June 27, 2010

FIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்



FIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதல் சுற்றுக்கான அத்தனை போட்டிகளும் முடிந்து இரண்டாம் சுற்றுக்கான 16 அணிகள் தெரிவாகி உள்ளன.
நான்கு நாட்கள் இடம்பெறும் போட்டிகளில் இவை எட்டு அணிகளாகிவிடும்.


கால்பந்தாட்டத்துக்கே உரிய வேகம்,விறுவிறுப்பு,திருப்பங்கள்,குழப்பங்கள்,அதிர்ச்சிகள்,ஆச்சரியங்கள் என்று அனைத்தும் நிறைந்ததாக இந்த முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தேறின.


சில புதிய அணிகள் கலக்கின.எதிரணிகளைக் கலங்கடித்தன.
முதல் தடவையாக இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தும் உள்ளன.


சில பெரிய தலைகள் அடுத்த சுற்றைக் காணாமல் அதிர்ச்சியோடு வெளியேறியும் இருக்கின்றன.




மிக முக்கியமாக போட்டிகளை நடாத்தும் நாடு ஒன்று முதல் சுற்றிலேயே வெளியேறிய முதலாவது சந்தர்ப்பமும் இம்முறையே நிகழ்ந்துள்ளது. தென் ஆபிரிக்கா தனது இறுதிப் போட்டியிலே அனைவரும் வியக்கும் விதத்தில் முன்னாள் சாம்பியனும் கடந்த முறை இறுதிப் போட்டியை எட்டிய அணியுமான பிரான்ஸ் அணியை வெற்றி கொண்டாலும் ஏராளமான தன ரசிகர்கள் மனமுடையும் விதத்தில் முதல் சுற்றோடு வெளியேறியது.




நடப்பு சம்பியன் இத்தாலியும் முதல் சுற்றோடு அம்பேல்.பலம் வாய்ந்த அணியாகத் தெரிந்தாலும் அநேகர் இதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியிருக்கவில்லை.ஆனால் முதல் சுற்றோடு இப்படி வெளியேறும் என யார் நினைத்தார்?
அதிலும் கடைசிப் போட்டி ஒரு 
ஸ்லோவாக்கியா 3-2 என இத்தாலியைத் தோற்கடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.




இத்தாலியுடன் கடந்த ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் அணியும் வெளியே.
அணிக்குள்ளே பல்வேறு மோதல்கள். பயிற்றுவிப்பாளர் டோமேஞ்சுடன் வீரர்கள் தகராறு.முக்கியமான வீரர்களை விட்டு விட்டு போட்டிகளுக்கான அணிகளைப் பயிற்றுவிப்பாளர் தெரிவு செய்தது என்று பிரான்ஸ் அணி தனக்குத் தானே குழியொன்றை வெட்டிக் கொண்டது.


அயர்லாந்து அணியை பிரான்ஸ் தெரிவுப் போட்டிகளில் தோற்கடித்தே உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.அந்த இறுதித் தெரிவுப் போட்டியில் விதிகளுக்குப் புறம்பாக பிரான்சின் தியரி ஒன்றி (Thierry Henry) கையால் அடித்த கோல் மாபெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.




அயர்லாந்து FIFAவுக்கு முறைப்பாடுகளை முன்வைத்தது.எனினும் FIFA கணக்கெடுக்கவில்லை.பிரான்ஸ் அந்த கோலினாலேயே அயர்லாந்தை விஞ்சித் தெரிவானது.
அயர்லாந்தின் சாபமே பிரான்சின் இந்த அவமானகரத் தோல்விக்கும் உள் அணி மோதல்களுக்கும் காரணம் என்று நினைப்பதாக சொல்கிறார் ஒன்றி.
இவ்வளவுக்கும் தான் பெற்ற கோல் Hand ball என ஒப்புக்கொண்டு நேர்மையாக மன்னிப்புக் கோரியவர் ஒன்றி.


இம்முறை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்த இன்னும் சில போட்டிகள்..


முதல் நாளிலேயே மெக்சிக்கோவை தென் ஆபிரிக்கா சமப்படுத்தியதொடு ஆரம்பித்தது அதிர்ச்சி அலைகள்.
அதே பிரிவில் இன்னொரு போட்டியில் பிரான்ஸ் அணி மெக்சிக்கோவிடம் தோற்று உலகை ஆச்சரியப்படுத்தியது.


தட்டுத் தடுமாறி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்தும் தனது ரசிகர்களை சோதிக்கத் தவறவில்லை.
முதல் போட்டியிலேயே அமெரிக்காவுடன் சமநிலை முடிவைப் பெற்று தடுமாறிய இங்கிலாந்து,அடுத்த போட்டியில் பெரிதாக அச்சுறுத்தாத அல்ஜீரியாவுடனும் கோல் ஒன்றையும் பெற முடியாமல் சமநிலை முடிவைப் பெற்று ரசிகர்களைக் கடுப்பாக்கி,இங்கிலாந்தை எதிர்பார்த்திருந்த விமர்சகர்களையும் ஏமாற்றியது.
பின்னர் தடுமாறி சமாளித்து ஸ்லோவேனியாவை வென்றாலும் கோல்கள் பெறும் வழிகள் கிடைப்பதாக இல்லை.




பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய கால்பந்து வல்லரசு - European Football Power house ஜெர்மனியும் ஒரு போட்டியில் தொடரே அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது. சேர்பிய அணியிடம் ஜெர்மனியிடம் தோற்றது உலகக் கால்பந்து போட்டிகளில் மற்றுமொரு அதிர்ச்சி முடிவு.


இந்த அதிர்ச்சி அலை ஓய முன்பே,இம்முறை உலகக் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புடைய அணிகளில் ஒன்றாகக் கருத்தப்பட்ட,படும் அணியான ஸ்பெய்ன் சுவிட்சர்லாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.


முன்னாள் சாம்பியன் (இப்ப தான் இல்லையே..) இத்தாலி அணி பராகுவே அணியிடம் சமநிலை முடிவு பெற்றதாவது பரவாயில்லை;கடை நிலை அணியும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகப் பலவீனமான அணியாகக் கருதப்பட்ட அணியுமான நியூ சீலாந்து அணியிடமும் தடுமாறியது.சமாளித்து சமநிலையாகப் போட்டியை முடிக்க இத்தாலி பட்டபாடு பெரும்பாடு.


போர்த்துக்கல் அணியும் ஐவரி கோஸ்ட்டுடன் சமநிலை முடிவையே பெற்றது.


இந்த ஏறுக்கு மாறான முடிவுகளுக்கும் கோள்கள் குறைவாக இருந்தமைக்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஜபுலானி பந்து (Jabulani) தான் காரணம் என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.



Evolution of The World Cup Ball


Designer defends Jabulani



சில கோல் காப்பாளர்கள் தவறுகள் விட்டமைக்கும் பந்துகள் அவர்கள் கைகளில் இருந்து வழுக்கியமைக்கும் கூட ஜபுலானியே காரணம் என சொல்லலாம்.


முதல் சுற்றைப் பொறுத்தவரை தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளையும் வென்ற அணிகள் ஆர்ஜென்டீனாவும் நெதர்லாந்தும் மாத்திரமே.
பிரேசில்,போர்த்துக்கல்,இங்கிலாந்து,அமெரிக்கா,பராகுவே,உருகுவே ஆகிய அணிகள் எந்தப் போட்டியிலும் தோற்காமல் தப்பியுள்ளன.


நியூ சீலாந்து எந்தவொரு போட்டியிலும் தோற்காவிட்டாலும் அடுத்த சுற்றில் நுழையாமலே வெளியேறியுள்ளது.அனைத்துப் போட்டிகளையும் சமன் செய்த சாமர்த்தியம் பாராட்டுதற்குரியதே.


போர்த்துக்கல் ஒரே போட்டியில் வட கோரிய அணியை வதக்கி எடுத்தது. ஏழு கோல்களைப் போட்டுத் தாக்கியது.




ஆர்ஜெண்டீனாவின் கோன்சாலஸ் ஹிகுவேய்ன் தென் கோரிய அணிக்கெதிராக மூன்று கோல்கள் அடித்து ஹட் ட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
அதிக கோல்களை முதல் சுற்றில் பெற்றோரின் விபரங்கள்..


Top Goal scorers in the 1st Round


பல முன்னணி நட்சத்திரங்கள் சிவப்பு அட்டைகளைப் பெற்றுக் கொண்டு போட்டிகளில் இருந்து வெளியேறி இருந்தனர்.
ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்லோசே,பிரேசிலின் காகா,ஆஸ்திரேலியாவின் ஹரி கியூவேல் ஆகியோர் முக்கியமானவர்கள்.


இம்முறை இரண்டாம் சுற்றுக்குள் முதல் தடவையாக நுழைந்துள்ள அணி ஸ்லோவாக்கியா.
ஆசிய அணிகளில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய ஆசிய அணிகள் முதல் தடவையாக வெளிக் கண்டம் ஒன்றில் இரண்டாம் சுற்றுக்குள்ளே நுழைந்துள்ளன.


ஆபிரிக்காவின் ஒரே பிரதிநிதியாக இரண்டாம் சுற்றுக் கண்ட கானா அணி நேற்றைய அமெரிக்காவுடனான வெற்றியை அடுத்து கால் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதுவரை எந்தவொரு ஆபிரிக்க அணியும் அரையிறுதியை எட்டிப் பார்த்ததில்லை.


அந்த வாய்ப்பு இம்முறை கானாவுக்குக் கிட்டலாம். காரணம் அது காலிறுதியில் எதிர்கொள்ளும் அணி உருகுவே.


மறுபக்கம் இன்று இடம்பெறும் இரண்டு இரண்டாம் சுற்றுப் போட்டிகளும் மிக விறுவிறுப்பானவை.
Germany vs England - Preview


Argentina vs Mexico - Preview


ஜேர்மனி இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி கால்பந்தின் பாரம்பரிய வைரிகளுக்கு இடையிலான மோதல்களில் ஒன்று.
இரண்டு அணிகளுமே விட்டுக் கொடுக்காமல் விளையாடக் கூடியவை.
அண்மைக்காலமாக இங்கிலாந்து அணியினதும் அதன் நட்சத்திர வீரர்களின் மீதானதுமான அழுத்தம் ஜெர்மனிக்கு இன்றைய போட்டியில் கூடுதல் வாய்ப்பை வழங்கும் என நான் நினைக்கிறேன்.


ராசியில் அதிகம் நம்பிக்கையுள்ள இங்கிலாந்து தாம் வென்ற ஒரே உலகக் கிண்ணமான 1966ஆம் ஆண்டின்போது அணிந்த சீருடை போலவே இம்முறை அணிந்து விளையாடியதும், அந்த இறுதிப் போட்டியில் தாம் சந்தித்த ஜெர்மனியை இன்று சந்திக்கும் வேளை அதே சிவப்பு நிற ஆடைகளை இன்று அணிய இருப்பதும் சுவாரஸ்யம்.



அடுத்த போட்டியில் இம்முறை உலக சாம்பியனாக மாறக் கூடிய அணியேன நான் கருதும் ஆர்ஜென்டீனா மெக்சிக்கோ அணியை சந்திக்கிறது.
விட்டுக் கொடுக்காமல் வேகமாக விளையாடக் கூடிய அணிகள் இவை இரண்டும்.
எனினும் வாய்ப்புக்கள் ஆர்ஜென்டீனா அணிக்கே எனக் கருதுகிறேன்.




லியோனல் மெஸ்ஸி,ஹட் ட்ரிக் புகழ் ஹிகுவேய்ன், கார்லோஸ் டேவேஸ் என நட்சத்திரங்கள் ஆர்ஜெண்டினாவுக்கு பலம்.


மரடோனா வழங்கும் பயிற்சிகளும் அப்படி.. கொஞ்சம் பாருங்களேன்..
Argentina - Pain in practice


இரண்டாம் சுற்றில் மற்றொரு முக்கிய விறு விறு போட்டி ஸ்பெய்ன் - போர்த்துக்கல் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இந்த அணிகளையும் எனக்கு இவர்களின் போராட்ட குணத்துக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் அடிக்கடி கிண்ணம் வெல்லும் வாய்ப்புக்களை இழப்பதாலும் பிடிக்கிறது.


அதிலும் இம்முறை ஆக முதலில் கருதப்பட்ட ஸ்பெய்ன் கொஞ்சம் சறுக்கி,கடைசி இரு போட்டிகளில் மீண்டும் நிமிர்ந்துள்ளது.
டேவிட் வியா(David Villa),டொரெஸ்,இனியேஸ்டா,பாப்ரேகாஸ்,கசியாஸ் என நட்சத்திரங்கள் சேர்ந்த ஸ்பெய்ன் அணி மற்றொரு நட்சத்திர அணியான ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணியை சந்திப்பதென்றால் அந்தப் போட்டி பற்றி சொல்லவும் வேண்டுமா?




பிரேசில் அணியின் மேல் முதலில் இருந்த பிரமிப்பு இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
எவ்வளவு தான் லூயிஸ் பாபியாநோவும் ககாவும் வேகம் காட்டி ஆடினாலும் பின் வரிசை கொஞ்சம் சோர்வாகவும் இலகுவாக எதிரணிகளால் கடக்கக் கூடியதாகவும் இருக்கிறது.


ஒவ்வொரு நாளும் ஆங்கிலத்தில் உலகக் கிண்ணக் கால்பந்து நிகழ்வுகளைத் தொகுத்து (பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து/சுட்டு) பதிவிடுவதால் தமிழில் உலகக் கிண்ணப் பதிவுகளை தொடர்ச்சியாகத் தரமுடிகிறதில்லை.


மீண்டும் இரண்டாம் சுற்று முடிய இன்னொரு தொகுப்புத் தருகிறேன்.


ஆங்கில கால்பந்து தளம் இதோ..


http://fifa2010-football-worldcup.blogspot.com


என் கணிப்பில் கால் இறுதி செல்லும் அணிகள்...


Uruguay
Ghana
Germany
Argentina
Netherlands
Brazil
Japan 
Spain


இவை காலிறுதியில் ஒன்றையொன்று சந்திப்பது இவ்வாறு அமையும்.


Uruguay vs Ghana
Netherlands vs Brazil
Germany vs Argentina
Japan vs Spain


விபரங்களுக்கு இந்த சுட்டியிலுள்ள படத்தைப் பார்க்கவும்.
The Group Stage is Over, So Now the Real World Cup..


எனவே ஆர்ஜென்டீனா பிரேசிலை சந்திப்பதாக இருந்தால் அது இறுதிப் போட்டியிலே தான்.


என்னைப் பொறுத்தவரை சகலதுறை அணியாகக் காணப்படும் நெதர்லாந்து பிரேசிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் கொடுக்கலாம்.


இப்போதைக்கு பந்தயக்காரர்களின் கணிப்பை அறிய இதைப் பாருங்கள்.



Brazil still the favorites.. Latest Odds



June 22, 2010

இர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்

இன்று காலை எனது காலை நிகழ்ச்சி விடியலில் (வெற்றி FM) இடம்பெறும் பேப்பர் தம்பி நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட ஒரு பத்திரிகைத் தலைப்பு...

யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

அது பற்றிய விரிவான செய்தியையும் வாசித்துப் பாருங்கள்.

http://thinakkural.com/publication_west/content.php?contid=3667&catid=1

அடுத்த நிமிடமே ஒரு SMS. பதிவுலகில் என்ன கொடும சார் என்று அறியப்படும் இர்ஷாத் என்பவரிடம் இருந்து.

is Jaffna Library a museum? May be the books which were there old and not usable. ;)


இந்த பார்த்ததுமே பகிரங்கமாக அவரது பெயரை சொல்லிக் கண்டித்தேன்.
பல தமிழ்,முஸ்லிம் நேயர்களும் கொதித்துப் போய்க் கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு Sensitive விஷயத்தை கிண்டல் செய்கின்றார் என்றால் இவர் மனதில் எவ்வளவு வஞ்ச உணர்ச்சி இருக்கவேண்டும்.
யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் இவரது கிண்டல் smsகள் வந்திருக்கின்றன.


இவரது பதிவுகளைப் பார்த்தாலே அடிக்கடி தொனிக்கும் விஷம,காழ்ப்பு உணர்வுகளையும், வித்தியாசப்படுகிறேன் என்ற தொனியில் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு கேவலமான கிண்டல் தொனியில் இருக்கும்.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழும் தமிழரால் மட்டுமல்ல வேறு மொழிபெசுவோராலும் கண்டிக்கப்பட்ட அந்தக் கருப்பு நிகழ்வான யாழ்ப்பாண நூலக எரிப்பை நியாயப்படுத்துவது போலல்லவா இருக்கிறது இர்ஷாத் சொல்லி இருக்கும் விஷயம்.

இதற்கு மேலே அதை நியாயப்படுத்தி என்ன கொடும சார் என்ற தன் தளத்தில் தனது வழமையான காழ்ப்புணர்ச்சிப் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

http://eksaar.blogspot.com/2010/06/blog-post_22.html

யாழ் நூலக எரிப்பு கண்டிப்பிற்குரியது. ஆனால் அதில் பழைய புத்தகம் இருந்தது, ஓலைச்சுவடி இருந்தது என்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அவை இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் சாமானியனுக்கு என்ன பயன் கிடைத்திருக்கும்? பழைய ஓலைச்சுவடிகளை வாசித்து விளங்க முடியுமா? அல்லது அது இன்று பாவிக்க கூடிய நிலையில் தான் இருந்திருக்குமா?


ஆனால் அது வேண்டுமானால் தொல்பொருள் ஆக மதிப்பு மிக்கதே. ஒரு நூதன சாலையில் வைக்கப்பட்டிருக்கவேண்டிய விடயங்கள் அவை.


இன்று இவ்வாறாக யாழ் நூலகத்திற்கு புனித தன்மை கொடுப்பதன்மூலம் அதுவும் ஒரு காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக வேண்டுமானால் அபிவிருத்தியடையலாம்.


இவரெல்லாம் ஒரு படித்த மனிதர்? தூ..

ஒரு சமூகத்தின் கல்விக்கான அடையாளம்..பல அறிய நோல்ல்களைப் பேணிப் பாதுகாத்த அந்த நூலகத்தின் அருமை தெரியாத இந்த ஜென்மம் தான் நவீன கலாசாரம்,கல்வி,நாகரிகம்,முன்னேற்றம்.. என் சமயம்,சமூகம் பற்றியும் மற்றவருக்கு உபதேசம் செய்கிறது..

இப்போது நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது..
என்ன கொடும சார்..

அந்த எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட அரிய நூல்களின் பெறுமதியும் அந்த அருமை பெருமையும் இவர்களைப் போன்றோருக்கு தெரிந்தால் தானே?

அந்த நூலகம் யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழ்ந்த எத்தனையோ இடங்களை சேர்ந்தோருக்கும் ஒரு ஆவணத் தொகுப்பகமாக, ஆராய்ச்சிக் கூடமாக விளங்கியிருக்கிறது.

யாழ் நூலக எரிப்பு இடம்பெற்ற பொது இவரெல்லாம் பிறந்திருப்பாரோ என்னவோ?

இதைக் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க தம்பி..

யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981


தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.. இல்லை தேடிப் பாருங்கள்.. அப்படியில்லாவிட்டால் அதுபற்றிப் பேசி மற்றவரைப் புண்படுத்தி பின் உங்கள் முதுகைப் புண்ணாக்கிக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டு உங்கள் வேலைகளைப் பாருங்கள்.

என்ன கொடும சார் எனப்படும் இர்ஷாத் இதற்கு மன்னிப்புக் கோரவேண்டும்.

# # # # #

இந்த இடத்தில் நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் பற்றியும் சொல்லவேண்டும்.


தமிழிலும் சமயத்திலும் தான் சார்ந்த சமூகத்திலும் தீராப் பற்றுக் கொண்ட ஒருவர் பதிவர் சந்ரு..
இவர் அண்மைக் காலமாக ஈழத் தமிழர் போராட்டம் பற்றி தொடர் பதிவுகள் இட்டு வருகிறார்.
தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் 

அந்தப் பதிவுகள் ஆரம்ப முதலே யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளும்,தமிழரும், கிழக்கிலங்கைத் தமிழரை அடிமைப்படுத்தி வருவது போலவும் ஏமாற்றி வருவது போலவும் உருவகப்படுத்தியே காட்டுகின்றன.
அதுவும் கையாளப்பட்டுள்ள வார்த்தைகள்.. மிக மிக வன்மையான,விஷம் தடவப்பட்டவை..

http://shanthru.blogspot.com/

நயவஞ்சகம்,துரோகம்,ஏமாற்று, இப்படி.. இவையெல்லாம் வெகு சிலவே.

இலங்கைத் தமிழ் அரசியல் பற்றி ஓரளவு தெரியும் என்பதாலும் அவை பற்றி தொடர்ந்து வாசிப்பவன் என்பதாலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவருக்கு தனி மடல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.

இவரது தொடர் பதிவுகளுக்கான ஆதாரங்களையும் பிரசுரிக்குமாறு (இருந்தால்) கேட்டிருந்தேன்.

இதற்கான பதிலைப் பதிவாகப் போடுகிறேன் என்று சில நாள் கழித்துப் பதில் அனுப்பியவர் ஏதோ ஒரு இணையத்தளத்தில் இருந்து எடுத்து மீள்பிரசுரம் செய்வதாக தன் பதிவிலே சொல்லி இருந்தார். ஆனால் இன்று வரை
எந்த இணையத்தள என ஆதாரம் காட்டவில்லை.

இறுதியாக இலங்கையிலுள்ள அத்தனை தமிழ் பேசுவோராலும் மதிக்கப்படும் தந்தை செல்வாவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

ஆதாரம் இல்லாமல் இரு சமூகங்களுக்கிடையில் கருத்துப் பிளவுகளையும் தவறான பரப்புரைகளை மேற்கொள்வதற்கும் இவ்வாறான பதிவுகள் துணை போய்விடும்.

சமூக அக்கறை கொண்ட சந்ருவுக்கு இது தெரியாததல்ல.
இனியாவது கையாளப்படும் வார்த்தைகளை அவர் சரியாக பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சந்ருவின் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருந்தாலும் பொது இடமொன்றில் கருத்துப் பகிரும்போது கொஞ்சம் நிதானமும் ஆதாரம் காட்டும் அவசியமும் பொறுப்புணர்வும் தேவை என்பதை சந்ரு புரிந்துகொள்ளவேண்டும்.

ஆதாரம் காட்டுவார் காட்டுவார் என்று பார்த்துக் காத்திருந்து தனிமடலில் கூட சந்ரு எதுவும் அனுப்பாததாலேயே பகிரங்கமாக இதை சுட்டிக் காட்டுகிறேன்.
இவ்வளவுக்கும் சந்ரு என்னுடன் நெருக்கமாகப் பழகும் ஒரு நல்ல நேயர்.பதிவர்.அடிக்கடி மடல் அனுப்புபவர்.

உடனே இது யாழ்ப்பாணத்தான் குரல் என்று மடத்தனமாக அல்லது குதர்க்கமாகப் பேசவேண்டாம்.
இது ஒரு தமிழனின் ஆதங்கம்.
காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தை விடக் கொழும்பில் வாழ்ந்த வாழும் காலமே அதிகம்.
எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்களும் இருக்கிறார்கள்.
எங்கள் நட்புக்குள் சந்தேகமோ கருத்து வேறுபாடுகளோ இது போன்ற சில்லறைத் தனங்களால் வந்துவிடக் கூடாது என விரும்பிகிறேன்.
தமிழராய், தமிழால் ஒன்று படுவோரை இருப்போமே.. எதற்கு தேவையில்லாமல் பிளவுபட்டு வலிமைகளைக் குறுக்கிக் கொள்கிறோம்??

இன்னும் சில பதிவுலகப் பச்சோந்திகளையும் முகத்துக்கு முன்னால் 'வாழ்த்தி' நடிக்கும் குறுக்கு வழி நடிகர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை..I just ignore them.

இதெல்லாம் எங்கும் சகஜமப்பா.. ;)

June 18, 2010

ராவணன் - என் பார்வையில்



ராவணன் திரைப்படத்தின் முதல் காட்சியை நேற்று தெஹிவளை கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.


வழமையான முதல் நாள் படம் பார்க்கும் கூட்டம்.


பரபரவென ஆரம்பிக்கும் ஆரம்ப காட்சிகள்.. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் நாயகன் விக்ரமின் அறிமுகம்.ஐஸ்வர்யாவை அழகைக் காட்டும் கமெரா முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறது.


பெயரோட்டம் ஆரம்பிக்கும் போதே விக்ரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பலத்த கரகோஷங்கள்.


ஆச்சரியமாக பின்னர் ப்ரியாமணி, ரஞ்சிதாவின் பெயர்கள் தோன்றியபோதும் விசில் ஆரவாரங்களும் கூட..
ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.


பின்னர் வழமைபோலவே ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் பெருவாரியான கரகோஷங்கள்.






வீரா பாடலுடன் எழுத்துக்கள் திரையில்..


வசனம் சுகாசினி.. அட..
அது தான் சில வசனங்களில் சுஹாசினியின் சித்தப்பா கமலும் எட்டிப் பார்க்கிறார்..
'உங்கள் கடவுள் அப்பழுக்கில்லாதவரா?அழகானவரா?' 


மணியின் வழமையான,ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்துக்கு ஒரு தனியான உயர்ச்சியைக் கொடுக்கிறது.
ஈரமான,குளுமையான,அழகான,உயரமான இடங்களிலெல்லாம் நாம் உலவுவது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவு தருகிறது.
சந்தோஷ் சிவனுக்கே உரிய ட்ரேட் மார்க்கான முகில்களும்,பச்சைப் பசேல் பின்னணியும் படத்தின் முக்கிய அம்சங்களாகின்றன.




இசைப்புயல் ரஹ்மான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்க்கிறார்;ஜொலிக்கிறார்.
மெல்லிய உணர்வுகளை மீட்டும் இசையாகட்டும்,அதிரடி இசையாகட்டும்.. ரஹ்மான் மின்னுகிறார்.


அதிலும் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வரும் கலிங்கத்துப் பரணி அருமை.
எங்கேயாவது தேடி எடுத்து மீண்டும் கேட்கவேண்டும்.
படத்தின் இறுதியில் வரும் "நானே வருவேன்" இருக்கையிலிருந்து எழுந்து விடாமல் செய்தது. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.


இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.


மணிரத்னத்தின் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற்ற படமாக ராவணனையே கருதமுடியும் என நினைக்கிறேன். விக்ரமினாலும் ரஹ்மானாலும் அந்த சண்டைக் காட்சிகளெல்லாம் அனல் பறக்கின்றன. அலுப்படிக்கவும் இல்லை.


இனி நடிக,நடிகயரைப் பற்றிப் பார்க்க முன், கதை....


நவீன ராமாயணமே..




அப்படியே எடுத்து தந்தால் ராவணனுக்கு பத்து தலை வேண்டுமே என்று சில,பல வசனங்கள்,சில உருவக எடுத்துக்காட்டுக்கள்,சம்பவங்கள்,சில பாத்திரங்களின் குணவியல்புகள் மூலமாக சித்தரிக்கிறார் இயக்குனர்.


அவற்றுள் சில அடடா போட வைத்தாலும், மேலும் சில சலிப்பூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மணிரத்னம் படத்தில் என்பதால் மேலும் உறுத்துகிறது.


தன் தங்கையைப் பலியெடுத்த போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க அவரது அழகு மனைவியைக் கடத்தி செல்லும் தாழ் குடியைச் சேர்ந்த ஒரு முரடனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான மோதலே திரைக்கதை.
இடையிலே அந்த முரடன் (தன் மக்களுக்கு அவன் கடவுள் போல) கடத்தி வந்த மாற்றான் மனைவி மீது காதல் கொள்கிறான்.மனைவியை மீட்கப் படையெடுத்து வரும் போலீஸ் அதிகாரிக்கும் வீரையாவுக்கும் இடையிலான மோதலில் இந்த ஒரு தலைக் காதலும் கலக்கிறது.




ராவணன் விக்ரம்.. மனிதர் நடிப்பில் ஒரு ராட்சசனே தான்.. பலத்திலும் உடல் கட்டுக் கோப்பிலும் கூட..
சீதையாக ஐஸ்வர்யா ராய்.. என்ன ஒரு அழகு.. கொஞ்சமும் மாசு மறுவற்ற முகம்.. பேசும்,மிரளும்,காதலிக்க அழைக்கும் கண்கள்..
ராமனாக - மிடுக்குடன் ப்ரித்விராஜ். 
தமிழர் நோக்கில்,ராவணனை ஹீரோவாக்கியதால் ராமனின் நல்ல இயல்புகளைக் குறைத்து வில்லனாக மிகைப்படுத்தியிருக்கிறார்.


அப்படியே கும்பகர்ணன் போல பிரபு(உடல் பருமனும் துணை வந்துள்ளது),விபீஷனனாக முன்னா,சூர்ப்பனையாக முத்தழகு ப்ரியா மணி என்று பரவலாக மூலக் கதை ராமாயணத்தில் கை வைக்காமல் பாத்திரங்களைப் பொருத்தி உலாவிட்டுள்ளார் இயக்குனர்.


அனுமார் யார் என்று எல்லாம் எம்மை சிரமப்படுத்தவில்லை மணி.. கார்த்திக் தன் அறிமுகக் காட்சியிலேயே அங்கும் இங்கும் குரங்கு போலத் தாவியும் சேஷ்டைகள் செய்தும் அனுமன் யானே என்று காட்டி விடுகிறார்.
அதற்காக ஐஸ்வர்யாவைத் தேடி சென்று அனுமன் போலவே கணையாழி போல அடையாளம் கட்ட முற்படுவது எல்லாம் மணிரத்னத்தின் தரத்துக்கு சிறுபிள்ளைத் தனம் போல இருக்கிறது.




விக்ரம் - ஆவேச இராததன்.அக்ஷன் காட்சிகளில் யாராலும் அடிக்கமுடியாத ஆஜானுபாகுவாக மிரட்டுகிறார். முறுக்கேறிய கட்டான உடம்பும்,முறுக்கு மீசையும் உஷ்ணப் பார்வையுமாக வீரையாவாக வாழ்ந்திருக்கிறார்.
ஆவேசப்பட்டு 'கப கப' எனும் போதும் சரி, தாபம்,காதலோடு இங்கேயே இருந்துருங்களேன் என்று கெஞ்சும்போதும், கம்பீரமாக எதிரியை தப்பிக்க அனுப்பும் கண்ணியத்திலும் நடிப்பில் மின்னுகிறார்.
பாத்திரங்களாக இக்கால நடிகர்களில் வாழ்பவர் இவரும் சூர்யாவும் மட்டுமே.


அடுத்த கமல் என்று அடித்து சொல்கிறேன்.




ஐஸ்வர்யா - அழகு.
உருகுகிறார்.உருக வைக்கிறார்.சில இடங்களில் ஏங்கவும் வைக்கிறார்.
கள்வரே பாடலில் வாவ்.. என்னாமாய் உடலை வளைத்து நடனமாடுகிறார்.
நடன அமைப்பு ஷோபனாவாம். அப்படியே ஷோபனா ஐஸ்வர்யாவுக்குள் புகுந்தது போல ஒரு தத்ரூபம்.
கண்களால் பேசும் இடங்களும் அருமை.


"எப்போ வருவீங்க?எனக்கு உண்மையில் துணிச்சலில்லை" என்று தனியே புலம்புவதிலும் பின் கடவுள் சிலை முன்னாள் உருகுவதிலும் நெகிழ வைக்கிறார்.




ப்ருத்விராஜ் - கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரி.அழகாக ஹிந்தி நடிகர்கள் போல இருக்கிறார். மணிரத்னப் பட வாய்ப்பு மேலும் பொலிவைத் தந்துள்ளது.விக்ரமின் கம்பீரம் இல்லாவிடினும் சில இடங்கிலாவது ஈடு கொடுக்கிறார்.வசன உச்சரிப்புக்களும் பார்வையினால் மாறுதல் காட்டுவதும் அருமை.
ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கையில் அபிஷேக் பச்சனே எரிச்சல் பட்டிருப்பார்.


பிரபு - கம்பீரமான அண்ணன்.வெயிட்டான பாத்திரம்.தாங்குகிறார்.


கார்த்திக்- பிரபுவை விடக் கொஞ்சம் பெரிய பாத்திரம்.சிரிக்கவும் வைக்கிறார். அனுமார் என்பதால் சேஷ்டைகள் விடுகிறார். இவரை தமிழ் சினிமா கதாநாயகனாக இழந்துவிட்டதே என ஏங்கவும் வைக்கிறார்.


ப்ரியா மணி - கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு மினி சூறாவளியாக வந்து போகிறார்.அவரது கட்டிக் குரலுக்கேற்ற ஒரு வீரப் பெண் பாத்திரம்.


அரவாணியாக வையாபுரியும்,போலீஸ் அதிகாரியாக 'ஓரம்போ' புகழ் ஜோன் விஜயும் ஏனைய குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.




இயக்குனராக மணிரத்னத்தை முன்பு எல்லாத் திரைப்படங்களிலும் வியந்ததையும் ரசித்ததையும் இத்திரைப்படத்திலும் அவர் காப்பாற்றுகிறார்.


முதல் காட்சியில் கம்பீரமாகப் பெரிய படகில் விக்ரம் வந்து ஐஸ்வர்யாவைக் கடத்துவது..
மலையிலிருந்து ஐஸ்வர்யா அதலபாதாலத்திளிருந்து குதிக்கும் பிரம்மாண்டம். (ஆனால் அதை மீண்டும் மீண்டும் ஸ்டன்டாகக் காட்டியது தேவையில்லைப் போல் இருந்தது)
அந்தத் தெப்பக் காட்சி.. சுழலும் கமெராவும் விக்ரமின் முகபாவங்களும் கவிதை.
கடைசிக் காட்சியில் விக்ரம்-ஐஸ்வர்யா உரையாடல்களும் இடையிடையே flashbackஆக வரும் தொங்குபாலக் காட்சிகளும்..


கலிங்கத்துப் பரணியை மிகப் பொருத்தமாக இரு இடங்களில் கையாள்வது class.
ஐஸ்வர்யாவின் ஆடைகளாலேயே கணவரையும் காதலரையும் காதல் பிரிவிலும் தவிப்பிலும் உணர்த்துவதும் கவிதையே. 


அருமையான காட்டு சிறுக்கி பாடலை படத்தில் ஏனோ வைக்கவில்லை. அதற்குப் பதில் ஒரு அடர் குரலில் விருத்தமாக மட்டும் ஐஸ்வர்யா-விக்ரம் இடையிலான ஊடல் சண்டையாகக் காட்டுகிறார்.
ராமர் மனைவி ராவணனோடு டூயட்டா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்கா?


படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.


கடவுள் சிலையருகே விக்ரம் கொஞ்சம் தாபம்,கொஞ்சம் வேதனை,கொஞ்சம் கெஞ்சலோடு ஐஸ்வர்யாவிடம் கேட்கும் கேள்விகளும்,பின்னர் செய்யும் காதல் பிரகடனமும் மனசில் நிற்கின்றன..
இங்கேயே பதிவிட்டால் உங்களுக்கு அந்த சிலிர்ப்புக் கிடைக்காது..
பார்த்து உணருங்கள்..உருகுங்கள்.


ஆனால் என்னை மிகக் கடுப்பாக்கிய விஷயம்..
உசுரே போகுதே பாடல் வருமிடம்..
படத்தின் ஆரம்பத்திலேயே இப்பாடல் வந்துவிடுவதால் பாடலும் ஒட்டவில்லை.. அதேநேரம் ராவணின் காதலோ,மோகமோ ஆழமாகப் பதியவுமில்லை. 
வழமையாக மணி பாடல்களை சரியான இடங்களில் பொருத்துவதில் கிங். இம்முறை இந்தப் பாடலில் மட்டும் சறுக்கி இருக்கிறார். 

மணி ரத்னத்தின் படங்களில் வழமையாக இருக்கும் எதோ ஒன்று ஸ்பெஷலான ஒன்று இந்தப்படத்தில் மிஸ்ஸிங்.. ரசிகர்களே நீங்களும் உணர்ந்தால் சொல்லுங்கள்.


நீண்ட காலப் படப்பிடிப்பு இதற்கு ஒரு காரணமோ?


ஆனால் படப்பிடிப்பு நடந்த இடங்களின் தெரிவு மிக அருமை.சாதாரணர் நாம் எல்லாம் நினைத்தும் பார்க்க முடியா இடத் தெரிவுகள்.இந்த இடங்களின் குளுமையை அனுபவிக்கவும் கமெராக் கோலங்களை ரசிக்கவும் மட்டும் மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.


உயரமான ஆபத்தான மலைகளைப் பார்க்கும் போது விக்ரம்,ஐஸ்வர்யா மட்டுமல்லாமல் படப்பிடிப்புக் குழுவே பட்டிருக்ககூடிய கஷ்டமும் அவர்கள் எடுத்த கடும் முயற்சிகளும் தெரிகிறது.
ஆனால் படத்தின் மொத்த செலவு 120 கோடி இந்திய ரூபாய் என்பது அழகான,பிரம்மாண்டமான செட்களிலேயே தெரிகிறது.


இறுதிக் காட்சிகளுக்கு கொஞ்சம் முன்னதாக ஒரு சிறு தொய்வு. வழமைக்கு மாறாக மணிரத்னத்தின் படமொன்றில் அதிக வசனங்கள்.
கடவுள் சிலைக்கு முன்னால் விக்ரமும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்களில் தொனிக்கும் காரம் அனேக இடங்களில் மிஸ்ஸிங்.


முடிவு நான் எதிர்பார்த்ததே.. ஆனால் அந்தப் பாடல் ரஹ்மானின் இசையில் மனதைப் புரட்டி எதோ வலிக்க செய்தது.. செய்கிறது.. இப்போது வரை..



நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !




ராவணன் பற்றி ஏகமாக எதிர்பார்ப்புக்கள் இருந்ததோ என்னவோ எனக்கு பூரண திருப்தி இல்லை.
ராமாயணத் தழுவல் என்பதால் அடுத்த காட்சிகள் இப்படி இருக்கும் என ஊகித்து ஊகித்து திரைக்கதையோடு லயிக்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கும்.


அங்கு இங்கு என ஆழ்ந்து ரசித்த பல விஷயங்கள் இருந்தும், விக்ரமின் மேல் அபாரமாக ஈர்க்கப்பட்டும், சந்தோஷ் சிவனை நினைத்து நெக்குருகியும்,,ரஹ்மானின் இசை மேல் உயிர் வைத்தும் கூட,


ராவணன் - தனிப்பட எனக்கு முழுத் திருப்தி இல்லை.


மணிரத்னத்தின் தேடலுக்கு இதைவிட இன்னும் பலபடிகள் மேலே ராவணன் விஸ்வரூபம் எடுத்திருக்கலாம்.


நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..




ரஹ்மானின் குரலில் வைரமுத்துவின் ஆழமான அர்த்தமுள்ள வரிகள் இன்னமும் ஆன்மாவை நிறைத்து இன்னொரு யுகம் வாழும் புத்துணர்வு தருகிறது.
இந்த வரிகளை மீண்டும் இசையுடன் நிரப்பவும் ஒரு தடவை ராவணன் பார்க்கவேண்டும்.
அப்போது பிடித்தால் மறக்காமல் உங்களுக்கு சொல்கிறேன்.


# மனசுல உள்ளதை எல்லாம் கொட்டி முடிக்க அலுவலக மும்முரத்துடன் நேரம் போயிட்டுது. ரொம்ப நேரமாக் காத்திருந்த நண்பர்களே SORRY! 
அடுத்த SORRY இவ்வளவு நீளமாகப் பதிவு போட்டமைக்கு..
என்ன செய்ய மனசிலே இருக்கும் அத்தனை விஷயமும் சொல்ல வேண்டாமோ??

பிற்சேர்க்கை - பல நண்பர்கள் பின்னூட்டங்கள் மூலமாக நான் வருவேன் பாடலை இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
ஆனால் ராவணன் பாடல் வெளியீட்டில் ரஹ்மானும் வைரமுத்துவும் உரையாடும்போது
'வீரா' பாடல் மட்டும் வைரமுத்து ஊருக்குப் போயிருந்தநேரம் இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சொல்கிறார்கள்.

இங்கே நன்றாக அதைக் கேட்டு அவதானியுங்கள்..
நான் வருவேன் - ராவணன் 

June 17, 2010

ராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு

ராவணன்






நாளை முதல் உலகெங்கும்..
வழமையான மணிரத்னம் படங்களுக்கு இருப்பது போலவே அதிக எதிர்பார்ப்புக்களும் பரபரப்பும், படம் வரும் முன்னரே, கதை என்னவென்றே தெரியாமல் சர்ச்சைகளும் விமர்சனங்களும்.


ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்தின் நேரடித் தமிழ்ப் படம் ஒன்று வருகிறது.
இதில் வேறு இன்று எதோ ஒரு இணையத் தளத்தில் தன்னுடைய இறுதிப் படமாக ராவணன் இருக்குமென்றும் மணிரத்னம் சொல்லி மேலதிகப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.


இன்று மாலையே ராவணன் பார்த்துவிடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என நினைக்கிறேன்.


இலங்கையில் திரையிடப்படவுள்ள ராவணனுக்கு எங்கள் வெற்றி வானொலியே உத்தியோகபூர்வ வானொலி என்பது மேலதிக தகவல் & பெருமை.


ராவணன் பார்க்க வீட்டிலிருந்து கிளம்பு முன், வெளிவந்த நாளில் இருந்து என் உசிரைக் கொள்ளை கொண்ட இந்தப் படத்தின் ஒரு பாடல் பற்றி என் பகிர்வு இந்தப் பதிவு..


வைரமுத்து தான் கவித்துவத்தை மையாகப் பிழிந்து எழுதிய 'உசிரே போகுது...'


கேட்கும் போதெல்லாம் மனசைப் பிழிந்து ஏதோ செய்கிறது.


ராவணனாக உருவகப்படுத்தப்பட்டுள்ள நாயகன் மாற்றான் மனைவி மீது மையலுற்றுப் பாடுகிற பாடலாக இந்தப் பாடலை நினைத்துக் கேட்கையில் உருகி வழியும் விரகதாபமும், அளவு கடந்த காதலும் பாடலில் தொனிக்கிறது.


(இது ராமாயணத்தின் தழுவல் இல்லை என்று மணிரத்னம் சொன்னாலும், படம் பார்த்த பின் தான் அதை நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கும்.. நாயகன் 'ராவணன்' இல்லாவிட்டால் பாடல் இன்னும் ஒரு அர்த்தம் தரலாம்..)


கார்த்திக் பாடலுக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார்.வைரமுத்துவின் வரிகள் இவரால் உயிர் பெற்று எங்கள் உயிர்களை அசைக்கிறது.


ஆரம்பத்தில் மெல்லிய மணியோசை(சீன மடாலயங்களில் கேட்கும் மணி போல இருக்கிறது), பேஸ் கலந்த மெதுவான தாளக் கருவியுடன் ஆரம்பிக்கும் இசையில் ரஹ்மான் காட்டியிருப்பது சோகமா,கொஞ்சம் கள்ளத்தனமா என்று யோசிக்கவேண்டி இருக்கிறது.


 இவ்வாறு பேசலாமா பாடலாமா என்பது போல தயங்கித் தயங்கி ஆரம்ப இசையும் விருத்தமும் ஆரம்பிக்கின்றன..
அதன் பின் உணர்வுகள் அறுபட ஏங்கும் மனசு ஓலமிட ஆரம்பிக்கிறது..
குரலிலும் இசையிலும் ஒருவகை உத்வேகமும் ஆவேசமும் எழுகிறது.


உசுரே போகுது என்று அலறும் நாயகன்.. இடையே கொஞ்சம் தயங்கி மடிப் பிச்சையும் கேட்கிறான்.. 


அக்கினிப் பழம் என்று நாயகியை வர்ணிக்குமிடம் அருமை..
இதையே ஒத்த கற்பனையை 'காதல் மன்னன்' படத்தின் உன்னைப் பார்த்த பின்பு தான் பாடலிலும் அவதானித்துள்ளேன்..


'நீ நெருப்பு என்று தெரிந்திருந்தும் 
உன்னைத் தொடத் துணிந்தேன்
என்ன துணிச்சலடி'


உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல




சாதாரண வரிகள்.. ஆனால் உணர்வுகளுடன் சேர்ந்து ஒலிக்கும்போது மனசைத் தொடுகின்றன.
வரிகளை இசைக்கேற்ப உடைக்காமல் கிராமிய சுவையும் காதலின் இனிமையும் சேர்ந்து தொட்டுத் தந்த கவிஞருக்கு என்ன சொல்லி வாழ்த்தினாலும் தகும்.


இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் முதலில் ஹிந்தியிலே வந்து பின்னரே தமிழில் மாற்றம் செய்யப்பட்டவை என்பதை உணரவே முடியாதவாறு செய்கின்றன வரிகளும் இசையும் பின்னிப் பிணையும் இடங்கள்.


என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா




இதை என்ன சொல்லலாம்? காதல் கிறுக்கா? காமப் பசியா? காதல் வேதனையா?
தீர்த்து வைத்த பின்னர் மன்னிக்க சொல்லும் இந்த இடம் ஒன்று நாயகனின் குழப்பம் சொல்லப் போதும்.


சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே




ராவணனாக நாயகன் இருக்கும் பட்சத்தில் அவனது நல்ல இயல்புகளையும் இந்த வரிகளில் பூடகமாக சொல்கிறார் வைரமுத்து..
அவன் சத்தியம் காத்தவன். சீதையைக் காணும் வரை  அவனும் ஏக பத்தினி விரதன். 


இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில




இந்த வரிகள் தான் இது இராவணன் - சீதை விவகாரம் என அடித்து சொல்லும் இடம் என நான் நினைக்கிறேன்.
ஒழுக்கத்தில் விலகி செல்லும் பலர் எக்காலத்திலும் இருந்துள்ளார்கள் என நாயகிக்கு சாட்டு சொல்கிறான் நாயகன்..
தொடர்ந்தும்...


விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல


என்று சப்பைக்கட்டு வேறு..




அடுத்த வரிகள் வேதனையுடனும் விரகத்துடனும் கொஞ்சம் இயலாமையுடனும், இவற்றையெல்லாம் தாண்டி சாந்த சுவையுடனும் வந்து குதிக்கின்றன..


எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல




கேட்கையில் மனசை தோ செய்வதோடு, உதடுகள் அடுத்த முறை தானாக முணுமுணுக்கவும் செய்கின்றன.


பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே


புத்திக்கு தெரிந்தும் மனசுக்குப் புரியாத நிலையை இதைவிட எளிதாக அதே நேரம் அழகாக சொல்லத் தெரியுமா வேறு யாராலும்?




காதலுக்கும் காமத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு நூலிழையை அறுக்காமல் ஆட்டி அசைத்து வைரமுத்து தந்துள்ள வரிகளைக் காயமேற்படுத்தாமல் ரஹ்மான் மெருகூட்டி மேலும் உணர்வுகளூட்டி வழங்கி இருக்கிறார்.
பொருத்தமான குரல்களைப் பயன்படுத்துவதில் இசைப் புயலுக்கு நிகர் அவரே என மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்.



மனசை அண்மையில் கொஞ்ச நாளாக ஆட்டி வைத்துக் கொண்டுள்ள பாடலை உங்களோடு பகிர்ந்துகொண்டதில் ஒரு ஆத்ம திருப்தி.
இனி காட்சியில் இது எப்படி விரிகிறது என்று பார்க்க முதல் காட்சிக்காக கொன்கோர்ட் திரையரங்கு விரியப் போகிறேன்.


பார்த்திட்டு வந்து பகிர்கிறேன்.


கீழே வரிகளும் , படங்களுடன் ஒலி வடிவில் பாடலும்..


எத்தனை தடவை இதுவரை கேட்டிருந்தாலும் இன்று மறுபடி கேட்டுப் பாருங்கள்.. புதிதாய் ஒலிக்கும்,,.






பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்


படம் : ராவணன்


இசை : ஏ.ஆர்.ரஹ்மான்


பாடல்: வைரமுத்து






இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி






உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே


அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி




உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி


இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா






சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே






[உசுரே போகுதே உசுரே போகுதே…]






இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல


எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல


பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே


என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா


நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள


சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே




[உசுரே போகுதே உசுரே போகுதே…]


புத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010

தேசிய கலை இலக்கியப் பேரவையால் நடத்தப்படும் நல்ல பயனுள்ள நிகழ்வொன்றை இங்கே பதிவிடுகிறேன்.
பல பேர் பயனடைய எதோ என்னால் இயன்ற ஒரு சிறு பங்களிப்பு..
பல பதிவர்களும் இந்நிகழ்விலே பங்குபற்றுகிறார்கள் என்பது ஒரு சிறப்பு.

நேரம் உள்ளவர்கள். ஆர்வமுள்ளவர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

புத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010





மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்

இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை
571/15 காலி வீதி வெள்ளவத்தை
(றொக்சி திரையரங்கிற்கு முன்)

காலம் 18,19,20–06–2010
(வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்)

தேசிய கலை இலக்கியப் பேரவை

நிகழ்ச்சி நிரல்


18.06.2010 (வெள்ளிக்கிழமை)
மு.ப. 9.00  ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி;.ப 6.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – சைறா கலீல்

நூல்களின் அறிமுகம்
“கல்லெறி தூரம்" – கவிதைத் தொகுப்பு : மௌ. மதுவர்மன்
“தொடரும் உறவுகள்" - மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிவ மிர்துளகுமாரி
 “யாழ்பாணத்து நீர்வளம்" – ஆய்வு நூல்  சி.க.செந்திவேல்
“மனைவி மகாத்மியம்" – சிறுகதைத் தொகுப்பு : திக்வெல்லைக் கமால்
கலை நிகழ்வுகள்
----------------------------------------------------------------------------------------------------
19.06.2010 (சனிக்கிழமை)
மு.ப.9.00 - ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – தர்சிகா தியாகராஸா

நூல்களின் அறிமுகம்

“நீண்ட பயணம்" – நாவல் : மு மயூரன்
“பெண்விடுதலைவும் சமூகவிடுதலையும்" – ஆய்வு : எல்.தாட்சாயினி
“முறுகல் சொற்பதம்" – கவிதைத் தொகுப்பு : க.இரகுபன்
“ஆர்கொலோ சதுரர்" – நாட்டிய நாடகம் : சோ. தேவராஜா

கலை நிகழ்வுகள்

-----------------------------------------------------

20.06.2010 (ஞாயிற்றுக்கிழமை)
மு.ப. 9.00 : ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 : நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தரைமை – ச தனுஜன்

நூல்களின் அறிமுகம்

“ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்“ – கவிதைத் தொகுப்பு : வி. விமலாதித்தன்
“வேப்ப மரம்" – சிறுகதைத் தொகுப்பு : A.R.V.லோஷன்
“நாமிருக்கும் நாடே" – சிறுகதைத் தொகுப்பு – மெ.சி.மோகனராஜன்
“செங்கதிர்",“நீங்களும் எழுதலாம்" – சஞ்சிகைகள் : சி.சிவசேகரம்

கலை நிகழ்வுகள்

June 15, 2010

பாவம் அப்ரிடி..





உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகளுக்கிடையில் வழமையான பரபரப்பு எதுவுமின்றி சத்தமில்லாமல் இன்றைய தினம் இலங்கையின் தம்புள்ளையில் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.


என்னைப் போலவே இன்னும் பல கிரிக்கெட் ரசிகர்களும் இம்முறை இந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளை பெரிய ஆர்வத்தோடு நோக்கவில்லை.
அதிகரித்துப் போன கிரிக்கெட் போட்டிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அடிக்கடி இந்த அணிகள் தமக்குள்ளே விளையாடியதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.


எனினும் இன்று பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி அனல் பறக்கும் பரபரப்பையும் இறுதிவரை சுவாரஸ்யத்தையும் தந்திருந்தது.
பகல் முழுவதும் அலுவலக வேலைகளுக்கு மத்தியில் மாலையில் இருந்த உலகக் கிண்ணத்தின் இன்றைய முதலாவது போட்டி சுவாரஸ்யத்தைத் தராததாலும், இலங்கையின் துடுப்பாட்டத்தின் சில முக்கியமான தருணங்களை நான் தவற விடவில்லை.


அண்மைக் காலத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நான் அவதானிக்கும் ஒரு முக்கியமான அம்சம் தான், என்ஜெலோ மத்தியூசின் அவசியம்.
இன்றும் மத்தியூஸ் தனது இருப்பின் அவசியத்தைத் தெளிவாகவே உணர்த்தி இருக்கிறார்.


ஆரம்பத்தில் டில்ஷான்,தரங்க விரைவாக ஆட்டமிழந்த பிறகு மஹேல,சங்கா இணைப்பாட்டம் ஒன்றின் மூலமாக (83 ஓட்டங்கள்) இலங்கை அணியைக் கட்டியெழுப்பிய பிறகு மீண்டும் வழக்கமான மத்திய வரிசை சறுக்கலை (Middle order slump) இலங்கை எதிர்கொள்ள, ஆபத்பாந்தவராக வந்தார் மத்தியூஸ்..
மீண்டும் ஒரு அரைச் சதம்..
அருமையான ஒரு finisher ஆக மாறி வருகிறார்.


தம்புள்ளையில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு எதிரணியைத் தடுமாற வைக்க ஆகக் குறைந்ததாக அவசியப்படும் 240ஐ இலங்கை தாண்டிய பிறகு பாகிஸ்தான் இன்று வெல்வதாக இருந்தால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தேயாக வேண்டும் என்று நினைத்தேன்..


ஒன்றா இரண்டா எத்தனை அதிசயங்கள்..


மீண்டும் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் திரும்பிய ஷோயிப் அக்தார் நல்ல பிள்ளையாக,அடக்கத்தோடு நடந்து கொண்டார்.
கொஞ்சம் வேகம் குறைந்திருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.


பாகிஸ்தான் வழக்கத்தை விட சிறப்பாகக் களத்தடுப்பில் ஈடுபட்டது.


முரளியின் பந்துவீச்சுக்கு மரண அடி.. 
தம்புள்ளையில் கூடுதல் விக்கெட்டுக்களை எடுத்துள்ள முரளி இன்று மைதானத்தின் அத்தனை மூலைகளுக்கும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்.
பத்து ஓவர்களில் 71 ஓட்டங்கள்.
மென்டிஸ் தப்பித்தேண்டா சாமி என்று நிம்மதியாக இருப்பார்.
(மாண்புமிகு MP சனத்துக்குப் பிறகு முரளி அங்கிள் தானோ?)


நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்ரிடி அனாயசமாக தனது அதிரடியை நிகழ்த்தி இருந்தார்.
அடியா அது? ஒவ்வொன்றும் இடி..


அப்ரிடி = அதிரடி
தனித்து நின்று ஒரு சிங்கம் மைதானத்தில் வேட்டையாடியது போல் இருந்தது..
ஏழு சிக்சர்கள். ஒவ்வொன்றும் அனல் பறக்கும் அடிகள்.
எந்த ஒரு பந்துவீச்சாளராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
76 பந்துகளில் அவரது அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையான 109 ஓட்டங்களை இன்று எடுத்தார்.
அத்துடன் இன்று ஒருநாள் போட்டிகளில் அப்ரிடி 6000 ஓட்டங்களையும் கடந்தார்.


தனித்து நின்று போட்டியை வென்றெடுத்து விடுவாரோ என இலங்கை ரசிகர்கள் கவலையுடன் இருக்க வழமையான அவசரமும், காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பும் அப்ரிடியை ஆட்டமிழக்க செய்தன.


அதற்குப் பிறகு ரசாக் தானாக துடுப்பாட்டத்தை சுழற்சி அடிப்படையில் தன் வசப்படுத்தி வெற்றிக்கு முயற்சித்திருக்கவேண்டும்.ஆனால் லசித் மாலிங்க பாகிஸ்தானுக்கு எமனாக வந்துவிட்டார்.


வெல்ல வேண்டிய ஒரு போட்டியில் பாகிஸ்தான் தங்கள் தலைவர் அப்ரிடியை ஏமாற்றி விட்டது.


இன்னொரு அதிசயம், சங்கா ஐந்தே பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்.


மீண்டும் தம்புள்ளையில் இலங்கைக்கு ஒரு வெற்றி.


ஆனால் இந்த வெற்றி நிச்சயம் ஒரு முக்கியமான வெற்றி..காரணம் தோற்கும் விளிம்பிலிருந்து மீண்டும் நம்பிக்கையுடன் பெறப்பட்டிருக்கும் வெற்றி.


மாலிங்கவின் பந்து வீச்சு புயல் என்றால்,ஆரம்பத்தில் பாகிஸ்தானிய துடுப்பாட்டத்தை சிதறடித்த குலசேகர,மத்தியூசின் பந்துவீச்சுப் பற்றியும் பாராட்டியே ஆகவேண்டும்.




மாலிங்கவின் இறுதி நேர யோர்க்கர்களும் வேகம் மாற்றிய பந்துகளும் துல்லியம் & அபாரம்.
பாகிஸ்தானியப் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ் தன்னுடைய இளவயதை rewind பண்ணியிருப்பார்.
Marvellous Malinga..


நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குள் வந்த மஹ்ரூப் சரமாரியாக அடிவாங்கி ஏமாற்றி விட்டார்.அடுத்த போட்டியில் சுராஜ் ரண்டிவ் அணிக்குள் வரலாம்.
பாகிஸ்தானின் புதிய அறிமுகங்களும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை.


ஆசியக் கிண்ணப் போட்டிகளில் தொடரும் இலங்கையின் ஆதிக்கமும், பாகிஸ்தானிய சறுக்கல்களும் மாறிலி எனவே தோன்றுகிறது. 


இடையிடையே கால்பந்தாட்ட ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன் கோல்கள் இல்லாவிடினும் ஐவரி கோஸ்ட்- போர்ச்சுக்கல் போட்டி விறுவிறுப்பாகவே இருந்தது.
தலைவர்களின் ஆளுமை அந்தப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
ட்ரோக்பா கை முறிவு குணமாகி மீண்டும் இன்று ஆக்ரோஷமாக மோதியது சிறப்பு.
கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இறுதிவரை முயன்றார்.


பலம் வாய்ந்த போர்ச்சுக்கலை மடக்கி சமநிலையில் ஐவரி கோஸ்ட் போட்டியை முடித்தது அபாரம்.
ஆசிய ஆபிரிக்க அணிகள் தம்மாலும் முடியும் எனக் காட்டுகிறார்கள்.


ஆனால் இன்று நள்ளிரவு வட கொரிய அணி பிரேசிலிடம் வாங்கிக் கட்டும் என்றே நினைக்கிறேன்.பிரேசில் பெறப் போகும் கோல்கள் மூன்றா நான்கா என்பதே இப்போது கேள்வி ;)


இந்தப் போட்டிக்குப் பின்னதான உலகக் கிண்ண வெற்றியாளர்களுக்கான வாய்ப்புக்களை இங்கே அவதானியுங்கள்..


தலைவர்கள் தனித்து நின்று தலைவிதிகளை மாற்றக் கூடியவர்கள் தான்..
பல வேளைகளில்..


நாளை தோனியும் ஷகிப் அல் ஹசனும் என்ன செய்வார்கள் பார்க்கலாம்..

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner