November 11, 2009

பாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா?


இலகுவாக அடையக் கூடிய வெற்றிகளை எதிரணியே எதிர்பார்க்காத விதத்தில் தாரைவார்த்து அதிர்ச்சி கொடுக்கும் அணியொன்று உள்ளதென்றால் அது பாகிஸ்தான் மட்டுமே..

இலகுவான போட்டிகளை பரிசளித்து விட்டு, பார்த்தவர்களையும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் இது கிரிக்கெட் சூதாட்ட விவகாரமா என்று மண்டையைக் கசக்கவைப்பதிலும் அவர்களை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.

இதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி அந்த நாட்டின் பிரதமர் பதவி போலவே எப்போதும் நிரந்தரமில்லாதது.தொடர்ந்து இரண்டு வருடங்களாவது தலைவராக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்..

சங்கீதக்கதிரை போல அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்..

இப்போதும் யூனிஸ் கானின் தலைக்கு குறி வைக்கப்பட்டே இருக்கிறது..

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு பின்னர் யூனிஸ் கானுக்கு கண்டம் வந்து சில ஸ்டன்ட்கள், சில பேச்சுக்களுக்குப் பிறகு நிலை தற்காலிகமாகத் தணிந்தது..

எனினும் அப்ரிடியைத் தலைவராக்குமாறு குரல்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.
தானும் யூநிசும் நல்ல நண்பர்கள் என்றும் தமக்குள்ளே எந்தப் பகையும் இல்லை என்றும் பூம் பூம் (மாடு அல்ல.. )அப்ரிடி பகிரங்கமாக அறிக்கை விட்டு ஊடகவியலாளர் முன்னால் யூனிசும் தானும் கை பிடித்துக் கொண்டு வந்தாலும் உள்ளே இன்னும் புகைகிறது.

சோயிப் மாலிக் தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு போய் கிரிக்கெட் சபைத் தலைவரை சந்தித்து யூனிசைப் பதவி விலக்குமாறு கோரியதாகவும் ஒரு கதை உலவியது..
முள்ளில்லாத ரோஜாவும் இல்லை – முறுகல் இல்லாத பாகிஸ்தான் அணியும் இல்லை!

ஏற்கெனவே ட்வென்டி ட்வென்டி அணியின் தலைவராக நியமனம் பெற்றுள்ள அப்ரிடி அடிக்கடி அறிக்கைவிடுவதும் யூனிஸ்கான் மீது அழுத்தங்களை தந்துகொண்டே இருக்கிறது.

இவற்றுடன் நியூ சீலாந்து அணிக்கெதிரான தோல்வியும் சேர்ந்துகொண்டுள்ளது.
மிக சிறப்பான பந்துவீச்சால் எட்டக்கூடிய ஒரு ஓட்ட எண்ணிக்கைக்குள் நியூ சீலாந்தைக் கட்டுப்படுத்திய பிறகு படு மோசமாக துடுப்பெடுத்தாடி சொதப்பியது பாகிஸ்தான்.

ஆமீர் - அஜ்மல் இணைப்பாட்டம் (103 ஓட்டங்கள்) பாகிஸ்தானின் பத்தாவது விக்கெட்டுக்கான சாதனை இணைப்பாட்டம். இதற்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல் ரசாக்கும் வக்கார் யூனுசும் இணைந்து பெற்ற 72 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.

எனினும் பத்தாவது விக்கெட்டுக்கான உலக சாதனை இணைப்பாட்டத்தை மூன்று ஓட்டங்களால் இந்தப் புதிய சாதனை தவற விட்டது.

இருபத்தைந்து ஆண்டுகாலமாக மேற்கிந்தியத்தீவுகளின் விவ் ரிச்சர்ட்சும் ஹோல்டிங்கும் இணைந்து இங்கிலாந்து அணிக்கெதிராக 106 ஓட்டங்களைப் பெற்றதே நிலைத்து நிற்கிறது.

இந்த வாரமே இணைப்பாட்ட வாரம் போலுள்ளது.. ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் ஜிம்பாப்வேயின் டைபுவும் மட்சிக்கிநெரியும் இணைந்து 188 ஓட்டங்களை எடுத்து தென் ஆபிரிக்க அணியை வறுத்தெடுத்தார்கள் ..

நேற்று முன்தினம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இறுதி விக்கெட்டுக்கான சத இணைப்பாட்டம்.
இந்த பத்தாம் பதினோராம் இலக்க வீரர்களாலேயே நின்று பிடித்து பொறுமையாக ஆடமுடியும் என்றால் என் பிரபல,முன்னணி வீரர்களால் முடியாமல் போனது?
பொறுப்பின்மை? சதி? சூதாட்டம்?

இனி இனி பல்வேறுபட்ட ஊகங்கள் சந்தேகம் எழலாம்..

நல்ல காலம் இளங்கன்று ஆமீரும், சயீத் அஜ்மலும் சாதனை இணைப்பாட்டம் புரிந்து கொஞ்சமாவது பாகிஸ்தானுக்கு கௌரவத்தை தந்தார்கள்.
இல்லாவிடில் யூனிஸ் கானினதும் இன்னும் பல பாகிஸ்தானிய வீரர்களும் வீடுகள் கல்லெறியால் சேதப்பட்டிருக்கும்.

பத்தாம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஒருநாள் ஆட்டம் என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளார் மொகமட் ஆமீர்.

இந்தத்தொடர் முழுவதும் யூனிஸ்கான் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதும், பாகிஸ்தான் வெற்றியீட்டிய முதலாவது போட்டியில் சயீட் அப்ரிடி அதிரடியாட்டம் ஆடியதும், இனித் தொடர இருக்கும் டுவென்டி டுவென்டி போட்டிகளும் யூனிஸ்கானுக்கு வெகுவிரைவில் தலைமைப்பதவி பறிபோகும் என்றே தெரிகிறது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா என்பதைப்போல டெஸ்ட் அணியின் தலைமைப் பதவியும் சேர்ந்தே போகப்போகிறதா என்பது இம்மாதம் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்குப் பின் தெரியும்!

ஒரு சுவாரஸ்யத்துக்காக கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணித்தலைவர்களாக இருந்தோர் –

இம்ரான் கான்
ஜாவெத் மியான்டாட்
சலீம் மாலிக்
வசீம் அக்ரம்
ரமீஸ் ராஜா
அமீர் சொஹைல்
வக்கார் யூனிஸ்
ரஷீட் லடீஃப்
மொயின் கான்
சயீட் அன்வர்
இன்சமாம் உல் ஹக்
மொகமட் யூசுப்
ஷொயிப் மலிக்
யூனிஸ்கான்

இது தவிர இன்றும் பலபேர் அடிக்கடி உபதலைவர்களாகத் தெரிவு செய்யப்படுவதும் மாற்றப்படுவதுமாக இருந்திருக்கிறார்கள்.

இப்படியொரு சாதனை வேறெந்த அணிக்காவது இருக்குமா?

பாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா?

இப்படி இருந்தும் இந்தக் காலகட்டத்தில் ஒரு உலகக் கிண்ணத்தையும்(92) ஒரு ட்வென்டி ட்வென்டி உலகக் கிண்ணத்தையும்(2009) வென்றதும் சாதனை தான்..

உள்வீட்டுக்குள்ளே அடிபட்டுக் கொண்டே ஒற்றுமையாய் இருக்கிறோம் என்று காட்டிக் கொண்டே தொடர்ந்து ஆட எப்பிடித் தான் முடியுதோ???


குறிப்பு - இலங்கையர் பலருக்கே தெரியாத இலங்கையின் புதிய கிரிக்கெட் மைதானம் பற்றியும், இந்திய தேர்வாளர் தந்த ஆச்சரியம் பற்றியும் அடுத்த பதிவு வருகிறது..
19 comments:

கனககோபி said...

திறமை நிரம்பிய நாட்டுக்குள் சர்ச்சைகளால் திறமைகள் ஓரங்கட்டப்படுவது வருத்தத்திற்குரியது தான்.

என்னைப் பொறுத்தவரை அப்ரிஎ வந்தும் எதையும் செய்ய முடியாது.
10, 20 போட்டிகளில் ஒற்றுமையாக வைத்திருக்கலாம். அதன் பின்னர் பழைய குருடி கதவைத் திற நிலைதான்...

அணிக்குள் ஒற்றுமை வரும்வரை அவர்களால் ஒன்றும் செய்யமுயடியாது.

யூனிஸ்கான் சர்வாதிகரமாக செயற்பட முனைகிறார் என்று வக்கார் யுனிஸ் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோர் இலங்கைத் தொடரில் தெரிவித்தது நிகைவுபடுத்தத்தக்கது.

மைதானம் பற்றிய உங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம்...
வெறும் களிமண்தரையாக இருக்கும் அந்த மைதானம் பற்றி அறிய ஆவலாக உள்ளது.

sanjeevan said...

பகிர்வுக்கு நன்றி பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு பின்னூட்டங்களுடன் பதிவு மேலும் சிறப்பு பெறும்.

sanjeevan said...

நானும் இலங்கையில் புதிய இரண்டு மைதானங்கள் அமைக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டேன். நாட்டின் எஜமானின் ஊரில் தான் இரண்டு மைதானங்களுமாமே.

யோ வாய்ஸ் (யோகா) said...

பாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையான திறமை வாய்ந்த வீரர்களை கொண்ட நாடு பாகிஸ்தான், ஆனால் அரசியலால் அவர்களது திறமை வீணடிக்கப்பட்டு விட்டது.

Balavasakan said...

பாகிஸதான் மட்டும் இல்லை ....
இந்தியா ,இலங்கை வீரர்களிடமும் நல்ல ஒற்றுமை இருந்தால் அவர்களை அடிக்க எவனாலும் முடியாது....

கனககோபி said...

//யோ வாய்ஸ் (யோகா) said...
பாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது. //

Is it 120 or 132?

சந்ரு said...

என்னைப் போன்றவர்களை அணியில் சேர்த்துக்கொண்டால் இதெல்லாம் வரப்போவதில்லை

சீனு said...

//இம்ரான் கான்
ஜாவெத் மியான்டாட்
சலீம் மாலிக்
வசீம் அக்ரம்
ரமீஸ் ராஜா
அமீர் சொஹைல்
வக்கார் யூனிஸ்
ரஷீட் லடீஃப்
மொயின் கான்
சயீட் அன்வர்
இன்சமாம் உல் ஹக்
ஷொயிப் மலிக்
யூனிஸ்கான்//

இன்னொன்னு தெரியுமா? இவங்கள்ள 8 பேர் ஒரு கட்டத்தில் ஒரே டீமில் விளையாடினவர்கள். அதாவது, 11 பேர் கொண்ட அணியில், 8 பேர் முன்னாள் கேப்டன்கள் + ஒரு கேப்டன். அது எந்த சீரியஸ் என்று நியாபகமில்லை.

Anonymous said...

அண்ணா நீங்க சொன்ன மாதிரி கேப்டன் பதவியை முஹம்மத் யுஸுப் க்கு வழங்கிடானுகள் . நேவ்செலாந்து டூர் கேப்டன் முஹம்மத் யுஸுப்

Kiruthikan Kumarasamy said...

குழுச் சண்டையால இப்ப யூனுஸ் வெளியில. இருக்கிற திறமைக்கு உள்ள எல்லா அணிக்கும் ஜட்டியைக் கழட்டி தலையில போட்டு அனுப்பக்கூடிய அணி பாகிஸ்தான். ஆனா துண்டற ஒற்றுமை இல்லை. நான் நினைக்கிறன் 1992 உலகக் கிண்ணம் வென்ற பின் மியந்தாத் கப்டனா இருக்கேக்க முழு வீரர்களும் சேர்ந்து மியந்தாத்தை தூக்கி வசீம் அக்ரத்தை கப்டனா போட்டாங்கள். பிறகு உப தலைவராய் இருந்த வக்காரின் தலமையில வசீமுக்கு எதிராச் சண்டை. (அந்தக் கோபத்தில சாதாரண பிளேயரா சலீம் மலிக்குக்குக் கீழ் விளையாடி நியூசிலாந்தை வசீம் துவம்சம் செய்தது வேற கதை).. அதுக்குப் பிறகு வசீம் திரும்பக் கப்டனாகி சிம்பிளா வக்காரை ஓரம்கட்டினார். அந்தச் சண்டைமட்டும் இல்லாட்டால் அப்ப வக்கார் இருந்த பயங்கர ஃபோர்மையும் வச்சுப் பாத்தா இப்பவும் முரளி வக்காரின்ர சாதனைகளைத் துரத்திக்கொண்டு இருந்திருப்பார். பல பெரிய துடுப்பாட்ட வீரர்கள் எப்போதோ அணியைவிட்டுக் கலைக்கப்பட்டிருப்பார்கள்.

Nimalesh said...

Younis quits as pakistan captain yenna koduma da ithu..... ????????????????? watz happening there

Nimalesh said...

Younis quits as pakistan captain yenna koduma da ithu..... ????????????????? watz happening there

நாச்சியாதீவு பர்வீன். said...

nice losan......

LOSHAN said...

@கனககோபி

உண்மை தான் கனக கோபி..
அப்ரிடி தான் சதிகாரர் குழுவின் தலைவர் என்று கூறப்படுகிறதே,,
இன்று பாகிஸ்தான் உத்வேகமாக விளையாடுவதைப் பார்த்தால் வதந்திகளில் உண்மை இல்லாமல் இல்லை போல் தெரிகிறது.

மைதானம் பற்றி பதிவு வந்துகொண்டே இருக்கிறது.. ;)
நிங்கள் அனுப்பிவைத்த சுட்டிகளுக்கு நன்றிகள்..

LOSHAN said...

anjeevan said...
பகிர்வுக்கு நன்றி பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு பின்னூட்டங்களுடன் பதிவு மேலும் சிறப்பு பெறும்.//

ஹா ஹா .. நானும் அதை எதிர்பார்த்தேன்.. ஆனால் ஒன்னையும் காணோமே..sanjeevan said...
நானும் இலங்கையில் புதிய இரண்டு மைதானங்கள் அமைக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டேன். நாட்டின் எஜமானின் ஊரில் தான் இரண்டு மைதானங்களுமாமே.


ஆமாங்கோவ்.. ஒன்று கிரிக்கெட்.. இன்னொன்று மெய்வல்லுனர்..
விபரங்கள் வரும்.

LOSHAN said...

யோ வாய்ஸ் (யோகா) said...
பாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையான திறமை வாய்ந்த வீரர்களை கொண்ட நாடு பாகிஸ்தான், ஆனால் அரசியலால் அவர்களது திறமை வீணடிக்கப்பட்டு விட்டது.//

அது இல்லையா?

ஆமாம்.. அரசியலால் ஆசிய நாடுகளின் கிரிக்கெட் திறமைகள் மன்னாகின்றன.. பாகிஸ்தான் இதில் படுமோசம்.

==========

Balavasakan said...
பாகிஸதான் மட்டும் இல்லை ....
இந்தியா ,இலங்கை வீரர்களிடமும் நல்ல ஒற்றுமை இருந்தால் அவர்களை அடிக்க எவனாலும் முடியாது....//
உண்மை..

LOSHAN said...

கனககோபி said...
//யோ வாய்ஸ் (யோகா) said...
பாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது. //

Is it 120 or 132?//

132.

=========
சந்ரு said...
என்னைப் போன்றவர்களை அணியில் சேர்த்துக்கொண்டால் இதெல்லாம் வரப்போவதில்லை//

என்னது? ஆமாம் ஆனால் அனானிகளாக பல பேர் வந்து கும்முவாங்களே.. ;)

LOSHAN said...

சீனு said...

இன்னொன்னு தெரியுமா? இவங்கள்ள 8 பேர் ஒரு கட்டத்தில் ஒரே டீமில் விளையாடினவர்கள். அதாவது, 11 பேர் கொண்ட அணியில், 8 பேர் முன்னாள் கேப்டன்கள் + ஒரு கேப்டன். அது எந்த சீரியஸ் என்று நியாபகமில்லை.//

எனக்கும் அது ஞாபகம்.. அனேகமாக சொகைல் அல்லது மொய்ன் கான் தலைமை தாங்கிய ஒரு தொடர் என நினைக்கிறேன்..

================

Anonymous said...
அண்ணா நீங்க சொன்ன மாதிரி கேப்டன் பதவியை முஹம்மத் யுஸுப் க்கு வழங்கிடானுகள் . நேவ்செலாந்து டூர் கேப்டன் முஹம்மத் யுஸுப்//

ஆனால் சத்தியமாக யூசுப்புக்க் தலைமைப் பதவி கொடுப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர்..

LOSHAN said...

Kiruthikan Kumarasamy said...
குழுச் சண்டையால இப்ப யூனுஸ் வெளியில. இருக்கிற திறமைக்கு உள்ள எல்லா அணிக்கும் ஜட்டியைக் கழட்டி தலையில போட்டு அனுப்பக்கூடிய அணி பாகிஸ்தான். ஆனா துண்டற ஒற்றுமை இல்லை. நான் நினைக்கிறன் 1992 உலகக் கிண்ணம் வென்ற பின் மியந்தாத் கப்டனா இருக்கேக்க முழு வீரர்களும் சேர்ந்து மியந்தாத்தை தூக்கி வசீம் அக்ரத்தை கப்டனா போட்டாங்கள். பிறகு உப தலைவராய் இருந்த வக்காரின் தலமையில வசீமுக்கு எதிராச் சண்டை. (அந்தக் கோபத்தில சாதாரண பிளேயரா சலீம் மலிக்குக்குக் கீழ் விளையாடி நியூசிலாந்தை வசீம் துவம்சம் செய்தது வேற கதை).. அதுக்குப் பிறகு வசீம் திரும்பக் கப்டனாகி சிம்பிளா வக்காரை ஓரம்கட்டினார். அந்தச் சண்டைமட்டும் இல்லாட்டால் அப்ப வக்கார் இருந்த பயங்கர ஃபோர்மையும் வச்சுப் பாத்தா இப்பவும் முரளி வக்காரின்ர சாதனைகளைத் துரத்திக்கொண்டு இருந்திருப்பார். பல பெரிய துடுப்பாட்ட வீரர்கள் எப்போதோ அணியைவிட்டுக் கலைக்கப்பட்டிருப்பார்கள்.//

நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.. :)
எனக்கும் இவற்றை முன்பு அறிந்த ஞாபகம்..
இம்ரான் - மியன்டாட் சண்டை..
இம்ரான் - சாகீர் அப்பாஸ் சண்டை..
இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்..

===========

Nimalesh said...
Younis quits as pakistan captain yenna koduma da ithu..... ????????????????? watz happening there//

Thats wat we say Pakis cricket is a mystery

==========

நாச்சியாதீவு பர்வீன். said...
nice losan......//

tx :)

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified