October 26, 2012

குடை - மழை - குளிர் காய்தல்


குடை - மழை - குளிர் காய்தல்  இல்லாத நேரம் இருக்கிறதைத் தேடிப்பிடித்து 
கிடைக்கிறதைப் பெற்றுய்ந்து 
பாவம், புண்ணியம் துரோகம் பாராது 
அது மாறாது இது மாறாது என்பது..
மாற்றம் ஒன்றே மாறாதது 
இதுவே கடைசி - அன்று சொன்னது 
இன்று???

ஆழ் மனது அறிவிப்பது அப்படியே நடக்கிறது 
அவன் - இவன் அப்பிடித் தான் - இப்பிடித் தான் 
எல்லாம் அப்படியே தான்...

மனதுகளை முகம் பார்த்தோ, முகங்கள் பார்க்காமலோ 
வாசிக்க முடிகிறது 

நீ செய்த முன்வினை 
மீண்டும் உனக்கே என்பது விதி 

இனி எல்லாம் நல்லபடி.. 
நம்புங்கள் நடக்கும் 
கடைசி வாய்ப்பு..
எத்தனை கேட்டாச்சு.. 
நம்பித்தானே இவ்வளவு காலமும் 

நம்பிக்கை எல்லாம் இங்கே சும்மா சம்பிரதாய வார்த்தை 
உறுதிமொழிகள் எல்லாம் உயிரும் உணர்வும் இல்லாதவை 

பிரதியீடுகள் மலிந்துபோன காலம் இது..

கோக் இல்லாவிட்டால் பெப்சி..
wifi இல்லாவிட்டால் 3G

ஒரே நேரத்தில் பலரோடு.. 
ஒரே நேரத்தில் பலராய்.. 
சீ... எப்படி முடிகிறது?

குற்றவாளி அவனே.. 
அவனே தான்.. 

ஆனாலும் திருந்துவான் ?? 
ம்ஹூம்...

மழைநேரம் குடை போல இவன்... 
நனைவான்.. 
வெயில்நேரம் குடைபோல இவன்..
காய்வான்.

தேவையான நேரங்களில் இவன்.... 

போகட்டும் காலம்... 

October 14, 2012

மாற்றான்
இரட்டை வேடங்களில் ஹீரோ.. இரு வேறு குணங்கள்.. ஒரே ஹீரோயின். ஒரு வில்லன். ஒரு ஹீரோ இறக்க மற்றவர் சுபமாக்கும் எத்தனையோ படங்களை MGR காலத்திலிருந்து இன்றைய கதாநாயகர்கள் காலம் வரை பார்த்துவிட்டோம்.

ஆனால் K.V.ஆனந்தின் மாற்றான் வித்தியாசம்; கதாநாயகர்கள் ஒரே உடம்பில் ஒட்டிப் பிறந்த இரட்டையர். கதையும் களமும் புதியது என்றார்கள்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து (அல்லது பெரிதாகத் தோல்வியடையாத படங்களைத் தந்து ) வருகின்ற சூர்யாவும், வெற்றிப்படங்களையே தந்துவருகின்ற இயக்குனர் K.V.ஆனந்தும் ஒன்றாக இணைவது படத்தைப் பற்றி நம்பிக்கையையும் ஏற்றிவிட்டது.

ஆனால் உண்மையாக படத்தின்  trailer மற்றும் சாருலதா விளம்பரம் ஆகியன மாற்றான் மீது எதிர்பார்ப்பைக் குறைத்திருந்தன என்பது உண்மை.

கொஞ்சம் விஞ்ஞானம் , கொஞ்சம் காதல், கொஞ்சம் துப்பறிதல் என்று வழமையான K.V.ஆனந்தின்  பாணியில் இரட்டைவேடக் கலப்பையும் சேர்ந்து தூவி, சுபாவின் வசனங்கள், திரைக்கதையில் ஒரு சூப்பர் ஹிட் படத்தைத் தந்திருக்கலாம் தான்.
ஆனால் ஒரு சில இடங்கள் தவிர ஏனைய இடங்களிலெல்லாம் மாற்றான் இழுக்கிறது.

மரபியல் /மரபணு விஞ்ஞானி தனது பிள்ளைகளையே சோதனைக்கான காலமாகப் பிறக்க வைக்கிறார். ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்.. தந்தையார் ஒரு விஞ்ஞானியாக இருந்து, கடுமையான உழைப்பு, முயற்சியால் வெற்றிகரத் தொழிலதிபராக மாறுவது.. அவரைச் சுற்றி நடக்கும் சதிகள், மர்மம், இரட்டையரின் காதல், அதன் பின்னான சண்டை, துரத்தல், முடிச்சவிழ்த்தல் என்று சொல்லும்போது பரபரவெனத் தெரிகின்ற இத்தனை விடயங்களின் தொகுப்பு எப்படியான ஒரு பூரணமான சூடான திரைப்படமாக வந்திருக்கவேண்டியது... சோர்வாக, சொதப்பலாக சூர்யாவுக்கு அண்மைக்காலத்தின் இரண்டாவது சறுக்கலாக வந்திருக்கிறது.

ஒட்டிப்பிறந்த இரட்டையரை இடைவேளை வரை ஒவ்வொரு காட்சிகளிலும் காட்டுவதில் எடுத்த சிரத்தையும், காட்சிக்குக் காட்சி காட்டிய நுணுக்கமும் பாராட்டுக்குரியவை.
அதிலும் பாடல் காட்சிகள், நடனங்கள், இடைவேளைக்கு முன்னதான நீளமான சண்டைக்காட்சி ஆகியவற்றில் ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், எடிட்டர் அன்டனி ஆகியோரின் உழைப்பு மெச்சக்கூடியது.
குழப்பமான கதைக்களத்தை சாமர்த்தியமாக சுபா இரட்டையரின் கதை அனுபவத்தினாலும், காட்சிகளை சுவாரஸ்யமாக எடுத்திருப்பதிலும் நகர்த்த முயன்றிருக்கிறார் இயக்குனர்.

ஆனால் தமிழ் சினிமாவின் சில தவிர்க்க முடியா விடயங்கள் தடைக்கற்கள் ஆகின்றன.
இரட்டையரில் ஒருவர் அமைதியான, புத்திசாலி என்றால் மற்றவர் குறும்பான, முரட்டுத்தனம் மிக்கவராம். ஒரே காதலிக்கு இருவரும் ஆசைப்படுவது.

சூர்யாவின் நடிப்பைப்பற்றி இன்னும் பாராட்ட வேண்டுமா?
எத்தனையோ படங்களில் நிரூபிக்கப்பட்ட நடிப்பு.
இருவேடங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில் ஜெயித்துள்ளார்.
ஆனால் மீசையில்லாத விமலனாக அவரது முகத்தில் முதுமை தெரிகிறது.
அகிலனாக முதல் பாதியில் கலக்கோ கலக்கல். (குறிப்பாக அந்த போலீஸ் நிலையக் காட்சி ;) )
ஆனால் ஏதோ ஒன்று முழுப்படத்திலும் சூர்யாவிடம் மிஸ்ஸிங்.
ஏழாம் அறிவு hangover இருப்பது போலவும் தோன்றுகிறது.

காஜல் அகர்வால். அழகு.. அவர் கண்கள் அதைவிட அழகு..
நடிக்கிறார் என்பதை விட அதிகமாக மொழிபெயர்க்கிறார்.. விழிகளாலும் எம்மையும்..
சின்மயியின் பின்னணிகுரல்  மிக நன்றாக ஒத்துவருகிறது.

ஆனால் சூர்யா - காஜல் அகர்வால் காதல் ஏனோ அபத்தமாக உள்ளது.. நாணிக்கோணி பாடல் தவிர...
ஆரம்பம் முதலே.. ஏன், எதற்கு என்ற கேள்விகளை எழுப்பிப் பார்த்தால் ஆடுவதற்கும் பாடுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் கதாநாயகனுக்கு ஒரு துணை தேவைப்பட்டுள்ளது.
விமலனிடம் காதல் வயப்பட்டு அப்படியே இடைவேளையின் பின் ஒரு பாட்டிலே காதல் மாறிவிடுவது கடுப்பாக்குகிறது.

நாணிக்கோணி பாடலின் இரண்டாவது சரணத்தின் பின்னணி இசையிலும் வரியிலும் இரண்டாவது சூர்யாவின் முகபாவம், கண்கள் மாறும் தோரணையில் இதோ இரட்டையர் ஒரு பெண் மீது காதல் கொள்வது வாலிக்குப் பின் வித்தியாசமாக K.V.ஆனந்தினால் இங்கே காட்டப்படப் போகிறதோ என்று பார்த்தால்.. ப்ச்...

பாடல் காட்சிகளை வழமைபோலவே K.V.ஆனந்த் கதை சொல்லப் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.
ரெட்டைக் கதிரே , இரட்டையரின் வளர்ச்சி, தந்தையின் முன்னேற்றம் ஆகியவற்றைக் காட்டவும்,
யாரோ யாரோ - கதாநாயக மாற்றம், காதல் மாற்றம் ஆகியவற்றைக் காட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன...
படம் என்னவோ இழுவையாக இருந்தாலும், பாடல்கள் படமாக்கப்பட்டிருப்பது ரசனை.  அது K.V.ஆனந்தின் கைவந்த கலையாயிற்றே.

சூர்யாக்களின் தந்தையாக வரும் சச்சின் கெடேக்கர் ஏற்கெனவே தெய்வத் திருமகளில் அமலா பாலின் தந்தையாக நடித்தவர். மனிதர் அற்புதமாக நடித்துள்ளார்.அந்தக் கண்கள் மிரட்டல்.
தாயாக நடித்திருப்பவர் தாராவாம். பார்த்த முகமில்லை. ஆனால் தமிழ் சினிமாக்களின் வழமையாக உருகும் பாசமுள்ள தாய்.

நகைச்சுவைக்கெனத் தனியாக காட்சிகளோ, நகைச்சுவை நடிகர்களோ இல்லாதது தொய்வாக சில இடங்களில் இருந்தாலும், படம் இழுக்கும் இழுவையில் கடியான நகைச்சுவையும் இருந்திருந்தால் சுவிங்கம் தான்.

உளவாளி, பத்திரிகையாளராக வருகின்ற அந்த வெள்ளைக்காரப் பெண் திருப்பத்துக்கு உதவினாலும், அவர் உளவு பார்க்கும், அகப்படும், இறக்கும் இடங்களெல்லாம் ஏகத்துக்கு ஓட்டைகள்.

பாடல்களில் ரசிக்கவைத்த ஹரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றியிருக்கிறார்.
அதிலும் அந்த 'உக்வேனிய' துரத்தல் காட்சிகளில் சுத்தம்...

 தமிழில் முதன் முதலாக performance capture technology முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகளும், ரஷ்யா, சேர்பியா, குரோஷியா, அல்பேனியா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் புதுமையானவை.
ஆனால் இவற்றையெல்லாம் விழுங்கிவிடுகின்றன இலகுவாக ஊகிக்கக்கூடிய கதைத் திருப்பங்களும், இழுவையான வெளிநாட்டுத் துப்பறியும் காட்சிகளும், சண்டைகளும்.
பீட்டர் ஹெய்னாம் சண்டைப் பயிற்றுவிப்பாளர். இடைவேளைக்கு முன்னதான சண்டைக்காட்சியில் இரட்டையர் மோதும் காட்சிகள் ரசிக்கவைத்தாலும் நீளமோ நீளம்.
அதேபோல அந்த வெளிநாட்டு சண்டைகளும் செம நீளம்.. கொட்டாவி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளும், பதக்கங்கள் வெல்ல ஒவ்வொரு நாடும் (முக்கியமாக வல்லரசுகள்) படும் பாடுகளைக் காட்டியிருக்கும் விதம் தமிழுக்குப் புதியது.
ரஷ்யப் பின்னணி இருப்பதால் எங்கே அமெரிக்க ஏகாதிபத்திய வால் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயத்தில் படத்தின் ஆரம்பத்திலேயே
"இந்தப் படம் எந்த நாட்டையும் மோசமாகக் காட்டும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை" என்ற அறிவித்தலையும் கொடுத்துவிடுகிறார்.
படத்தில் சொல்லப்பட்டுள்ள ரஷ்யாவிலிருந்து பிரிந்த அந்த உக்வேனியா எங்கே இருக்கிறது என்று யாராவது தேடப் போகிறார்கள்.
ஆனால் அங்கே சென்று குற்றவாளிகளையும் ஆதாரத்தையும் தேடும் காட்சிகள் ஒட்டவில்லை.
வில்லனை பாசம் கடந்து வெறுக்கச் செய்வதற்கு அந்த 'பத்து அப்பா' வசனத்தை வைத்து அபத்தமாக்குகிறார்.

சுவாரஸ்யமாக, பிரமிக்கும் விதத்தில் எடுத்திருக்கவேண்டிய படம் தறிகெட்டு முடியமாட்டாதா என்று கெஞ்சிக் கேட்கும் வகையில் முடிகிறது.
எந்த நேரத்தில் மாற்றான் என்று பெயர் வைத்தார்களோ, சூர்யாவுக்கும்  K.V.ஆனந்துக்கும் இனித் தங்களை மீள்வாசித்துக்கொள்ளவேண்டிய நேரத்தை மாற்றான் தந்திருக்கிறது.
சூர்யாவின் அதிதீவிர ரசிகர்களையும், காஜல் அகர்வாலையும் மட்டும் கவரலாம்..

படம் தந்த சில பாடங்கள்..
எந்தவொரு கண்டுபிடிப்புமே சில தீய பக்கவிளைவுகளைத் தரக் கூடியதே..
சூர்யாவையும், சுபாவையும் மட்டும் நம்பி ரசிகர்களைக் கதை என்று ஒரு விஷயத்தில் சொதப்ப முடியாது.
மாற்றான் - ஏமாற்றினான்


October 12, 2012

உலக T20 கிண்ணத் தொடர் - ஆட்டம் முடிஞ்சாலும் ஆறாத விஷயங்கள் - #ICC World Twenty20


உலக T20 கிண்ண வெற்றி மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிடைத்து பற்றி இப்பொழுது சொல்லவந்தால் "அண்ணோய் டீ ஆறிட்டுது" என்று குரல் வரும்....

கொஞ்சம் நேரக் குறைவு, அதைவிட அலுவலகத்தில் பெரிய பெரிய ஆணி புடுங்கல்கள், அலவாங்கு புடுங்கல்கள், சில அதிமுக்கிய முடிவுகளை எடுத்தல்கள் எல்லாம் இருந்ததால், வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை.
இலங்கை அணி தோற்றதால் மனம் உடைஞ்சு போயிட்டீங்களா அண்ணே  என்று கேட்டு சந்தோசத்தில் மிதக்கும் அன்பு நண்பர்கள்....

கடமையில் என்றைக்கும் கண்ணாய் இருக்கும் உங்கள் லோஷன் தமிழ் மிரரில் உலக T20 கிண்ணம், உலக T20 கிண்ண இறுதி பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.


மேற்கிந்தியத்தீவுகள்: கொண்டாடப்படவேண்டிய கோலாகலச் சாம்பியன்கள்இந்த உலகக் கிண்ண இறுதியிலும் இலங்கை அணி தோற்றதன் பின்னர் எழுந்த பரவலான கருத்துப் பகிர்வுகள், தொடர் நக்கல்கள், எதிர்வு கூறல்கள், எதிர்ப்புக்கள், விமர்சனங்கள், விவாதங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வாசித்து, அவதானித்து, பங்குபற்றி வந்தவன் என்ற அடிப்படையில் சில விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் பகிர்ந்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கின்றேன்.


இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு எனும் தளத்தில் நான் நிற்பதால் சிலருக்கு (வெகு சிலருக்கு) நான் துரோகி, எதிரி & கோமாளி.
அது பற்றி பரவாயில்லை.

அரசியல் ரீதியாக ஒரு அணியை , அதிலும் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது பொருத்தமற்றது என்பதே என் வாதம்.
எங்கள் அடையாளமாக இருக்கப் போகிற இலங்கையன், இலங்கையில் பிறந்தவன் என்பது எப்போதும் இலங்கை கிரிக்கெட் அணிக்கான எனது ஆதரவுக்குக் காரணங்களில் ஒன்று.

சரி, இலங்கை கிரிக்கெட் அணியை விட மற்ற அணிகளைப் பிடித்திருந்தால் அந்த அணிகளுக்கான ஆதரவை வழங்குவதில் தவறேதும் இல்லை; ஆனால் இலங்கை அணி தோற்கவேண்டும்; இலங்கை அணி எந்த கிரிக்கெட் அணியோடு விளையாடினாலும் எதிர்க்கவேண்டும் என்ற எண்ணப் பாங்கில் பலர் இருப்பதை அவதானிக்கிறேன்.

அரசியல் காரணங்கள், இலங்கை அரசாங்கம், இராணுவத்தைப் பலர் இதற்கான காரணங்களாக சுட்டி பலர் வாதிட்டதை அவதானித்தேன்.
இதில் அளவுக்கதிகமாக இறங்கி என்னை 'துரோகி' ஆக்கிக்கொள்ள எனக்கு ஆசையில்லை.

ஆனால் தமிழ்த் தேசியம், தமிழருக்கான விடுதலை ஆகியவற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தே ஆகவேண்டும்; இந்த எதிர்ப்பு உலகம் முழுதும் தொனிப்பதால் தமிழருக்கான சர்வதேச ஆதரவும் தமிழர் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள்.

எங்கள் ஆழமான, உணர்வுபூர்மான போராட்டம், கிரிக்கெட்டை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் கொண்டாடி ஆறுதல் படும் அளவுக்கு மழுங்கிவிட்டதா என்ற கவலை என்னைப் போல் பலருக்கு.

சிம்பாப்வேயின் ஹென்றி ஒலோங்கா, அன்டி பிளவர் போன்றோர் கறுப்புப் பட்டி அணிந்து போராடியதை ஒரு சிலர் உதாரணம் காட்டியிருந்தார்கள்.
அதன் அடிப்படை விடயத்தை மறந்தார்களா தெரியவில்லை...

நான் இதில் இன்னும் விளக்கவோ, விவாதிடவோ தயாராக இல்லை.
என் நிலைப்பாடு மிகத் தெளிவானது...

இலங்கை கிரிக்கெட் அணிக்கான என் ஆதரவானது எந்த விதத்திலும் இலங்கியில் நடந்த இனப்படுகொலையை மறைக்க ஒரு ஆயுதமாக இருக்கப் போவதில்லை.

இலங்கை அணிக்கான ஆதரவு ஜனாதிபதிக்கான ஆதரவும் கிடையாது.
இலங்கை கிரிக்கெட் அணியைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்று நினைப்பவர்கள் யாராவது இருந்தால் அதைவிட முப்பது வருடங்களாக வெளியுலகத்தை எட்டிப் பார்க்கவைத்த எக்கச்சக்கமான விடயங்கள் செய்யாததையா இவை செய்துவிடப் போகின்றன?

அடுத்து பேஸ்புக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியைக் 'கொண்டாடி' மகிழ்ந்து இலங்கை அரசின் இனப்படுகொலை, தமிழரை ஒதுக்குவது பற்றிய விடயங்களால் தான் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்ப்பதாகச் சொன்ன பலரில் சிலரது Facebook Wallஐப் பார்த்தேன்.... பூராக இந்திய அணியின் ஆதரவு நிலைத் தகவல்கள், படங்கள், ஆதரவு கோஷங்கள்..
இனி நான் ஏதாவது சொல்லணுமா?

சிலருக்கு சிலதைப் புரியவைப்பதை விட நாம் முட்டாள்களாக, முரடர்களாக, கெட்டவர்களாக, சுயநலவாதிகளாக, துரோகிகளாக அல்லது கோழைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.
-------------------------------

இன்னொரு விடயத்தையும் நான்  தெளிவுபடுத்த வேண்டும்...

ஒரு ஊடகவியலாளனாக, ஒலிபரப்பாளனாக நான் எந்த செய்திகளுக்கும் (விளையாட்டு செய்திகளுக்கும் கூட) நான் நடுநிலையாளன் தான்.
ஆனால் இலங்கையில் இருந்து இயங்கும் எமது அடையாளம் இலங்கை. இதனால் இலங்கைக்குத் தான் செய்திகளில், அது விளையாட்டு செய்தியாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியது இலங்கைக்குத் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்க.

விளக்கம் தேவையாயின் ஒலிம்பிக் நேரத்தில் BBC பிரித்தானிய அணிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும், NDTV, Cricinfo, TOI, Star Networks முதலாயன இந்தியாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பாருங்கள்.

அதே போல இந்த வலைத்தளத்தில் நான் என் சொந்த விருப்பு வெறுப்புக்களை மட்டுமே பொதுவாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
----------------------------------

இந்த உலக T20 யின் பின்னர், மஹேலவின் T20 தலைமைப் பதவித் துறப்பு இலங்கை அணிக்கு ஒரு புதிய தலைமைத்துவத்தையும், புதிய வழியில் இலங்கை இனி பயணிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதையும் காட்டி இருக்கிறது.

மஹேல ஜெயவர்தன மீண்டும் தலைமைப் பதவியை ஏற்கும்போதே சொன்னது போல வருகின்ற டிசெம்பர் மாதத்துடன் டெஸ்ட், ஒருநாள் தலைமைப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக உள்ளார்.

மத்தியூசைத் தலைமைப் பதவிக்குத் தள்ளி இனிப் பழக்கத்தான் வேண்டும்.. ஆனால் தடுமாற்றம் கொஞ்சக் காலத்துக்கு இருக்கத் தான் போகிறது.

சாம்பியன்கள் ஆன மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் டரன் சமியை இனிக் கொஞ்சக் காலத்துக்காவது யாரும் இவ்வளவு காலமும் கிண்டலடித்துத் தள்ளியது போல Non playing captain என்று சொல்லமுடியாது.

நல்லதொரு ஆளணி முகாமைத்துவம் தெரிந்த ஒருவராக சமி தன்னை ஆரம்பம் முதல் நிரூபித்து வந்திருக்கிறார் என்பதை நான் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியும் கடைசியாக அடித்த ஒரு அரைச்சதம் மூலமாகத் தன் இருப்பைக் கேள்வி கேட்டவர்களைக் கொஞ்சமாவது மௌனிக்க வைத்திருக்கிறார் போலும்.

இந்தியாவின் அரையிறுதிக்கு முன்னதான வெளியேற்றத்தை அடுத்து தோனி மீது மீண்டும் விமர்சனங்கள்..  துடுப்பாட்ட வரிசையில் முன்னே ஏன் அவர் வரவில்லை; துடுப்பாட்ட வரிசை அடிக்கடி மாற்றப்படுவது, அணி வரிசை மாற்றப்படுவது என்றெல்லாம் இனிப் புதிது புதிதாய்க் கிளம்பும்..

அதற்கெல்லாம் சேர்த்துத் தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் தான் விளையாடப்போவதில்லை என்று உறுதிபட தோனி அறிவித்துவிட்டார்.

மற்றைய அணித்தலைவர்களுக்கு இத்தொடரின் வெற்றி-தோல்விகள் பெரிதாக தாக்கம் எதையும் கொடுக்கப் போவதில்லை.
--------
நடந்து முடிந்த உலக T20 கிண்ணம் தொடர்பான இன்னும் சுவாரஸ்யங்கள், சாதனைகள், முக்கியமான விடயங்கள் குறித்து தமிழ் மிரரில் இன்னொரு கட்டுரை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

பருவப்பெயர்ச்சி மழை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளைப் பதம் பார்க்கப் போகிறது என்று பதறிக்கொண்டிருந்த எமக்கு, அதை விட, இறுதிப் போட்டியில் மழை வந்து விளையாடிவிடப் போகிறது என்று மஹேல ஜெயவர்தன உட்பட நாம் அனைவருமே தேவையற்று டென்ஷன் ஆனாலும் மழை விட்டுக்கொடுத்திருந்தது.
அதற்குப் பிறகு கொட்டிய மழையும், கிழக்கு மாகாணத்தில் தொடர் மழையும் இப்போது எப்பூடி என்று கேட்க வைத்திருக்குமே ,....

அதற்கிடையில் கிரிக்கெட் மழை விடாமல் தொடர்கிறது. தென் ஆபிரிக்காவில் சம்பியன்ஸ் லீக்.
உலக T20 கிண்ணம் போல இதனைத் தீவிரமாகத் தொடராவிட்டாலும் பார்க்கிறேன்..

இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த ஊவா நெக்ஸ்ட் தகுதிகாண் சுற்றோடு வெளியேறியிருக்க, இனி பத்து அணிகள் மோதுகின்றன....

தத்தம் நாடுகளுக்காக உலக T20 யில் ஒன்றாக விளையாடிய சர்வதேச வீரர்கள் நான்கு இந்திய அணிகள், இரு ஆஸ்திரேலிய அணிகள், இரு தென் ஆபிரிக்க அணிகள், நியூ சீலாந்து, இங்கிலாந்திலிருந்து தலா ஒவ்வொரு அணிகளுக்காக எதிரிகளாக விளையாடப் போகிறார்கள்..
ரசிக்கலாம்...October 05, 2012

இறுதிப் போட்டியில் 'மஹேல'வின் இலங்கை - #ICCWT20


இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.தனக்கான வாய்ப்பை உலகின் தலைசிறந்த Twenty 20 அணிகளில் ஒன்றான பாகிஸ்தானை அதன் வழியிலேயே வீழ்த்தி இலங்கை அணி தன் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

தொடர  முதல் அரையிறுதிகள் ஆரம்பிக்க முதல் தமிழ் மிரருக்காக எழுதிய Super 8 சுற்றைப் பற்றிய அலசல் & அரையிறுதிக்கான அறிமுகத்தை வாசித்துவிடுங்கள் (இதுவரை வாசிக்காவிட்டால்)


அரையிறுதிகள் அழைக்கின்றன: ICC உலக Twenty 20சொந்த மண் ஆடுகளங்கள், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவுப் பலம் இவற்றைத் தாண்டியும் எந்த சூழ்நிலையையும் தன் வசப்படுத்தக் கூடிய பந்துவீச்சாளர்களும் அவர்களை சரியாக வேளை அறிந்து பயன்படுத்தக்கூடிய மிகச் சிறந்த தலைவர் ஆகிய காரணிகளும் இலங்கையின் இந்த இறுதிப் போட்டி நோக்கிய வெற்றிப் பயணத்துக்கான முக்கிய காரணிகளாகும்.

குறிப்பாக நேற்றைய அரையிறுதி.... சிக்கலான, ஓட்டங்கள் குவிப்பதில் சிரமம் தருகின்ற ஒரு ஆடுகளத்தில் சராசரி ஓட்ட எண்ணிக்கை ஒன்றைப் பெற்ற பிறகு அதை ஒரு பயங்கரமான (அதிரடி, நம்ப முடியாத, ஆச்சரியப்படுத்தும் என்று எவ்வகையாகவும் எடுக்கலாம்) துடுப்பாட்ட வரிசைக்கு எதிராகக் காப்பாற்றி அபாரமான வெற்றியீட்டியது உண்மையில் உலகின் மிகச் சிறந்த ஒரு Twenty 20 வெற்றி.

தலைமைத்துவத்தின் பொறுப்பும் அதன் பக்குவமும் மஹேல மூலமாக நேற்றைய தினம் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட்டதாகக் கருதுகிறேன். பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் மட்டுமல்லாமல், உரிய களத்தடுப்பு வியூகம், ஒவ்வொரு எதிரணி வீரரையும் தனித்தனியாக மனதில் கொண்டு அமைக்கப்பட்ட தாக்குதல் முறைகள், அதற்கெல்லாம் மேலாக (இங்கிலாந்துடன்)வெற்றிபெற்ற போட்டியில் இருந்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளரை வெளியேற்றி இதுவரை ஐந்தே ஐந்து T20 போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு சுழல் பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டுவருவதென்பது எல்லாத் தலைவர்களும் துணிச்சலாக செய்யும் ஒரு விடயமல்ல..

ஆனால் ரங்கன ஹேரத் பாகிஸ்தானின் துடுப்பாட்ட முதுகெலும்பை உடைத்துப்போட்டு தன்னுடைய மிகச் சிறந்த T20 பந்துவீச்சுப் பெறுதியை எடுத்த பின்னர் பெருமையில்லாமல் "நாங்கள்" பாகிஸ்தான் இடது கைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவதையும் ஹேரத் பாகிஸ்தானுக்கு எதிராகச் சிறப்பாகப் பெறுபேறுகளைக் காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளோம்.

இதனால் தான் ஹேரத்தை இறக்கினோம் என்று அமைதியாக சொன்னது எத்தனை பேருக்கு வரக்கூடிய ஒரு விடயம்?

அணிக்கு அதிரடிக்கு என்று இருக்கிற ஒரு துடுப்பாட்ட வீரர் ஓட்டங்களைப் பெறத் தடுமாறித் துழாவும் நேரம் (இந்தியாவுக்கு சேவாக்கும், மேற்கிந்தியத்தீவுகளுக்கு கெய்லும் தடுமாறி இருந்தால் என்ன நடக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்) மாற்றுத் திட்டம் என்னவென்று மற்ற அணித்தலைவர்கள் மண்டையைப் பிய்த்திருப்பார்கள்..
ஆனால் மஹேல தானே அந்த ஓட்டவேகத்தை அதிகரிக்கும் பொறுப்பை எடுத்து வழமையாக ஒரு நேர்த்தியான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக அவர் ஆடாத துடுப்பாட்டப் பிரயோகங்களை எல்லாம் விளையாடி (டெல்லி டெயார்டெவில்சுக்கு இனி வரும் சம்பியன்ஸ் லீக்கில் சேவாக்கும் இல்லாத நிலையில் இவை நிறையவே தேவைப்படும்) ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

நேற்றைய அரையிறுதியை இலங்கையின் பக்கம் மாற்றியதில் மஹேலவின் இந்த 42 க்குப் பெரிய பங்கு இருக்கிறது. பாகிஸ்தானின் தலைவர் ஹபீசும் சரியாக இதேயளவு ஓட்டங்களைப் பெற்றதும் சுவாரஸ்யம்.
மஹேல , ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர்த்து இலங்கையின் நேற்றைய மற்றும் இரு கதாநாயகர்கள் அஞ்சேலோ மத்தியூஸ் & திசர பெரேரா.. மத்தியூசின் ஒரே ஓவரில் வீழ்த்தப்பட்ட இரு விக்கெட்டுகளும், திசர இறுதி ஓவரில் குவித்த ஓட்டங்களும் இலங்கைக்கு பெருமளவில் உதவியிருந்தன. மத்தியூசின் இன்னொரு விக்கெட் மாலிங்கவின் பிடி தவறலால் இல்லாமல் போனது.

டில்ஷான் தன் துடுப்பாட்டத்தில் சறுக்கியிருந்தாலும் அபாரமான களத்தடுப்பின் மூலம் குறைந்தபட்சம் பத்து ஓட்டங்களையாவது காப்பாற்றிக் கொடுத்திருந்தார்.
மாலிங்க களத்தடுப்பில் விட்ட சறுக்கல்களைக் கட்டுப்பாடான பந்துவீச்சுமூலம் ஈடுகட்டிக் கொண்டார்.
சங்காவின் விக்கெட் காப்பு, குறிப்பாக ஹபீசை ஸ்டம்ப் செய்து ஆட்டமிழக்கச் செய்தது அபாரம்.

பாகிஸ்தான் தனது பந்துவீச்சாளர்கள் மூலம் உருவாக்கிய வெற்றிக்கான சாதகம் அனைத்தையும் தடுப்பாட்ட வீரர்களின் தடுமாற்றம் மூலமாக இழந்தது.
சொஹய்ல் தன்வீர், ராஸா ஹசன், உமர் குல் ஆகியோர் நேற்றுப் பந்துவீசியபோது இலங்கை வீரர்களுக்கு ஓட்ட வறட்சியும் தடுமாற்றமும் தாராளம்.
ஆனால் வழமையாக இலங்கை தடுமாறும் சயீத் அஜ்மல், ஷஹிட் அப்ரிடி ஆகியோரை இலங்கை ஆரம்பம் முதல் குறிவைத்துத் தாக்கியது முக்கியமான ஒரு வியூகமாகும்.

பாகிஸ்தானிய அணியின் துடுப்பாட்டம் நேற்று இலங்கையின் பந்துவீச்சு மாற்றங்கள், ஆடுகளத்தின்  மாறுபட்ட தன்மை ஆகியவற்றை சரியாக உணர்ந்துகொள்ளாமல் சரிந்தபோது, ஹபீஸ்,உமர் அக்மல் ஆகிய இருவரைத் தவிர ஏனைய அனைவருமே அவசரமாக, சிந்திக்காது, அல்லது பந்துவீச்சின் மர்மங்களை அவிழ்க்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டார்கள்.


அதிலும் ஷஹிட் அப்ரிடி , இப்போதெல்லாம் இவர் பூம் பூம் அல்ல.. வெறும் பூச்சாண்டி ஆகிவிட்டார்.
நேற்றைய தினத்தோடு இந்த உலக T20 யில் இரண்டாவது தடவையாக தான் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டமிழந்தார். (Golden Duck)
இது T20 போட்டிகளில் அப்ரிடி பெற்றுள்ள ஆறாவது பூச்சியம். லூக் ரைட் & டுமினி ஆகியோரும் இதேயளவு பூச்சியங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்கள்.
ஆனால் அப்ரிடி பெற்ற ஆறுமே முதல் பந்து பூச்சியங்கள். Golden ducks.

டெஸ்ட், ஒருநாள், T20 இம்மூன்று வகைப் போட்டிகளிலும் சேர்த்து அப்ரிடி பெற்ற 40வது பூச்சியம் இது.
முழுமையான பூச்சிய விபரங்கள் இந்த சுட்டியில்..

http://stats.espncricinfo.com/ci/content/records/284057.html


பாகிஸ்தானிய அணி தோற்று நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கடுமையான விமர்சனங்கள் அணியின் சிரேஷ்ட வீரர் தொடர்பிலும், குறிப்பாக அப்ரிடி தொடர்பிலும் எழுப்பப்பட்ட நிலையில் ஹபீஸ் கோபப்படாமல் பதில் அளித்ததும், எந்தக் குறைகளும் சொல்லாமல் தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதும் அவர் மீது மதிப்பை உயர்த்தி இருக்கின்றன.


தோனி தோற்கும்போதெல்லாம் காரணங்கள் சொல்லிச் சொல்லி , இப்போது இந்திய ரசிகர்களும் அவ்வாறே மாறிவிட்டார்கள் என்பது கடுப்பாக்குகிறது.
இந்திய அணி, ரசிகர்கள் இதர விஷயங்கள் பற்றி பிறிதொரு நாள் ஆராயலாம்..

மஹேல பற்றிப் பேசும்போது இன்னொரு முக்கிய விடயம் எங்களுக்கு அண்மைக்காலத்தில் ஞாபகம் வரும்.. பந்துவீச அதிக பேரம் எடுத்துக்கொண்டதும், தடைப் பயம் காரணமாக தலைமைப் பதவியை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மாற்றியதும். நேற்றும் இவ்வாறு நடக்கலாம் என்று சங்கா மீண்டும் தலைவராக இறங்கலாம் என்று ஊர்ஜிதமாகாத ஆனால் எதிர்பார்க்கப்பட்ட செய்திகள் உலவின.

ஆனால் மஹேல தான் தலைவராகக் களம் இறங்கினார்.
நாணய சுழற்சிக்காகவேனும் மீண்டும் சந்காவை இறக்கியிருக்கும் வாய்ப்பு இருந்தாலும்.

இலங்கை தலைவரை மாற்றிய விதம் விதிமுறைகளை மீறாத செயலாக இருந்தாலும் 'சூழ்ச்சி' , Spirit of cricket என்னாவது போன்ற கேள்விகளும் விமர்சனங்களும் மஹேலவை சங்கடப்படுத்தி இருக்கக் கூடும்.
நேற்று தான் ஒரு முக்கிய போட்டியில் தன் அணிக்குத் தலைமை தாங்கவேண்டும் என்றே துணிச்சலாக இறங்கியதாகப் பின்னர் மஹேல தெரிவித்தார்.

இலங்கை தலைவரைக் காப்பாற்ற சங்காவை பிரதி(ஈட்டுத்) தலைவராகப் பயன்படுத்தியது சரியா தவறா என விவாதிப்பவர்கள் தம்பி கன்கோனின் கீழே உள்ள ஆங்கில இடுகையையும் வாசிப்பது நல்லது.


How Mahela and Co. caught ICC off-guard!இலங்கை அணி அண்மைக்காலமாகத் தொடர்ந்து பெற்று வரும் T20 வெற்றிகளும் தென் ஆபிரிக்காவின் மூன்று தொடர்ச்சியான தோல்விகளும் இலங்கையை சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  T20 தரப்படுத்தலில் முதலாம் இடத்துக்கு இட்டுச் சென்றுள்ளன.

நேற்றைய அரையிறுதிக்குப் பிறகு அணிகளின் நிலைகள்...
http://www.espncricinfo.com/rankings/content/current/page/211271.html

நேற்றைய போட்டியில் இலங்கை அணி வென்று அரையிறுதி நுழைந்திருப்பதானது இலங்கையின் இருவருக்கு தந்திருக்கும் இழப்பு பெரியது.

ஒருவர் ரஞ்சன் மடுகல்ல, அடுத்தவர் குமார் தர்மசேன.
இருவரும் முறையே போட்டித் தீர்ப்பாளராகவும் நடுவராகவும் இறுதிப் போட்டியில் கடமையாற்ற இருந்தார்கள்.
ஆனால் இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடுவதால் அந்த வாய்ப்பு போச்சு..

அதே போல இன்று இடம் பெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால், நேற்றைய போட்டியே சைமன் டௌபிளின் இறுதிப் போட்டியாகும். அவர் இத்தொடரின் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தது எல்லோரும் அறிந்ததே.

நேற்றைய வெற்றியானது இலங்கை பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற இரண்டாவது உலக T20 வெற்றியாகும்.
அத்துடன் இலங்கையின் இரண்டாவது உலக T20  கிண்ண இறுதிப் போட்டி வாய்ப்புக் கிட்டியுள்ளது. 2009 இல் இங்கிலாந்தில், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடமே இலங்கை தோற்றிருந்தது.
இனி எந்த அணி இலங்கையை சந்தித்தாலும் இம்முறை கிண்ணம் வெல்லப் போவது இதுவரை உலக T20 கிண்ணத்தை வெல்லாத அணி என்பது மட்டும் உறுதி.

ஆனால் மகளிர் உலகக் கிண்ணமானது ஏற்கெனவே வென்றுள்ள அணிகளும் மகளிர் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளுமான ஆஸ்திரேலிய(நடப்பு சாம்பியன்கள்), இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலே தான் தீர்மானிக்கப்பட இருக்கிறது.


இன்று விளையாடப்பட இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் மோதவுள்ள இரு அணிகளும் இதுவரை சந்தித்துள்ள எட்டு T20 போட்டிகளில் ஐந்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
உலக T20 போட்டிகளில்  இரண்டில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளும் வென்றுள்ளன.
இன்றைய போட்டி கெயில், வொட்சனுக்கிடையிலான போட்டியா, சாமுவேல்ஸ், ஹஸிக்கு இடையிலான போட்டியா அல்லது சுனில் நரேன் - சேவியர் டோஹெர்ட்டிக்கு இடையிலான போட்டியா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இவ்வளவு நாளும் பதுக்கி வைத்திருந்த டேவிட் ஹசியையும் ஆஸ்திரேலியா களம் இறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


முடிக்க முதல், தோற்றால் தோல்வியை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் பண்பு எல்லோருக்கும் இருப்பதில்லை..
சப்பைக்கட்டும், சவடாலும் இருக்கும் மதிப்பையும் குறைத்துவிடும்..
இந்திய அணியின் வெளியேற்றத்தில் எத்தனை ரசிகருக்கு மனவுடைவோ அதே போல அதேயளவு ரசிகர்கள் கொண்டாடியும் மகிழ்ந்தனர்.
இதற்கான காரணங்களில் ஒன்று இது...

இப்படியான கோமாளித் தனங்களால் இன்னும் இன்னும் இந்திய ரசிகர்களை சீண்டுவது தொடரப் போகிறது.

ஒரு அணிக்கு ரசிகராக இருப்பது தவறு அல்ல. ஆனால் அந்த அணியை மட்டுமே கொண்டாடி மகிழும் மனப்பாங்கும், விமர்சனங்களையும் தோல்விகளையும், உண்மையான தரவுகள் & கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்கே தவறானது.
சிறந்த, வெற்றி பெற்ற அணிகளை வாழ்த்துவதும் கூட உண்மையான ரசிகர்களின் பக்குவம் தான்.
October 02, 2012

யாரந்த நான்காவது? - #ICCWT20
அரையிறுதிகளுக்கு மூன்று அணிகள் தெரிவாகியுள்ளன.
அரையிறுதிகளுக்குத் தெரிவான முதல் அணியாக நேற்று இலங்கை மூன்று வெற்றிகளுடன் பள்ளேக்கலையிலிருந்து  கொழும்பு வருகிறது.
இலங்கையின் லசித் மாலிங்க சுருட்டிய ஐந்து விக்கெட்டுக்களால் நடப்புச் சாம்பியன்கள் இங்கிலாந்து அரையிறுதியே காணாமல் வெளியேறி, தொடர்ச்சியாக ஒரு அணி இரு உலக T20 கிண்ணங்களைத் தொடர்ச்சியாக வென்றதில்லை  என்பது மீண்டும் நியதியாகி உள்ளது.

அது போல முதல் தடவையாக ஒரு உலக T20 கிண்ணத் தொடரை நடத்தும் அணி அரை இறுதிக்குத் தெரிவாகி இருக்கிறது.
சூப்பர் 8 இல் முதலாவது பிரிவில் எதிர்பார்க்கப்பட்ட இரு அணிகளுமே அ ரையிறுதிகளுக்குத் தெரிவாகியிருப்பது விசேடமானது.
கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் ஆகிய இரு ராட்சதர்கள் வழங்கும் அதிரடி சந்தோஷங்களுக்காக இல்லை, ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் சோர்ந்து கிடந்த காலப்பகுதியிலிருந்து தளராமல் அவர்களை வழிநடத்தி, விளையாட்டை மிகவும் அனுபவித்து, அணி வீரர்களை உற்சாகப்படுத்தித் தலைமை தாங்கும் டரன் சமிக்காக இவர்களது அரையிறுதி வருகையை வரவேற்கிறேன்.

ஆனால் இரு போட்டிகளில் Super Over இல் மயிரிழையில் வெற்றி வாய்ப்பைக் கைவிட்ட நியூ சீலாந்து அணி பாவம் தான்.
முடிவுகளின்படி அவர்கள் மூன்று போட்டியிலுமே தோற்றதாகத் தெரிந்தாலும், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்குமே நியூ சீலாந்து கொடுத்த சவால்கள் அவர்கள் உண்மையில் அரையிறுதிக்கு வந்தே இருக்கவேண்டிய அணி என்று மனசு பரிதாபப்படுகிறது.

ஆனால் போராடுகையில் முழுமையாகப் போராடவேண்டும்.. ஒரு சின்ன சறுக்கலும் நாம் பட்ட கஷ்டங்களைஎல்லாம் எதிரணிக்குத் தாரைவார்த்து அப்படியே முழுக்குப் போடவேண்டியது தான். நியூ சீலாந்தும் அவ்வாறு தான். வெற்றிக்கும் வெளியேற்றத்துக்கும் இடையில் உள்ள சிறு இடைவெளியை நிரப்ப முடியாமல் துரதிர்ஷ்டம் பிடித்த அணியாக வெளியேறியுள்ளது.

இலங்கை அணி எதிர்பார்த்ததை விடப் பலமான அணியாக இப்போது தெரிகிறது.
மஹேல, டில்ஷான், சங்கா ஆகியோரிலேயே அதிகமாக ஓட்டங்களுக்குத் தங்கியிருந்த நிலை கொஞ்சம் மாறி இருப்பது ஆறுதல். நேற்று மத்தியூஸ், திரிமன்னே, திசர பெரேரா ஆகியோர் பெற்ற ஓட்டங்கள் இலங்கையின் அடுத்த கட்டங்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவை.
ஆனால் இதே அணியை இந்தியா அல்லது பாகிஸ்தான் அரையிறுதியில் சந்தித்தால் ஈடுபடுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
மென்டிஸ் & மாலிங்க மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாலும் பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கு இவர்கள் இருவரையும் அடித்து நொறுக்குவது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல.
நேற்று இங்கிலாந்து கூட, அஜந்த மென்டிசைப் பலியாடு கணக்காக அறுத்துத் தீர்த்தது.


மறுபக்கப் பிரிவில் ஆஸ்திரேலியா இலகுவாகத் தெரிவாகும் என்று பார்த்தால், இன்று இப்படித் தடுமாறி இறுதியாக நிகர ஓட்ட சராசரிப் பெறுமானத்துக்குத் தேவையான 112 ஐ  அடைவதில் இவ்வளவு சிக்கலை எல்லாம் சந்தித்து அரையிறுதிக்கு வந்துவிட்டது.
ஹசியும் இல்லாவிட்டால் கோவிந்தா தான்.
2007 இல் இவ்வாறு தான் தென் ஆபிரிக்கா எல்லாப் போட்டிகளிலும் வந்து முக்கியமான Super 8 போட்டியில் இந்தியாவிடம் வாங்கிக்கட்டி வெளியேறியிருந்தது.
நல்ல காலம் ஆஸ்திரேலியாவுக்கு அப்படியாகவில்லை.

ஆனால் இன்றைய பாகிஸ்தான் வெற்றியுடன் தென் ஆபிரிக்கா தனது கடைசிப் போட்டியில் விளையாடாமலே வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவின் இருப்பும் வெளியேற்றமும் தென் ஆபிரிக்காவின் மானம் காக்கும் இந்தப் போட்டியுடன் தான்.

இப்போது பாகிஸ்தானும் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளமையால், இந்தியாவின் நிலை சிக்கலில். முதலில் துடுப்பெடுத்தாடுவதால், நிகர ஓட்ட சராசரியில் பாகிஸ்தானைப் பின் தள்ள 31 ஓட்டங்களால் ஆவது இன்று வெல்லவேண்டும்.
தென் ஆபிரிக்காவும் இலேசுப்பட்ட அணி அல்ல. ஆனால் படுமோசமாகத் தோற்ற இரு போட்டிகளில் பின்னர் இன்று எப்படியாவது ரோஷத்துக்காக வெல்வார்களா அல்லது அந்தத் தோல்விகளால் மேலும் மனம் உடைந்து இன்னும் படுமோசமாகத் தோற்பார்களா என்று தெரியவில்லை.

இன்றைய முதல் போட்டியின் முடிவின் படி இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடுவது உறுதியாகி இருக்கின்றன.
இரண்டாவது அரை இறுதியில் இலங்கையை சந்திக்க இருப்பது இந்தியாவா பாகிஸ்தானா?

இப்போதைக்கு இருக்கும் நிலையில் பாகிஸ்தான் தனது தொடர்ச்சியான நான்காவது உலக T20 கிண்ண அரையிறுதிக்குத் தெரிவாவது உறுதியாகிறது.
இந்தியா முதலாவது உலக T20 கிண்ண வெற்றிக்குப் பிறகு ஒரு தடவையும் அரையிறுதிக்குத் தெரிவாகவில்லை என்ற அவப்பெயருடன் நாடு திரும்பப் போகிறது.

விரிவான அலசலை நாளை தரலாம் என்று நினைக்கிறேன்.

மறுபக்கம் மகளிர் உலக T20 கிண்ணத் தொடரில் மூன்று ஆசிய அணிகளுமே அரையிறுதிக்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்,
முதலாவது அரையிறுதியில் வியாழக்கிழமை இங்கிலாந்து - நியூ சீலாந்து மகளிரும், வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலிய- மேற்கிந்தியத் தீவுகளின் மகளிரும் மோதிக்கொள்ளப் போகிறார்கள்.
இதிலே சுவாரஸ்யம் வெள்ளி இரவு இதே நாடுகளின் ஆண் அணிகள் மோதுகின்ற அரையிறுதி இடம் பெறுகிறது.

மீதி நாளை....

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner