December 27, 2011

நண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)ஷங்கர் - விஜய் இந்த இணைப்பே போதும் 'நண்பனுக்கான' எதிர்பார்ப்பை எகிறச் செய்ய.. ஆனால் அதை விடப் பெரியதொரு இருக்கிறது இந்த நண்பன் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த..

அது அமீர்கான் நடித்து அபார வெற்றி பெற்ற 3 Idiotsஇன் தமிழ் வடிவம் என்பது தான்.
ஆனால் பாடல்களைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் ஜனரஞ்சகப் பாடல்களைக் கொடுத்துவரும் ஹரிஸ் ஜெயராஜின் இசையில் வருவதால் இசைப் பிரியர்களின் தனியான எதிர்பார்ப்பும் இருந்தது.

காரணம் 1 ஹரிஸ் ஜெயராஜ் முதன்முதலாக இளையதளபதிக்கு இசையமைக்கிறார். 
காரணம் 2 ஹரிசின் அண்மைக்காலப் பாடல்கள் எல்லாமே எங்கேயோ முன்னர் கேட்ட மெட்டுக்கள் என்ற கடும் விமர்சனம். (ஆனால் என்ன மாயமோ ஹிட் ஆகிவிடுகின்றன)

ஹரிஸ் ஜெயராஜுக்கு மட்டுமல்ல பாடலாசிரியர்களுக்குமே இந்தப் பாடல்கள் பெரும் சவாலாக இருந்திருக்கும். காரணம் 3 Idiotsஇல் எல்லாப் பாடல்களும் இசையினாலும் ஹிட்; வரிகளாலும் ரசனையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்த என் போன்றவர்களுக்கும் திரைப்படத்தின் ஓட்டத்தில் பாடல்கள் தந்த உணர்வுரீதியிலான தாக்கம் அற்புதம்.

அதேபோல விஜய் ரசிகர்களுக்கு என்று ஒரு வித்தியாசமான பாணியை இசையமைப்பாளர்கள் விஜய் படங்களில் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது.
விஜயைப் பற்றி ஒரு அறிமுகப் பாடல் இல்லாத விஜய் படமா?

இப்படியான ஒரு பாடல் எப்படி படத்தில் வருகிறது என்பதற்கும், 
3 Idiotsஇல் என்னைக் கவர்ந்த All is well பாடல் தமிழில் எப்படி வருகிறது என்பதற்காகவும் மிகுந்த ஆவலுடன் நண்பனுக்காக காத்திருந்தேன்.

Promo songs எனப்பட்ட குறுகிய நேர அளவைக்கொண்ட பாடல்கள் வெளிவந்து, பின் முழுமையான பாடல்கள் வெளிவந்து, மீண்டும் மீண்டும் பல தடவை கேட்டு ரசித்து, உள்வாங்கிய பிறகு இப்போது நண்பன் பாடல்கள் பற்றி....

ஹரிஸ் ஜெயராஜின் ரசிகர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது...
இந்தப் படத்திலும் சில பாடல்களில் பழைய மெட்டுக்களும், பழைய பாடல்களின் பகுதியளவான இசை உருவல்களும் தெரிகின்றன.
ஆனால் வரிகளின் செழுமையால் அவை மறைக்கப்படுகின்றன/மறைந்து போகின்றன.

(ஒருவேளை இயக்குனர்கள் தான் அப்படியே கேட்டு வாங்கிக்கொள்கிறார்களோ?)

உடனடியாக மனதில் மூன்று பாடல்கள் பச்சக் :)
எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசையிலேயே பாடல்கள் பற்றி...

1.என் பிரெண்டைப் போல யாரு மச்சான் 
எழுதியவர் :- விவேகா
பாடியவர்கள் :- க்ரிஷ், சுசித் சுரேசன்

விஜய்க்கேன்றே எழுதப்பட்ட வரிகளா, படத்தில் வருகின்ற அனைத்தையும் மாற்றும் நாயகனுக்கான வரிகளா என்று யோசிக்க வைக்கும் விவேகாவின் வரிகள்..
ரசனையான, கூலான இசை..

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வைச்சான்

காணாமல் போன நண்பனைத் தேடிச் செல்லும் பயணத்தில் வரும் பாடல் என நினைக்கிறேன்...

நட்பால நம்ம நெஞ்ச தைச்சான்
நம் கண்ணில் நீரை பொங்க வைச்சான்

இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி

விவேகா ஒரு ரசனையான பாடலாசிரியர்.. 
சந்தமும் ஓசையும் சரேலென்று நெஞ்சைத் தாக்கும் அனாயசமான உவமைகளும் என்று கலந்து கட்டித் தருபவர்...

இந்தப் பாடலையும் ஜொலிக்க வைத்துள்ளார்.
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

நட்பு என்பது கற்பைப் போன்றது என்ற உவமையையும் விஞ்சி விட்டார்.

நான் எப்போதும் கிரிஷின் குரலையும் அதில் தொனிக்கும் உணர்ச்சிகளையும் ரசிப்பவன். 
ஹரிஸ் ஜெயராஜின் இசையில் க்ரிஷ்ஷுக்கு பல நல்ல வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இது மேலும் ஒரு பெயர் சொல்லும் பாடல்.

Airtel இன் அண்மைக்கால ஹிட் சுலோகமான 'ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்' ஐ ஞாபகப் படுத்தினாலும் மனது முழுக்க நிறைகிறது பாடல்.
தொடர்ந்து beatsஐக் கேட்ட போது சென்னை சூப்பர் கிங்க்சின் விளம்பரப் பாடல் "இது சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ்" பாடல் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


2.அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
எழுதியவர் :- மதன் கார்க்கி
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், சின்மயி, சுவி(Rap பகுதிகள்)

ஹரிஸ் ஜெயராஜ் வித்தியாசமான இசை வடிவங்கள் சிலவற்றை இந்தப் பாடலில் இணைத்துத் தந்திருக்கிறார்.
அதனாலோ என்னவோ, முன்னர் வெளிவந்த பல பாடல்களைக் கேட்ட ஞாபகமும் வந்து இந்தப் பாடலை ஆழ்ந்து அனுபவிக்காமல் செய்கிறது. 

கனவு காணலாம் வரியா - ஜெய் 
கண்டேனே - மாசி 
சில்லென்று வரும் காற்று - ஏழுமலை (மெல்லிடையோடு வளைகோடு பாடல் வரி வருமிடம்)

ஆனால் விஜய் பிரகாஷ், சின்மயியின் ரசிக்க வைக்கும் குரலும் அழகியலான வார்த்தைகளும் காதல் இறக்கைகளைக் காதுக்குள் பொருத்துகின்றன எமக்கு. 

16 மொழிகளில் காதலைச் சொல்லி ஆரம்பித்து இதமான வரிகளுடன் செதுக்கி இருக்கிறார் மதன் கார்க்கி.
இவரது முதல் பாடலில் இருந்து ஒவ்வொரு பாடலிலும் என்னை ரசிக்கவும், ஆச்சரியப்படவும் வைக்கிறார்.
தந்தையைப் போலவே காதலுக்குள் அறிவியலையும், பாடலுக்குள் வார்த்தைகளுடன் வளமான மொழிச் செழுமையையும் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்கிறார்.
இவரது பல்கலை ஆராய்ச்சியின் தேடலோ என்னவோ, புதுப் புது சொற்கள் மொழிக்கு சினிமாப் பாடல்கள் மூலமாக வந்து கிடைக்கின்றன.

ஒன்றா இரண்டா.. எத்தனை வரிகளை இங்கே எடுத்துக் காட்ட முடியும்?

மதன் கார்க்கியின் வலைத்தளத்திலிருந்து அவரது ஒட்டுமொத்த வரிகளையுமே தந்துவிடுகிறேனே...


அஸ்க் லஸ்காஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

பெண் குரலின் மெல்லிய சுகமான தழுவலோடு ஆரம்பிப்பதே ஒரு ஸ்பரிச உணர்வு.....


முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.

மதன் கார்க்கியின் வர்ணிப்பில் இலியானாவுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் தேடி வந்து ஒரு இச் கொடுத்திருப்பார்.

பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்

இலக்கியத்தைத் திரட்டி இக்காலத்துக்குத் தரும் முயற்சியினாலான இந்த வரிகளைத் தொடர்ந்து 
அழகான புது நயத்தைத் தருகிறார்...

உன் நெஞ்சில் நாடிமானி வைக்க

முன்னர் நடந்தது மறுபடி நடப்பதாக எமக்குத் தோன்றுவதை என்போம்..
இந்த வார்த்தை முதல் தடவையாக ஒரு தமிழ்ப் பாடலில்... அதுவும் பொருத்தமாக..
தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்

ஒரு அழகுக்கான வர்ணனை.. ஒரு அழகிய காதலிக்கான, குறும்பான குழந்தை போன்ற ஒரு அழகிக்கான வர்ணனை வர்த்திகள்..


எங்கள் காதலியர்க்கு நாங்கள் இவரிடம் இரவல் வாங்கக்கூடிய வரிகள் தொடர்கின்றன...

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்

புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அழகான தமிழைக் கொல்லாமல், மென்று துப்பாமல் உணர்ந்து பாடி, உயிர் கசியச் செய்த பாடகர்களைத் தேர்வு செய்த ஹரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள் பல கோடி.


3.இருக்காண்ணா 

எழுதியவர் :- பா.விஜய்
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ், ஜாவிட் அலி, சுனிதி சௌஹான்

ஹரிசின் இசையில் வரும் துள்ளல் காதல் பாடல்களின் வகையறா இது.. 
பா.விஜய் வார்த்தை சந்த , சிந்து விளையாட்டில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
முதல் வரியிலிருந்து சிலேடை, உவமை,, உருவகம் என்று இருக்கும் தமிழ் அணிகளைப் போட்டு, கலக்கி எடுத்திருக்கிறார்.

கதாநாயகி இலியானாவின் புகழ்பெற்ற இடையை வைத்தே ஆரம்பிக்கிறது பா.விஜயின் வார்த்தை விளையாட்டு....

இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாண்ணா இலியானா 

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
உன் மேனி வெண்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

கற்பனை சும்மா சிறகடிக்கிறது.. வழு வழு இடையை ஜெல்லி பெல்லி என்பதும், வாச மல்லியையும், மேனியின் வெண்கல வெள்ளி நிறத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதுமாகக் கவிஞர் ஜொலிக்கிறார்.

விஜய்க்காக கிள்ளிக்குப் பின்னதாக 'கில்லி' :)
இருக்காண்ணா , இலியானா என்று ஆரம்பித்து அதே ஓசை நயத்தோடு கலக்கலாக முடிவது அருமையான finishing touch.

இழைச்சானா குழைச்சானா- ரொம்ப
செதுக்கி செதுக்கி உழைச்சானா

நீ ஜெங்கிஸ்கானா
நீ உன் கிஸ் தானா
நான் மங்குஸ் தானா
உன் கையில் கஸகஸ்தானா..?? (இல்லை அது கசக்கத்தானாவா? ;))

விஜய் பிரகாஷ், ஜாவேத் அலியின் உற்சாகக் குரல்களுடன் சுனிதா சௌஹானின் கிரக்கும் குரலும் சேர்ந்து உற்சாக டோனிக் தருகிறது இந்தப் பாடல்.


4.ஹார்ட்டிலே பட்டறி 

எழுதியவர் :- நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :- ஹேமசந்திரன், முகேஷ்

வாரணம் ஆயிரம் - ஏத்தி ஏத்தி மெட்டும் ஹிந்தி 3 Idiots - All is well பாடலின் பாணியும் கலந்து கட்டி ஹரிஸ் தந்துள்ள mix இந்தப் பாடல்.

நா.முத்துக்குமாரின் உற்சாகம் தரும் இளமை வரிகள் ரசனை..
இளைஞர்களுக்கு உற்சாகம்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலைப்படாதே ... எல்லாவற்றிலும் வாழ்க்கை உள்ளது என்று 'யூத்' தத்துவம் சொல்கிறது முத்துவின் முத்து வரிகள்.

தோல்வியா tension ஆ சொல்லிடு
All is well..
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு

நான் எப்போதும் மனதுக்குள் வைத்துக்கொள்ளும் விதியை நா. முத்துக்குமார் பாடலிலே கொட்டித் தள்ளி இருபது மகிழ்ச்சி....

மூளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u
மனது சொல்வதை செய் :)

கொஞ்சம் யோசித்துக் குபீர் என்று சிரிக்க வைக்கும் வரிகளும் பாடலிலே உள்ளன..
பாத்ரூமுக்குள் பாம்பு வந்தால்
All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
All is well

joker என்பதால் zero இல்லை
All is well
சீட்டு கட்டிலே நீ தான் hero

                                                                            Nanban
                                                                      

5.எந்தன் கண் முன்னே..

எழுதியவர் :- மதன் கார்க்கி
பாடியவர் :- ஆலாப் ராஜ்

காதலின் தவிப்பு + பிரிவு உணர்த்தும் ஒரு சிறு பாடல்....
ஆலாப் ராஜுவின் குரலில் தவிப்புடன் உணர்ச்சியும் சேர்ந்து மதன் கார்க்கியின் வரிகளின் வலிமை தொனிக்கிறது.

காதல் முன் காணாமல் போவதும், காதலி இல்லாமல் வீணாக ஆவதும் சின்ன வரிகளால் ஆனால் சுருக் என்று உணர்த்தப்படுவது ரசனை.

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இரு வரிகளில் தந்தையார் வைரமுத்துவின் 'காதல் ஓவியம்' பாடல் "சங்கீத ஜாதி முல்லை" யில் வரும் வரிகளையும் ஞாபகப்படுத்துகிறார்...
தந்தை வைரமுத்து - 
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்.. 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்..

மகன் மதன் கார்க்கி -
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

சந்தர்ப்பங்களும் கற்பனையும் வித்தியாசம்.. ஆனால் நிகர்க்கிறார் இளவல்.

பலரின் இரவுகளின் ஏகாந்தங்களுக்கு துணை வரப்போகும் பாடல்.


6.நல்ல நண்பன்...

எழுதியவர் :- நா.முத்துக்குமார்
பாடியவர் :- ராமகிருஷ்ணன் மூர்த்தி

மரணப்படுக்கையில் கிடக்கும் நண்பனை மீட்டுக்கொள்ளப் பாடும் பிராத்தனைப் பாடல்?
இரக்கம், இறைஞ்சல், சோகம் என்று கலவையுணர்வு கொட்டிக் கோர்த்த முத்துக்குமாரின் வரிகள்..

இசை எங்கேயோ கேட்ட ஹிந்தி பாடலின் இசை என்று நினைக்காதீர்கள். ஹிந்தியின் 3 Idiotsஇல் வரும் பாடல் ஒன்றே தான்.
புதிய பாடகர்(?) ராமகிருஷ்ணனின் குரலில் இழையோடும் சோகம் எம்மையும் அழுத்துகிறது.

 நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைகின்றதா..?

சோகத்தை அள்ளி இறைக்கும் வரிகள்.... ஆனாலும் இந்த சோகப் பாடலில் எதோ ஒன்று மிஸ் ஆவதாக மனம் சொல்கிறது. என்ன அது?

-----------------------

எங்கேயோ கேட்ட மெட்டுக்கள் என்ற ஹரிஸ் ஜெயராஜின் வழமையான ஒரே சிறு குறையைத் தாண்டி, ஒரு முழு நிறைவான இசைத் தொகுப்பைக் கேட்ட சுகம்...
முதல் மூன்று பாடல் வரிகள் எப்போதுமே மனசுக்குள் + உதடுகளில் மாறி மாறி.. 

ஷங்கரின் மீது முழுமையான நம்பிக்கை இருப்பதால் காட்சிகளாகவும் 'நண்பன்' பாடல்களை ரசிக்கலாம் என்று காத்திருக்கிறேன்.

நன்றி - பாடல் வரிகளை தேடி எடுக்க உதவிய தம்பி ஜனகனின் வலைப்பதிவுக்கு 
#Nanban

15 comments:

வந்தியத்தேவன் said...

அஸ்கு லஸ்கா என் ஐபோட்டில் ரிப்பீட்டாகிக்கொண்டே இருக்கு.
விட்டம் மட்டம் படிப்பேன் நெஞ்சில்லுக்கு என்ன விளக்கம்? மதன்கார்க்கியிடம் ட்விட்டரில் கேட்டேன் இன்னும் பதில் தரவில்லை.
3 இடியட்ஸ் நண்பர்களுடன் பார்த்தேன் ஆனால் நண்பன் நண்பர்களுடன் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன்.
பாடல்கள் கேட்டமாதிரி இருந்தாலும் ஷங்கரும் ட்ரைலரும் படத்தை எதிர்பார்க்கவே வைக்கின்றன.

Sanjay said...

எந்தன் கண் முன்னே..//
இது கூட எங்கேயும் காதல் "'திமு திமு" வின் மறு பதிப்பு தானே :D :D

கார்த்தி said...

ஹாரிஸ் மீண்டும் ஜொலிக்கிறார். எனக்கும் என் பிரெண்டைப் போல யாரு பாட்டுதான் முதலிடத்தில். நீங்கள் சொன்னத போலவே Airtelன் Adஐ கேக்க இதுதான் ஞாபகம் வருது

Sanjay said...

மெல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்.//

"ஆய்கிறேன்" என்று வர வேண்டும் என நினைக்கிறேன் : )

யோ வொய்ஸ் (யோகா) said...

நானும் இப்போதைக்கு இதுதான் அடிக்கடி கேட்கும் ஆல்பம். அயனுக்கு பிறகு ஹாரிஸ் முழு ஆல்பமும் அசத்தியிருப்பது இதில்தான்.

மொழி தெரியாத ஹிந்தி 3 இடியட்ஸையே மூன்று முறை பார்த்தேன். கட்டாயம் இந்த வருடத்தின் முதல் ப்ளொக்பஸ்டர் நண்பன்தான் என நினைக்கிறேன். காரணம் 3 இடியட்ஸ் சும்மாவே வெற்றிக்குதிரை அதையும் சங்கர் என்னும் ஜாக்கி ஓட்டினால் என்னாவாகும்....

Unknown said...
This comment has been removed by the author.
FunScribbler said...

ஒவ்வொரு பாடலையும் ரசித்த நான், உங்க விமர்சனத்தை படித்த பின்பு இன்னும் இப்பாடல்களை ரசிக்கிறேன். அருமையான விமர்சனம்! கலக்குங்க பாஸ்!

anuthinan said...

வானொலியில் நண்பன் பாடல் கேட்பதுடன் சரி! மற்றபடி தனியாக என்னும் கேட்க தொடங்கவில்லை அண்ணா!!!

அஜுவத் said...

World's No.1 Copy cat HJ

Sujan said...

அண்ணா எனது பார்வையில்...
இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாண்ணா இலியானா

என்ற வரிகள் "இடுப்பு இருக்கு ஆனா இல்லை" என்று தான் எழுதப்பட்டிருக்கும்.. பாடும் போது "இடுப்பிருக்காண்ணா
இல்லையாண்ணா" என்று சேர்த்துப்பாடப்பட்டிருக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீர்கள்..

Bavan said...

சேம் பிளட் :D
:-))

Unknown said...

http://www.vijay-filmsreview.com/

மதுமிதா said...

அழகான விமர்சனம்! நிஜமாகவே

‘தோழனின் தோள்களும் அன்னை மடி -அவன்
தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி ‘

என்னும் வரிகளைக் கேட்டதும் என் உடல் சிலிர்த்துவிட்டது.

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்’ முஸ்தபா பாடலைத் தாண்டும் என்று நினைக்கிறேன்.

தர்ஷன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாரிஸ்,விஜய் படங்களில் எல்லாப் பாடல்களும் ஹிட். எல்லாம் ஷங்கர் செய்த மாயம்

Unknown said...

ஏழாம் அறிவுக்கு பின் எல்லா பாடல்களும் ஹிட், அஸ்கு ல்கசா, இருக்கானா ரொம்ப பிடித்திருக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner