October 07, 2011

உங்கள் வாக்கு....


நாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்.

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாராவது நினைப்பீர்களேயானால், அது தவறு.
அடி மட்டத்திலிருந்து மேல் செல்லும் அரசாங்கப்படிகளின் முதலாவது அடியாக அமைவது இந்த உள்ளூராட்சி சபைகள் தான்.
மக்கள் தங்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதும் இந்த முதலாவது படியில் தான்.

இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைகளுக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி நடைபெற்றதால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்காகவும் ஏனைய சில சபைகளுக்கும் நாளை வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.

கொழும்பில் இம்முறை ஒன்பது கட்சிகளும் பத்து சுயேச்சைக் குழுக்களும்..
தோற்பது தெரிந்தே ஏன் தான் இப்படியொரு சுயேச்சை ஆசையோ?

கொழும்பில் இம்முறை என்றும் இல்லாதவாறு ஊகிக்க முடியாதாவாறு தேர்தல் முடிவுகள் வரும் என்று நம்பப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) மிலிந்த மொரகொட தலைமையிலும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) முசம்மில் தலைமையிலும் களம் காணுகின்றன.

ஆண்டாண்டு காலமாக கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை. ஆனால் என்றும் இல்லாதவாறு அரசாங்கம் முழுப் பலத்துடன் இருக்கையில் நொந்து நூலாகிப் போன நிலையில் கட்சிக்குள் ஏராளமான உடைவுகளோடு இம்முறை ஐ.தே.க தேர்தல் களம் காண்கிறது.
முசம்மிலுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலும் அடிக்கடி கட்சிகள் தாவியவர் என்ற பெயரும் சேர்ந்தே இருக்கிறது.
அத்துடன் பிளவுகள் பல கண்டு சிக்கி சின்னாபின்னமாகியுள்ள ஐ.தே.கவுக்கு இம்முறை பாரம்பரிய வாக்கு வங்கியிலும் பாரிய சரிவு ஏற்படலாம்.

மறுபக்கம் மிலிந்த மொரகொடவும் கட்சி மாறியவராக இருந்தும் நாகரிக அரசியலை முன்னெடுப்பவர் என்ற நற்பெயர் உள்ளது.
முதல் தடவை தேர்தலில் போட்டியிட்டபோது அறிவித்தபடியே இன்று வரை சூழலை சுவரொட்டிகள், பதாதைகள் மூலம் மாசுபடுத்தாது பிரசாரம் செய்து வருபவர்.
இத்துடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நற்பணித் திட்டங்கள், அபிவிருத்திகளும் சேர்ந்து சிங்கள வாக்காளர் மத்தியில் ஒரு அரச ஆதரவு அலையை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறேன்.

முதலாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஒரு கட்சி (2006ஆம் ஆண்டு ஐ.தே.க வின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஐ.தே.கவின் ஆதரவுடைய சுயேச்சைக் குழு வெற்றிஈட்டியதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று) கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாக்குகள் உள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களின் தெரிவு இம்முறை சிதறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மர சின்னத்தில் போட்டியிடுகிறது.
ஆனால் முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவை உள்ளடக்கிய முக்கிய வேட்பாளர்கள் பிரதான கட்சியில்..
குழப்பம் தான்.
ஸ்ரீ.ல.மு.கா ஓரிரு ஆசனங்கள் பெற்றாலே திருப்தி காணும்.

மறுபக்கம் முன்னாள் மூன்றாவது பெரிய கட்சி இம்முறை படு மோசமான நிலையில்..
மீண்டும் ஒரு உடைவு. இம்முறை மேலும் மூக்குடையலாம்.

ஆனாலும் தமிழரின் வாக்குகள் மிக அதிகமாக இம்முறை இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் செல்லாமல் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு செல்லும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கொழும்பில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக இக் கட்சியே களம் காண்கிறது என்றால் அந்தக் கூற்றில் மறுப்பேதும் இருக்காது.
அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது பகிரங்க ஆதரவை வழங்கி இருக்கும் நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளை சரியாகத் தெரிவு செய்யவேண்டிய ஒரு கடமை கொழும்பு தமிழ் வாக்காளர்களுக்கு இருக்கிறது.

மனோ கணேசன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் தேவையான சந்தர்ப்பங்களில் துணிச்சலாகக் குரல் கொடுத்த ஒருவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக கண்டியில் அவர் தோற்றுப் போனாலும் அவருக்கென கொழும்பில் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது.

அதிலும் இம்முறை அவரது கட்சி ஏணிச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சேர்ந்திருப்பதும் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினரையவாது தெரிவு செய்ய எதுவாக அமையும் என்று நம்பி இருக்கலாம்.
அத்தனை கொழும்பில் வாழும் தமிழரின் வாக்குகளும் சிதறாமல் கிடைத்தல் பத்துக்கு மேல் ஆசனங்கள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.




ஆனால் எம் தமிழ் வாக்காளர்கள் வழமை போல வீட்டுக்குள்ளே இருக்காமல் தம் வாக்குப் பலத்தைப் பயன்படுத்த வெளிவரவேண்டும்.
எல்லாவகையான எம் இருப்புக்களும் தொலைந்து போகாமால் இருக்க இதை ஒரு வழியாக மாற்றவேண்டும்.

வாக்களிக்கும்பொது ஒரு முக்கியமான விடயத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும்..

எமது பிரதிநிதியை நாம் தெரிவு செய்கிறோம்..
ஒருவன் பணக்காரன் ஆக வழியை நாம் காட்டவில்லை; எமக்கு சேவை செய்ய, எமக்கு வேண்டியதை செய்ய எம்மில் இருந்து ஒருவரை நாம் அனுப்புகிறோம்.
வாக்களித்த பிறகும் எமக்குப் பொறுப்புக் கோரும் நம்பிக்கை உடைய, நாம் அணுகக் கூடிய ஒருவருக்கா வாக்களிக்கிறோம் என்று பார்த்து எமது வாக்கை அளிக்க வேண்டும்.

முதலில் எமது வாக்குரிமையை நாம் பயன்படுத்தவேண்டும்.
எமக்கென்ன ஆச்சு என்று இருந்தால் எம்மை ஆள்வதற்கு மற்றொருவரைத் தீர்மானிக்க விட்டுவிடுகிறோம்.
எமக்கான எமது உரிமையை நாம் எடுத்துக் கொள்ளாமல் விடுவது எம்மை நாமே கவனிக்காமல் விடுவதன்றோ?

என்னைப் பொறுத்தவரை எனது வாக்கை இம்முறை பகிரங்கமாக அறிவித்தே அளிக்கிறேன்..
எனது நண்பன் குகவரதன்.. (குகன்) 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் இலக்கம் 16.

எனது நண்பன் என்பதற்காக சொல்லவில்லை.
நம்பிக்கைக்குரியவர்;
சேவைகளை மனப்பூர்வமாக இதுவரை ஆற்றியவர்.
லயன்ஸ் கழகத்தில் நாம் இருவரும் இணைந்து சேவையாற்றியபோது எந்தவொரு பிரதிபலனும் பாராது லட்சங்களாக வாரியிறைத்தவர்.
இனித் தான் பணம் குவிக்க வேண்டும் என்ற தேவை இல்லாத ஒருவர்.
இலகுவாக அணுகக் கூடிய ஒருவர்.
உழைத்து முன்னேறியவர் என்பதால் எம் கஷ்டங்களும் புரிந்த ஒருவர்.

கடந்த 15 வருடங்களாகத் தெரிந்தவர் என்பதனால் நம்பி சொல்கிறேன்.. நீங்கள் நம்பலாம் இவரை.
என்னை நம்பி இவருக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு எனது நண்பர்களைக் கேட்கிறேன்.

குகன் வெற்றி பெற்றால் தகுதியான ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்கியதில் எனது சிறிய பங்கும் இருக்கிறது என்று நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வேன். அந்தப் பெருமையில் பங்கெடுக்க உங்களையும் அழைக்கிறேன்.


பார்த்து வாக்களியுங்கள் ஏணி பதினாறிற்கு.

அதே போல இன்னும் ஒரு நல்லவர் தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.
அவர் சிங்களவராக இருந்தாலும் தமிழரின் உரிமைகளுக்காகவும் சம நீதிக்காகவும் ஆண்டாண்டு காலம் குரல் கொடுத்து என்றும் தோல்வியையே சுமந்து வரும் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன.

இம்முறை தனது கட்சியை ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைத்து ஏணிச் சின்னத்தின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகிறார்.
தெகிவளை - கல்கிசை நண்பர்கள் இந்த நல்ல மனிதருக்கு உரிய கௌரவத்தினை வழங்குங்கள்.

இது எனது விருப்பம் + சிபாரிசு + வேண்டுகோள்கள் மட்டுமே.
இதர இடங்களில் உங்கள் உங்கள் தேவைகள் அறிந்த உங்களைப் புரிந்த நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள்.

உங்கள் விரல்களில் நகம் பூசி உங்கள் முகங்களில் நீங்களே கரியைப் பூசிக் கொள்ளாதீர்கள்.

நாளை விடியல் நமக்காக இருக்கட்டும்.

(ஒரு விடயம் - இம்முறை தேர்தல் முடிவுகள் அனைத்தும் தேர்தல்கள் செயலகத்திலிருந்து அரசாங்கத் தகவல் திணைக்களத்துக்கு சென்று அங்கிருந்து தான் ஊடங்களுக்கும் மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறே முடிவுகள் அறிவிக்கப்பட்டதை ஞாபகப் படுத்துவது எனது கடமை மக்கள்ஸ்)

11 comments:

கன்கொன் || Kangon said...

:-)

மருதமூரான். said...

லோஷன்...!

பதிவை படித்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சி. ஏனெனில், தங்களிடமிருந்து இந்தப் பதிவு இன்று வந்திருப்பதனால். ஏனெனில், தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டநிலையில், அதுவும் தேர்தலுக்கு 12 மணித்தியாலங்கள் இருக்கின்ற நிலையில் இந்தப்பதிவு தேவையா? இதுவே, இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்திருந்தால் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன். தேர்தல் விதிமுறைகள் ஊடகத்துறையில் இருக்கிற உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஏன்?

//என்னைப் பொறுத்தவரை எனது வாக்கை இம்முறை பகிரங்கமாக அறிவித்தே அளிக்கிறேன்..
எனது நண்பன் குகவரதன்.. (குகன்)
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் இலக்கம் 16.

எனது நண்பன் என்பதற்காக சொல்லவில்லை.
நம்பிக்கைக்குரியவர்;
சேவைகளை மனப்பூர்வமாக இதுவரை ஆற்றியவர்.
லயன்ஸ் கழகத்தில் நாம் இருவரும் இணைந்து சேவையாற்றியபோது எந்தவொரு பிரதிபலனும் பாராது லட்சங்களாக வாரியிறைத்தவர்.
இனித் தான் பணம் குவிக்க வேண்டும் என்ற தேவை இல்லாத ஒருவர்.
இலகுவாக அணுகக் கூடிய ஒருவர்.
உழைத்து முன்னேறியவர் என்பதால் எம் கஷ்டங்களும் புரிந்த ஒருவர்.

கடந்த 15 வருடங்களாகத் தெரிந்தவர் என்பதனால் நம்பி சொல்கிறேன்.. நீங்கள் நம்பலாம் இவரை.
என்னை நம்பி இவருக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு எனது நண்பர்களைக் கேட்கிறேன்.////

இந்தப் பகுதி உங்களின் தேர்வை மட்டும் சொல்லவில்லையே. மாறாக, நண்பர்களையும் வாக்களிக்க கோரியிருக்கிறீர்கள். அதுதான், தேர்தல் விதிமுறைகளுக்கு அப்பாலுள்ளது. அது ஒருவகையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒப்பானது.

(நண்பருக்கான இன்னொரு நண்பரின் சுட்டிக்காட்டல் இது அவ்வளவுதான்)

Subankan said...

:-)

தனிமரம் said...

சரியான ஆய்வுக்கட்டுரை கொஞ்சம் முன்னரே வந்திருக்களாம்! மனோவிற்கு கை கொடுப்பது காலத்தின் கட்டாயம்!

K. Sethu | கா. சேது said...

//முதலாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஒரு கட்சி (2006ஆம் ஆண்டு ஐ.தே.க வின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஐ.தே.கவின் ஆதரவுடைய சுயேச்சைக் குழு வெற்றிஈட்டியதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று) கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாக்குகள் உள்ளது.//

1954 - 1956 (அக்காலங்களில் மாநகர சபைகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல்) என்.எம். பெரேரா நகரப்பிதா ஆக இடதுசாரிகள்+ சுயேச்சை கூட்டணியின் ஆளுகை இருந்தது. (சுதந்திரத்திற்கு முன்னரும் இலங்கை தொழிலாளர் கட்சியின் ஏ.ஈ. குணசிங்க மேயர்களில் முதல் இலங்கையராக வென்றவர்).

பின்னர் 1974-77 காலத்தில் ஐ.தே.க. வில் இருந்து நகரப்பிதா ஆன, பவுசி அவர்கள் நாட்டை ஆண்ட சுதந்திர கட்சிக்குத் தாவிப் பின்னரும் அப் பதவியைத் தொடர்ந்தார். மாநகர சபையில் ஐ.தே.க வின் பெறும்பான்மை மிகவும் சிறிதாகவிருந்ததால் அரசின் தில்லு முல்லுக்களால் வீழ்த்தப்பட்டது.

Yoga.s.FR said...

விக்கிரமபாகு கருணரத்தினவா,நாயக்காவா?(டவுட்டு)கடந்த தேர்தல் முடிவுகள் அலரி மாளிகைக்கே முதலில் அறிவிக்கப்பட்டதாக விக்கி லீக்ஸ் சொல்கிறதே?கொழும்பு வாழ் தமிழர்கள் கடந்த காலங்களில் "பயம்" காரணமாகவும் சிதறி வாக்களித்தார்கள்!இனி மேல் அவ்வாறு தயங்கவோ,பயப்படவோ வேண்டியதில்லை!இப்போது சர்வதேசத்தின் முழுக்கவனமும் இலங்கைத் தலை நகரிலேயே குவிந்திருப்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை!வாக்களிப்பீர்,தன்மானத் தமிழர்களே,மனோவின் ஜனநாயகக் கூட்டணிக்கு!!!!!!!!!!!!!!!!!!!

LOSHAN said...

மருதமூரான்.. இந்த விதிகளை நான் மிகக் கவனமாக வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கடைப்பிடிக்கிறேன்..
ஆனால் சமூக வலைத்தளங்களிலும், இணையவேளியிலும் இவ்விதி பொருந்தாது என்று நினைக்கிறேன்.

அதற்காக நான் விதியை மீற வேண்டும் என்றே நான் இந்தப் பதிவை இடவில்லை. வெள்ளிக்கிழமையே நேரம் கிடைத்தது.
ஆனாலும் நல்ல விஷயம் ஒன்றை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் சில விதிகளை மீறினாலும் தப்பில்லையே ;)

சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் தாங்கள் வாக்களித்த வாக்கு சீட்டையே படமா ஏற்றியதையும் கண்டேன் :)

LOSHAN said...

@மருதமூரான்

ஒரு சிங்கள ட்விட்டரின் Twit pic on Election day

http://www.flickr.com/photos/27318728@N06/6229293259/in/photostream

LOSHAN said...

தனிமரம் - ஆமாம். அதனை நியாயப்படுத்தியே இதை எழுதினேன்.

K. Sethu | கா. சேது - அய்யா.. இதனால் தான் உங்களை நான் ஒரு தகவல் கடல் என்று எப்போதும் அழைப்பேன். :)
தெரியாத விஷயங்களை எங்கிருந்தோ தேடிக் கொண்டு வருகிறீர்கள். அதுசரி //1954 - 1956 (அக்காலங்களில் மாநகர சபைகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல்) என்.எம். பெரேரா நகரப்பிதா ஆக இடதுசாரிகள்+ சுயேச்சை கூட்டணியின் ஆளுகை இருந்தது. (சுதந்திரத்திற்கு முன்னரும் இலங்கை தொழிலாளர் கட்சியின் ஏ.ஈ. குணசிங்க மேயர்களில் முதல் இலங்கையராக வென்றவர்).

பின்னர் 1974-77 காலத்தில்//

அந்தக் காலத்தில் எல்லாம் எந்தக் கட்சிக்கு உங்கள் vote? ;)

LOSHAN said...

Yoga.s.FR நன்றி சகோ.. திருத்திக் கொண்டேன்..
உங்கள் அழைப்பும் குரலும் எம்மவர்களால் ஏற்கப்பட்டுள்ளது :)

K. Sethu | கா. சேது said...

//பின்னர் 1974-77 காலத்தில்//

அந்தக் காலத்தில் எல்லாம் எந்தக் கட்சிக்கு உங்கள் vote? ;)//

1954 டிசம்பர்ல பிறந்ததால 1972 இல் வாக்குரிமை கிடைத்திருக்கனும். 1973-1978 சென்னை ஐ.ஐ.டி மாணவனாக இருக்கையில் விடுமுறைகளுக்கு ( முதலில் வருடத்துக்கு இருமுறை பின்னர் கடைசி இரு வருடங்களில் ஒருமுறை) வீட்டுக்கு வந்து செல்லும் அக்காலங்களில் 1974 மாநகரசபை தேர்தல் எப்போது நடந்தது என நினைவில்லை. நான் வீட்டிற்கு வந்த நேரத்தில் என்றால் நான் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் நான் வாக்கு அளிக்கச் செல்லவில்லை.

பின்னர் 1977 ஆகஸ்ட் (5/6 பெறும்பான்மை) தேர்தல் நேரமும் சென்னையில் தான் (கடைசி வருட படிப்பு தொடக்கக் காலத்தில் - வானொலியில் விடியல் வரை முடிவுகள் கேட்ட நினைவு) பின்னர் 1980-1987 களில் நடந்த தேர்தல்கள் போதும் அமெரிக்காவில்.

ஆக நான் முதலில் வாக்களித்தது 1988 இல் சனாதிபதி தேர்தல்தான் (அதற்கு முன்னரும் மீள்பதிவெல்லாம் செய்ய வேண்டியிருந்தத்தால் ஒரு மாகாண சபை தேர்தலில் வாக்களிக்கவில்லை)

ஆக தாங்கள் கேட்ட காலங்களில் நான் வாக்கே அளிக்கவில்லை என்பது என் பதில்.

நான் எஸ்கேப் ;>)

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified