
நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நேற்று ஆஸ்திரேலியா தன் வசப்படுத்தியுள்ளது.
இத் தொடர் ஆரம்பிக்கு முன் ஆஸ்திரேலிய இளைஞர் அணியை விடப் பலரும் அதிகம் பேசிக்கொண்ட அணிகள் இந்தியா, தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து. இவை மூன்றுமே அரை இறுதியைக் கூட எட்டவில்லை.
சொந்த ஆடுகளங்களில் மிக எதிர்பார்க்கப்பட்ட நியூ சீலாந்து அணிக்கு கிடைத்தது ஏழாம் இடமே.
இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் காட்டிய திறமை இந்த இரு அணிகளுக்குமே எதிர்காலம் பிரகாசமானது என்பதைக் காட்டியுள்ளது.
ஆரம்பத்தில் தடுமாறிய மேற்கிந்தியத் தீவுகள் இறுதியில் மூன்றாம் இடத்தை வசப்படுத்தியது.
இலங்கை அணி இத்தொடர் முழுவதும் இறுதிவரை போராடிய அணிகளுள் ஒன்றாகத் தடம் பதித்து பெருமையோடு நான்காம் இடத்தைப் பெற்று நாடு திரும்பியுள்ளது.
இவர்களில் பல வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து இப்போதே கிடைத்துள்ளது.
அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் கடுமையாகப் போராடி இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் ஆஸ்திரேலியா மயிரிழையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
மேற்கிந்தியத் தீவுகளுடனும் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றும் கடைசிக் கட்டம் வரை சென்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில் தோற்றுப் போனது.
கடந்த முறை சாம்பியனான இந்தியாவுக்கு ஆறாம் இடம் கிடைத்தது.

ஒரு சுவாரஸ்ய படம்
உயர வித்தியாசம் பாருங்கள்.. உயரமானவர் ஆஸ்திரேலிய அணித்தலைவர் மிட்செல் மார்ஷ், குள்ளமானவர் பாகிஸ்தானிய அணித்தலைவர் அசீம் கும்மான்
இறுதிப் போட்டி ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய அணிகளின் இளையவர்களின் மனத்திடம், நிதானம்,நம்பிக்கை போன்றவற்றை சோதிக்கும் ஒரு களமாக அமைந்தது.
ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா 207 ஓட்டங்களை தட்டுத் தடுமாறி எட்டிப் பிடிக்க, அந்த சிறிய ஓட்ட எண்ணிக்கையை துரத்திப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் சுருண்டு தோற்றுப் போனது.
ஒரு பக்கம் தங்கள் மூத்தவர்கள் டாஸ்மன் நீரிணை தாண்டி பக்கத்து நாட்டிலே ஆஸ்திரேலியாவிடம் அடி மேல் அடி வாங்குவதற்கு நேற்றைய இறுதிப் போட்டியிலே பாகிஸ்தான் இளையவர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால், மூத்தவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் என சுருண்டுவிட்டார்கள்.
ஆஸ்திரேலிய அணி இளையவர்கள் காட்டிய பொறுப்புணர்ச்சியும், வெள்ளவேண்டியதன் தீவிரமும் அவர்களது எதிர்கால இலட்சியங்களையும், சமகால ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டமைப்பையும் காட்டுகின்றன.
பொருத்தமான அணி தான் சம்பியனாகியுள்ளது.

இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வூட்
இந்த அணியில் நேற்று 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியை வென்று கொடுத்து போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்ற ஹேசில்வூட், அலிஸ்டயர் மக்டர்மொட்(முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரின் புதல்வரே தான்),அணித் தலைவரான மிட்செல் மார்ஷ் (இவரும் ஒரு வாரிசே.. தந்தையார் ஜெப் மார்ஷ், தமையன் ஷோன் மார்ஷ் ஆஸ்திரேலியாவின் தற்போதைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்) ஆகியோரும் இன்னும் சிலரும் இப்போதே உள்ளூர் பிராந்தியப் போட்டிகளில் தத்தம் மாநில அணிகளில் விளையாடி வருகின்றார்கள்.

உலகக் கிண்ணத்துடன் மிட்செல் மார்ஷ்
பாகிஸ்தானின் சர்மாத் பாட்டி பந்துவீச்சில் நேற்று பிரகாசித்தது போல ஆஸ்திரேலியாவின் ஹேசில்வூட் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் டோரனும் ஜொலித்தனர்.
ஆஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் ரிச்சர்ட்சனின் துடுப்பாட்டம் என்னைக் கவர்ந்தது. அவரது இறுதிநேர முக்கியமான ஓட்டங்கள் தான் போட்டியை ஆஸ்திரேலிய பக்கம் மாற்றி இருந்தது.

சகலதுறைவீரர் கேன் ரிச்சர்ட்சன்
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை ஆஸ்திரேலியா வென்றிருப்பது இது மூன்றாவது தடவை.
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் பற்றிய எனது முன்னைய பதிவையும் வாசியுங்கள்.
ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்புக்கள் குறித்து அப்போதே சொல்லிவைத்திருந்தேன்.
இந்த உலகக் கிண்ணம் தந்துள்ள களம் எத்தனை எதிர்கால நட்சத்திரங்களைத் தரப்போகிறது பார்க்கலாம்..
நியூ சீலாந்தின் ஸ்விங் ஆடுகளங்களில் உலகின் பிரபல துடுப்பாட்ட வீரர்களே தடுமாறும்போது சிறப்பாகப் பிரகாசித்த தென் ஆபிரிக்காவின் ஹென்ரிக்ஸ் (391 ஓட்டங்கள்) தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றார்.
அத்துடன் சிறப்பான நேர்த்தியான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியிருந்த இலங்கை,பாகிஸ்தானிய துடுப்பாட்ட வீரர்களையும், ஆசிய அணிகளின்(பங்களாதேஷையும் சேர்த்தே) வேகப் பந்துவீச்சாளர்களையும் மன நிறைவோடும்,நம்பிக்கையோடும் பாராட்டலாம்.
சிரேஷ்ட வீரர்களே கவனமாயிருங்கள்.. உங்கள் இடங்களைக் குறிவைத்து திறமையும்,வேகமும் கொண்ட இளைஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இன்று நடந்த இரு முக்கிய விளையாட்டு நிகழ்வுகளான பெடரரின் ஆஸ்திரேலிய வெற்றி, ஆஸ்திரேலியாவின் 5-0 whitewash பெரு வெற்றி பற்றி அடுத்த பதிவிலே தருகிறேன்.
5 comments:
me the first, அப்புறம் வாசிச்சிட்டு பின்னூட்டுறேன்.
நம்ம இளையவர்கள் கலக்கினார்கள், சத்துர பீரிஸ் வெகு சீக்கிரத்தில் தேசிய அணியில் விளையாடுவார்..
பானுக ராஜபக்க்ஷக்கும் நல்ல எதிர்காலமுண்டு
here after only cricket?
இறுதியாட்டத்தில் என்னைக் கவர்ந்த விஷ்யம்... 207 தான் பெற்றிருக்கிறோம் என்று தெரிந்தும் விக்கெட் எடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலியர்கள் அமைத்த கள வியூகம். ஒரு கண்டம் முழுக்கவும் தெரிந்தெடுத்து குயீன்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தஸ்மேனியா, சவுத் அவுஸ்திரேலியா, வெஸ்டேர்ன் அவுஸ்திரேலியா என்று ஆறே ஆறு முதல்தர அணிகளை மோதவிட்டு சிறுவயதில் இருந்தே புடம் போட்டு எடுக்கப்படும் அவுஸ்திரேலியக் கிரிக்கெட்டர்கள் சாதிப்பதில் அதிசயம் இல்லைத்தான்
ஆர்வத்தோடு பார்த்தேன்...
இளையவர்கள் (எனக்கு தம்பிமார்... என்ன கொடுமை சேர் இது...) நன்றாகவே விளையாடினார்கள்....
ஒவ்வொரு அணியிலும் குறிப்பிட்டளவு வீரர்கள் இப்போதே தேசிய அணிக்கதவுகளைத் தட்டுவார்கள் போல இருக்கிறது...
இலங்கையின் ஜெயம்பதி, சத்துர பீரிஸ், பானுக, புத்திக போன்றவர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடவிட்டு கொஞ்ச அனுபவங்களை வழங்கிவிட்டு 2011 உலகக்கிணத்திற்குப் பின்னர் விளையாடத் தயார் செய்யலாம்...
ஒழுங்கான உள்ளூர் கட்டமைப்பை ஏற்படுத்தினால் 2015ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை எமக்கு சார்பாக மாற்றிக் கொள்ளலாம்...
நல்ல பகிர்வு அண்ணா...
Post a Comment