October 06, 2010

வைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்

குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருந்த காரணத்தினால் மூன்று வாரங்கள் பதிவுலகத்திலிருந்து கொஞ்சம் விலகி இருக்கவேண்டி இருந்தது.
இந்த நாட்களில் கொஞ்சம் வாசித்தாலும் பின்னூட்டமிடவோ அல்லது நான் ஏதாவது பதிவிடவோ முடியவில்லை.
அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக நலம் விசாரித்த முகமறியா நண்பர்கள்+வாசகர்களுக்கு நன்றிகள்.
ஆனாலும் பயப்படாதீர்கள் பயணத் தொடர் என்று எதுவும் எழுதி அறுக்க மாட்டேன்.. (அப்பாடா தப்பினோம் என்று பலர் சொல்வது கேட்கிறது)

நீண்ட இடைவெளியின் காரணமாக பல விஷயங்கள் உங்களோடு பகிர்ந்துகொள்ள மனசில் இருக்கிறது.
எனவே சுருக்கமாக அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்..

வைபொகிபே

வைரமுத்து..

எந்திரன் பாடல்கள் மூலமாக வைரமுத்து மீண்டும் சிலிர்த்து எழுந்திருக்கிறார்.
கலைஞரின் கவியரங்கங்களின் பிசியோ என்னவோ சில காலம் காணாமல் போயிருந்த வைரமுத்து ராவணன் பாடல்கள் மூலமாக மனங்களை மீண்டும் கொள்ளையடித்து தன்னிடத்தை மீண்டும் பிடித்தார்.

அதன் பின் எந்திரன்...
மூன்று பாடல்களும் முத்துக்கள்..

காதல் அணுக்கள் - அறிவியலையும் காதலையும் இணைத்து காதுகளிலும் மனதிலும் இன்பத்தேனை ஊற்றுகிறார்.
அரிமா - அக்கினி வரிகள். காமம் கலந்த காதலின் வீரியத்தை தமிழில் வடிக்கிறார்.
புதிய மனிதா - இலகு தமிழில் நெஞ்சைத் தொடும் விஞ்ஞானம்

எந்திரன் பாடல்களில் இசைப் புயலுடன் இணைந்து ஜெயித்த ராசிக்குப் பின்னர் மீண்டும் வைரமுத்துவின் காட்டில் தொடர் மழை.

ஆயிரம் விளக்கு - இசை ஸ்ரீகாந்த் தேவா
நகரம் - இசை தமன்.

கேட்டு ரசிக்கும்படியாக அத்தனை பாடல்களும் இருக்கின்றன..

இன்னொரு விஷயம், காதலர்களுக்கு மிகப் பிடித்த கவிஞர் தபூ ஷங்கர் வல்லக்கோட்டை படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அதில் ஒன்று எஸ்.பீ.பீ பாடும் "செம்மொழியே"


-------------------------------

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்


சர்ச்சைகள்,சந்தேகங்கள்,ஊழல் பிரச்சனைகளை எல்லாம் கடந்து போட்டிகள் ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியா ஆரம்பத்திலேயே சொன்னது போல இரண்டாம் இடத்தை நோக்கி உறுதியாக நகர்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா,சீனாவுக்கே ஈடுகொடுக்கும் ஆஸ்திரேலியாவை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெருங்குவதாவது....

ஆனால் கனடாவும் இங்கிலாந்தும் இம்முறை வழமையை விடக் கொஞ்சம் பின் தங்கியே இருக்கின்றன.
மெய்வல்லுனர் போட்டிகள் வர இந் நாடுகளின் பதக்க வேட்டை தொடங்கும் என நினைக்கிறேன்.

ஆஸ்திரேலியா விளையாட்டுத் துறையில் அனைத்துப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான இன்னொரு காரணம் என நான் நினைப்பது, அதன் பல்வகைமை...
அனைத்து நாடுகளையும் சேர்ந்தோர் ஆஸ்திரேலியாவில் குடியேறி,அவர்களின் வம்சாவளிகள் ஆஸ்திரேலியர்களாக களமிறங்குவதைக் காண்கிறேன்.

Table tennis போட்டிகளில் சீனப் பெயர்கள் ஆனால் ஆஸ்திரேலிய அணி.. மல்யுத்தத்தில் அராபிய,கிரேக்க வீரர்கள் ஆனால் ஆஸ்திரேலிய அணி..
அடைக்கலம் வழங்கியதற்கு புண்ணியமாகத் தங்கங்கள்.

நேற்று இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி பார்த்தேன்.
இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான்கள் லியாண்டர் பயஸ்+மகேஷ் பூபதியை எதிர்த்து இலங்கையின் இரு சிறுவர்கள்(பதினேழு மற்றும் பதினெட்டு வயதாம்).
அதிலொருவன் தமிழ்ப் பையன்.. தினேஷ்காந்தன்.

பயஸ்,பூபதிக்கு ஈடு கொடுத்துக் கொஞ்ச நேரம் ஆடியது திருப்தியாக இருந்தது.
இறுதியில் அனுபவம் ஜெயித்தது.
6-3 6-3 என்று இந்திய ஜோடி வென்றாலும் போராடித் தோற்ற இலங்கை இளைய வீரருக்கு வாழ்த்துக்கள்.

நேற்று ஜோடி சேர்ந்து துப்பாக்கி சுடலில் தங்கம் ஜெயித்த அபினவ் பிந்த்ராவும் ககன் நராங்கும் இன்று முறையே வெள்ளியும் தங்கமும் வென்றுள்ளார்கள்.(10 m Air Rifle)
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிந்த்ராவை நராங் முந்தியுள்ளார்.
                                           இந்தியாவின் தங்கம் சுடும் இரு குழல் துப்பாக்கிகள் 

இந்திய மல்யுத்த வீரர்கள் + துப்பாக்கி வீரர்கள் தங்கங்களாக வாரிக் குவிப்பது ஆச்சரியமென்றால் பார்வையாளர்களின் வருகை குறிவு இந்தியாவுக்கு தர்மசங்கடம்.

இலங்கைக்கு நேற்று பளு தூக்கலில் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.நீச்சலில் இலங்கை வீர,வீராங்கனைகள் சொதப்பியுள்ளனர்.
இனி வாய்ப்புக்கள் மெய்வல்லுனர் போட்டிகளிலும் சிந்தக விதானகே(பளு தூக்கல்) மூலமாகவும் தான்.

-------------------------

கிரிக்கெட் விருது

இன்று இரவு பெங்களூரில் நடைபெறவுள்ள ICC விருது வழங்கும் விழாவைப் பற்றி பெரிதாக எந்தவொரு பரபரப்புமே இல்லையே?
வழமையாக இருக்கும் தடபுடல் பரபரப்பு எதுவுமே இம்முறை இல்லை.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் தான் காரணமா?

இன்று முக்கியமான மிகப் பெரிய விருதுக்காக(Cricketer of the year) நான்கு பேருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது..
சச்சின்,சேவாக்,ஸ்வான்,அம்லா..

இன்னொரு சுவாரஸ்ய விஷயம் தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் A .B .டீ வில்லியர்ஸ் ஒரு இசைக் கலைஞராக இன்று இரவு நிகழ்வில் கலக்கப் போகிறார்.கிட்டார் இசைத்து பாடப் போகிறாராம்.
இவர் என்னை பிரமிக்க வைக்கிறார்.
சிறப்பான துடுப்பாட்ட வீரர்.விக்கெட் காப்பாளர்,பதிவர்,ஹொக்கி,கோல்ப் விளையாடக் கூடியவர்.. இப்போது இசைக் கலைஞர்+பாடகர்.
                                                        டீ வில்லியர்சும் இசை சகா டூ ப்ரீசும் 

இதுக்கெல்லாம் மேலே இன்னொரு செய்தியை வாசித்தேன்..

-------------------

பேடி
                                        
இன்று இரவு இடம்பெறும் விருது விழாவில் ICC Cricket Hall of Fame என்று சொல்லப்படும் வாழ்நாள் கிரிக்கெட் சாதனையாளர்களை உள்ளடக்கும் வரிசையில் சர்ச்சைக்குரிய இந்தியாவின் முன்னாள் தலைவரும் சுழல் பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடியையும் சேர்க்கிறார்களாம்.

முரளியைக் கண்டபடி விமர்சித்து சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டதால் வாங்கிக் கட்டியவர் முரளி இவரை 'Ordinary' என்று சொன்னதன் மூலம் வாய் மூடியானவர்.

சுழல்பந்து வீச்சாளராக இவரது பெறுபேறுகள் மெச்சத் தக்கது தான்.ஆனால் ICC Cricket Hall of Fame என்று வருகையில் கொஞ்சம் நடத்தையையும் பார்க்கலாமே.
இவருடன் இன்று இந்த கௌரவத்தைப் பெறுவோருடன் பார்த்தால் பேடி Ordinary தான்..

மேற்கிந்தியத் தீவுகளின் ஜோயேல் கார்னர், முன்னைய உலக சாதனையாளர் கோர்ட்னி வோல்ஷ்,பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெரும் சேவையாற்றிய முன்னாள் இங்கிலாந்து அணியின் தலைவி Rachael Heyhoe Flint மற்றும் மறைந்த இங்கிலாந்தின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் கென் பரிங்க்டன்.

இந்தியாவில் விழா நடப்பதால் இந்திய வீரர் ஒருவருக்குத் தான் வழங்கவேண்டும் என்றிருந்தால் வேறு எத்தனை சிறப்பு வாய்ந்த தகுதிவாய்ந்த முன்னாள் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்?
ICC இன்னும் வளர இடமுண்டு.. ;)

  -----------------------------

ஆசிரியர் தினம் இன்று இலங்கையின் பாடசாலைகளில் கொண்டாடப்படும் நேரத்தில்,
பாடசாலைக் காலத்தில் எனக்கான அடித்தளத்தை அர்த்தமுள்ளதாகவும்,ஆழமாகவும் ஏற்படுத்தித் தந்த என் அன்புக்குரிய ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துகொள்கிறேன்.
வெறும் நன்றிகள் சொல்லி நீங்கள் எனக்கு வழங்கிய அளப்பரியவற்றை சுருங்க அடக்கிக் கொள்ளமுடியாது.

இன்று எனக்குக் கிடைத்துள்ளவை,கிடைப்பவை அத்தனையும் நீங்கள் எனக்கு சிறுவயதில் வழங்கிய பயிற்சிகளாலும் பாடங்களாலேயுமே.21 comments:

KUMS said...

உஷ் அப்பா.. ஒரு மாதிரி பதிவு வந்துவிட்டது. எதுவா இருந்த என்ன? லோஷன் அண்ணாவின் பதிவு வந்தால் போதும். எத்தனை மொக்கைகள், அருவைகளாக இருந்தாலும் வாசிக்கலாம். புதிய மனிதாவைத் தவிர இந்திரன் பாடல்கள் எதுவுமே கேட்க கிடைக்கவில்லை. அதுவும் புதிய மனிதாவை (ஒரு மலையாள வானொலி சேவையில் கேட்க கிடைத்தது).
110 கோடி சனத்தொகையை வைத்துக்கொண்டு CWG இல் இரண்டாமிடம் பெறுவதும் கேவலமான விடயம்தான். சரியென்றால் முதலிடம் பெற வேண்டும். பெறுவார்களா இந்தியர்கள்?
ICC விருதுகள் விழா முடிவடைந்த பின்னரும் ஒரு சிறப்பு பதிவு வேண்டும்.
கேடியான பேடிக்கு ICC Hall of Fame இல் இடம் கிடைத்திருப்பது ஆச்சரியமான விடயம் தான். ஆனால் ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ICC Hall of Fame பிரிவில் இவரின் பெயர் ஏற்கனவே உள்ளது.
ஆசிரியர் தினம் பற்றிக் குறிப்பிடும் போது நான் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு இரண்டு விடயங்களுக்காக நன்றி கூற வேண்டும். ஒன்று நமக்கு நல்லறிவூட்டி நல்ல நிலைக்கு வர வழி காட்டியமைக்கு. அடுத்தது எங்கள் குறும்புகள், குழப்பங்கள் அனைத்தையும் கண்டும் அனுபவித்த பின்பும் எங்களுக்கு கல்வி போதித்தமைக்கு.

anuthinan said...

//வைரமுத்து.//

ம்ம்... நானும் நானும் ரசித்தேன் அண்ணா!

//ஆயிரம் விளக்கு - இசை ஸ்ரீகாந்த் தேவா
நகரம் - இசை தமன்.//

கேட்கவில்லை அண்ணா கேட்டு சொல்லுகிறேன்

//பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்//

ஒழுங்காக நடாத்தி முடித்தாலே பெரிய விடயம்

//கிரிக்கெட் விருது//

//இன்று இரவு பெங்களூரில் நடைபெறவுள்ள ICC விருது வழங்கும் விழாவைப் பற்றி பெரிதாக எந்தவொரு பரபரப்புமே இல்லையே?
வழமையாக இருக்கும் தடபுடல் பரபரப்பு எதுவுமே இம்முறை இல்லை.//

ஆமாம் அண்ணா!! சூதாட்ட கிரிக்கெட் விவகாரங்கள் கிரிக்கெட் பற்றிய பிடிப்பை குறைத்து விட்டதோ என்னவோ!!!

//பேடி//

கெடுக்கு ஒரு விருது என்று சொலுங்கோ!!!

ம.தி.சுதா said...

அண்ணா நீண்ட நாளின் பின் நல்ல வீளையாட்டுத்தகவல்கள் தந்திருக்கிறீர்கள்.. காலை விடியலில் நீங்கள் சொல்கையில் தான் தமிழ் டெனிஸ் வீரன் இந்திய வீரனை உலுப்பியதை அறிந்தேன் தங்கள் குரலில் கேட்க சந்தோசமாக இருந்தது..
அண்ணா ஒரு சந்தேகம் எந்திரன் பாடல் வந்து மறு நாளே அருமையான விமர்சனம் சொன்ன நீங்கள் இப்போது அதைப்பற்றிப் பதிவிட்டிருப்பது காலம் கடந்து நீங்கள் விமர்சிப்பதாக தப்பாக நினைக்க மாட்டார்களா..? காரணம் அதன் பின் தான் நானும் பாடல் கேட்டு விட்டு யாரும் விமர்சிக்காத ஒரு விடயத்தை விமர்சித்தேன்

http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_19.html

Unknown said...

நல்லா இருக்கு அண்ணே,
வித்தியாசமான பதிவு..
இனி வரும் காலங்களில் கீழே A ஜோக்கும் வருமா??

கன்கொன் || Kangon said...

:-)

வைரமுத்து பாடல்கள் - ஆமாம். இரசிக்கிறேன்.


பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் - :-)))
நேரமிருந்தப் பாப்பம் கொஞ்சப் போட்டிகள். ;-)

ரெனிஸ் - இளைய வீரனுக்கு வாழ்த்துக்கள்.

விருதுகள் - :-))
AB de வில்லியர்ஸின் இன்னொரு பரிமாணம் அற்புதம்.
அவரின் பாடலையும் யூரியூப் இல் இல் பார்த்தேன்.
நன்றாக இருந்தது.

பேடி - இந்தப் தமிழில் எழுதும்போது ஏனோ Bedi ஐ பழிதீர்த்துக் கொள்வதாக உணர்கிறேன். ;-)

ICC வளர இடமுண்டுதான், ஆனால் வளரப் போவதில்லை. :-)

ஆசிரியர் தினம். - நன்றிகள் நன்றிகள்.

ஆர்வா said...

எல்லா தகவல்களும் உங்கள் பெயரைப்போலவே அழகு

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே...,

/ /....பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்.../ /

நன்றாக இருக்கிறது தமிழாக்கம்.
இலங்கை தமிழர்களிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல.

நன்றி...
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்...ச.ரமேஷ்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வைரமுத்துவின் கலைஞரை புகழாத கவிதைகள் அனைத்துக்கும் ரசிகன் நான்.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் மறுபக்கங்கள் பற்றிய செய்திகள் பல அதிர்ச்சியை தருகின்றன

இலங்கையின் இளம் டெனிஸ் வீரர்களை எதிர்கால பீட் சம்ப்ராஸ், அகாசி, பெடரர் என வர வாழ்த்துவோம்

கிரிக்கட் விருது பல ஏமாற்றங்களை தந்தது.

பேடி - வாயால் வாங்கி கட்டி கொண்டாலும் அக்கால இந்திய சுழல் பந்து மும்மூர்த்திகளில் ஒருவர்.

உங்களுடன் சேர்ந்து உங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், எனது ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நாங்கள் வெளிச்சம் தர காரணம் நீங்கள் அன்று உருகியமையால் எனது ஆசிரியர்களே

fowzanalmee said...

மூன்று வாரங்கள் பதிவுலகுக்கு விட்ட இடைவெளியை ஒரு தலைப்பின்கீழ் நிரப்பிய லோசன் அண்ணாவுக்கு முதலில் நன்றி.....

//பயஸ்,பூபதிக்கு ஈடு கொடுத்துக் கொஞ்ச நேரம் ஆடியது திருப்தியாக இருந்தது.
இறுதியில் அனுபவம் ஜெயித்தது.
//
என்னதான் ஒருவர் திறமையை கொண்டிருந்தாலும் அனுபவம் இல்லையென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்...

ARV Loshan said...

KUMS said...
உஷ் அப்பா.. ஒரு மாதிரி பதிவு வந்துவிட்டது. எதுவா இருந்த என்ன? லோஷன் அண்ணாவின் பதிவு வந்தால் போதும். எத்தனை மொக்கைகள், அருவைகளாக இருந்தாலும் வாசிக்கலாம்.//

இந்த நம்பிக்கைல தான் தொடர்ந்து மொக்கைகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.. ஹீ hee


புதிய மனிதாவைத் தவிர இந்திரன் பாடல்கள் எதுவுமே கேட்க கிடைக்கவில்லை. அதுவும் புதிய மனிதாவை (ஒரு மலையாள வானொலி சேவையில் கேட்க கிடைத்தது).//

? எங்கே இருக்கிறீர்கள்?

இணையத்தில் இறக்கிக் கேளுங்கள்.அருமையாக இருக்கின்றன.

110 கோடி சனத்தொகையை வைத்துக்கொண்டு CWG இல் இரண்டாமிடம் பெறுவதும் கேவலமான விடயம்தான். சரியென்றால் முதலிடம் பெற வேண்டும். பெறுவார்களா இந்தியர்கள்?//

சனத்தொகை மட்டுமில்லையே.. வசதிகளும் வேண்டுமே.. முதலிடம் முடியாது.இரண்டாம் இடம் உறுதி என நினைக்கிறேன்.

ICC விருதுகள் விழா முடிவடைந்த பின்னரும் ஒரு சிறப்பு பதிவு வேண்டும்.//

பார்க்கலாம்.

கேடியான பேடிக்கு ICC Hall of Fame இல் இடம் கிடைத்திருப்பது ஆச்சரியமான விடயம் தான். ஆனால் ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ICC Hall of Fame பிரிவில் இவரின் பெயர் ஏற்கனவே உள்ளது.//

ஆமாம்.

ARV Loshan said...

Anuthinan S said...


//பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்//

ஒழுங்காக நடாத்தி முடித்தாலே பெரிய விடயம்//

தொழிநுட்பக் கோளாறுகளும் இடையிடையே படுத்தி எடுக்கிறது.//கிரிக்கெட் விருது//

ஆமாம் அண்ணா!! சூதாட்ட கிரிக்கெட் விவகாரங்கள் கிரிக்கெட் பற்றிய பிடிப்பை குறைத்து விட்டதோ என்னவோ!!!//

ம்ம்ம்ம்.. ICCயின் மொக்கைப் போக்கும் வேறு பலருக்கும் கடுப்பேற்றி இருக்கலாம்.//பேடி//

கெடுக்கு ஒரு விருது என்று சொலுங்கோ!!!//

கௌரவமாம்.. இனியாவது கௌரவமாக நடக்கிறாரா பார்க்கலாம்.

ARV Loshan said...

ம.தி.சுதா said...
அண்ணா நீண்ட நாளின் பின் நல்ல வீளையாட்டுத்தகவல்கள் தந்திருக்கிறீர்கள்.. காலை விடியலில் நீங்கள் சொல்கையில் தான் தமிழ் டெனிஸ் வீரன் இந்திய வீரனை உலுப்பியதை அறிந்தேன் தங்கள் குரலில் கேட்க சந்தோசமாக இருந்தது..//

:)


அண்ணா ஒரு சந்தேகம் எந்திரன் பாடல் வந்து மறு நாளே அருமையான விமர்சனம் சொன்ன நீங்கள் இப்போது அதைப்பற்றிப் பதிவிட்டிருப்பது காலம் கடந்து நீங்கள் விமர்சிப்பதாக தப்பாக நினைக்க மாட்டார்களா..?//

இதிலென்ன தப்பு? நான் எப்போதுமே சொன்னது எந்திரன் பாடல்கள் எல்லாமே பிடிச்சிருக்கிறது என்பது தான்.

ஆனால் பாடல்கள் பற்றிப் பதிவிடவில்லை.இப்போது வைரமுத்துவைப் பற்றி சொல்கையில் பாடல்களையும் பற்றி சொல்லி இருக்கிறேன்.காரணம் அதன் பின் தான் நானும் பாடல் கேட்டு விட்டு யாரும் விமர்சிக்காத ஒரு விடயத்தை விமர்சித்தேன்

http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_19.html //

வாசித்துப் பின்னூட்டியும் இருக்கிறேனே..

ARV Loshan said...

மைந்தன் சிவா said...
நல்லா இருக்கு அண்ணே,
வித்தியாசமான பதிவு..//

நன்றி.


இனி வரும் காலங்களில் கீழே A ஜோக்கும் வருமா??//

ஒ நீங்கள் மற்றப் பதிவர்களின் தொகுப்புப் பதிவாக இதையும் பார்க்கிறீர்களா?
இது வாராந்தம் வராது.. முன்னிய எனது இதே போல பலதும் கலந்த மசாலாப் பதிவுகளைப் பார்க்கவில்லையா?

=====================

கன்கொன் || Kangon said...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் - :-)))
நேரமிருந்தப் பாப்பம் கொஞ்சப் போட்டிகள். ;-)//

கொஞ்ச நாளாக பயங்கர பிசி போல.. சந்திரனுக்கு ரொக்கட் எவுறது தான் காரணம் என கிருலப்பனையில் பேசுகிறார்கள் உண்மையா? ;)விருதுகள் - :-))
AB de வில்லியர்ஸின் இன்னொரு பரிமாணம் அற்புதம்.
அவரின் பாடலையும் யூரியூப் இல் இல் பார்த்தேன்.
நன்றாக இருந்தது.//

நேற்று தொலைக்காட்சியிலும் பார்த்தேன்..பேடி - இந்தப் தமிழில் எழுதும்போது ஏனோ Bedi ஐ பழிதீர்த்துக் கொள்வதாக உணர்கிறேன். ;-)//

ஹா ஹா..ICC வளர இடமுண்டுதான், ஆனால் வளரப் போவதில்லை. :-)//

நான் வளர்கிறேனே மம்மி.. ;)

ARV Loshan said...

கவிதை காதலன் said...
எல்லா தகவல்களும் உங்கள் பெயரைப்போலவே அழகு//

ஆகா ஆகா ஆகா,,.
உங்க பெயரின் காரணம் இப்ப தானே தெரியுது.. :)

===============
S.ரமேஷ். said...
அன்பிற்கினிய நண்பரே...,

/ /....பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்.../ /

நன்றாக இருக்கிறது தமிழாக்கம்.
இலங்கை தமிழர்களிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல.//

இங்கே அனைவரும் இப்படித் தான் பயன்படுத்துவோம்.. அழகு தமிழ் இருக்க ஆங்கிலம் அனாவசியமாக எதற்கு?

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...
வைரமுத்துவின் கலைஞரை புகழாத கவிதைகள் அனைத்துக்கும் ரசிகன் நான்.//

ஹா ஹா :)பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் மறுபக்கங்கள் பற்றிய செய்திகள் பல அதிர்ச்சியை தருகின்றன//

ம்ம்ம்ம்.. இதெல்லாம் இந்தியாவிலும் சகஜமப்பா..இலங்கையின் இளம் டெனிஸ் வீரர்களை எதிர்கால பீட் சம்ப்ராஸ், அகாசி, பெடரர் என வர வாழ்த்துவோம்//

ரிப்பீட்டு..கிரிக்கட் விருது பல ஏமாற்றங்களை தந்தது.//

விளக்கமாகப் பதிவொன்றை எதிர்பார்க்கிறேன்..
பேடி - வாயால் வாங்கி கட்டி கொண்டாலும் அக்கால இந்திய சுழல் பந்து மும்மூர்த்திகளில் ஒருவர்//

நான்கு பேரில் ஒருவர் என்பதே சரியானது..

வெங்கடராகவன்,பிரசன்னா,சந்திரசேகர்+பேடி

ARV Loshan said...

fowzanalmee said...
மூன்று வாரங்கள் பதிவுலகுக்கு விட்ட இடைவெளியை ஒரு தலைப்பின்கீழ் நிரப்பிய லோசன் அண்ணாவுக்கு முதலில் நன்றி.....//

இன்னும் முழுக்க முடியல ஐய்யா..//பயஸ்,பூபதிக்கு ஈடு கொடுத்துக் கொஞ்ச நேரம் ஆடியது திருப்தியாக இருந்தது.
இறுதியில் அனுபவம் ஜெயித்தது.
//
என்னதான் ஒருவர் திறமையை கொண்டிருந்தாலும் அனுபவம் இல்லையென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்...//

ம்ம்ம்ம்.. ஆனால் அனுபவத்தை இளமையின் வேகம் வெல்வதும் உண்டு..

KUMS said...

//? எங்கே இருக்கிறீர்கள்?//
அபு தாபியின் புற நகர் பகுதி ஒன்றில் இருக்கிறேன். அலுவலகத்தில் பதிவிறக்கி கேட்கும் வசதி இல்லை. சீக்கிரமாக மடி கணினி ஒன்று வாங்க வேண்டும். (வெற்றியும் கேட்கலாமே)

இரா பிரஜீவ் said...

"Table tennis போட்டிகளில் சீனப் பெயர்கள் ஆனால் ஆஸ்திரேலிய அணி.. மல்யுத்தத்தில் அராபிய,கிரேக்க வீரர்கள் ஆனால் ஆஸ்திரேலிய அணி..
அடைக்கலம் வழங்கியதற்கு புண்ணியமாகத் தங்கங்கள்."

உண்மைதான், ஆஸ்திரேலியர்கள் விளையட்டுக்கு கொடுக்கும் முக்கியத்தும் ஆச்சரியத்திற்குரியது. எந்த விளையாட்டாக இருந்தாலும் அரங்குகள் 75% மேல் நிரம்பியே இருக்கும்.

1.2 பில்லியன் ஆட்கள் இருந்தும் பொதுநலவாய போட்டி அரங்குகள் 25%மே நிரம்பியுள்து. அதிலும் அதிகம் பேர் வெளிநாட்டவர்.

விளையாட்டு வீரர்களை (எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி.)தாயரிக்க அவர்கள் செலவுடும் தொகையும் ரெம்ப அதிகமப்பா... போன வருடம் பட்ஜெட் காணாது என மீடியாவில மட்டுமல்ல பாரளுமன்றிலேயே பெரிய சண்டையே நடந்துதப்பா...

வந்தியத்தேவன் said...

வை
எந்திரனில் என்னைக் கவர்ந்த பாடல் கிளிமஞ்சதாரா தான். வைரமுத்து ஜால்ராக் கவிஞராகிப் பலகாலம். இல்லையென்றால் தான் எழுதிய முதல் பாடல் ரஜனிபடம் காளி தான் என்பாரா???

தனது மனைவிக்கு பிரசவம் நடக்கும் போது தனது பாடலான "இது ஒரு பொன்மழைப் பொழுது"க்கும் பிரசவம் நடந்தது என எழுதியவர் இப்போ வரலாற்றை மாற்றுகின்றார்.

பொ
வெளிநாடுகளுக்காக தமிழர்கள் பலர் விளையாடுவதும் பதக்கம் பெறுவதும் மகிழ்ச்சி.

கி
ஐசிசி என்றால் இந்தியன் கிரிகெட் போர்ட் தானே #சந்தேகம்

பே
அந்தநாட்களில் கலக்கியவர்களில் பேடியும் ஒருவர் இப்போ அரளை பெயர்ந்துவிட்டது.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Issadeen Rilwan - ChangesDO Foundation said...

ஒரு அடக்கமுடியா கோபம், சகிக்கமுடியா விரக்தி, தாங்கமுடியா சங்கடம் என்று நினைக்கும் மனிதன் இரண்டு முளம் கொண்ட கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் பலரை நமது சூழலில் நாம் பார்க்கிறோம்,
ஆனால் தவணைமுறை தற்கொலை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சிகரெட் புகைக்கும் ஒருவர் அல்லது மது அருந்தும் ஒருவர் செய்யும் தற்கொலை முறைதான் இது.


http://changesdo.blogspot.com/2010/10/blog-post.html

irshath said...

Copy..do you read this?
மதன் கார்க்கியின் எந்திரன் ... செல்லெல்லாம் சொல்லாகி ....
எந்திரன் திரைப்படத்தில் அதன் நோக்கையும் குறிக்கோளையும் இழக்காத இரு விடயங்கள் உண்டு . ஒன்று சுஜாதாவின் வசனங்கள் , இன்னொருவர் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி.

முதலாவது சுஜாதாவின் வசனங்கள் தொழில்நுட்பத்தை, அறிவியலை எளிமையான தமிழில் அனைவரையும் சென்றடையும் விதமாக அமையும் .

அவர் எழுத்துலகின் நோக்கமும் , திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் நோக்கமும் அதே ,...

இரண்டாவது பாடல் ஆசிரியரும் ,அண்ணா பல்கலைக்கழக துணை விரிவுரையாளருமான மதன் கார்க்கியிடம் மாத்திரமே உண்டு . எந்திரன் பாடல்களை ஒரு நோக்கோடு எழுதியிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .


தமிழிலும் தொழில்நுட்பப வார்த்தைகளை கொண்டு வரமுடியும்(அழகாக ) என காட்டியுள்ளார் . எந்திரன் எனும் அறிவியல் படத்தில் பாதை மாறாது பயணித்த இரண்டாமவர் .

இரும்பிலே ஒரு இருதயம் பாடலில்
பூச்சியம் ஒன்றோடு ...
பூவாசம் இன்றோடு ...

இந்த எளிமையான வரிகள் எந்திர மொழிகளுடன் (பூச்சியம் ஒன்று(01010101 )) காதல் கலந்ததை உணர்த்துகிறது . எளிமையான,ஆழமான கற்பனை கவர்ந்தது ..

என் நீல பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என்று Bluetooth தொழில்நுட்பத்தை அழகு தமிழில் எழுதிக்காட்டியமை ஆனாலும் சரி

sensor எல்லாம் தேயத்தேய நாழும் உன்னைப்படிதேன்

போன்ற வரிகளானாலும் சரி ,அனைத்துமே தொழில்நுட்ப்பத்திற்க்குள்ளேயும் தமிழை அழகாக கொண்டு வரமுடியும் என நிரூபித்த வரிகள் .

" செல்லெல்லாம் சொல்லாகி கவிதைகள் வடித்தேன்"..
போன்ற வரிகள் வெளிவரவில்லை .

என் எஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சே இணைப்பேன் ....

சில வரிகள் வாலியையும் நினைவூட்டி செல்கிறது ...

இரு பாடல்களிலேயுமே எந்திரன் பற்றி முழுமையான விளக்கம் கொடுத்திருப்பார் .. பூம் பூம் ரோபோ பாடல் அனைவருக்குமே விளங்கும் விதமாக மிக மிக எளிமையான வரிகள் .

"ஒருவனின் காதலில் பிறந்தவனே".... குறிப்பிட்டு சொல்லக்கூடிய வரிகள் ...

இந்த இரு பாடல்களுக்கும் எந்திரனில் மதன் கார்க்கிக்கு மட்டுமே 5 நட்ச்சத்திரம் கொடுக்கலாம் ..அதவும் ஆங்கில சப் டைட்டில் போடும் போது வரிகளில் திறமை மிக அழகாக தெரிகிறது ..

இவரின் தமிழ் மீதான ஆர்வம் மெய் சிலிர்க்க கூடியது .. மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் நிறுவன உரிமையாளர் ...
இந்த நிறுவனத்தால் ஐ பாட்டி என்ற சிறுவர்களுக்கான பாடல் தகடுகள் வெளியிட்டனர் ..

இன்றைய தமிழின் தேவையை தனிப்பாதையில் செய்துகொண்டிருப்பவர் .வாழ்த்துக்கள் மதன் கார்க்கிக்கு ...

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner