று முதல் இன்று வரை தொடரும் ஆள்,ஆயுத உதவி ,இராணுவ பயிற்சிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.அப்படிப்பட்ட நாட்டு அணிக்கு நீங்கள் பெரும்பாலோனோர் ஆதரவளிக்கும் போது உரிமைகள் மறுக்கப் பட்டாலும் பங்காளிச் சண்டைகள் இடம்பெற்றாலும் இதுவே எங்கள் தாய்நாடு.இதை விட்டால் எங்களுக்கு வேறு நாதியில்லை.விளையாட்டில் இலங்கை அணி தோற்பதால் சர்வதேச பார்வை எம்பக்கம் திரும்பி உரிமைகள் கிடைக்கும் என்றால் எம் போராட்டம் ஒன்றும் 'லகான்' திரைப்படமில்லை.
----- Paul Gomberg, contemporary scholar of ethics, has compared the modern patriotism to racism, arguing that a primary implication of patriotism is that a person’s moral duties are focused on members of their nation, EXCLUDING NON-MEMBERS FROM THE EQUATION! ------
What does a country mean ? Just a physical land ? Or People ? Or a Goverment ? Or its Military ?
People , Goverment and Military have a strong inter relationship with them in a democratic country where a goverment is elected from people's preference..
#அரசியல் ரீதியாக ஒரு அணியை , அதிலும் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது பொருத்தமற்றது என்பதே என் வாதம்.
எங்கள் அடையாளமாக இருக்கப் போகிற இலங்கையன், இலங்கையில் பிறந்தவன் என்பது எப்போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கான எனது ஆதரவுக்குக் காரணங்களில் ஒன்று.# நியாயமான கருத்து..
#அரசியல் ரீதியாக ஒரு அணியை , அதிலும் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது பொருத்தமற்றது என்பதே என் வாதம்.
எங்கள் அடையாளமாக இருக்கப் போகிற இலங்கையன், இலங்கையில் பிறந்தவன் என்பது எப்போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கான எனது ஆதரவுக்குக் காரணங்களில் ஒன்று.# நியாயமான கருத்து..
Thanks a lot for being the lecturer on this area. We enjoyed your own article quite definitely and most of all cherished how you handled the issues I widely known as controversial. You happen to be always quite kind towards readers much like me and help me in my lifestyle. Thank you.
இலங்கை அரசின் காரணமாக இலங்கையின் கிரிக்கெட் அணியை, இலங்கையை நிராகரிக்க வேண்டும் எனச் சொல்லும் பலர் அந்தப் போரை ஆதரித்த, ஊக்கமளித்த, அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நாடுகளில் வாழ்ந்து கொண்டு, அங்கிருந்து "இலங்கையைப் புறக்கணியுங்கள்" என இங்குள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவது தான் வேடிக்கையானது.
எல்லா மேற்கத்தேய நாடுகளும் போருக்கு ஆதரவளித்தன. வெளியில் என்ன சொல்லிக் கொண்டாலும், இராணுவ உதவி, நிதி உதவி என வழங்கியிருந்தன.
அங்குள்ளவர்கள் எங்கே அதை எதிர்த்து அங்கிருந்து வெளியேறட்டும் பார்க்கலாம்?
இலங்கை நான் பிறந்த இடம், எனவே இங்கு இருக்கிறேன்.
அங்கு சென்றவர்கள் உங்கள் தெரிவின் பேரிலேயே அங்கு சென்றீர்கள். அங்கு செல்லும் போது மாத்திரம் இந்த உணர்வுகள் எவையும் எழுந்திருக்கவில்லையோ?
இலங்கையைச் சேர்ந்தவனாக எனது நாட்டை நான் விரும்புவது என்பது இயல்பானது, எனது தெரிவுகள் பற்றி யாரும் விமர்சிக்கத் தேவையில்லை.
வேறு நாட்டிற்கு ஆதரவளியுங்கள், உங்கள் தெரிவு.
ஆனால் பிறந்த நாட்டைக் காரணமின்றி எதிர்த்தால் அதற்கு நான் எப்போதும் எதிர்ப்புத் தெரிவிப்பேன்.
Verry good
Post a Comment