November 06, 2011

வாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை

சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தினால் ஒவ்வொரு மாதத்தின் முழு நோன்மதி (பூரணை) தினத்தில் பாடிப்பறை என்ற பெயரில் ஒரு கவியரங்கம் + கலந்துரையாடல் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
(பாடிப்பறை என்ற பெயரை முதல் தரம் கேட்டதில் இருந்து ஒரு ஈர்ப்பு + ரசனை. அழகான தமிழ்ப் பெயரில் தமிழை அழகாகத் தரும் நிகழ்வு என்றால் கேட்கவும் வேண்டுமா)

எமது சமூக வாழ்வோடும், தமிழோடும் இணைந்த இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வைக் குறித்து அமைவது அர்த்தபூர்வமானதோடு, நாம் மறந்து செல்லும் சிலவற்றையும்,எமது வாழ்க்கையில் கவனிக்காமல் விடும் பல முக்கியமான விடயங்களையும் மனதுள் ஆழப் பதிய வைக்கிறது.


இரண்டாவது 'பாடிப்பறை' நிகழ்வு மகாகவி பாரதியாரின் 90வது நினைவு நாளை ஒட்டிய, சிறப்பு "பாடிப்பறை" கவித்துறை நிகழ்வாக இடம்பெற்ற போது (11/9/2011) என்னையும் கவியரங்கத்திலே இணைந்துகொள்ள அழைத்திருந்தார்கள்.

"கனவேந்தும் பொழுதுகள்"

என்னும் தலைப்பில் அமைந்த கவியரங்கத்தினைத் தலைமையேற்று  நெறிப்படுத்தி இருந்தார் எனது வானொலிக் குருநாதர் திரு.எழில்வேந்தன் அவர்கள்.



எனக்குக் கொடுக்கப்பட்டது - வாழ்வுக் கனவு 

அந்த வேளையில் தான் இருபது வருடங்களின் பின்னர் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் செல்லும் வாய்ப்பும், திருமணத்தின் பின்னர் மனைவியுடன் முதல் தரமாக யாழ் செல்லக் கூடிய வாய்ப்பும் கிடைத்து அந்த மறக்கமுடியாத யாழ் பயணம் முடிந்த நினைவுகள் மனம் முழுக்க நிறைந்திருந்தன.
அத்தனையையும் முடிந்த வரை கொட்டித் தீர்க்க இந்தக் கவியரங்கக் கவிதை வழிவகுத்தது.

எழில் அண்ணாவின் என்னைப் பற்றிய அறிமுகம்











"வாழ்வுக் கனவு " ஒலி வடிவம்










எழுத்து வடிவம் 



பாடிப்பறை - கவியரங்கம் 




கனவேந்தும் பொழுதுகள்....

வாழ்வுக்கனவு 

வாழ்க்கையின் அங்கங்களைக் கனவுகளாக்கிப் பாடும் மூவருடன், 
வாழ்க்கையையே கவி பாடப் போகும் நானும்..
வணக்கம்..

பாடிப்பறை - அழகான பெயர்.. அர்த்தமுள பெயர்.
மறைந்து செல்லும் தமிழ்ச் சொல்லை 
மீண்டும் மனதில் அறையும் பெயர்
பறை - 
இப்போது அறைந்து வாசித்த கருவியாக,
முந்தாநாள் ஓணம் கொண்டாடிய
எங்கள் செச்சங்கள், சேச்சிகள் சொல்வதற்கு மட்டும் என்று    
ஆகிப்போனது தமிழர் எம் கோலம்...

பாடியும் பறைந்தும்
சேதி சொல்லும் 
இன்றைய நாளில் 
எம் கனவேந்தும் பொழுதுகளைக் கட்டியாள 
வந்துள்ள தலைவர்
சிறுவயது முதல் என்னைத் தட்டி நிமிர்த்தி
தலை நிமிரவைத்தவர்..
தமிழைத் தமிழாக என் நாவு இன்றும் சொல்ல வைத்தவர்.
என் வானொலிக் குரு 
நன்றிகளுடன் வணக்கம் சொல்கிறேன்
அந்தக் கவிஞருக்கு..
ஒரு மாபெரும் கவிஞரின் கவி மகனுக்கு..

சக வணக்கங்கள்
சக கவித் தோழருக்கு..

சந்தோஷ வணக்கங்கள் உங்கள் அனைவருக்கும்....

வீரம், புரட்சி, காதல் இவை சேர்ந்த வாழ்க்கையில்
சராசரி மானிட ஆயுளின் பாதியைக் கடந்து இன்னும் 
கனவுகளுடன் வாழ்வைத் தேடிக் கொண்டிருக்கும் 
சராசரி மானிடன் நான்..
சாகும் வரை கற்கும் மாணவன் நான்..

வசனங்களில் கவி சொன்ன பாரதியின் 
தொண்ணூறாம் ஆண்டு நினைவு நாளில்,  
வசனங்களையே கவிதையாக்கி வந்திருக்கிறேன்..
வார்த்தைகளை எடுத்து 
கவியென்று நினைத்து 
கனிவுடன் பொறுத்து
கருணை கூர்க...


சின்ன வயதில் 
மருதடித் தேரில் ஆர்மி செட் வேண்டுமென்று 
அப்பாவிடம் அடம்பிடித்து ஆசையாய் வாங்கி 
எம் இணுவில் வீட்டின்  
நீண்ட ஹோலில் வைத்து விளையாடிய
காலம் 
அப்படியே மனதில் பசுமையாய் ஒட்டி நிற்கும்..
சற்றே சலனம் கலைத்து நிமிர்கையில் 
பின்னால் நிற்கும் வாகன ஹோர்ன் 
காது கிழிக்கும்..

அதே வீட்டில் 
இந்நாள் இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னால்,
என் சின்ன மகனும் 
அப்படியே விளையாட்டுப் பொருள் அடுக்கி
நிலத்தில் உருண்டு விளையாடி
செம்பாட்டு மண் பூசி
சிரித்து விளையாடும்போது
சிலிர்க்கும் மனதில்
ஓடி மறைந்த காலங்களின் 
ஒவ்வொரு நினைவுகளும்..

இந்த இருபத்தைந்து ஆண்டுகளில்
எத்தனை நடந்தன..
எத்தனை கடந்தன..
எத்தனை மறைந்தன..
எத்தனை மறந்தன..


கனவுகள் தொலைத்த பொழுதுகள்
எங்களுக்குப் புதியன அல்ல..
கண்களையே தொலைத்த பின்
கனவுகள் எம்மாத்திரம்...

எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து
அதே புள்ளியில் வந்து நிற்க இது வட்டமல்ல..
வாழ்க்கை..
வட்டமாக சுற்றிவந்தாலும் 
அதே அப்படியே எதுவுமே இல்லை..

சின்னவயதில் நான் உருண்ட இடங்களில்
தவழ்ந்த மண்ணில்,
குளிரக் குளிரக் குளித்த 
இறைத்துவரும் தோட்டக் கிணற்றில் 
இப்போது நான் அல்ல 
என் மகனே களிக்கிறான்.. ரசிக்கிறான்..
நான் பார்க்கிறேன்...

தொலைந்த பொழுதுகளை மனதில் 
எண்ணி எண்ணி  ஏங்கவே முடிகிறது..
கனவுகளை சில்லறையாய்த் தொலைத்து 
அள்ளி எடுக்கையில்
முக்கியமான குற்றிகள் எங்கேயோ விடுபட்டுப் போனமாதிரியாக..

இளமை தொலைத்து
வேர் மண் பிரிந்து 
பிறிதொரு மண்ணில் வேர் விட்டு 
மரமாகி எழுந்த பின்
மீண்டும் சொந்த மண் பார்க்கும்
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமானது..

வாழ்வுக் கனவுகள்
எப்போதும் இனிமையானவை தான்..
பஞ்சுத் தலையணையில் 
தலை புதைத்து
இதமான போர்வைக்குள் முடங்கி 
சுகமாகத் தூங்கும்போது மட்டும்...

கலரும் கறுப்பு வெள்ளையுமாக
ஒவ்வொரு நாளும் கனவும் நனவுமாக
வாழ்க்கையின் காட்சிகள்...

நினைத்ததில் நடந்தவை
நடந்ததில் விரும்பாதவை
வாழ்க்கை என்றால் அப்படித்தான்
தத்துவங்களும் ஆறுதல்களும்
வாழ்க்கை என்பதன் பாகங்களாகிப் போனவை இவையும் தான்....

சின்னவயதில் ஆசைப்பட்டு கிடைக்காமல் போன
சிவப்பு சட்டை 
இப்போது ஒன்றென்ன நூறு வாங்கலாம்..
ஆனால் இப்போது அது அளவும் சின்னது..
எனக்கு ஆசையும் அதில் இல்லை..

பத்துவயதில் பரீட்சைக்கு முதல் நாள்
பார்க்க ஆசைப்பட்ட படம் 
இப்போது நாள் தோறும் கேபிள் டிவியில்
பார்ப்பாரற்று ஓடிக் கொண்டே இருக்கிறது..

பதின்மூன்று வயதில் 
போக ஆசைப்பட்ட கிரிக்கெட் பயிற்சி..
"வெயில் ராசா கறுத்திடுவாய்"
"படிப்பு பாழாப் போயிடும்"
தடுத்த வார்த்தைகளால் வாடிப்போன கனவுகள்
இனி மகனை அனுப்ப மனதில் விரியும்..

படிக்க ஆசைப்பட்ட படிப்பு
வாழ ஆசைப்பட்ட வீடு
ஓட்ட ஆசைப்பட்ட வாகனம்..
எல்லாமே அந்தந்தக் காலத்தில் 
நரிக்கு எட்டாமல் போன முந்திரி போல
அதனால் புளித்துப்போனவை
இப்போது அத்தனையும் கையில் கிட்டும்..
ஆனாலும் 
கிடைக்கையில் பிடிக்காது எவையும்.. 

கோப்பைத் தேநீராக வாழ்க்கை..
சூடு ஆற முதல் குடித்துவிட ஆசை தான்..
ஆனால் நாவு சுட்டுவிடும் என்று காத்திருக்க,ஒரேயடியாக ஆறிவிடுகிறது..

அத்தனைக்கும் ஆசைப்படு..
சொன்னவன் யார் எனத் தேடித் பார்க்கிறேன்..
அளவோடு ஆசைப்பட்டுமே அளந்து தான் கிடைக்கிறது..

அதற்காக ஆசையேபடாமலும்
ஞானியாக வாழ நம்மாலே முடியாதே..

காணி நிலம் வேண்டும் காணியுடன் அங்கிங்கே  
எமது கவிஞன் கேட்டவை பற்றி 
இங்கும் நாம் கேட்டோம்.


என் காதல் கவிஞன் அன்று ஆசைப்பட்டவை
அவன் கவிதைகள் போலவே கட்டுக்கட்டாக
அடுக்கடுக்கா அடுக்கிக் கொண்டே போகலாம்
எம் கவித் தலைவரும் அது பற்றி சொல்லி இருந்தார்..

கால் வயிற்று க் கஞ்சிக்கும் காசில்லாமல்
கற்பனையிலேயே கோட்டை கட்டி
ஆனந்த சுதந்திரக் கனவையும் 
கண்முன்னே பாராமல் 
ஆனையின் காலில் அகாலமானான்..

தமிழனின் வாழ்வு இன்றும் 
அதே கற்பனை, கவிதை, கனவு 
விவாதம், தேடல், விடுப்பு
என்றே திரிகிறது..

சாத்தியமாகும் எந்த விடயமும் சத்தியமாகத் தெரியவில்லை
சரித்திரங்களையும் சாத்திரங்களையும் வைத்து
சந்ததி சந்ததியாக 
கனவுகளின் மீதும் கவலைகளின் மீதும்
எங்கள் காகித மாளிகைகள்
கட்டப்படுகின்றன..

கிடைக்கும் என்றிருந்தவை கிடைக்கா என்று தெரிந்த பின்பும்
கிடைத்த வரை போதும்
என்று வாழும் வாழ்வும் ஒரு சுவை தான்..
கனவிலாவது கிடைக்காமல் போனவை கிடைத்ததாக 
கிளர்வு காணலாமே...


இன்னும் ஒன்று கேள்விப் பட்டேன்...
கனவுகளின் பலாபலன்கள்
நூல் தமிழ்ப் பதிப்பில் தான் அதிகமாக
விற்பனையாகிறதாம்..

கனவு காண்பீர் என்று அப்துல் கலாம்
மட்டும் சொல்லவில்லை..
நானும் தான்..
கண்டவன், காண்பவன், காணவும் போகிறவன்
என்ற உரிமையுடன்...

காலாகாலக் கனவுகள்
கலையும் மேகம் போல ஆனாலும் 
கனவு காண்பதை நிறுத்தோம்..
காணும் கனவுகளில் ஒன்றாவது
நனவாகாதா என்ற நப்பாசை தான்...


ஆனால் 
என்ன முரணோ எனக்குத் தெரியாது 
இப்போதெல்லாம் தூங்கக் கிடைக்கும் 
சில மணித் துளிகளில்
எனக்குக் கனவுகள் வருவதே இல்லை
வரும் கனவுகளும் ஞாபகமில்லை


கண்ட கனவுகள் போதும்
கண்டதை முதலில் மற
பின் புதிய கனவுகள் வரும்
என்று சொல்லாமல் சொல்லும் 
காலத்தின் தகவலோ?


பகற்கனவுகள் காண்பதில் சற்றும் 
ஆர்வமில்லாதவன் என்பதால் 
அர்த்தமுள்ள கனவுகளை மட்டும்
வாழ்வில் பதிவு செய்து
அடுத்து சுழலும் ஆண்டுகளுக்காக
ஆசைகளை அதிகமாக வைத்துக்
காத்திருக்கிறேன். 


படங்கள் சகோதரன் விமலாதித்தன் பேஸ்புக்கில் ஏற்றியவை. 



7 comments:

ஷஹன்ஷா said...

won the toss...

படித்துவிட்டு வருகிறேன் அண்ணா..

sinmajan said...

அந்தத் தேநீர்க் கோப்பை ஒப்புவமை.. பிடித்திருக்கிறது :-)

ஷஹன்ஷா said...

படித்து விட்டு வருகிறேன் என்று சென்றவன் பாடிப்பறையை கேட்டு விட்டும் வந்திருக்கின்றேன்..

பாடிப்பறை - தமிழில் நான் கேட்ட, அறிந்த மற்றுமொரு வித்தியாசமான வார்த்தை பிடித்துபோன வார்த்தையும் கூட...
இந்திய மண்ணில் அண்மையில் சில நாள் இருக்கையில் ஆடலரசு என்ற அன்பு தோழனின் மூலமாக பறையின் இசையை அடிக்கடி கேட்க முடிந்தது. அனுபவிக்க முடிந்தது. ஓசை ஓய்ந்த பின் அதை கேட்கும் கனவும் கலைந்து விடுமோ என்றிருந்த எனக்கு அதனை வார்த்தைகளால் உணர வைத்திருக்கும் பாடிப்பறைக்கு என் நன்றிகள்.

ஃஃவாழ்க்கையின் அங்கங்களைக் கனவுகளாக்கிப் பாடும் மூவருடன்,
வாழ்க்கையையே கவி பாடப் போகும் நானும்..ஃஃ

கேட்டவுடனும் படித்தவுடனும் ஆர்வத்தை துாண்டியது.. தொடர்ந்து கேட்டு படித்தேன்..


ஃஃவீரம், புரட்சி, காதல் இவை சேர்ந்த வாழ்க்கையில்
சராசரி மானிட ஆயுளின் பாதியைக் கடந்து இன்னும்
கனவுகளுடன் வாழ்வைத் தேடிக் கொண்டிருக்கும்
சராசரி மானிடன் நான்..ஃஃ

இன்று சராசரி மானிடர்கள் வாழ்க்கையை தேடுபவர்களாக எனக்கு தெரியவில்லை.. ஆகவே நீங்கள் அசாதாரண மானிடன் என்று நினைக்கிறேன்.. அதுதான் பொருத்தமானதும் கூட..

ஃஃஇந்த இருபத்தைந்து ஆண்டுகளில்
எத்தனை நடந்தன..
எத்தனை கடந்தன..
எத்தனை மறைந்தன..
எத்தனை மறந்தன..ஃஃஃ

நிச்சயமாக இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எனக்கு வழங்கப்பட்ட இருபது ஆண்டுகளை நினைத்து பார்க்கிறேன்.. கடந்து வந்த பாதையில் எம்மை களவாடிய விடயங்களும் நாம் கைவிட்டு வந்த விடயங்களும் எம்மை கைவிட்டு சென்றவைகளையையும்...

ஃஃஃதொலைந்த பொழுதுகளை மனதில்
எண்ணி எண்ணி ஏங்கவே முடிகிறது..
கனவுகளை சில்லறையாய்த் தொலைத்து
அள்ளி எடுக்கையில்
முக்கியமான குற்றிகள் எங்கேயோ விடுபட்டுப் போனமாதிரியாக..ஃஃஃ

நான் அனுபவித்து ரசித்த வரிகள்..

ஃஃஃஃகோப்பைத் தேநீராக வாழ்க்கை..
சூடு ஆற முதல் குடித்துவிட ஆசை தான்..
ஆனால் நாவு சுட்டுவிடும் என்று காத்திருக்க,ஒரேயடியாக ஆறிவிடுகிறது..ஃஃ

அருமை.. வாழ்க்கை தொடர்பான இலகுவாக புரியும் விளக்கம்..
சிறு வயதில் ஆசைப்பட்டவை பல யாருக்கும் அப்போது கிடைப்பதில்லை.. ஆனால் இப்போது கிடைத்தால் வெறுத்து ஒதுக்கும் விடயமாக மாறிவிடுகின்றன.. அது ஏனோ..?? மனிதனின் குணம்தானோ..??
ஆனாலும் அப்படி வருபவை எமக்கு பெரும் ஏக்கங்களை தந்துவிட்டு செல்கின்றன என்பதே உண்மை.


ஃஃஃஃகால் வயிற்று க் கஞ்சிக்கும் காசில்லாமல்
கற்பனையிலேயே கோட்டை கட்டி
ஆனந்த சுதந்திரக் கனவையும்
கண்முன்னே பாராமல்
ஆனையின் காலில் அகாலமானான்.ஃஃஃ

ம்ம்ம்.. பாரதியின் அன்றைய நிறைவேறாத கனவுகள் போல இன்றும் எமக்கும் எம் கனவுகள் நிறைவேறாமல் இருப்பதும் பெரும் ஒன்றுமையே..காரணம் பாரதி காணதுடித்த புதியதோர் உலகில் நாம் இருப்பதாலோ..??
சில வேளைகளில் பாரதியின் கனவுகள் அவன் மூச்சடங்கியதும் நனவாகியது போல எம் கனவுகளும் நனவாகுமோ?? காலம்தான் பதில்.

வாழ்வுக் கனவு - கடந்து சென்ற வாழ்க்கையில் நிகழ்கால வாழ்வு பற்றி நாம் கண்ட கனவுகளை மீட்டி தந்தது.
அத்துடன் எதிர்கால கனவுகளின் கனம் பற்றியும் பறைந்து சொல்லி சென்றது.

கவிதைகள் அருமை.. வாழ்க்கை கவிதையாக மாறும் போது அதன் சுவையும் தனித்தன்மையாகிறது.

கவிதையை படிப்பதற்கு மட்டும் தராமல் அதனை கேட்கவும் தந்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Subankan said...

Nice :-)

Sanjay said...

கனவுகள் தொலைத்த பொழுதுகள்
எங்களுக்குப் புதியன அல்ல..
கண்களையே தொலைத்த பின்
கனவுகள் எம்மாத்திரம்...//

கலக்கல் தல...!!!

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Anonymous said...

Very good poem loshan

இளமை தொலைத்து
வேர் மண் பிரிந்து
பிறிதொரு மண்ணில் வேர் விட்டு
மரமாகி எழுந்த பின்
மீண்டும் சொந்த மண் பார்க்கும்
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமானது..


mano

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner