October 26, 2011

வேலாயுதம்


நண்பர்கள், வாசக நண்பர்கள், பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள். :) 


எனக்கு மட்டும் ஏன் இப்படி .. அல்லது எம் சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது, முதல் நாள் முதல் காட்சி படங்களின்போது??
மங்காத்தா.. பின் நேற்று வேலாயுதம்..

ஆனால் மங்காத்தா மாதிரி actionல் நாம் சம்பந்தப்படாமல் காத்திருந்ததில் நான்கு மணி நேரம் வரை போனது மட்டுமே நேற்றைய நாளின் நாசமாக அமைந்தது.

ஆனால் புதிதாக, கம்பீரமாக எழுந்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்ட் (Cine world) திரையரங்கு சேதப்பட்டு சின்னாபின்னமாகிப் போய் நிற்கிறது.
ஒரு படத்துக்காக இப்படியா?

முன்பொரு தடவை வேட்டைக்காரன் திரையிட்ட முதல் நாள் கொழும்பு சவோய் திரையரங்கு நொறுங்கிப்போனது. இப்போது இங்கே..
விஜய் படங்களின் நேரம் மட்டும் இப்படி...
விஜய் ரசிகர்கள் மோசம் என்று உடனடியா முடிவு போட்டுறாதீங்க..
அதற்கொரு காரணமும் உண்டு..

நேற்று முதல் காட்சி 3.30க்கு என்று குறிப்பிட்டிருந்தோம்.. ஐந்து மணி வரை பட ரீலும் வரவில்லை; ரசிகர்களும் இல்லை. அதற்குப் பிறகு தான் 'விஜய்' படத்தின் முதல் காட்சி என்று தெரிந்தது போல அப்படியொரு அமளி துமளி.
முதல் காட்சியே மிகத் தாமதமாகிப் போனதால் இரண்டாவது,மூன்றாவது காட்சி ரசிகர்களின் அட்டகாசம் தான் அந்த சேதங்கள்.
கண்ணுக்கு முன்னால் நாம் பார்த்துகொண்டிருக்கும்போதே இரும்பு கேட் உலுப்பி உடைக்கப்பட்டது.
முதல் காட்சிக்கு முன்னதாக சினி வேர்ல்ட்

கடைசியாக நாம் படம் முடிந்து வெளியே வரும்போது பாதுகாப்புக்காக வெளியே காவல் நின்ற முப்பது ஆயுதம் தாங்கிய போலீசாரில் ஒருவர் என்னிடம் சிங்களத்தில் கேட்டது "இப்பிடித் தான் நீங்கள் தீபாவளி கொண்டாடுவதா? ஒரு படத்துக்காக இத்தனை கூத்தா?"

வெட்கமாகத் தான் இருந்தது.

ஆனாலும் நான்கு மணித்தியாலங்களாகப் பொறுமையுடன் உள்ளே இருந்த அந்த விஜய் ரசிகர்கள் உண்மையில் பாவம் தான்.
வேறு எந்தவொரு நடிகரின் ரசிகராவது இப்படி இவ்வளவு நேரம் காத்திருப்பரா என்றால் ஆச்சரியம் தான்.
மீண்டும் மீண்டும் திரையில் வந்த விஜயின் முன்னைய திரைப்படங்களைப் பார்த்தும் சலிக்காமல் ஆடிக் கொண்டிருந்தவர்கள் ரீல் வந்து, காத்திருந்து வேலாயுதம் என்ற பெயர் திரையில் தோன்றும் போது தான் ஜென்ம சாபல்யம் பெற்றார்கள்.

அந்த அப்பாவிகளுக்காகவாவது வேலாயுதம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.தொடர்ந்து தெலுங்கு ஹிட் படங்களைத் தமிழில் வெற்றிப் படங்களாக தன் தம்பியைக் கதாநாயகன் ஆக்கித் தந்துகொண்டிருந்த இயக்குனர் M.ராஜாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவின் வெற்றிப் படங்களைத் தமிழில் தனது வெற்றிப் படங்களாக மாற்றித் தந்து கொண்டிருக்கும் விஜய்யும் சேர்கிறார்கள் என்றவுடனேயே நான் நினைத்தது வேலாயுதம் - தமிழில் காரமான ஒரு தெலுங்கு மசாலா என்று.

ஆனால் 2000ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படத்தைத் தூசு தட்டி இப்போ தந்திருக்கிறார் ராஜா.
Old is Gold தான். அதுக்காக இப்படியா?
(2000ஆம் ஆண்டு நாகார்ஜுனா தெலுங்கில் நடித்த ஆசாத் திரைப்படத்தின் அப்பட்ட ரீமேக் தானாம் வேலாயுதம். இயக்குனர் - காலம் சென்ற திருப்பதிசாமி )

பாகிஸ்தானிய - ஆப்கானிஸ்தான் எல்லை என்று ஆரம்பிக்கும்போதே "சப்பா" என்று எண்ணத் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.
இஸ்லாமியத் தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு என்று தொடரும்போது இது விஜய் படமா அல்லது விஜயகாந்த் படமா என்று டவுட்டும் வருகிறது.
இந்த அரதப் பழைய விஷயங்களோடு, தங்கை சென்டிமென்ட், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருவது, அப்பாவி ஒருவன் அதிரடியாக மாறுவது என்று காலாகாலமாகத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவரும் அதே விஷயங்கள்.

எனக்கு தமிழிலும் அதீத நாயகர்களின் (Super heroes) படங்களை எதிர்பார்ப்பதிலும் வரவேற்பதிலும் விருப்பமுண்டு என்று முன்பே கந்தசாமி திரைப்படம் பற்றிய பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

வேலாயுதம் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளும் பின் வருகின்ற சில கதைத் திருப்பங்களும் அப்படியொரு Super hero படமாக வேலாயுதம் அமையும் என்று எதிர்பார்க்க வைத்தால் ......தன் தங்கையே உலகம் என்று எண்ணி படு அப்பாவியாக வாழும் ஒரு கிராமத்தவன் நகரத்துக்கு வரும் வேளையில் தற்செயலாக, பத்திரிகையாளர் ஒருவரால் படைக்கப்பட்ட ஒரு கற்பனையான சாகசவீரன் பாத்திரமாக மாறிவிட, அடுத்து இடம்பெறும் மோதல்கள், அந்த அப்பாவி சாகச மனிதனாக சந்திக்கும் சவால்கள் என்று நீளும் ஒரு விறுவிறு கதை தான் வேலாயுதம்.

நம்பிக்கை என்பது தான் மாசுபடாத ஒரே விடயம் என்பதும், தனி மனிதன் ஒருவனால் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றியும் அழுத்தமாக இயக்குனர் சொல்கிறார்.
அதை விட விஜய் என்ற தனி மனிதனை அவர் சார்ந்த சமூகத்தில் ஒரு சாகச சக்தியாக எப்படிக் காட்டலாம் என்பதையும் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் நிறுவப் பார்க்கிறார்.

விஜய், சந்தானம் மற்றும் வில்லன்கள் சுவாரஸ்யமாகப் படம் செல்ல உதவுகிறார்கள்.
புதிய வில்லன்கள் என்பதால் 'புதுசாகவே' இருக்கிறது.

விஜய் என்ற வசீகர சக்தி இருப்பதால் இயக்குனர் ராஜா பழைய கதையையும் கொஞ்சம் புதுசாக்கித் தேற்றி விடலாம் என்று நினைத்தாரோ..
ஆனால் விஜய்யின் எத்தனை படங்களில் இதே போன்ற தங்கைக்காக உருகும் சென்டிமென்டையும், அப்பாவித் தனத்தையும் பார்த்துவிட்டோம்..
நல்ல சமீப உதாரணம் திருப்பாச்சி.

நகரத்துக்கு வந்து வில்லன்களுடன் மோதும்போதும் ராஜாவுக்குள் இருந்து பேரரசுவே எட்டிப் பார்க்கிறார்.
 ஆனால் துரு துரு விஜய் எப்போதும் போல காட்சிகளில் வரும்போது கண்ணை அகற்ற முடியவில்லை.சந்தானத்துடன் கலகலக்கும் சில காட்சிகள், தங்கை சரண்யா மோகனுடன் விடும் லூட்டிகள், வித விதமாக வரும் சண்டைக் காட்சிகள் என்று பல இடங்களில் கலக்குகிறார்.
தங்கை + குடும்பத்தைக் கிராமத்துக்கு ரயில் ஏற்றிவிட்டு 'வேலாயுதமாக' மாறும் இடம் சிலிர்க்க வைக்கும் ஒரு இடம்.

ஆனால் உலகின் பிரபல சாகச, இணைய, play station விளையாட்டான Assassin’s Creed இன் கெட் அப்பில் விஜய் தோன்றுவது முதலில் சுவாரஸ்யமாகவும் பின்னர் கொஞ்சம் பொருந்தாத் தன்மையுடனும் இருப்பது கவனிக்கக் கூடியது.

அதிலும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் அந்நியன் திரைப்படத்தில் அந்நியன் தரிசனம் தருவதையும் ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ராஜா, பழசைத் தூசி தட்டி பெயின்ட் அடித்தாலும் பழசு பழசு தான் ராசா..

இவர் தான் எங்கள் மன்மோகன் சிங் என்று விஜயைக் கிராமத்தவர்கள் அறிமுகப்படுத்தி, எங்கள் மனதை ஆள்பவர், இந்த மண்ணை ஆள்பவர், ஏன் இந்த மாநிலத்தையே.. என்று நிறுத்தும் இடத்தில் இங்கேயே இத்தனை கரகோஷம் என்றால் தமிழகத்தில் கேட்கவேண்டுமா?

பாடல் காட்சிகளில் விஜயின் நடனம் கேட்கவும் வேண்டுமா?
சொன்னால் புரியாது தான் top of the charts.
ரத்தத்தின் ரத்தமே வழக்கமான விஜய் டச்.
சில்லக்ஸ் அப்படியே இசையுடன் சேர்த்து வேட்டைக்காரன் 'என் உச்சிமண்டை'யின் மீள் பதிப்பு.

முளைச்சு மூணு இல்லை காட்சியின் ரம்மியத்தால் அள்ளுகிறது.
மாயம் செய்தாயோ விஜயின் கெட் அப்பும் உறுத்தல்; கிராபிக்ஸ் படு உறுத்தல்.
இதைவிட எங்கள் தொலைக்காட்சிப் பிரிவில் பணிபுரியும் சிங்கள இளைஞர் ஒருவர் கலக்கி இருப்பார்.

ஜெனீலியா துடிப்பான, மக்கள் நலன் நோக்கிய இளம் பத்திரிகையாளர் பாத்திரத்தில் பொருந்திப் போகிறார்.
ஆனாலும் சில காட்சிகளில் இதை விட இன்னும் இயல்பாக செய்திருக்கலாமோ என்று என்ன வைக்கிறார்.
ஹிந்தியில் கலக்கியும் பாவம் தமிழில் விஜய் கிடைக்கவில்லை.

'வேலாயுதத்தை' இவர் உருவாக்கும் விதம், பின்னர் அப்பாவியை ஆபத்பாந்தவனாக்க செய்யும் முயற்சிகள் ஆங்கில சாகசத் திரைப்படங்களில் வரும் பெண் பத்திரிகையாளர் பாத்திரங்களை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்க வைத்தது.


ஹன்சிகா - கிராமத்தில் வாழும் அத்தை மகள்? நம்புங்கப்பா..
வெள்ளையாய் புசுபுசுவென்று இருந்தால் எல்லாருக்கும் பிடித்துவிடுமா?
ஒரு சில காட்சிகள் தவிர மற்றக் காட்சிகளில் பார்த்தாலே உவ்வேக்..
சில்லாக்ஸ் பாடலில் பல இடங்களில் அசைவுகளில் குஷ்புவை ஞாபகப்படுத்துகிறார்.
(அந்தக் காலமா இந்தக் காலமா என்பது அவரவர் ரசனையில்)

சரண்யா மோகன் - பாவம்.. திருப்பாச்சியில் மல்லிகாவின் அளவு அதே வேலை.

சந்தானம் - கலக்கோ கலக்கு என்று கலக்கி இருக்கிறார். விஜயுடன் வடிவேலு நடிக்கும் நேரமே விஜய் அவரை ஓரங்கட்டி விடுவார். ஆனால் வேலாயுதத்தில் பல காட்சிகளில் சந்தானம் விஜயை over take செய்துவிடுகிறார்.
இரட்டை அர்த்தம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்.
பல காட்சிகளில் வாய் விட்டு சிரித்தேன்.
குறிப்பாக "இவ்வளவு நாளும் திருடன் என்று நானே என்னை நம்ப வைச்சேனா?" என்று புலம்பும் இடம்...

வில்லன்கள் இருவரும் வட இந்திய வரவுகள் போலும்.. மிரட்டியுள்ளனர்.

M.S.பாஸ்கர், பாண்டியராஜன், ராகவ், வின்சென்ட் அசோகன், ஷாயாஜி ஷிண்டே, இளவரசு என்போருக்கு ஓரளவு முக்கியமான பாத்திரங்கள்.

விஜய் அண்டனியின் இசை - ம்ம்ம் புதுமை எதுவும் இல்லை. அங்கே இங்கே சுட்டது பாதி, ஏற்கெனவே வந்தது மீதி என்று சமாளித்து நிரப்பி இருக்கிறார்.

ப்ரியனின் ஒளிப்பதிவு long shots இல் பிரம்மாண்டத்தைத் தருகிறது. அக்ஷன் காட்சிகளில் அசத்துகிறது. கடைசிக் காட்சிகளில் ப்ரியன் கலக்கி இருக்கிறார்.

சண்டைக் காட்சிகள் அசத்தல் என்று தான் சொல்லவேண்டும். மிரட்டி இருக்கிறார்கள். விஜயின் வழமையான சண்டைக் காட்சிகளே பொறி பறக்கும்.. இதில் Hollywood சண்டைக் கலைஞர் டொம் டெல்மாரும் இருப்பதால் அனல் கக்குகிறது.
இயக்குனர் ராஜாவின் படங்களில் ரசனையாக இருக்கும் சில விடயங்கள் எவ்வளவு தான் அக்ஷன் மசாலாவாக இருந்தாலும் வேலாயுதத்திலும் விடாமல் வருகின்றன.

அழகான பாசம்.. (ஆனால் இளைய தளபதி இருப்பதால் அது கொஞ்சம் பிழிய பிழியப் பாசமாகி விடுகிறது)
சிந்திக்க வைக்கும் சரேல் வசனங்கள் - பன்ச் வசனங்கள் பேசி காதில் பஞ்சடைய வைக்கவில்லை என்று ஆறுதல் இருந்தாலும், சில இடங்களில் பக்கம் பக்கமாக நீளும் வசனங்கள் கொஞ்சம் ஓவர் தான்.
ஆனாலும் விஜய் இறுதிக் காட்சியில் பேசும் நம்பிக்கை பற்றிய வசனங்கள் நச்!
வசனங்கள் - சுபா.. தனது முத்திரையை வேலாயுதத்திலும் பதித்துள்ளார்.

ஒவ்வொருவரும் மனதில் நம்பிக்கை, துணிச்சல் வைத்திருந்தால் நாம் எல்லோருமே சூப்பர் ஹீரோக்கள் தான் என்ற விடயம் இந்த சினிமா நாயகர்களைக் கடவுளாக்கும் சினி வெறியர்களுக்கும்/ரசிகர்களுக்கும் போய்ச் சேரவேண்டிய ஒரு தகவல் தான்.

ஆனால் இந்தப் பக்கம் பக்கமான வசனங்களைப் பேசிய பின், தன் ரசிகர் மன்ற/கட்சிக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டே மக்கள் வில்லனைப் பந்தாடுவதும் மக்களின் தலைகளால் விஜயின் உருவம் சிரிப்பதுமாக  வசனங்களின் வலிமையை முடமாக்கி விடுகிறதே..இன்னொரு முக்கியமான விடயம் - இத்தனை ஆண்டுகள் கடந்தும், வேலாயுதத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள், ஜிஹாத், யா அல்லா, உலக முஸ்லிம்கள் எல்லோருக்காகவும் போர்டஆகிறேன் போன்ற விடயங்கள், வில்லனும் முஸ்லிம், நேர்மையான போலீஸ் அதிகாரியும் முஸ்லிம், கதாநாயகனின் நண்பனும் முஸ்லிம் என்று இன்னுமா என்று கொட்டாவி விட வைத்தது எந்த விதத்தில் நியாயம் இயக்குனர்?

உன்னைப் போல் ஒருவனுக்குப் போர்க்கொடி தூக்கியோர் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

இன்னொரு சுவாரஸ்ய விடயம்.. மங்காத்தாவில் விஜயின் காவலன் பாட்டுக் காட்சி வந்தது போல, இதில் மங்காத்தாவின் ஒரு பாடல் வருகிறது..
ஆரோக்கியமான மாற்றம்??

அதுசரி வரிக்கு வரி வேலாயுதம் ஒரு கிராமத்துப் பால்காரன் என்று சொல்றங்களே தவிர ஒரு காட்சியிலாவது விஜய் பால்காரனாகக் காணவில்லையே..
ராமராஜன் ட்ரவுசரோடு விஜயை ஒரு காட்சியிலாவது காட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ;)பார்த்தவரை விஜய் ரசிகர்களுக்குத் திருப்தியைத் தந்துள்ளது வேலாயுதம்.
ஆனால் தங்கள் தலைவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துள்ளார்கள் என்பதும், பதினொரு ஆண்டுகளின் முன்னதான ஒரு படத்தின் டப்பா ரீமேக் தான் இது என்பதும் அவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கிறது என்பது சிலருடன் பேசியதில் தெரிந்தது.

எனக்கென்றால் திரையரங்கில் 'வேலாயுதம்' பார்த்தபோது சில கொட்டாவிகள் தவிரப் பெரிதாக அலுக்கவில்லை.

வேலாயுதம் - தீபாவளி விஜய் வெடி 


October 13, 2011

நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.


அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வாராந்த நிகழ்ச்சி ஒன்றில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்தார்கள்.
நான் எடுத்துக் கொண்டு உரையாற்றிய தலைப்பு -
நவீனகால இலத்திரனியல் ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.கட்டுரை வடிவில் அந்த உரையை இங்கே பதிவிட முடியாமல் இருந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிவடிவில் தரவேற்றியுள்ளேன்.
கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஊடகவியலாளர்கள், ஊடக விமர்சகர்களும் உங்களது கருத்துக்களை இங்கே தரலாம்....

எனது உரை..
பாகம் 1
பாகம் 2
சபையோரின் கருத்துக்கள் + விமர்சனங்கள் + கேள்விகள்
எனது முடிவுரை + பதில்கள்
ஒலிப்பதிவைத் தொகுத்து பதிவேற்றும் விதமாகத் தயார்ப்படுத்தித் தந்த தம்பி கன்கோன் கோபிகிருஷ்ணாவுக்கு நன்றிகள்.


October 11, 2011

மயக்கம் என்ன பாடல்கள் - ரசனை + ரகளை


மயக்கம் என்ன பாடல்களைக் கேட்ட முதலாவதாக மனதில் தோன்றிய எண்ணம் - இதென்ன இழவெடுத்து ஒப்பாரி பாடி இருக்கிறாங்கள்..
அப்போது கேட்ட பாடல்கள் மூன்று..

ஹரிஷ் ராகவேந்திரா பாடும் - என்னென்ன செய்தோம்.. ஒரு தோத்திரம் மாதிரி

மற்றும் சகோதரர்கள் பாடியுள்ள ஓட ஓட & காதல் என் காதல்....

உடனடியாக Twitterஇல் நான் இட்டது -

தனுஷும் அவரின் அண்ணன் செல்வராகவனும் பாடிப் படுத்தி எடுக்கிறாங்கள். ஏண்டா நீங்க இப்படி? தெரிஞ்ச வேலைய மட்டும் பார்க்கலாமே.. #மயக்கம்என்ன

அதற்கு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து எதிர்ப்பும் வந்தது..
நான் "ரசனை - Taste Differs" என்ற ஒரே பதிலில் விட்டுவிட்டேன்.. இது செப்டம்பர் மாதத்தின் கடைசி வார நிலை.

ஆனால் எனது மகா பிசியான நாட்கள் முடிந்து மீண்டும் விடியலுடன் நான் இணைந்து கொள்ளும் நேரத்தில் மயக்கம் என்ன பாடல்கள் இளைஞர் மத்தியில் ஹிட் ஆகி விட்டன.
நானும் முழுப் பாடல்களையும் முழுமையாகப் பல தடவை கேட்டுவிட்டேன்.பிறை தேடும் இரவிலே உயிரே மனதில் உட்கார்ந்து ரம்மியமாக இசை மீட்டுகிறது.

நான் சொன்னதும் மழை பாடல் மனசுக்குள் மழை வரச் செய்கிறது.

ஓட ஓட பாடலும் என் காதல் பாடலும் புலம்பல்கள் தான், நான் சொன்னது போல ஒப்பாரிகள் தான்.. ஆனால் கேட்க கேட்க வரிகளில் ஓர் ஈர்ப்பும் இளைஞர்களுக்கு பிடித்த அந்த சுவாரஸ்ய kick + Jolly வரிகளும் ரசிக்கவே வைக்கின்றன.

இந்த ரசனை/மனமாற்றத்தையும் சுருக்கமாக ட்விட்டரில் பகிர்ந்துவைத்தேன்.

நான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:) 
ஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன 
ரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் .. ஐந்து பாடல்கள்..
இசை G.V.பிரகாஷ் குமார் 
அத்தனை பாடல்களையும் செல்வராகவன், தனுஷ் சகோதரர்களே எழுதியுள்ளார்கள்.
இதில் இரண்டை இவர்கள் பாடியும் உள்ளார்கள்..
இன்னும் இசையமைக்காதது தான் மிச்சம்.. பழகிட்டு அதிலயும் குதிக்கப் போறீங்களா பிரதர்ஸ்?

தொலைக்காட்சி பேட்டியொன்றில் தாங்கள் பாடல் எழுதியதற்கு சகோதரர்கள் சொன்ன காரணம் - பாடல்கள் எளிமையாக வரவேண்டும், இளைஞருக்கு raw ஆக போய்ச் சேரவேண்டும் என்று விரும்பினோம்.. சும்மா வந்த வேகத்தில் எழுதினோம்...

அந்த 'இரண்டு' பாட்டுக்கு விரும்பினால் இது சரியாக இருக்கலாம்..
ஆனால் மற்ற மூன்று மெலடி பாடல்களின் வரிகளும்.. அருமை, அற்புதம், அழகு என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம்..

முடிவு பண்ணிக் களம் இறங்கி விட்டார்கள். தொடரும் படங்களிலும் இவர்களேயா? வைரமுத்துவும், முத்துக்குமாரும் தேவையில்லையா?
காரணம் ஐந்து பாடல்களிலும் அநேகமான தமிழ் சினிமாப் பாடல் வகைகளைத் தொட்டுவிட்டார்கள் இவர்கள்.

வழமையாக செல்வராகவனின் திரைப்படங்களுக்கு என்று ஒரு இசைக் கோலம்.. ஒரு இசை வடிவம் இருக்கும்..

ஒரு வித்தியாசமான TONE.
ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே அதிலிருந்து மாறுபட்டிருந்தது. G.V.பிரகாஷும் செல்வாவும் சேர்ந்த முதல் படம் என்ற காரணமோ, கதைக்களம் தான் காரணமோ தெரியவில்லை.

ஆனால் இந்த மயக்கம் என்னவில் அந்த யுவன் வழமையாகக் கொடுத்து வந்த அதே tone + feel ஐ, அதே விதப் பாணியை GV கொடுத்துள்ளார்.
காட்சிகளுடன் பார்க்கும்போது தான் இதன் தாக்கங்கள் புரியும்.ஐந்து பாடல்களில் எனக்கு மிகப் பிடித்தது - பிறை தேடும் இரவிலே உயிரே

இதமான உருக்கமான இசைப் பின்னணியில் மனதை மயிலிறகாய் வருடுவதாக சைந்தவியின் குரலும், அவருடன் உறுத்தாமல் இணைந்து கொள்ளும் அவரது வாழ்க்கைத்துணை பிரகாஷ்குமாரின் குரலும் ஒரு கனவு லோகத்துக்கு அழைத்துச் செல்லும்..
பிரகாஷுக்கு பொறாமை தரக் கூடிய ஒரு விடயமா சொல்லவா?
எனக்கு சைந்தவியின் குரலில் முன்பிருந்தே ஒரு கிறக்கம், மயக்கம் உள்ளது.

அமைதியாகப் பயணிக்கும் இசையில் உருகவைக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் 'கவிஞர்' தனுஷ்..
பாராட்டியே ஆகவேண்டும்..
அசத்தியிருக்கிறார்..
ஒவ்வொரு தடவை கேட்கையிலும் உயிர் உருகுகிறது.

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பிறை தேடும் இரவு என்ற தொடர் மூலமாக சொல்லவருவது என்னவென்று அறிந்துகோலும் ஆர்வம் உண்டு..
காரணம் பாத்திரங்கள் இரண்டும் இஸ்லாமியர் இல்லை..
பிறை தேடுவது அவர்களின் மார்க்கம் சம்பந்தப்பட்ட்டது அன்றோ....

அழுதால் உன் பார்வையும்
அலைந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

என்ற வரிகள் பெண் குரலிலும்

என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..


உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

என்ற வரிகள் ஆண்குரலிலும் வரும்போது ஒரு தடவை எமக்கே அந்த ஏகாந்த தருணங்கள் மனதுக்குள்ளே காட்சிகளாக.. 

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே

என்ற வரிகள் புதுமையானவையாக இல்லாவிட்டாலும் ரசிக்கும் விதத்தில் பாடலின் மெல்லிய நீரோட்டம் போன்ற இசையுடன் பயணிப்பது சுகானுபவம்.
இன்றும் ஐந்து தடவைகள் இதுவரை கேட்டுவிட்டேன்.

GVயின் Master pieceகளில் ஒன்று இது.

------------------

அண்ணனும் தம்பியும் சேர்ந்து வரிகள் எழுதி தம்பி தனுஷ் பாடிய "ஓட ஓட" ஒரு சுய கழிவிரக்கப் பாடல்..
இன்றைய இளைஞர் பலரின் தேசிய கீதமாகிப் போனது..
மிக எளிதான இசையுடன் கமெரா க்ளிக்கையும் இசைக்குள் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் GV.
சும்மா பேசும்போது பயன்படுத்தும் மொழிகள்,வரிகளையும் கோர்த்து பாடல் வசன கோர்வையாகப் பயணிக்கிறது.

உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது


பாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே…
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…

கேட்ட உடனே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிம்பிளான வரிகள்..

கவிதைத் தனமான வரிகளும் உள்ளன.

மீனா நீந்துறேன் நீந்துறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே


கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்

---------------------------


நான் சொன்னதும் மழை வந்துச்சா...

நரேஷ் ஐயர், சைந்தவி பாடும் கிராமிய வாசம் கொஞ்சம் வீசும் ஒரு மயக்கும் பாடல்...
செல்வராகவனின் Director Touch இங்கே தெரியுது..
உருகியிருக்கிறார் வரிகளில்..
இசையிலும் கிறக்கம்..
நரேஷ் ஐயரின் குரலில் லயிப்புடன் கூடிய தவிப்பு..
ஆனால் பின்னணியில் தொனிக்கும் ஆங்கில வரிகள் தேவையற்ற திணிப்பு.. (வழமையான GVயின் பாணி??!!)

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது

இந்த வரிகள் தவிப்பு என்றால்....

ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ...களவாணி..

இந்த வரிகள் காரமான காதல் அழைப்பு....

அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ....வரியாடி...

இதைவிட Raw ஆன காதலைக் காட்ட முடியுமா? காட்சிக்காக வெயிட்டிங்.

---------------------

தனுஷ் எழுதி, தமையன் செல்வாவுடன் இணைந்து பாடிய பாடல் "காதல் என் காதல்"

இதிலே தான் அந்த சரித்திரபூர்வமான "அடிடா அவள .. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல.."
வரிகள் உள்ளன..

இந்த வரிகளும் பீரும் மோரும் சேர்ந்து எனக்குப் பாடலைப் பிடிக்காமல் செய்திருந்தன..
போதாக்குறைக்கு தனுஷின் இழுவை, சோம்பல் குரல்..
பாடுவது போல இல்லாமல் ஒப்பாரி போலவே தெரிந்தன..

ஆனாலும் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்க எதோ ஒரு ஈர்ப்பு..

வாரணம் ஆயிரம் - அஞ்சல போல ஒரு தாங்க முடியாக் காதல் சோகப் புலம்பல்..
எல்லா தேவதாசுகளுக்கும் பிடித்துவிட்டது.

தேன் ஊறுன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..


Friends\'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
Figure வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்டா 

இப்படியான வரிகள் போதுமே...
போத்தலைத் திறக்காமலேயே போதை ஆகிவிடுகிறார்கள் நாம சிங்கங்கள்...
காட்சியமைப்பும் கலக்கலாக இருந்தால் மற்றொரு 'அஞ்சல'

-----------------

ஹரிஷ் ராகவேந்திரா பாடியுள்ள ஒரு உருக்கமான 'தோத்திரப் பாடல்' செல்வராகவன் எழுதிய 'என்னென்ன செய்தோம்'...

சித்தாந்தம், வேதாந்தம், தத்துவம் எல்லாம் பேசுகின்ற வரிகள்..
இறைவனிடம் இறைஞ்சும் இந்த வரிகள் எனக்குப் பெரிதாக ஈர்ப்பைத் தரவில்லை.

ஆனால் இந்த வரிகள் பிடித்துக்கொண்டன.. எனது சிந்தனைப் பரப்போடு ஓரளவு ஒத்துப் போவதனாலோ தெரியவில்லை..

உள்ளிருக்கும் உன்னைத் தேடி 
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா... நீ?
கடல்... அலையா?
மலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம் 
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்


எம்மில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் அவரின் பின் ஓடுகின்றோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெரும் தாயின் கருணை மறக்கிறோம்

பாவ மன்னிப்புப் பாடலோ?

செல்வராகவன், தனுஷ் கவிஞர்களாகவும் ஜெயித்துவிட்டார்கள்.
பாடகராக தனுஷ் ஓகே.. செல்வா கோஷ்டியில் கோவிந்தா தான்...

GV கலக்கி இருக்கிறார்.
இனி மீதி திரையில் தருகின்ற திருப்தியில் தங்கியுள்ளது.

கேட்க கேட்க கேட்க பாட்டு பிடிச்சுதே
எழுத எழுத எழுத பதிவும் நீண்டதே
இனியும் எழுதப் போனா நாளையாகுமே
ஆகையாலே இப்ப முடிக்கிறேன் ;)


October 07, 2011

உங்கள் வாக்கு....


நாளை முக்கியமான கொழும்பு மாநகரசபை உட்பட சபைகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல்.

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் கட்சிகளின் பலத்தைத் தீர்மானிக்கவும், கூட்டணிகளுக்கான பேரம் பேசவும் மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படப் போகிறது என்று நீங்கள் யாராவது நினைப்பீர்களேயானால், அது தவறு.
அடி மட்டத்திலிருந்து மேல் செல்லும் அரசாங்கப்படிகளின் முதலாவது அடியாக அமைவது இந்த உள்ளூராட்சி சபைகள் தான்.
மக்கள் தங்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதும் இந்த முதலாவது படியில் தான்.

இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைகளுக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி நடைபெற்றதால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்காகவும் ஏனைய சில சபைகளுக்கும் நாளை வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.

கொழும்பில் இம்முறை ஒன்பது கட்சிகளும் பத்து சுயேச்சைக் குழுக்களும்..
தோற்பது தெரிந்தே ஏன் தான் இப்படியொரு சுயேச்சை ஆசையோ?

கொழும்பில் இம்முறை என்றும் இல்லாதவாறு ஊகிக்க முடியாதாவாறு தேர்தல் முடிவுகள் வரும் என்று நம்பப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) மிலிந்த மொரகொட தலைமையிலும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) முசம்மில் தலைமையிலும் களம் காணுகின்றன.

ஆண்டாண்டு காலமாக கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை. ஆனால் என்றும் இல்லாதவாறு அரசாங்கம் முழுப் பலத்துடன் இருக்கையில் நொந்து நூலாகிப் போன நிலையில் கட்சிக்குள் ஏராளமான உடைவுகளோடு இம்முறை ஐ.தே.க தேர்தல் களம் காண்கிறது.
முசம்மிலுக்கு மக்களின் ஆதரவு இருந்தாலும் அடிக்கடி கட்சிகள் தாவியவர் என்ற பெயரும் சேர்ந்தே இருக்கிறது.
அத்துடன் பிளவுகள் பல கண்டு சிக்கி சின்னாபின்னமாகியுள்ள ஐ.தே.கவுக்கு இம்முறை பாரம்பரிய வாக்கு வங்கியிலும் பாரிய சரிவு ஏற்படலாம்.

மறுபக்கம் மிலிந்த மொரகொடவும் கட்சி மாறியவராக இருந்தும் நாகரிக அரசியலை முன்னெடுப்பவர் என்ற நற்பெயர் உள்ளது.
முதல் தடவை தேர்தலில் போட்டியிட்டபோது அறிவித்தபடியே இன்று வரை சூழலை சுவரொட்டிகள், பதாதைகள் மூலம் மாசுபடுத்தாது பிரசாரம் செய்து வருபவர்.
இத்துடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரித நற்பணித் திட்டங்கள், அபிவிருத்திகளும் சேர்ந்து சிங்கள வாக்காளர் மத்தியில் ஒரு அரச ஆதரவு அலையை ஏற்படுத்தலாம் என்று நம்புகிறேன்.

முதலாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஒரு கட்சி (2006ஆம் ஆண்டு ஐ.தே.க வின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஐ.தே.கவின் ஆதரவுடைய சுயேச்சைக் குழு வெற்றிஈட்டியதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று) கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றக் கூடிய வாக்குகள் உள்ளது.

முஸ்லிம் வாக்காளர்களின் தெரிவு இம்முறை சிதறுமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மர சின்னத்தில் போட்டியிடுகிறது.
ஆனால் முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவை உள்ளடக்கிய முக்கிய வேட்பாளர்கள் பிரதான கட்சியில்..
குழப்பம் தான்.
ஸ்ரீ.ல.மு.கா ஓரிரு ஆசனங்கள் பெற்றாலே திருப்தி காணும்.

மறுபக்கம் முன்னாள் மூன்றாவது பெரிய கட்சி இம்முறை படு மோசமான நிலையில்..
மீண்டும் ஒரு உடைவு. இம்முறை மேலும் மூக்குடையலாம்.

ஆனாலும் தமிழரின் வாக்குகள் மிக அதிகமாக இம்முறை இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் செல்லாமல் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு செல்லும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கொழும்பில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக இக் கட்சியே களம் காண்கிறது என்றால் அந்தக் கூற்றில் மறுப்பேதும் இருக்காது.
அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது பகிரங்க ஆதரவை வழங்கி இருக்கும் நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளை சரியாகத் தெரிவு செய்யவேண்டிய ஒரு கடமை கொழும்பு தமிழ் வாக்காளர்களுக்கு இருக்கிறது.

மனோ கணேசன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் தேவையான சந்தர்ப்பங்களில் துணிச்சலாகக் குரல் கொடுத்த ஒருவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக கண்டியில் அவர் தோற்றுப் போனாலும் அவருக்கென கொழும்பில் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது.

அதிலும் இம்முறை அவரது கட்சி ஏணிச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சேர்ந்திருப்பதும் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினரையவாது தெரிவு செய்ய எதுவாக அமையும் என்று நம்பி இருக்கலாம்.
அத்தனை கொழும்பில் வாழும் தமிழரின் வாக்குகளும் சிதறாமல் கிடைத்தல் பத்துக்கு மேல் ஆசனங்கள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
ஆனால் எம் தமிழ் வாக்காளர்கள் வழமை போல வீட்டுக்குள்ளே இருக்காமல் தம் வாக்குப் பலத்தைப் பயன்படுத்த வெளிவரவேண்டும்.
எல்லாவகையான எம் இருப்புக்களும் தொலைந்து போகாமால் இருக்க இதை ஒரு வழியாக மாற்றவேண்டும்.

வாக்களிக்கும்பொது ஒரு முக்கியமான விடயத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும்..

எமது பிரதிநிதியை நாம் தெரிவு செய்கிறோம்..
ஒருவன் பணக்காரன் ஆக வழியை நாம் காட்டவில்லை; எமக்கு சேவை செய்ய, எமக்கு வேண்டியதை செய்ய எம்மில் இருந்து ஒருவரை நாம் அனுப்புகிறோம்.
வாக்களித்த பிறகும் எமக்குப் பொறுப்புக் கோரும் நம்பிக்கை உடைய, நாம் அணுகக் கூடிய ஒருவருக்கா வாக்களிக்கிறோம் என்று பார்த்து எமது வாக்கை அளிக்க வேண்டும்.

முதலில் எமது வாக்குரிமையை நாம் பயன்படுத்தவேண்டும்.
எமக்கென்ன ஆச்சு என்று இருந்தால் எம்மை ஆள்வதற்கு மற்றொருவரைத் தீர்மானிக்க விட்டுவிடுகிறோம்.
எமக்கான எமது உரிமையை நாம் எடுத்துக் கொள்ளாமல் விடுவது எம்மை நாமே கவனிக்காமல் விடுவதன்றோ?

என்னைப் பொறுத்தவரை எனது வாக்கை இம்முறை பகிரங்கமாக அறிவித்தே அளிக்கிறேன்..
எனது நண்பன் குகவரதன்.. (குகன்) 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் இலக்கம் 16.

எனது நண்பன் என்பதற்காக சொல்லவில்லை.
நம்பிக்கைக்குரியவர்;
சேவைகளை மனப்பூர்வமாக இதுவரை ஆற்றியவர்.
லயன்ஸ் கழகத்தில் நாம் இருவரும் இணைந்து சேவையாற்றியபோது எந்தவொரு பிரதிபலனும் பாராது லட்சங்களாக வாரியிறைத்தவர்.
இனித் தான் பணம் குவிக்க வேண்டும் என்ற தேவை இல்லாத ஒருவர்.
இலகுவாக அணுகக் கூடிய ஒருவர்.
உழைத்து முன்னேறியவர் என்பதால் எம் கஷ்டங்களும் புரிந்த ஒருவர்.

கடந்த 15 வருடங்களாகத் தெரிந்தவர் என்பதனால் நம்பி சொல்கிறேன்.. நீங்கள் நம்பலாம் இவரை.
என்னை நம்பி இவருக்கு வாக்களியுங்கள் என்று உரிமையோடு எனது நண்பர்களைக் கேட்கிறேன்.

குகன் வெற்றி பெற்றால் தகுதியான ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்கியதில் எனது சிறிய பங்கும் இருக்கிறது என்று நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வேன். அந்தப் பெருமையில் பங்கெடுக்க உங்களையும் அழைக்கிறேன்.


பார்த்து வாக்களியுங்கள் ஏணி பதினாறிற்கு.

அதே போல இன்னும் ஒரு நல்லவர் தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.
அவர் சிங்களவராக இருந்தாலும் தமிழரின் உரிமைகளுக்காகவும் சம நீதிக்காகவும் ஆண்டாண்டு காலம் குரல் கொடுத்து என்றும் தோல்வியையே சுமந்து வரும் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன.

இம்முறை தனது கட்சியை ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைத்து ஏணிச் சின்னத்தின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகிறார்.
தெகிவளை - கல்கிசை நண்பர்கள் இந்த நல்ல மனிதருக்கு உரிய கௌரவத்தினை வழங்குங்கள்.

இது எனது விருப்பம் + சிபாரிசு + வேண்டுகோள்கள் மட்டுமே.
இதர இடங்களில் உங்கள் உங்கள் தேவைகள் அறிந்த உங்களைப் புரிந்த நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள்.

உங்கள் விரல்களில் நகம் பூசி உங்கள் முகங்களில் நீங்களே கரியைப் பூசிக் கொள்ளாதீர்கள்.

நாளை விடியல் நமக்காக இருக்கட்டும்.

(ஒரு விடயம் - இம்முறை தேர்தல் முடிவுகள் அனைத்தும் தேர்தல்கள் செயலகத்திலிருந்து அரசாங்கத் தகவல் திணைக்களத்துக்கு சென்று அங்கிருந்து தான் ஊடங்களுக்கும் மக்களுக்கும் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறே முடிவுகள் அறிவிக்கப்பட்டதை ஞாபகப் படுத்துவது எனது கடமை மக்கள்ஸ்)

ஏழாம் அறிவில் ஏமாற்றிய ஹரிஸ் ஜெயராஜ்


எனது உலகம் இசையாலும் தமிழாலும் உறவுகளாலும் நிரப்பப்பட்டது என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு..
வானொலி வாழ்க்கையில் இருப்பதால் இசை என்னைச் சுற்றியே இருக்கும்..
அதிகமாக சினிமா இசை தான்..

அந்தந்தக் காலகட்டத்தில் வருகின்ற பாடல்களில் பிடித்த பாடல்களைப் பற்றி இடுகைகளினூடாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி.
அண்மைக் காலத்தில் வெளிவந்த பாடல்களை அமர்ந்திருந்து ஆறுதலாகக் கேட்க நேரம் கிடைக்காததால் விடியலின் போதும், வாகன ஓட்டத்தின் போதும் கொஞ்சம் கொஞ்சம் கேட்டதுடன் சரி..

மங்காத்தா, வேலாயுதம் பாடல்களின் பிரம்மாண்டத்துக்கு மத்தியில் அமைதியாக வந்து ரசிக்க வைத்திருக்கும் எங்கேயும் எப்போதும் - இசை - சத்யா , வாகை சூடவா - இசை - கிப்ரான் , யுவன் - ஜோஷ்வா ஸ்ரீதர் ஆகிய திரைப்பாடல்கள் ரசிகர்களால் அமைதியாக ரசிக்கப்படுகின்றன.


ஆனால் இந்த இருவாரங்களுக்குள் அதிகமாக வானொலிகளில் ஒலிக்கின்ற பாடல்களும், ரசிகர்களால் அதிகம் கேட்கப்படும் பாடல்களாகவும் இருக்கின்றவை ஏழாம் அறிவு, மயக்கம் என்ன திரைப்படங்களின் பாடல்கள் தான்.

ஏழாம் அறிவு - மிகப் பெரிய எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பிரம்மாண்டத் தயாரிப்பு.
இசை ஹரிஸ் ஜெயராஜ்.

ஒரு சீன மொழிப் பாடலுடன் (எழுதியவர் மதன் கார்க்கி) மொத்தமாக ஆறு பாடல்கள்.

எனக்கு என்றால் இவற்றுள் மிகப் பிடித்த ஒரு பாடல்
இன்னும் என்ன தோழா - பா.விஜய் எழுதிய வரிகளின் வலிமையையும் பலராமின் அழுத்தமான ஆழமான குரலும் ரசிக்க வைக்கின்றன.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! 


விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

பிசிறில்லாமல், அழுத்தமாக (ஆனால் கம்பீரமில்லாமல்) பலராமின் குரலில் இந்த வரிகள் கேட்கையில் எதோ ஒரு மென்சோகம் மனதுக்குள்.... 

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?


இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!பா. விஜய் இப்படியான பாடல்கள் கிடைத்தால் வெளுத்து வாங்கிவிடுவார்.  இளைஞன் திரைப்படத்திலும் இப்படியான ஒரு பாடல் இருக்கிறது.

பலராமின் குரலில் நம்பிக்கை தொனித்தாலும் இன்னும் இருக்க வேண்டிய கம்பீரம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஷங்கர் மகாதேவன், திப்பு, ஹரிஹரன் ஆகியோர் யாராவது இந்தப் பாடலைப் பாடியிருக்கலாமோ என்று ஒரு சின்ன ஆதங்கம்.

கூட சேர்ந்து பாடியுள்ள நரேஷ் ஐயர், சுசித் சுரேஷன் ஆகியோரின் குரல்களிலும் வரிகளில் உள்ள எழுச்சியை காண முடியாதது கொஞ்சம் குறையே.

இந்தப் பாடல் மனதுக்கு இன்னும் நெருக்கமாக வந்திருக்கும் ஹரிஸ் இசையில் இன்னும் கொஞ்சம் புதியதை தந்திருந்தால்.

பல முன்னைய பாடல்களின் சாயல் தொனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

A.R.ரஹ்மானின் தேசம் - மழை மேகமே, பம்பாய் - பூவுக்கென்ன பூட்டு மற்றும் மைனா - நீயும் நானும் பாடல்களை கொஞ்சம் மாற்றிப் போட்டால் இந்தப் பாடல் வந்துவிடும்.

ரசித்த ஒரு ரசனையான வரிக் கூட்டம்...

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்முன்னைய பாடலை எழுதிய பா.விஜய் எழுதிய இன்னொரு பாடல் அவரது வழமையான 'மசாலா' பாடல்..

ஒ ரிங்கா - விசேடம் ஏதும் இல்லை.
A.R.ரஹ்மானின் சர்க்கரைக்கட்டி படப் பாடல் 'டாக்சி'யை சுட்டுத் தன் பாடலாகத் தந்திருக்கிறார் பிரதி மன்னரான ஹரிஸ் ஜெயராஜ்.
ஏழாம் அறிவு பாடல்கள் பற்றிய தன் கடுப்பை தகவல் மூலமாகத் தந்துள்ள எனது நேயரான பாலச்சந்திரராஜன் கார்த்திக் எங்கேயும் எப்போதும் - கோவிந்தா பாடலும் இது போலவே என்று ஞாபகப்படுத்தியுள்ளார்.

பா.விஜயை புதிய வாலி என்று சொன்னால் தப்பே இல்லை..

ஒ ரிங்கா ரிங்கா
ஜமைக்கலாம் கங்கா 
ஏ பிங்கா பிங்கா
ஹிப் பாப் லா சாங்கா
ஒ அன்றா இன்றா
நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா
நாம் ஆயிரம் பூங்கா

என்ன கொடும பா.விஜய் !!!!

முன் அந்திச் சாரல் நீ - முத்துக்குமார் உருகியுள்ள ஒரு அழகான கவிதை.

முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் 
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் 
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..

ஒரு அழகான பெண்ணை எப்படியெல்லாம் உச்சமாக வர்ணிக்க முடியுமோ அப்படியெல்லாம் கவிஞர் உருகியதை இசையை முன்னைய பாடல்களில் இருந்து உருவி, ஒட்டி வீணடித்துள்ளார் ஹரிஸ் ஜெயராஜ்.
அதிலும் கார்த்திக்கின் குரலும் சேர்ந்து எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் இதே ஹரிஸ் இசையமைத்த தொட்டி ஜெயா படப்பாடல் 'உயிரே என்னுயிரே' ஞாபகம் வந்து இந்தப்பாடல் மீதான பிரியத்தைக் குறைத்துவிடுகிறது.

இன்னும் பலர் விண்ணைத் தாண்டி வருவாயா - ஒமணப் பெண்ணே பாடலில் இசைப்புயல் பயன்படுத்தியே அதே வடிவிலான இசை, பாடகரின் குரல் வடிவங்களைப் பயன்படுத்தியதைக் காட்டுகிறார்கள்.

கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ 

கவிதையாக இந்த வரிகளின் சுவையைப் பாடலில் நான் காணவில்லை.
ஆனாலும் கை கொடுங்கள் நா. முத்துக் குமார்.


முத்துக்குமாரின் இன்னொரு பாடல் யெல்லேலமா

ஹரிசின் அடிக்கடி பல பாடல்களில் கேட்கும் அதே விதமான துள்ளல் இசை..
அயன், ஆதவன், வாரணம் ஆயிரம் என்று ஆண்டாண்டு காலமாக ஹரிஸ் தரும் அதே வித இசை.. ஆங்காங்கே கொஞ்சம் மாற்றி 'புதிய' பாடலாகத் தர முயன்றுள்ளார்.

எனக்கு இந்தப் பாடலின் மெட்டமைப்பு + முத்துவின் முத்தான உற்சாக வரிகள் பிடித்திருந்தாலும் கூட ஸ்ருதி ஹாசனின் தமிழ்க்கொலையால் இந்தப் பாடல் கேட்டாலே கடுப்பாகிறது.

உல்லம் துல்லுமா, வெல்லம் அல்லுமா என்று அந்த வரிகள் வரும்போதெல்லாம் உயிரை வாங்குகிறார்.
இசையமைப்பாளர் உட்பட இந்தப் பாடல் உருவாகும் போது இருந்தவர்கள் எல்லாரும் என்னத்தைக் கேட்டார்களோ? ஒருவருக்கும் 'காதுகள்' இருக்கவில்லையா?

அல்லது 'பெரிய' இடத்து மகள் குறை சொல்லக் கூடாது என்று விட்டுவிட்டார்களோ?
ஒரு பாடல் என்பது அல்லவே.. பலமுறை கேட்டு இறுதியாக product ஆக வெளி வருமுன் யாரும் ஒருவரும் கூட இந்த தமிழ்ப்படுகொலையைத் திருத்த முனையவில்லையா?

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க..
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க...
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க...

இப்படியான வரிகள் எல்லாம் அந்த சில வழுக்களால் வலுவிழந்து போய்விட்டன..

ஸ்ருதியுடன் சேர்ந்து பாடியுள்ள விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி ஆகியோர் பாடும் இடங்கள் அருமையாகவே உள்ளன.
இவ்வளவுக்கும் அந்தக் கொலைகள் விழும் இடங்களை மட்டும் தான் ஸ்ருதி பாடியிருப்பதாகத் தெரிகிறது.

தோளில் விழாமலே..
கை சிறிதும் படாமலே..
உன் நிழலும் தொடாமலே..
நீ என்னை கொள்ளை இட்டாய்..
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா?
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா?
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா..

முத்துக்குமார் மீண்டும் மீண்டும் காதலிக்க வைக்கிறீர்கள்.. தயவு செய்து இந்த வரிகளை மீண்டும் வேறெங்காவது இட்டு தளிர்க்க செய்யுங்கள்.இறுதியாக,
கவிஞர் கபிலன் எழுதிய 'யம்மா யம்மா' - காதல் சோகப் போடல்..
எவ்வளவு தான் சோகமான வரிகள் இதயத்தை நெருங்க முயற்சித்தாலும், SPBயின் என்றும் இனிக்கும் குரல் மனதைப் பிழிந்தாலும் மெட்டு பல இடங்களில் கேட்டது..

காதல் அழிவதில்லை படத்தில் இதே மெட்டில் இதே SPB பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இசை TR.
அதே போல அன்பே சிவம் படத்தில் வித்யாசாகர் இசையமைத்து படத்தில் வராத "மௌனமே பாஷையாய் பேசிக்கொண்டோம்" பாடலும் இதே மெட்டில்...
அதுவும் SPB பாடியது.

இதைவிட எங்கள் வானொலியின் இசையமைப்பாளர் ஷமீல் சொல்கிறார் வாரணம் ஆயிரம் "அஞ்சல" பாடலைக் கொஞ்சம் ஸ்தானங்களை இழுத்து நீட்டினாலும் இந்தப் பாடலின் மெட்டு வருமாம் என்று..

ஹரிஸ் ஜெயராஜின் சொந்த சரக்குகள் தீர்ந்து விட்டன போலும்..
இனி ஹரிஸ் ஜெயராஜின் இசைப் பயணத்துக்கோ தீர்த்த யாத்திரைக்கோ தான் அவர் சரி...

அவரது பாடல்கள் தான் ஹிட் ஆகின்றனவே என்போர்...
உண்மை தான் .. எந்தவொரு ஜனரஞ்சக மெட்டும் மீண்டும் மீண்டும் வேறு வடிவங்களில் வந்தாலும் நாம் ரசிப்போம் தான்.
அதுக்காக ஒரே மாவை மீண்டும் மீண்டும் தந்தால் எப்படி?

என்னை விட இசை ஞானம் கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் காணப்படும் ஆங்கில, வேற்று மொழிப் பாடல்களின் தாக்கங்கள் உள்ளதா என விரிவாக அலசி சொல்லுங்கள்.
யாரை நம்பினாலும் இந்த கொப்பி மன்னர் ஹரிசை நம்ப முடியாதப்பா..

யம்மா யம்மா வரிகள் அபாரம்.
கபிலன் கவிதைகள் கண்ணீரால் எழுதப்பட்டனவா என்று நினைக்க வைக்கிறார்..

அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே


பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்


வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

இத்தனை ஆண்டுகளில் எத்தனை தடவை SPB இப்படி எமக்காக உருகியிருப்பார்.. இப்போது கபிலனின் வரிகள்.
கொஞ்சம் ஒட்டினாலும் நெஞ்சுக்குள் நிரந்தரமாக இடம்பிடிக்காமல் போகிறது இந்தப் பாடலும்..

ஏழாம் அறிவு இசையில் ஹரிஸ் ஜெயராஜ் ஏமாற்றியே விட்டார்...
முருகதாஸ் அந்தத் தவறை விட மாட்டார் என்று நம்பலாமா?


பி.கு - மயக்கம் என்ன பாடல்கள் பற்றி இங்கே எழுதினால் நீண்டு விடும்.. பிறகு வருகிறேன்.
அதற்கு முதல் நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் பற்றியும் சில விடயங்களைப் பகிரவேண்டும்.. இன்று மீண்டும் சந்திக்கலாம். 

October 03, 2011

எங்கேயும் எப்போதும்எங்கேயும் எப்போதும் படம் அண்மையில் வெளிவந்த புதிய திரைப்படங்களில் மிக அருமை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதன் திரைக்கதை அசத்தல் என்றும் அறிந்திருப்பீர்கள்...
ஆனால் அருமையான அந்தப் படம் பார்த்தும், மனம் உருகி, படத்தால் பாதிக்கப்பட்டும் கூட, விமர்சனப் பதிவு போட முடியாமல் நேரம் இடம் கொடுக்காமல் நான் ஒருத்தன் தவித்த கதை அறிந்திருக்க மாட்டீர்கள்.திரைக் கதையும் கதை சொல்கிற விதமும் துல்லியமாகவும், பலமாகவும் இருந்தால் நட்சத்திரங்களோ, பெரிய பொருட்செலவுடைய தயாரிப்போ, என் முக்கியமான இசையமைப்பாளரோ கூடத் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு அருமையான படைப்பு 'எங்கேயும் எப்போதும்'.

A.R.முருகதாஸ் தயாரிப்பாளராக இறங்க எடுத்த சரியான முதல் அடி.
இயக்குனர் சரவணன் கதை சொல்லிய விதம் பிடித்ததாக முருகதாஸ் அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் பிடிக்கும் விதமாக வேகமாக ஆனால் நிதானமாக ஓடும் கதையை சொல்லத் தெரிந்திருக்கிறது சரவணனுக்கு.

சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்குமாக நேரெதிர் திசையில் பயணிக்கும் இரு பஸ்கள் நேருக்கு நேராக மோதிக்கொள்ள ஆரம்பிக்கிறது படம்.
பஸ்ஸினுள்ளே பயணிக்கும் நான்கு பாத்திரங்களின் இரண்டு முன்னைய கதைகள் (Flashback) பின்னோக்கி அழைத்துச் செல்வதாக படம்.

இரண்டு காதல் ஜோடிகள்..
அவர்களின் falshbackக்குகள் இடையிடையே வந்து போகின்றன.
பாடல்கள் இடைஞ்சலாக இல்லாமல் கதை சொல்லிகளாகவே வருகின்றன.

நடிகர்கள் பற்றிய விடயங்களுக்கு செல்ல முதல் இயக்குனருக்கு துணையாக உள்ள இருவரைப் பாராட்டவே வேண்டும்.
ஒளிப்பதிவாளர் - வேல்ராஜ்
எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாக உழைத்திருக்கிறார்.
சென்னையில் அனன்யாவின் நேர்முகத் தேர்வு அலைச்சல், திருச்சியில் ஜெய் - அஞ்சலி காதல் துரத்தல்கள் என்று அவர் ஒளிப்பதிவில் காட்டும் வித்தியாசங்களும், பின் பஸ் விபத்தில் காட்டும் பிரம்மாண்டமும் கலக்கல்.
இதுவரை எந்தவொரு தமிழ்த் திரைப்படத்திலும் விபத்தொன்றை இந்தளவு தத்ரூபமாகக் காட்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.
அந்த உழைப்புக்கு திரையரங்கில் எழும் குரல்கல்களும், திரைப்படம் முடிந்து வெளியே வந்தபின்னும் மாறாத முகபாவங்களும், பாராட்டுக்களும் சான்று.
அந்த 'விபத்தை' உருவாக்குவதில் பங்குகொண்ட கலை இயக்குனர் உட்பட்ட அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் C.சத்யா..
இந்தப் படம் வெளிவருவதற்கு முதலே சேவற்கொடியின் கம்பி மத்தாப்பு பாடல் மூலமாகப் பிரபலமாகிய சத்யா, இந்தப் படத்தின் பாடல்கள் மூலமாக இளைஞரிடம் நெருங்கியுள்ளார்.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக கேட்கும்போது ரசித்ததைப் போலவே திரையிலும் ரசனையாக வந்துள்ளன.
சொட்ட சொட்ட நனைய வைத்தாய், கோவிந்தா, மாசமா பாடல்கள் ஒரு நாளில் காலையில் கேட்டால் அன்று நாள் முழுவதும் மனசில் repeatகள் பல தடவை..
இயக்குனர் பாடல்களை உள்வாங்காமல் இவ்வளவு அருமையாகக் காட்சிப்படுத்த முடியாது.
எந்தப் பாடல் பிடித்தது என்று கேட்டால் எல்லாம் என்றே பதில் சொல்லும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே அருமையாக வந்துள்ளன.

மாசமா பாட்டுக்கு தோள் குலுக்கலிலேயே நடன அசைவு கொண்டு வந்திருப்பது இப்ப சிறு குழந்தைகளிடமும் ஹிட் ஆகியிருக்கிறது.
இந்தப் பாட்டுக்கு வரிகள் கொடுத்த இயக்குனர் சரவணன் ரசிக்க வைக்கிறார்.
நா.முத்துக்குமாரின் ஏனைய பாடல்களிலும் சின்னச் சின்ன ரசனைத்தூறல்களில் நனைய வைக்கிறார்.
ஒரு ஒட்டுமொத்த team work படம் முழுக்கவே தெரிகிறது.
ஆரோக்கியமான ஒரு ஆரம்பம்.படத்தின் நேர்த்தியில் பங்களிப்பை வழங்கியுள்ள தொகுப்பாளர் மற்றும் கலை இயக்குனரின் பங்களிப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரேயொரு சின்ன ஆசை.. இந்தளவு அருமையாக எமக்குத் திருப்தியாக வந்துள்ள படத்தில் இயக்குனர் நினைத்த அதே விதத்தில் ஒளிப்பதிவும், கலய் நுணுக்கமும் வந்துள்ளனவா என்று சரவணனிடம் கேட்கவேண்டும்.

கதிரேசன், மணிமேகலை, அமுதா, கௌதம் என்ற நான்கு பெயர்களும் எங்களோடு சம்பாசிக்கும் சக நண்பர்கள் போல இரு மணிநேரத்தில் ஆகிவிடுகிறார்கள். இது இயக்குனரின் மிக முக்கியமான வெற்றி.
நாளாந்தம் எம் வீடுகளில், வீதிகளில் பார்க்கும் நான்கு சராசரி இளைஞர், யுவதிகள்.


திருச்சியில் ஒரு காதல் ஜோடி..
ஜெய் - அஞ்சலி..
அப்பாவிக் காதலன்.. அடாவடிக் காதலி..
பயம் + மரியாதையுடன் ஜெய்..
அவதானம், அக்கறை அதேவேளை பட்டது பட்டபடி பேசிவிடும் துணிச்சலான அஞ்சலி..
சுவாரஸ்யமான கட்டங்களுடன் காதல்.

அலைய வைத்து பிகு பண்ணும் இடங்களில் ஜெய்க்கு அவர் மீது காதல் வருகிறதோ என்னவோ எனக்கு என்றால் கடுப்பு வருகிறது.
இப்படியா ஒருத்தனை வருக்கிறது? ஆனாலும் அவர் ஏன் அவ்வாறெல்லாம் சோதனை வைக்கிறார் என்பது சுவாரஸ்யம்.
ஆனால் இதையே எல்லா இளம்பெண்களும் பின்பற்ற ஆரம்பித்தால் நம்ம இளைஞர்கள் பாவம்..

இருவருக்குமிடையில் காதல் மலரும் இடமும், ஊடல், கூடல் இடங்களும், பஸ் காட்சிகளும் கலகலப்பும் ரசனையும்..
ஜெய் இப்படியான பாத்திரங்களில் உருக்கி வார்த்தது போல பொருந்துகிறார்.
அவரது வெகுளித்தனமான பாத்திரத்துக்கு பிசிறடிக்கும் குரலும் பொருத்துகிறது.
அஞ்சலி - அழகு.. இப்போது அங்காடித்தெரு அஞ்சலியாக மிளிர்கிறார். கண்கள் பேசும் பாஷைகளில் கலக்குகிறார். கடைசிக் காட்சியில் கலங்க வைக்கிறார்.

அனன்யா - சர்வா காதல் இன்னொரு ரகம், ரசனை..
முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக அனன்யா நம்ப மறுப்பதும், சிடு சிடு என விழுவதும் பின்னர் உருகி மருகுவதும் அழகு..
சீடன் பாத்திரத்தின் தொடர்ச்சி போலவே கிராமிய மணம் வீசுகிறது.
அஞ்சலிக்கு நேரெதிர் பாத்திரம்.. ஆனால் மெளனமாக அடக்கி வைத்துள்ள காதலை வெளிப்படுத்தும் இடம் அழகு.

சர்வா.. படு சாதாரணமாக அலட்டல் இல்லாமல் திரியும் நம் போன்ற இளைஞன். அந்த ஆடை அணியும் நேர்த்தியும் கொஞ்சம் மிடுக்கான நடையும் ஆனால் கண்ணியமான நடத்தையும் கச்சிதமாக உருவாக்கப்பட்ட பாத்திரம்.
தனியொரு ஹீரோவாக நல்ல ஒரு படம் கிடைத்தால் நன்றாக வருவார் என நம்பலாம்.

அனன்யாவின் அக்காவாக வருபவர், அஞ்சலியின் தந்தையாக வரும் போலீஸ் ஏட்டு, ஜெய்யின் நண்பராக வரும் அந்த மன்மதக் குஞ்சு, ஜெய்யின் தாயார், பஸ் பயணிகளான பாத்திரங்கள் என்று பார்த்து பார்த்து இயக்குனர் சரவணன் செதுக்கிய பாத்திரங்கள் உயிர்பெற்று மின்னுகின்றன.
குறிப்பாக வெளிநாட்டில் இருந்து ஐந்து வருடங்களின் பின் வரும் தந்தையும், அவர் (நாமும்)பார்க்கவே பார்க்காத குழந்தையும், பார்த்த பார்வையில் பற்றிக் கொள்ளும் பருவக் காதலர்களும், புது மனைவியை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே வரும் அப்பாவிக் கணவன் கண்முன்னே நிற்கிறார்கள்.

பஸ் பயணங்கள் இரண்டும் எங்கள் வாழ்வில் நடப்பது போல அவ்வளவு தத்ரூபம்..


இயக்குனரிடம் நான் ரசித்த இன்னும் ஒரு விடயம், காட்சிகள் முன்னோக்கி, பின்னோக்கி வந்தாலும் பஸ்சின் பயணத்துடன் தூரம், இடங்கள், ஒவ்வொரு பயனியினதும் கதைகள், மனப் பாரங்கள் என்று மன உணர்ச்சிகளுடன் கலந்திருந்தாலும் குழப்பாமலும், வேகம் குறையாமலும் பார்த்திருப்பது தான்.

படமாக ரசிப்பதோடு எங்கேயும் எப்போதும் பாடமாகத் தந்துள்ள சில விடயங்களையும் பார்க்க வேண்டும்..


காதலிக்க முதலே காதலன்/காதலியின் அனைத்தையும் அறிந்துகொண்டு இறங்கவேண்டும்..
காதலித்தால் அது கல்யாணத்தில் தான் முடியவேண்டும்.
உடல் தானம், இரத்த தான அவசியம்
மனிதாபிமானம், மற்றவருக்கு என்ன நடந்தால் என்ன என்றிருத்தல் வேண்டாம்..
வீதி ஒழுங்குகள், பாதுகாப்பான வாகன செலுத்துகை பற்றிய அக்கறை..

போதனையாக சொல்லாமல் மனதில் பதியும் விதமாக படத்தில் ரசனையோடு சொல்லி இருப்பது வரவேற்க்கக் கூடியது.
ஆனால் முடிவில் மனம் கனக்க வைத்திருப்பது சராசரி ரசிகனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சுப முடிவு இன்னொன்றும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரசித்திருப்போமே..

அஞ்சலி நன்றாக நடிக்கும் நல்ல படங்களின் முடிவுகள் இப்படித் தான் என்று ஏதாவது நியதியோ?

இப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில் நின்று யாழ்ப்பாணத்துக்குப் புறப்படும் பெரிய பஸ்களைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.

இலங்கையிலும் இம்மாதம் முதலாம் திகதி முதல் (சனிக்கிழமை முதல்) வாகனம் ஓட்டுவோர் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
மீறுவோருக்கு அபராதம், தண்டனைகள் காத்திருக்கிறதாம்.
நல்ல விஷயம் நடப்பதாக இருந்தால் வரவேற்கலாமே..
பாதுகாப்பாக ஓடுவோம்,, பத்திரமாக வாழ்வோம்.


எங்கேயும் எப்போதும் - எங்கள் வாழ்க்கையிலும் 

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner