March 15, 2010

அடி சக்கை IPL - முதல் மூன்று நாள் அலசல்IPL 2010ன் முதல் 3 நாட்களின் நிகழ்வுகளின் தொகுப்பு இது.

ஒரு வருடத்தின் பின் தாயகம் திரும்பிய IPL இன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆரம்ப நிகழ்வுகள் - கலை நிகழ்ச்சிகள் அயர்ச்சியையும் அசதியையும் தந்திருந்தன.

ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆரம்ப நிகழ்வுகளில் சிக்கென்ற உடையில் A.R.ரஹ்மானின் ஒஸ்கார் புகழ் ஐய்ஹோ பாடலுக்கு ஆடிய நடனம் மட்டுமே பார்க்கக்கூடியதாக இருந்தது.

நாணய சுழற்சியும் தாமதமாக, ஒரு கட்டத்தில் எரிச்சல் வந்து பொறுமை இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டேன்.

என் வீட்டின் Dish TV இணைப்பில் IPL ஐ ஒளிபரப்பும் Set Max இருக்கவில்லை. ஒருசில நாட்கள் முன்னர்தான் மேலதிக பணம் செலுத்தி இணைப்பைக்கேட்டிருந்தேன்.

இந்தியாவில் IPLஇன் பரபரப்பினால் Set Maxற்கு ஏற்பட்ட அதிக வரவேற்பு எனக்கு கிடைக்கவேண்டிய இணைப்பைத் தாமதமாக்கிவிட்டது.

இதனால் IPLஇன் நேரடி இணைய ஒளிபரப்பிலே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

நல்லகாலம் அடுத்தநாளே Set Max வந்துவிட்டது.

=======

IPL ஐப் பணமயமாக்கி கிடைக்கும் ஒவ்வொரு இடுக்கிலும் பணம் பார்க்கும் லலித்மோடி கடந்த IPLஇல் Strategy breakஎன்ற இடைவேளையை உருவாக்கி, ஒவ்வொரு பத்து ஓவருக்குமிடையில் 7 1/2 நிமிடங்களை விளம்பரமாக்கி காசு பார்த்திருந்தார்.

எனினும் இந்த இடைவேளையானது வீரர்களின் மனநிலையையும் போட்டியில் விரைவுத் தன்மையையும் பாதிப்பதாகக் கண்டனங்கள் எழுந்திருந்தன. முக்கியமாக சச்சின், கில்கிறிஸ்ட், சங்கக்காரவிடமிருந்து

இதனால் இம்முறை இந்த இடைவேளை (விளம்பர இடைவேளை) 2 1/2 நிமிடங்களாகக் குறைக்கப்பட்;டதோடு, பந்துவீசும் அணியின் வியூகங்களை திட்டமிடலாம் என மாற்றப்பட்டுள்ளது.

நல்லது.
ஆனால் இந்த இடைவேளைக்கும் ஒரு அனுசரணையாளர். என்ன கொடுமை இது Mr.மோடி.IPL போட்டிகளை இம்முறை தொலைக்காட்சியில் பார்ப்பது கடந்த முறைகளில் பார்த்த கேளிக்கை உணர்வுகளை தராமல் வழக்கமான கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

காரணம் முதல் இரு IPLஇலும் ஒரு ஓவருக்குள் நான்கைந்து தடவையாவது திரைகளில் ப்ரீத்திகளும், ஷில்பாக்களும், ஷாருக்களும், Cheer leading girlsமே தெரிவார்கள். இல்லை மோடி கோட் சூட்டுடன் தெரிவார்.

இந்தத் தடவை கிரிக்கெட்டே அதிகமாகத் திரையில் தெரிகிறது. மகிழ்ச்சி!

(நீங்க வேற... வயதேறிய ப்ரீத்தியையும், ஷில்பாவையும், தைய்யா தக்காவென குதிக்கும் cheer leading பெண்களையும் பார்த்து விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டிகளைக் கடுப்பாக்கிக்கொள்வதைவிட only cricket எவ்வளவோ பரவாயில்லை)

===========

கடந்த முறை தடுமாறிய அணிகளே இம்முறை Favourites என்று கருதப்படும் பலம்வாய்ந்த அணிகளைத் தோல்வியுறச் செய்துள்ளன. நேற்றிரவு நடப்புச் சம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் மட்டும் தம்மை நடப்புச் சம்பியனாக நிரூபித்துக்கொண்டார்கள்.

வட்மோர் - வசிம் அக்ரம் - கங்குலியின் கூட்டில் கொல்கத்தாவும் (மத்தியூஸ் மாயாஜாலம் மிகமுக்கியமானது) – சச்சின் - ரொபின்சிங் - ஜொண்டியின் கூட்டில் மும்பாயும் கலக்குகின்றன.

கொல்கத்தாவின் உத்வேகம் அசத்துகிறது.

=========

IPL என்றால் வீரர்களுக்குப் பணம் கொழிக்கும் போட்டிகள் தானே ஞாபகம் வரும்?
ஆனால் நான்கு தலைவர்கள் இந்த ஐந்து போட்டிகளுக்குள்ளாக தலா 20000 டொலர்களை இழந்துள்ளார்கள்.. தண்டப்பணமாக.

தமது அணிக்குரிய ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டமைகாக கங்குலி,டெண்டுல்கர்,சங்கக்கார, கம்பீர் ஆகிய நால்வருமே பணத்தைக் கொடுத்த பாவிகள்.
இப்படியே ஒவ்வொரு போட்டியிலும் நடந்தால் இவர்கள் சம்பளமும் காலி.போட்டிகளில் விளையாடவும் முடியாது.


=============

அணிகளின் ஜேர்சிகளில் சென்னை, பெங்களுர், பஞ்சாப் மாற்றவில்லை. ராஜஸ்தான் வாய்க்கவில்லை.

கொல்கொத்தாவில் ஊதா அதிர்ஷ்டம் மேல இருக்கிறது. ஆனால் அழகில்லை.

டெல்லி பரவாயில்லை. டெக்கான் நீலம் அழகாயிருக்கிறது.
மும்பாய் தான் இம்முறை நேர்த்தியான அழகு. அடர் நீலத்தில் அழகான தங்க நிற வேலைப்பாடு.

============

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று – ஒதுங்கியிருந்தும் கில்கிறிஸ்ட், வாஸ், சைமண்ட்ஸ் ஆகியோரின் கலக்கல் அதிரடிகளும், இன்னும் fit ஆக இருக்கும் ஹெய்டன், கங்குலி, வோர்ன், கும்ப்ளே ஆகியோரும் ஆச்சரியப்படுத்துகின்றனர்.

இளையோருக்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள்.

இவர்களுடன் இணைந்துகொள்ள மேற்கிந்தியத்தீவுகளின் பிரையன் லாராவுக்கும் வலை விரிக்கப்படுகிறது. கொல்கொத்தா-பெங்களுர் போட்டியின்போது மோடியுடன் தொலைக்காட்சியில் லாராவும் வந்த போதே IPL 4 இற்கு லாராவை அழைப்பது பற்றி சிரிப்புடன் கொஞ்சம் சீரியசாகக் கேட்டபோது லாரா உடனே மறுக்கவில்லை.

"ஜிம்முக்குப் போக வேண்டும் போல இருக்கு.. என் உடல் இன்னும் ஒரு சில மாதங்களில் என்ன சொல்கிறதோ அதன்படி செய்யலாம் "என்றார் லாரா சிரித்தபடி.
லாராவுக்கு வயது 40 .

=========

இதுவரை ஐந்து போட்டிகளில் 54 சிக்சர்கள் பறந்திருக்கின்றன.இது தென் ஆபிரிக்காவில் நடந்த கடந்த IPL ஐ விட அதிக ஓட்டங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதையே காட்டுகிறது. இந்திய ஆடுகளங்களும் துடுப்பாட்ட சாதகமானவை தானே..

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் பல சுவாரஸ்யங்கள்..

தமிழ்க் குத்துப்பாடல்களை இடையிடையே கேட்கக் கூடியதாக இருந்தது.
சிவமணியின் ட்ரம்ஸ் வாத்திய வாசிப்பு..ரசிகர்களின் ஆர்வம்..
இதெல்லாவற்றையும் விட இன்னொன்று..
நாயொன்று போட்டியை இடையிடையே ஸ்தம்பிக்க வைத்தது..
கடந்த IPL இலும் சென்னையின் முதல் போட்டியில் நாயொன்று புகுந்தது ஞாபகமிருக்கலாம்..

சிங்கங்களுக்கு நாய் வருவது துரதிர்ஷ்டமோ??

==========

இந்த மூன்று நாட்களில் யூசுப் பதானின் அதிவேக சதம் தான் மிக முக்கியமான மைல் கல். அசுர அடி அது.ஆனால் பாவம் அவரது அணி தான் தோற்று விட்டது.இன்றிரவும் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.

IPL வரலாற்றில் வேகமான சதம் இது.ட்வென்டி 20௦ போட்டிகளில் இரண்டாவது வேகமான சதம்,
(வேகமான ட்வென்டி 20 சதம் அன்றூ சைமண்ட்சினால் இங்கிலாந்து பிராந்தியப் போட்டியொன்றில் 34 பந்துகளில் பெறப்பட்டது)

ஆனால் இப்போதைக்கு இந்த IPL இன் கதாநாயகர்கள் இருவருமே இலங்கையர்கள் தான்...

பந்தாலும்,துடுப்பாலும் இரு போட்டிகளிலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அஞ்சேலோ மத்தியூசும், இரு போட்டிகளிலும் துல்லியமான பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுக்களை சரித்து இலங்கைத் தேர்வாளர்களின் முகத்தில் கரி பூசியுள்ள சமிந்த வாசுமே அவர்கள்.

மத்தியூஸ் தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலுமே உலகறியத் தன் சகலதுறைத் திறமைகளைக் காட்டி வருகிறார். பலம் வாய்ந்த அச்சுறுத்தும் பெங்களுர் அணியின் துடுப்பாட்ட வரிசையை உடைத்து நான்கு விக்கெட்டுக்களை குறைவான ஓட்டங்களுக்கு எடுத்தும் நேற்று போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது மனோஜ் திவாரிக்கு வழங்கப்பட்டது.

மீண்டும் form க்கு திரும்பியிருக்கும் அவரை ஊக்குவிக்கவோ? இல்லை அடுத்தடுத்த போட்டிகளில் மத்தியூசுக்கு கொடுக்கக் கூடாதென நினைத்தார்களோ?

தனது பந்துவீச்சில் வேகத்தையோ,பவுன்சையோ நம்பாமல் துல்லியம்,ஸ்விங் ஆகியவற்றினூடு விக்கெட்டுக்களை எடுக்கும் அதே வாஸை இரு போட்டிகளிலும் பார்த்தேன்.தேர்வாளர்களே எதிர்வரும் ட்வென்டி 20 உலகக் கிண்ணத்தில் வாசின் பங்களிப்பு நிச்சயம் உதவும்.கொஞ்சம் யோசியுங்கள்.

15 வருடங்கள் பின்னோக்கி சென்றால் இன்றைய இதே நாள் தான் வாஸ் தன்னை உலகறியச் செய்து இலங்கை அணிக்கு சரித்திரபூர்வமான முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த நாள்.
நியூ சீலாந்தில் வாஸ் இரு இன்னிங்க்சிலும் தலா ஐந்து விக்கெட்டுக்கள் எடுத்து சாதனை படைத்தார்.
ஆனால் இப்போது கொஞ்சம் வேகம் குறைந்தாலும் அதே ஈடுபாட்டையும் துல்லியத்தையும் பார்க்கிறேன்.

என்னைக் கவர்ந்த இன்னொருவர் கில்க்ரிஸ்ட்.ஓய்வு பெற்றும் என்ன துடிப்பு.. என்ன அதிரடி. கில்லி கில்லி தான். பதானுக்கு அடுத்தபடியாக கூடுதல் ஓட்டங்கள் குவித்துள்ளவரும் இவரே தான்.தலைமைத்துவத்திலும் ஜொலிக்கிறார்.

கம்பீரின் நிதானமான ஆட்டமும் கவர்ந்தது.தலைமைத்துவப் பொறுப்பான ஆட்டம் அது.

இன்று டெல்லியும் ராஜஸ்தானும் சந்திக்கும் போட்டி இரவில்.
முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய சேவாக்,டில்ஷான், ஷேன் வோர்ன்,ஷோன் டைட் ஆகியோருக்கான சந்தர்ப்பம்.
அதுபோல 'அசுர' பதான் இன்று என்ன செய்யப் போகிறார் என்பதையும் ஆவலோடு காத்திருக்கிறேன்..13 comments:

அனுதினன் said...

//நாணய சுழற்சியும் தாமதமாக, ஒரு கட்டத்தில் எரிச்சல் வந்து பொறுமை இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டேன்.//

Same Experience

//இதனால் இம்முறை இந்த இடைவேளை (விளம்பர இடைவேளை) 2 1/2 நிமிடங்களாகக் குறைக்கப்பட்;டதோடு, பந்துவீசும் அணியின் வியூகங்களை திட்டமிடலாம் என மாற்றப்பட்டுள்ளது.

நல்லது.
ஆனால் இந்த இடைவேளைக்கும் ஒரு அனுசரணையாளர். என்ன கொடுமை இது Mr.மோடி.
//

அனுசரையாளர் இல்லாமல் போனால் மோடி இல்லாமல் போய்விடுவாரே அண்ணா! அதுதான் அவர்களை அவர விடுவதாக இல்லை.

//இந்தத் தடவை கிரிக்கெட்டே அதிகமாகத் திரையில் தெரிகிறது. மகிழ்ச்சி!//

இன்னும் இருக்கே அண்ணா! போக போகத்தானே தெரியும்

//வட்மோர் - வசிம் அக்ரம் - கங்குலியின் கூட்டில் கொல்கத்தாவும் (மத்தியூஸ் மாயாஜாலம் மிகமுக்கியமானது) – சச்சின் - ரொபின்சிங் - ஜொண்டியின் கூட்டில் மும்பாயும் கலக்குகின்றன.//

பாகிஸ்தான் வேணாம் என்று சொன்னவர்கள் அவர்களின் பலத்தை(வஸீம்) வைத்து ஆடுவது வேடிக்கையானது! அதை சரியாக உப்யோக்கிகதேரியாத பாகிஸ்தானை என்ன சொல்ல்வது????

//தமது அணிக்குரிய ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டமைகாக கங்குலி,டெண்டுல்கர்,சங்கக்கார, கம்பீர் ஆகிய நால்வருமே பணத்தைக் கொடுத்த பாவிகள்.
இப்படியே ஒவ்வொரு போட்டியிலும் நடந்தால் இவர்கள் சம்பளமும் காலி.போட்டிகளில் விளையாடவும் முடியாது.//

இதத்தான் குடுக்கிற மாறி குடுத்துட்டு புடுங்கிறது என்றதோ !!


//சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று – ஒதுங்கியிருந்தும் கில்கிறிஸ்ட், வாஸ், சைமண்ட்ஸ் ஆகியோரின் கலக்கல் அதிரடிகளும், இன்னும் fit ஆக இருக்கும் ஹெய்டன், கங்குலி, வோர்ன், கும்ப்ளே ஆகியோரும் ஆச்சரியப்படுத்துகின்றனர்.


இளையோருக்கு நல்ல எடுத்துக்காட்டுக்கள்.//

அனுபவம் எப்போதுமே அவசியம் அண்ணா!

மற்ற விடயங்கள் பற்றி NO COMMENTS

PREMAKUMAR said...

IPL பார்கவில்லை என்றால் இதை வாசித்தவுடன் கிரிக்கெட் என்றால் நீங்கள் தான் அண்ணா.

Bavan said...

//ஆனால் இந்த இடைவேளைக்கும் ஒரு அனுசரணையாளர். என்ன கொடுமை இது Mr.மோடி.//

அடுத்த டாப் டென் பணக்கார்கள் லிஸ்டில் இனி மோடி வந்தாலும் ஆச்சரியமில்லை,

//(மத்தியூஸ் மாயாஜாலம் மிகமுக்கியமானது//

அதே..;)

//இப்படியே ஒவ்வொரு போட்டியிலும் நடந்தால் இவர்கள் சம்பளமும் காலி.போட்டிகளில் விளையாடவும் முடியாது.//

ஒருத்தர் ரெண்டுபோர் மாட்டியிருந்தா பரவாயில்ல, நான்கைந்து பேர் மாட்டியதால்தான் இந்த சந்தேகம், லலித் மோடி மணிக்கூட்டில் நேரத்தை கூட்டி வைத்து காசடிக்கிறாரோ?..ஹிஹி

//நாயொன்று போட்டியை இடையிடையே ஸ்தம்பிக்க வைத்தது..//

அதைக்கலைக்க யாரொ கத்தியது டிவியிலும் கேட்டது..

//சிங்கங்களுக்கு நாய் வருவது துரதிர்ஷ்டமோ??//

இருக்கலாம்..

//இந்த மூன்று நாட்களில் யூசுப் பதானின் அதிவேக சதம் தான் மிக முக்கியமான மைல் கல். அசுர அடி அது.ஆனால் பாவம் அவரது அணி தான் தோற்று விட்டது.இன்றிரவும் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது//

ஆம் என்னா அடி.. ஆனால் லலித் மோடி பாவம் ஏதோ பிசினஸ் போல பிறகு டிவிலதான் பார்த்தாராம் ருவிட் பண்ணியிருந்தார்..:p

//இரு போட்டிகளிலும் துல்லியமான பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுக்களை சரித்து இலங்கைத் தேர்வாளர்களின் முகத்தில் கரி பூசியுள்ள சமிந்த வாசுமே அவர்கள்.//

வாசின் பந்துவீச்சு பழைய நிலைக்குத்திரும்யிருக்கிறது..

மஹ்ருப், மலிங்கவும் கலக்குகின்றனர்தானே??...;)

Nirosh said...

சிறப்பான சரியான பகிர்விற்கு நன்றி அண்ணா, இந்தமுறை சம்பியன் ஆகும் அணியில் இலங்கை வீரர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என்பதே எனது எதிர்பார்ப்பும்...!

கன்கொன் || Kangon said...

கில்கிறிஸ்ற் பற்றி தவறாக எடைபோட்டு விட்டோனோ என்று நேற்று யோசித்தேன்.
மனிதர் கலக்குகிறார்.
பார்ப்போம்... :(

நேற்று மத்தியூசுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்படாமை உண்மையில் எரிச்சலைத்தந்தது.
4 பந்துப் பரிமாற்றங்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கற்றுக்கள் என்பது சாதாரணமானதில்லை.
லலித் மோடி சொன்னது ஞாபகம் வருகிறது 'ஐபிஎல் என்பது இந்தியத்தொடர்'.

நேற்று வாஸ் பரிசளிப்பில் நான் ரெஸ்ற்றிலிருந்து மட்டுமே ஓய்வுபெற்றிருக்கிறேன் ஒருநாளிலும், இருபதுக்கு இருபது போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன் என்ற போது ஒரு சோகம் ஏற்பட்டது ஒரு மாபெரும் சாதனையாளரை நாங்கள் ஒழுங்காகப் பராமரிக்கவில்லையோ என்று.

பந்துகளுக்கிடையில் விளம்பரம் போட்டு கடுப்பேற்றுகிறார்கள்.
ஆனால் உற்சாகப்படுத்தும் பெண்மணிகளின் ஆட்டம், பிரீத்தி சின்தா, அவா இவா போன்றவர்களை விடுத்து இம்முறை கிறிக்கற் பக்கம் கமராக்கள் செயற்படுவது மகிழ்ச்சியே.

அருமையான தொகுப்பு அண்ணா.

என்ன கொடும சார் said...

//ப்ரீத்தியையும், ஷில்பாவையும், தைய்யா தக்காவென குதிக்கும் cheer leading பெண்களையும் பார்த்து கடுப்பாகிக்கொள்வதைவிட//

உங்களுக்கு வயதேறிட்டில்ல. அப்படித்தான் இருக்கும்.. அது ஏன் உங்களுக்கு கடுப்பாகுது? வயிற்றெரிச்சல்?

யோ வொய்ஸ் (யோகா) said...

இலங்கை வீரர்களில் சங்கா, மகேல, டில்ஷான் தவிர்ந்த அனைவரும் சிறப்பாக விளையாடினர்.

ஆனாலும் ஐ.பி.எல்லில் மட்டும் விளையாடும் மாலிங்க மேல் கோபம் வருகிறது. என்ன தான் காசு முக்கியம் என்றாலும் தாய் நாட்டுக்கு விளையாடுதல் அதைவிட முக்கியமே. இலங்கை போட்டிகள் என்று வரும் போது அவருக்கு வருத்தம் வந்துவிடுகிறது.

Bavan said...

//ஆனாலும் ஐ.பி.எல்லில் மட்டும் விளையாடும் மாலிங்க மேல் கோபம் வருகிறது. என்ன தான் காசு முக்கியம் என்றாலும் தாய் நாட்டுக்கு விளையாடுதல் அதைவிட முக்கியமே. இலங்கை போட்டிகள் என்று வரும் போது அவருக்கு வருத்தம் வந்துவிடுகிறது. //

இல்லை அவரை கிட்டத்தட்ட காயத்தில் இருந்து குணமான பின்னர் 2 வருடங்கள் டெஸ்டில்(2007க்குப்பிறகு 2009வரை விளையாடவில்லை) விளையபடவிடவில்லை, பிறகு அவர் பெரிதாக பிரகாசிக்காமல் போகவே அணியில் சேர்க்கப்படவில்லை.. குற்றம் இலங்கை தேர்வாளர்களிடமும் உள்ளது, மலிங்கவை T20 என்றால் மட்டும் அழைப்பவர்கள் ஏன் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை?

Vijayakanth said...

Foreign palyers recognizes our players talents and they use them. Poor Srilankan cricket board has to revise it's selections on Vaas

Gilchrist.... I dunno why he retired from International cricket

வந்தியத்தேவன் said...

அண்ணன் என்ன கொடுமை சேரை வழிமொழிகின்றேன். உங்களுக்கு வயசாகிவிட்டது இன்றைக்கும் ப்ரீத்தி ஆண்டியும் ஷில்பா ஆண்டியும் அழகாகத் தான் இருக்கின்றார்கள் லோஷன் அங்கிள்.

நேற்றுப் பகல் இந்தப் பதிவை எதிர்பார்த்தேன். ஐபில் பார்க்கவில்லையென்றாலும் உங்கள் பதிவின் மூலம் ரசிக்ககூடீயதாக இருகின்றது.


சியர்ஸ் லீடர்களின் படங்களைப் பெரிதாகப் போட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.

aazeer said...

லோஷன் அண்ணா உங்க எழுத்துக்கள் அருமை நிண்ட நாட்களா வாசிக்கிறன் எதற்காக ஸ்ரீலங்கன் ஒளி பரப்புக்கள் ipl இ ஒளி பரப்பவில்லை தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகிறேன்

aazeer said...

லோஷன் அண்ணா உங்க எழுத்துக்கள் அருமை நிண்ட நாட்களா வாசிக்கிறன் எதற்காக ஸ்ரீலங்கன் ஒளி பரப்புக்கள் ipl இ ஒளி பரப்பவில்லை தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகிறேன் im aazeer

பிரியமுடன் பிரபு said...

who will win ipl come and vote here
http://priyamudan-prabu.blogspot.com/

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified