June 08, 2012

ஐரோப்பா, பிரான்ஸ், கண்டி, கொழும்பு வழியாக யாழ்.... ஒரு விளையாட்டு வலம்


ஒன்று இரண்டு அல்ல, மூன்று முக்கிய விளையாட்டுக்கள் மையம் கொண்டுள்ள ஒரு காலப் பகுதி இது.

ஒரு பக்கம் கிரிக்கெட்டில் இலங்கை - பாகிஸ்தான், மறுபக்கம் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள்...

டென்னிசில் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன..

உலகக் கிண்ணம், ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் சர்வதேசரீதியில் முக்கியமானதாகக் கருதப்படும் கால்பந்துத் தொடர் ஒன்று ஐரோப்பாவில் இன்று இரவு ஆரம்பமாக உள்ளது.
உக்ரெய்ன் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் ஐரோப்பிய கிண்ணத் தொடர் தான் அது. - UEFA Euro 2012
2012 UEFA European Football Championshipநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் இத்தொடரில் வழமை போலவே,
ஐரோப்பாவின் 16 நாடுகள் விளையாடுகின்றன.
நடப்பு சாம்பியன் ஸ்பெய்ன் இம்முறையும் கூடிய வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது.

அத்துடன் எப்போதுமே பலமான அணியாக வலம்வரும் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், எட்டு ஆண்டு கால இடைவெளியின் பின்னர் மீண்டும் ஐரோப்பியக் கால்பந்து போட்டிகளுக்கு வரும் இங்கிலாந்தும், ஐரோப்பிய நாடுகளில் பலம் கொண்ட இன்னும் இரண்டு அணிகளான போர்த்துக்கலும் நெதர்லாந்தும் கூட இம்முறை பட்டத்தைக் குறிவைக்கும் அணிகளாக உள்ளன.

இன்று முதல் அடுத்த மாதத்தின் முதலாம் திகதி வரை எங்கள் இரவுப்பொழுதுகளை பிசியாக வைத்திருக்க வரும் விறுவிறுப்பான இந்தக் கால்பந்தாட்டத் தொடரில் உலகின் பிரபலமான, முன்னணிக் கால்பந்து வீரர்கள் பலரும் பங்குபற்ற உள்ளார்கள்.

தொடர்ந்து வரும் இடுகைகளில் தொடர்ச்சியாக இல்லாவிடினும் இடையிடையே UEFA Euro 2012 பற்றியும் பதியலாம் என்று நம்புகிறேன்.
இதுபற்றி இன்னொரு விசேட விஷயமும் மகிழ்ச்சியுடன் இன்று இரவுக்குள் உங்களோடு பகிரலாம் என்று நம்புகிறேன்.

முதலாவது போட்டி இன்று இரவு போலந்து - கிரீஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

--------------------

சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் முக்கிய நான்கு போட்டிகளான Grand Slamகளில் களிமண் தரையில் இடம்பெறும் ஒரே போட்டித் தொடரான பிரெஞ்சு பகிரங்க சுற்றுப் போட்டிகளின் இறுதிக்கட்டம் இது.

நேற்று கலப்பு இரட்டையர் ஆட்டங்களின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா ஜோடி வெற்றியீட்டியுள்ளது.
இவர்கள் சேர்ந்து பெற்ற இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் வெற்றி இது.
அதிலும் மகேஷ் பூபதியின் பிறந்தநாள் பரிசாக நேற்று அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

மகேஷ் - லாரா தத்தா ஜோடிக்குக் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குள் மேலும் ஒரு பூரிப்பு.

மகளிர் ஒற்றையர் ஆட்ட இறுதிக்கு மரியா ஷரப்போவா தெரிவாகியுள்ளார். இவர் அண்மைக்காலத்தில் மீண்டும் வெற்றி தேவதையாக மாறி வருகிறார்.

இவர் தோற்கடித்தவரும் அண்மைக்காலத்தில் வெற்றிகளைக் குவித்து வரும் பெட்ரா க்விடோவோ.

ஷரப்போவாவை சந்திக்கப் போகின்றவர் தான் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
சரா எராணி - வருங்கால டென்னிஸ் ராணியோ?

25 வயது இத்தாலிய வீராங்கனை.. இவரை விடத் தரப்படுத்தலில் மேலே இருந்த ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருக்கிறார்.

ஸ்டோசர் 201ஆம் ஆண்டு பிரெஞ்சு பகிரங்கப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் விளையாடியவர்.
எராணி இதுவரை எந்தவொரு கிராண்ட் ஸ்லாமிலும் அரையிறுதிக்குக் கூட வந்தவரில்லை.

ஷரப்போவாவுக்கு நல்லதொரு சவாலை இந்த இளம் இத்தாலிய வீராங்கனை வழங்குவார் என்று எதிர்பார்த்துள்ளேன்.

ஆடவர் ஒற்றையர் ஆட்டம் பற்றி விடியலின் விளையாட்டுத் தொகுப்பிலே நான் ஒரு எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தேன்.
தரப்படுத்தலில் முதல் நான்கு இடங்களிலும் உள்ள வீரர்களும் அரை இறுதிக்கு தெரிவானால் சிறப்பாக இருக்கும் என்று.
முதல் மூவரும் தெரிவாக, நான்காம் இடத்திலுள்ள பிரித்தானியாவின் அண்டி மரே மட்டும் வெளியேறியுள்ளார்.
மரே இம்முறையாவது ஒரு Grand slamஐ வெல்வார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமே..


அவரை வெற்றி ஈட்டிய ஸ்பெய்னின் டேவிட் பெரெர் சந்திக்க இருப்பது களிமண் தரையின் சக்கரவர்த்தியை. இன்னொரு ஸ்பானியரை வீழ்த்திய ரபாயேல் நடாலுக்கு மீண்டும் ஒரு ஸ்பானிய வீரர் போட்டியாக.
நடாலுக்கு இம்முறை பிரெஞ்சு ஓப்பன் கிடைத்தால் சாதனை மிகுந்த ஏழாவது French Open championship வெற்றியாக அமையும்.

நடால் வென்றால் ஆச்சரியமே இல்லை.. காரணம் அவரது பிரான்ஸ் களிமண் தரை வெற்றிகள் அவ்வாறு.. இதுவரைக்கும் விளையாடிய போட்டிகளில்  இல் இல் வெற்றி..

அடுத்த அரை இறுதியில் சந்திக்க இருக்கும் உலகின் தற்போதைய முதல் தர வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக்கும் மூன்றாம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 26வது தடவையாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.
இந்தப் போட்டி இன்று நிச்சயம் தூள்கிளப்பும் அரையிறுதியாக அமையும் என்பதில் துளியளவு சந்தேகமும் இல்லை.

ஆனால் ஜோகோவிக், பெடரர் இருவருமே காலிறுதிப் போட்டிகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு ஐந்து செட் போட்டிகளில் விளையாடியே அரையிறுதிக்கு வந்துள்ளனர்.
நடாலின் அரையிறுதிப் பயணம் ஒப்பீட்டளவில் இலகுவானது.

நடாலை இறுதிப் போட்டியில் யார் சந்திப்பார்கள் என்பதே French Open கேள்வி என நான் நம்புகிறேன்.

---------------

கிரிக்கெட் பக்கம் திரும்பினால்,

இங்கிலாந்தில் மழை விட்டால், எட்ஜ்பஸ்டனில் சுனில் நரேனின் டெஸ்ட் அறிமுகம் எப்படி என்று பார்க்கலாம் என்று காத்திருய்க்கிறேன்.

இந்தப் பாழாய்ப்போன மழை நேற்று எமது இலங்கை அணியைக் காப்பாற்றவில்லை என்ற கடுப்பும் இருக்கிறது.

எவ்வளவு மழை பெய்தும் முதலாவது ஒருநாள் போட்டியை நேற்று பாகிஸ்தான் இலகுவாக வென்றது.

வேகப்பந்துவீச்சுக்குப் பயப்படும் இலங்கையின் துடுப்பாட்டத்துக்குப் படிப்பினையான தோல்வி இது.
உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசைகளில் ஒன்றான பாகிஸ்தான் தனது கடும் முயற்சிகளை அண்மைக்காலங்களில் அறுவடை செய்து வருவது மகிழ்ச்சி.

எப்போதுமே தரமான வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாகத் தந்துவரும் பாகிஸ்தானில் சிறிது காலம் இருந்த தடுமாற்றம் நீங்கி, சூதாட்டத்துக்கு ஆசிப், ஆமீரை இழந்தும் அணியில் இடம்பெறுவதற்கு பல வேகப்பந்துவீச்சாளர்களுக்கிடையில் போட்டி.
மறுபக்கம் இலங்கை நல்ல, விக்கெட்டுக்களை எடுக்கக் கூடிய வேகப்பந்துவீச்சாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.
வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசும் போது எதிர்கொண்டு ஆடக் கூடிய நல்ல துடுப்பாட்ட வீரர்களையும் சேர்த்து.கிட்டத்தட்ட ஒரு பாகிஸ்தானிய அணியாகவே இலங்கை உருவாகி வருகிறது. வெற்றி பெறுவதில் அல்ல..
தரமான வீரர்கள் இருந்தும், மோசமாகத் தோற்றுப் போவதிலும், பொருத்தமான வீரர்களைப் பொறுத்த நேரத்தில் தெரிவு செய்யாமல் விடுவதிலும், நிறைய முன்னாள் தலைவர்களால் அணியை நிரப்பி வைத்திருப்பதிலும்...

பாகிஸ்தான் தங்கள் T20 அணியின் தலைவராக மொஹம்மத் ஹபீசை நியமித்து, மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து செப்டம்பர் உலக Twenty 20க்கு தன்னை தயார்படுத்தி வருகிறது.
இலங்கையோ இன்னமும் மஹேல, சங்கா, டில்ஷானை நம்பிக்கொண்டு.

மறுபக்கம் இரண்டு அணிகளுமே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வயதேறும் தலைவர்களுடன் அடுத்த கட்டம் நோக்கி யோசித்துக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் பாகிஸ்தான் போலன்றி, இலங்கை அணி அண்மைக்காலத்தில் வெற்றிக்கான வழியைத் தேடித் தடுமாறிக் கொண்டிருகிறது.

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தை விடுவோம்.. இரு அணிகளுமே துடுப்பாட்டத்தில் சம பலம் போலவே தெரிகிறது.
ஆனால் பந்துவீச்சு? பாகிஸ்தானி பந்துவீச்சுப் பலமும், சமநிலைத் தன்மையும் எந்த அணிக்கும் பொறாமையைத் தரும்.. மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என்றால் குல், சமி, தன்வீர் அல்லது சீமா, டெஸ்ட் போட்டிகளில் சுழலுக்கு அஜ்மலும், அப்துர் ரெஹ்மானும், ஒரு நாள் போட்டிகளில் மேலும் இரு தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களான அப்ரிடியும் ஹபீசும் இருக்கிறார்கள். வேறென்ன வேண்டும்?

ஆனால் அடுத்த வருடம் பாகிஸ்தானிய வீரர்களும் IPLஇல் விளையாடலாம் என்பதால் பாகிஸ்தானும் சில பல வீரர்களைத் தேடி வலைவீச வேண்டி இருக்கும்.

T20 தொடரில் இலங்கை சமாளித்து சமநிலை பெற்றது.. ஆனால் ஒருநாள் தொடரும் டெஸ்ட் தொடரும் பந்துவீச்சினால் பாகிஸ்தான் வசமாகும் என்று நம்புகிறேன்.

 மஹேல, சங்காவினால் ஏதாவது செய்யக் கூடியதாக இருந்தால் மட்டும் விக்கிரமாதித்தானின் மூக்கு உடையும்.

--------------------

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள Jaffna Premier League - JPL T20 பற்றியும் சில விஷயம் சொல்லியாக வேண்டும்..
அனுசரணையாளர்கள், வெற்றிக் கிண்ணங்கள், பரிசுகள், அணிகளுக்கு வர்ண சீருடைகள், வெள்ளைப் பந்து என்று JPL களைகட்டுகிறது

ஊடக அனுசரணை வழங்குவதில் எமது வெற்றி FM க்கும் பெருமையே.யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னணி அணிகள் 8 இப் போட்டித்தொடரில் UR FRIEND FOUNDATION வெற்றிக்கிண்ணத்திற்காக களமிறங்கியிருக்கின்றன.
ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம்,ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம், கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக்கழகம், சென்றல் விளையாட்டுக்கழகம், ஆகியவை பிரிவு- A காகவும் கொக்குவில் மத்திய சன சமூக நிலையம்,பற்றீசியன்ஸ் விளையாட்டுக்கழகம், சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகம், மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம், என்பவை பிரிவு-B ற்காகவும் களமாடுகின்றன.

தம்பிகள் உஷாந்தன், ஜனகன், மதீசன் ஆகியோர் மிக ஆர்வமாக இந்த தொடர் பற்றிய தரவுகள் தகவல்களை அனுப்பியவண்ணம் உள்ளார்கள். நன்றிகள் & நேர்த்தியாக ஒழுங்கமைத்து நடத்துவதற்கு வாழ்த்துக்கள்.
JPL T20 பற்றி விவரமாக அறிந்துகொள்ள இந்த சுட்டி வழியாகச் செல்லுங்கள்.


களைகட்டும் ஜே.பி.எல் கிறிக்கட் கொண்டாட்டம்இறுதிப் போட்டிகளுக்கு யாழ்ப்பாணம் வருமாறு அழைத்துள்ளார்கள்; எதிர்பார்த்துள்ளேன்.

5 comments:

Unknown said...

தமிழ் ஈழம் முதல் முறையாக பங்கு பெறும் விவா 2012 கால்பந்து உலகக் கோப்பை பற்றியும் ஒரு வரி எழுதியிருக்கலாம்..

BC said...

கட்டுரை நிஜத்தில் நடைபெறும் ஐரோப்பிய கிண்ணத் தொடர் மற்றும் விளையாட்டுகளை பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறது.
கனவுலகத்தை பற்றிய நகைசுவை கட்டுரை அல்ல இது.
யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு அணிகள் பற்றி செய்தி தெரிவித்ததிற்க்கு விசேட நன்றி.

Sutharshana said...

யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாக அஞ்சல் செய்யப்படும் எமது வானொலி உலகெங்கிலும் தமிழ் மக்களை சென்றடைந்து இசை உலகில் கொடிகட்டிப்பறக்கின்றது.எமது http://www.raagamfm.com/ இணைய முகவரியூடாக அனைத்து நாடுகளிலும் துல்லியமான ஒலிநயத்துடன் கேட்க முடியும்.

Anonymous said...

சுதர்ஷனா,
ராகம் எவ்எம் தகவலுக்கு நன்றி.

BC said...

இதுவரை நடந்த ஐரோப்பிய கிண்ணத் தொடர் விளையாட்டுகளை வைத்து ஒரு அலசலை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பாக்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner