July 20, 2012

என்னமோ நடக்குது இலங்கையிலே..


தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள்; கட்டாயக் குடியேற்றம்; தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மீள் குடியேறத் தடை; ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படகில் செல்கிறார்கள்; படகில் செல்ல முயன்றோர் கைது; கைதாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதம்; தாக்குதல்; தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் அபகரிக்கப்படுகின்றன இவ்வாறெல்லாம் தினம் தோறும் செய்திகளில் நாம் பார்ப்பவை; பதறுபவை; கொதிப்பவை; சில சமயம் என்ன செய்ய முடியும் எம்மால் என்று வெறும் பெரு மூச்சோடு மட்டும் வாளாவிருப்பவை.

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை இலங்கை அரசியல், நாட்டு நடப்புக்களை அவதானிப்பவர்கள் உணர்வார்கள்.

யுத்தம் முடிந்து முழுமையாக நான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் மீள் குடியேற்றம் ஒழுங்காக நடக்கவில்லை..
எத்தனை பேர் எத்தனை விதமாகக் குரல் எழுப்பியும், எங்கெங்கோ இருந்து அழுத்தங்கள் வந்தும் கண் துடைப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மீள் குடியேற்றங்கள் நடந்தனவே தவிர, கட்டாயக் குடியேற்றங்களும், 'தொல் பொருள்' கண்டெடுப்புக்களின்படி புதிய விகாரைகளும் அதனுடன் தொடர்புபட்டவர்களின் குடியேற்றங்களும் தான் சீராக, வேகமாக நடந்து வருகின்றன.

அது சரி, யுத்தம் நடந்து இத்தனை ஆண்டுகளின் பின்னர் ஏன் இவ்வளவு பெருந்தொகையானோர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளுமே ஆஸ்திரேலியாவுக்குப் படைஎடுக்கவேண்டும்?
அதுவும் உயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம்..
அதிலும் ஆஸ்திரேலியா அண்மைக் காலத்தில் கருணை காட்டவில்லை; கிறிஸ்மஸ் தீவிலும் கொக்கோஸ் தீவிலுமே  செல்வோரை எல்லாம் தடுத்து வைத்துள்ளது என்றும், தெரிந்த பின்னரும் இப்படிப்பட்ட உயிராபத்தான பயணங்களின் அவசியம் என்ன?

தலைக்கு செலுத்தப்படும் தொகை குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாய்.
*(ஒரு மாதத்துக்குள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.)

வெற்றிகரமாக கிறிஸ்மஸ் தீவுகளை அடைந்த படகுகளில் (மட்டுமா தெரியாது) சில சிங்களவர்களும் இருந்துள்ளார்கள் என்ற தகவல் வந்துள்ளது.

மாதாந்தம் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் இருந்து குறைந்தது இரண்டாயிரம் பேராவது இவ்வாறு படகுகளில் 'ஆஸ்திரேலியா' செல்கிறார்களாம்.
ஏற்கெனவே இலங்கையில் தமிரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் மிகக் குறைவடைந்து செல்லும் நிலையில், அத்துமீறிய குடியேற்றங்கள் ஒருபுறம் + இப்படியான இடப் பெயர்வுகள்.

இந்த கடற் பயணங்களும் , கைதுகளும் வலிந்து நடக்கிறதோ? வலிமையான ஒரு பின்னணியோ என்று அந்தப் பிரதேச மக்கள் மட்டுமல்ல நாடு முழுக்க சந்தேகம் இருக்கிறது.
அதற்கேற்பவே ஒன்று விட்ட ஒரு நாள் (அண்ணளவாக) பயணங்களும், படகுகள் கவிழ்வதும், கைதுககுமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு இறுக்கமாகக் கரையோரப் பாதுகாப்பு + கண்காணிப்பு இருந்தும் இப்படியான ஆட் கடத்தல்கள் நடப்பதாக இருந்தால் தரகர்கள், இடைத் தரகர்கள் யார் எனத் தெரியவேண்டுமே.
உண்மைகள் எப்போதாவது வரலாம்...

முன்பொரு காலம் இருந்தது தமிழரின் வீடுகளிலும் அவர்கள் வணங்கும் தெய்வப் படங்களைத் தவிர இன்னும் மூன்று அல்லது நான்கு படங்கள்/ சிலைகள் நிச்சயம் இருக்கும்.
மகாத்மா காந்தி, பாரதியார், MGR , புத்தர்.


புத்தரை எம்மவர்கள் அமைதியின் சின்னமாக, சமயம் கடந்து ஒரு ஆன்மீக அடையாளமாகப் பார்த்து மதித்து வந்தார்கள்.
புத்தர் இன்னமும் மாறவில்லை; ஆனால் அவரை இப்போது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாற்றிவிட்டார்கள்.
எங்கெங்கே புத்தர் சில முளைத்தாலும் இப்போது வணங்குவதை விட, அந்த அமைதி தவழும் முகத்தை ரசிப்பதை விட பயத்தோடு சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் எம்மவர்கள்.

அதிலும் சிலைகள் முளைத்துள்ள இடங்களைப் பாருங்கள்....
முதலில் கோணேஸ்வரம் - இப்போது அங்கே மலையேறி ஆலயம் செல்லும் வழியில் ஒரு புத்த வழிபாட்டுத் தலமே பெரிதாக எழுந்துள்ளது
கேதீஸ்வரம்
மடு
கதிர்காமம் எப்பவோ கத்தரகம ஆகிவிட்டது.
அம்பாறையில் முஸ்லிம்கள் & தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் திகவாபி ஆகிவிட்டன.

இது பற்றி தனி மனிதர்களாக, ஊடகங்களாக இன்னமும் செய்திகள், குமுறல்கள் வந்து கொண்டே இருந்தாலும் அந்தந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பாது குறைந்துவிட்டது. அலுத்து விட்டார்களோ? அல்லது குரல் எழுப்பினால் குரலே இருக்காது என்று ஏதாவது தகவல்?

போன ஞாயிறு தினக்குரலில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கன்னியாய் வென்னிரூற்றுப் பகுதியில் இருந்த அந்தியேட்டி மேடம் என்ற இந்துக்களின் புனித மடம் ஒன்று  அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக.
கடந்த வருடம் கன்னியாய் சென்ற போதே அங்கே இந்துக்களின் கோவில் கவனிப்பாரற்றுப் பாழ் பட்டுப் போயிருப்பதையும், தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிதைந்து போயிருப்பதையும் கண்டேன். அத்துடன் புத்த விகாரை ஒன்று எழுப்பப்படுவதையும், பௌத்த அடையாளங்கள் புதிதாக முளைப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

நான் சமய அடையாளங்களை அறவே வெறுப்பவன். கடவுள் என்ற ஒன்றையே கணக்கெடுக்காதவன்.
ஆனால் சமயத்தின் அடிப்படையிலேயே இங்கே இனங்களின் எதிர்காலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன எனும்போது பேசாமல் சமயத்தை மீண்டும் பின்பற்றலாமோ என்ற எண்ணமும் வருகிறது.

இங்கே ஆலயப் பகுதிகளும் சூழலும் தானே குறிவைக்கப்படுகின்றன.

திருகோணமலையில் முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தமிழரின், முஸ்லிம்களின் நிலப்பகுதிகளின் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டே இருக்கிறது.
ஒருகாலத்தில் - வெகுவிரைவிலேயே இந்த செந்தமிழ் பூமி திருக்கணாமல ஆகிடும் அபாயம் இருக்கிறது.
இவ்வளவுக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் ஊர்.
சொந்த மண்ணுக்கே இந்நிலை என்றால்???

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் வருவதை நினைவுபடுத்திக்கொள்வோம்.

தமிழ் தேசியம், உரிமை, நில ஆண்மை, உரிமைகள் என்பவற்றை முன் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு அல்லது தனித்துப் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலில் தாம் மத்தியில் அங்கம் வகிக்கும் அரசாங்கத்துடனே இந்த மாகாண சபையிலும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தது.
பிறகு தடாலடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு முதல் நாள் தனித்து, மரச் சின்னத்திலே போட்டியிடுவதாக அறிவித்தது.

தனித்துப் போட்டியிடுவதைத் தான் பெரும்பாலான முஸ்லிம்களும் விரும்புகிறார்கள் என்பது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வந்த கருத்துக்களில் இருந்து அறியக் கூடியதாகவிருந்தது.
ஆனால் அடுத்த வெடி உடனே ரவூப் ஹக்கீமிடம் இருந்து.
"தனித்துப் போட்டியிட்டாலும் அரசாங்கத்தின் இணக்கத்தோடு தான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்று..

இப்போது அரசாங்கப் பக்கம் இருந்து தேர்தலின் பின்னராவது ஆதரவை ஸ்ரீ.ல.மு.கா தங்களுக்குத் தரும் என்று ஒரு கதை பரவவிடப் படுகிறது. ஹக்கீமும் அது போலவே தேர்தலின் பின்னர் இதைப் பற்றித் தீர்மானிப்போம் என்கிறார்.
மதில் மேல் பூனை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுவதாக இல்லை.
இணக்கத்தோடு உரிமைகளை வெல்வோம் என்கிறது.


அதாவது தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதரவு தருமாறு..

(தமிழ் பேசுபவர் ஒருவர் தான் முதலமைச்சர் என்பது நிச்சயம். அவர் தமிழரா முஸ்லிமா என்று ஒரு சர்ச்சை சண்டை வராது என்று நம்புவோம்.)


இதுவரை தேர்தல்கள் மட்டும் தான் வெல்லப் பட்டுக்கொண்டிருக்கின்றன; உரிமைகளை நாம் அனைவருமே தேடிக் கொண்டு தான் இருக்கிறோம்.



9 comments:

anuthinan said...

//மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை இலங்கை அரசியல், நாட்டு நடப்புக்களை அவதானிப்பவர்கள் உணர்வார்கள்.//
உண்மையே!

//ஒருகாலத்தில் - வெகுவிரைவிலேயே இந்த செந்தமிழ் பூமி திருக்கணாமல ஆகிடும் அபாயம் இருக்கிறது.
இவ்வளவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் ஊர்.
சொந்த மண்ணுக்கே இந்நிலை என்றால்??//

என்னது சம்பந்தன் சொந்த ஊரு அதுவா? நான் அவர கோயில் திருவிழா, தேர்தல் மனுதாக்கல் இதுக்கு மட்டும்தான் காண்பது

//தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுவதாக இல்லை//

அவர்கள் எதையுமே விடுவதாக இல்லை :p

இன்றைய நடப்பு அரசியலை நீங்களும் ஆதங்கத்துடன் சொல்லி இருக்கீங்க அண்ணே!

Mathi said...

என்ன செய்ய ? நானும் இதை நினைத்திருந்தேன் "தமிழரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவது.....". காலத்தின் தேவைக்கு ஏற்ற பதிவு. நன்றி.

Php Mute said...

நல்ல பதிவு

திருகோணமலைல்ல இருக்கிறவங்கல நீங்க கன்னியா கடைசியா எப்ப போனீங்க எண்டு கேட்டா?
தம்பி அங்க கால் வச்சு ௫,௬,௭, வர்சமாகுது என்பாங்க !!!
பின்ன பறி போகாம என்னாகும் !
முடிய கதவுகளையே வெறித்து பார்பதாகி விட்டது நம் நிலைமை !அந்த மூடிய கதவுகளுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னும் திறந்துள்ள கதவுகளை பார்பதில்லை !
இன்னும் பறிபோகாத ஆனா கேட்பாறாரு அற்று எத்தனை யோ இடம் கிடக்கு!அத சரி செய்ய யாரும் நினைபதிலை !போ பின்பு ஐயோ பறிச்சு போட்டான் எண்டு கத்துவம் !
ஏன் கிரிகட்டுக்கும் ,சினிமாக்கும் கொடுக்கும் முக்கியத்தை நம்ம ஆக்கள் மட்டவற்றுக்கு கொடுகிரதில்ல!(இப்ப உம்)!

இனப்பிரட்ச்ச்சனை தீர்வு முயற்சி என்றதை அன்னாரது பார்த்து கொட்டாவி விட்டு கொண்டு இருப்பதை விட நாம் நம்மவர் கல்வி,பொருளாதாரம் போன்றவற்றையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும் !தீர்வு முயற்சி வலக்கை பார்த்தால் இடக்கை மற்றதை செய்யட்டுமே !

Kamal Sabry said...

புத்தரை எம்மவர்கள் அமைதியின் சின்னமாக, சமயம் கடந்து ஒரு ஆன்மீக அடையாளமாகப் பார்த்து மதித்து வந்தார்கள்.
புத்தர் இன்னமும் மாறவில்லை; ஆனால் அவரை இப்போது ஒரு ஆக்கிரமிப்பின் அடையாளமாக மாற்றிவிட்டார்கள்.
எங்கெங்கே புத்தர் சில முளைத்தாலும் இப்போது வணங்குவதை விட, அந்த அமைதி தவழும் முகத்தை ரசிப்பதை விட பயத்தோடு சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் எம்மவர்கள்.

Unknown said...

//அல்லது குரல் எழுப்பினால் குரலே இருக்காது //

chenthoo said...

போன ஞாயிறு தினக்குரலில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கன்னியாய் வென்னிரூற்றுப் பகுதியில் இருந்த அந்தியேட்டி மேடம் என்ற இந்துக்களின் புனித மடம் ஒன்று அடையாளம் இல்லாமல் செய்யப்பட்அது டுவிட்டதாக.####எப்பவோ நடந்து விட்டது
###யார் அந்த சம்பந்தர் ???

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

கிருபன் said...

காலத்துக்கான பதிவு....

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner