உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தவர் என்ற ஒரே பெருமையுடன் பிரபல அரசியல்வாதியாக மாறியவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க.
ஏற்கெனவே அவரது தந்தையார் அரசியல்வாதியாகவும்,பிரதி அமைச்சராகவும் இருந்தாலும் அர்ஜுன தேர்தலில் நின்று பெருமளவு விருப்பு வாக்குகளை வெல்வதற்கு அவருக்குத் துணை வந்தது அவரது கிரிக்கெட் புகழே..
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை வென்றவர்களில் ஒருவரான அர்ஜுனவிற்குப் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும் தனக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கப்படவில்லை என்ற மனஸ்தாபத்தைப் பகீரங்கமாகவே வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் தான் அர்ஜுனவின் கவனம் அவரது நீண்ட கால குறியான ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீது திரும்பியது. அப்போது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையாக லட்சக்கணக்கான ரூபாய் நட்டத்திலிருந்த அமைப்பை ஒரு கம்பெனியாக மாற்றி வெற்றிகரமாக இலாபகரமாக இயக்கிக்கொண்டிருந்தவர் திலங்க சுமதிபால.
சுமதிபால மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் (யார் மீது தான் குற்றம் இல்லை) இவர் காலத்திலேதான் இலங்கையிலே கிரிக்கெட் துரித அபிவிருத்தி கண்டதும், அதிக லாபமீட்டியதும், சர்வதேச ரீதியில் இலங்கையின் கிரிக்கெட் அமைப்பிற்கு பெரும் அங்கிகாரம் கிடைத்ததும். (இந்தியாவின் ஜக்மோகன் டல்மியா போல)
ஊடகவியலாளர்களைக் கேட்டால் சுமதிபாலவின் காலத்திலே கிடைத்த சலுகைகள், வசதிகளைப் புகழ்ந்து தள்ளுவார்கள். நல்லதொரு நிர்வாகி.
அவருடன் அவரது நிர்வாகக்குழுவில் இலங்கை அணியின் முன்னாள் உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்ட வீரர் அரவிந்த டீ சில்வாவும் இருந்தார்.
அர்ஜுன, திலங்க சுமதிபாலவுடன் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார்.
அப்படியிருந்தும் அர்ஜுனவின் தூண்டுதலில் பல்வேறு துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சுமதிபால தலைமையிலான நிர்வாகக்குழு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சினால் கலைக்கப்பட்டது.
பின்னர் இடைக்கால நிர்வாகக்குழுவின் கோமாளித்தனமான நிர்வாகம் ஆரம்பமானது.
அர்ஜுன இடைக்கால நிர்வாக சபைத்தலைவரானது இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில். அனுபவம் வாய்ந்த ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரர் பொறுப்பேற்கிறார்ளூ இலங்கை கிரிக்கெட் உருப்படும் என்று நம்பிக்கை வைத்தோர் பலர்.
எனினும் அர்ஜுன ஆரம்பம் முதலே எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாமே குறுகிய நோக்குடையனவாகவும், பெரும்பான்மையோரின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொடுத்தன.
அணித்தலைவராக இருந்தபோது ஒவ்வொரு வீரரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, கட்டுக்கோப்பானதும், வெற்றிகரமானதுமான அணியைக் கட்டியெழுப்பிய அர்ஜுன கிரிக்கெட் சபையை பொறுப்பேற்ற பின் ஒரு சர்வாதிகாரியாகவே மாறினார்.
இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பு செலுத்திய இந்திய கிரிக்கெட் சபையோடு பல தடவைகள் மோதி ஒற்றுமையை சீர்குலைத்தார்.
அர்ஜுன ரணதுங்கவின் மிக முக்கியமான தில்லுமுல்லுகள் - மாதவாரியாக
ஏப்ரல் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த (சிறப்பாக) சமந்த அல்கிம என்பவரை காரணமேதுமில்லாமல் பதவி நீக்கி, தனது கழகமான SSCயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் பெர்னான்டோ என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தினார்.
பொறுப்பான பதவியில் ஒரு கறுப்பாடு வந்து சேர்ந்தது.
முதல் தடவையாக அரங்கேற்றப்பட்ட IPL உடன் மோதும் விதத்தில் பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.
IPL பற்றி கடுமையாக அர்ஜுன விமர்சித்து – சரத் பவாரைச் சீண்ட ஆரம்பித்தார்.
20-20 கிரிக்கெட் போட்டிகளை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்று கிண்டல் வேறு!
ஜீலை – ஆகஸ்ட் : மீண்டும் இந்திய கிரிக்கெட் சபையைய் கோபமூட்டுகிறார். இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் - ஒரு நாள் தொடர்களின் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது தடைசெய்யப்பட்ட அமைப்பான ICLஇல் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதிவாரி அமைப்பாளர்களில் ஒருவரான, முன்னாள் இலங்கை விரர் ஹஷான் திலகரட்ணவை அர்ஜுன இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமித்து இரு நாட்களில் அமைச்சர் பதவி விலக்குகிறார்.
செப்டெம்பர் : இது தான் அர்ஜுன சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சையாக கருதப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கருத்துக்களைக் கேட்காமலே, யாருடைய ஆலோசனையையும் பெறாமல், 2009ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இங்கிலாந்துக்கு இலங்கை அணியை அனுப்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் (ECB) உடன்படிக்கை அர்ஜுனவினால் செய்யப்படுகின்றது.
இந்தக் காலகட்டத்திலேயே 2009ம் ஆண்டுக்கான IPL அணிக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அதிருப்பதியடைந்து, இங்கிலாந்திற்கு செல்வதற்கு மறுப்புத்தெரிவிக்கின்றார்கள்.
அர்ஜுன, கோமாளித்தனத்தின் உச்சத்திற்கே போய், அப்படியானால் இரண்டாவது கட்ட அணியொன்றை தான் இங்கிலாந்துக்கு அனுப்பப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வளவும் விளையாட்டுத்துறை அமைச்சருக்குத் அறிவிக்கப்படாமலேயே நடந்தது.
மஹேல ஜெயவர்தன உட்பட வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முறையிட, அமைச்சரும், பின் ஜனாதிபதியும் தலையிட்டு இங்கிலாந்துக்கான தொடர் இரத்து செய்யப்பட்டது.
IPL ஒப்பந்தம் முலம் - பணத்தட்டுப்பாடுகொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பத்து வருஷத்தில் இந்தியக்கிரிக்கெட் சபை 70 மில்லியன் டொலர்கள் வழங்குவதாகவும் சொல்லியிருக்கிறது.
எனினும் ரணதுங்கவின் இந்தியத்துவேஷ நடவடிக்கைகள் மூலமும், சரத்பவர், IPLஐ உசுப்பேற்றியது மூலமும் ரணதுங்க தலைவராக இருக்கும் வரை இந்த ஒப்பந்தம் சாத்தியப்படாது என்று காட்டமாக அறிவிக்கின்றது.
ஒக்டோபர் : அர்ஜுன கிரிக்கெட் சபைத்தேர்தலில் போட்டியிட்ட போது ஆதரவு தந்த கழகங்களில் ஒன்றான (5 கழகங்கள் மாத்திரமே) பதுரெலிய 2ம் பிரிவிற்குத் தரமிறக்கப்பட வேண்டிய நேரத்தில் அர்ஜுனவின் தலையீட்டால் இடைக்கால நிர்வாக சபை தடுமாறுகிறது. 5 வார இழுபறிக்குப்பின் அர்ஜுன பணிந்து பேசுகிறார்.
இதற்கிடையே கனடா சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நிஷாந்த ரணதுங்க(இவர் அர்ஜுனவின் இளைய சகோதரர்) தெரிவுசெய்யப்பட்டது போன்ற பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்.
டிசெம்பர்: SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்) 16 ஊழியர்கள் காரணம் சொல்லப்படாமல் அர்ஜீனவினால் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். SLCயில் உடனடிமாற்றங்கள் தேவை என்பதே அர்ஜுன சொன்ன காரணம். அந்தப் 16 பேரும் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, ஜனாதிபதியிடம் முறையிட, அர்ஜுனவின் உத்தரவு ரத்து ஆகிறது.
அர்ஜுனவின் பதவி பறிக்கப்படுகின்றது. இடைக்கால நிர்வாக சபையும் கலைக்கப்படுகிறது. மீண்டும் ஒரு இடைக்கால நிர்வாக சபையா அல்லது தேர்தலா என்பதை இன்னும் ஒரு சில தினங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவிக்கவுள்ளார்.
அர்ஜுன ஆடிய ஆட்டங்கள், இலங்கைக் கிரிக்கெட்டையே அண்மைக்காலங்களில் ஆட்டங்காண வைத்திருந்தன.
இனியொரு கிரிக்கெட் தேர்தல் வந்தாலும் அர்ஜுன ரணதுங்கவால் வெற்றி பெறவே முடியாது என்பது வெளிப்படை.
எடுத்த கெட்ட பெயர்கள் போதும் அரசியலோடு மட்டும் நின்று கொள்ளலாம் என அர்ஜுன நல்ல (எங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும்) முடிவு எடுப்பாரா?
மென்மேலும் சண்டித்தனங்கள் காட்டி இலங்கை கிரிக்கெட்டை தனிமைப்படுத்தி அதல, பாதாளத்தில் தள்ளப்போகிறாரா?
இதற்கிடையில் அண்மைய பதவி நீக்கத்தில் அதிருப்தியடைந்துள்ள அர்ஜுன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் பதவியொன்றை வழங்கலாம் என பரவலான பேச்சுக்கள் அடிபடுகின்றன.
அந்தப் பதவி விளையாட்டுத்துறை அமைச்சராக இல்லாதவரை நிம்மதிதான்.
18 comments:
ஏன் லோஷன்.. 50 000 வருகைகளுக்கு பதிவு போடேல...
இவ்வளவு கதை இருக்கோ...
let him become defense minister
அர்ஜுன ஒரு துவேசியாக இருக்கலாம், ஒரு இந்திய எதிர்ப்பாளராயும் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக சுமதிபால அளவிற்க்கு ஒரு உழல் மன்னன் இல்லை என்பது மட்டும் நிச்சயம். என்ன நடந்தாலும் சுமதி பாலவின் காலத்தில் ஊடகவியளாரருக்கு "நல்ல கவனிப்பு" இருந்தது எனும் கட்டுரையாளரின் தொனியில் எனக்கு உடன் பாடில்லை.
இந்தியா கிரிகெட் உலகின் பெரிய சந்தையாக இருக்கலாம் அதற்க்காக இந்திய் கிரிகெட்டின் சாம்ராட்களிற்க்கு முன் சலாம் போட வேண்டியதில்லை.
நிறவெறி நாடான தென்னாபிரிக்காவில் விளையாடிய வீரர்களே மன்னிக்கப் பட்ட போது, நாட்டிற்க்காக விளையாடி பெருமை சேர்த்த ஆட்டக்காரர்களை எப்படி புறகணிக்கலாம்.
திலகரட்னாவை சேர்த்தது கூட, அரசியலுக்கு அப்பால் மாற்று கட்சியினரையும் அரவணைக்கும் நல்ல பண்பாகவே எனக்கு படுகிறது.
ஜெய சூரியாவின் மீதான தனிப்பட்ட குரோதம் மற்றும் சர்வாதிகாரம் என்பவற்றை அர்ஜுனா அடக்க வேண்டும் என்பது சரியே, அதற்க்காக இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நிழல் உலக கும்பல் இலங்கை கிரிகெட்டை தமது பிடிக்குள் கொண்டுவராது விட்டால் சரி.
அர்ச்சுனா ஐசிஎல்லை ஆதரித்ததை நான் வரவேற்றிருந்தேன், என்னதான் இருந்தாலும் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் அரசியலாகப் பார்த்தமையால்தான் வந்தது ஐசிஎல்லுக்கான தடை. தேசிய அணிகளில் இடம் மறுக்கப்பட்டவர்கள் ஐசிஎல் போட்டிகளில் தூள் கிளப்பும் போது இவர்களையெல்லாம் தேசிய அணிகள் தவற விட்டு விட்டனவே என எண்ணத் தோன்றும் உதாரணமாக ராஜகோபால் சதீஸ், அம்பாரி ராயுடு, கணபதி விக்கினேஸ், ஸ்ரூவர்ட் பின்னி என இந்தப் பட்டியல் நீளும். அந்த வகையில் ஐசிஎல்லை ஆதரித்தது நன்னோக்கத்திற்காகவென நானும் ஆதரிக்கிறேன்....
ஆனால் அதனைத் தவிர இத்தனை தில்லு முல்லுகள் அரங்கேறியுள்ளதா...???
கவலைப்படவேண்டிய விடயமாகத்தானுள்ளது....
லோசன் உங்களின் கருத்துக்களுக்கு நான் உடன்படவில்லை. ஏனெனில் இந்த நாட்டி உள்ள அனைவரும் பணத்தை மையமாக வைத்தே இயங்குகின்றார்கள். அந்தவகையில் அர்ஜுனவின் செயற்பாடுகள் சரியானதே. அவரது தில்லுமுல்லுகள் என கூறுவதை விட அவரின் அதிரடி மாற்றங்கள் என செல்லுவதே சாலச் சிறந்தது.
லோசன் நீங்கள் உங்கள் பக்கத்திற்கு வரும் உங்கள் குறைகள் கூறும் எந்தகுறிப்புகளையும் இணையத்தளத்தில் போடுவதில்லை என்பது எல்லோராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
உங்களுக்கு தெரியும் நீங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் என்ன வென்பது.
லோசன் பணத்தின்பார் ஈர்க்கப்பட்டவர்களின் நீங்களும் ஒருவர்தானே அந்தவகையில் அர்ஜுனவும் சேர்ந்துள்ளார். இதெல்லாம் லவ்கீக வாழ்க்கையில் சகயமப்பா.
ரி.வி. ரேடியோக்களில் நீங்கள் செய்யாத தில்லுமுல்லா லோசன்.
வெள்ளவத்தை புத்தகசாலையை நீங்கள் மறந்திருக்கலாம் நாங்கள் மறக்கமாட்டோம்.
நீங்களும் ஒரு ஊடகவியலாளரா?
இவ்வளவு கதை இருக்கா லோசன் அண்ணா!!!!!!!!! Supper
ஒரு பதிவுக்கான பின்னூட்டம் என்பதை அறியாதவர்களும்,தான் சொல்ல வேண்டியவையே நெஞ்சில் பயத்துடன் (உண்மையாய் இருந்தால் தானே)
பெயரை கூட சொல்லாமல் பின்னூட்டம் (comment) எழுதுவதில் எந்த பயனுமில்லை. அவை அனைத்தும் சூரியனை பார்த்து நாய் குரைப்பதை போன்றதாகும். தயவு செய்து நண்பர்களே பதிவுக்கு அப்பால் சென்று உங்களுடைய தனிப்பட்ட குரோதங்கள் இங்கு வேண்டாம்.
""நெஞ்சம் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட............."
:)
Ha ha.. அதனை விட முக்கியமான விடயங்கள் இருந்ததால்.. :) ஞாபகப் படுத்தியதற்கு நன்றிகள்..
தமிழன்-கறுப்பி.. இன்னும் நிறைய இருக்கு.. முக்கியமானவை இவை தான்.. ;)
அனானி.. ஏன்யா இந்த வேண்டாத வேலை? ;)
சேதுகாவலர், இந்தப் பக்கம் பார்த்து மிக்க மகிழ்ச்சி..
உங்கள் பார்வைக் கோணம் வித்தியாசமானது.. ஆனால் நானும் சில விஷயங்களில் உங்கள் கருத்துக்களுடன் முரண்படுகிறேன்..
அர்ஜுனவின் காலத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் எஜமானர்களாகவும் , நாங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும் போது மட்டும் செய்தி சேகரிப்பவர்களாகவும் இருந்தோம் என்பதைத் தான் அவ்வாறு சொன்னேன்..
அர்ஜுன திலகரத்னவை உள்ளே கொண்டு வந்ததே ஜயசூரியவை அடக்கவும்(அகற்றவும்), தனது முன்னாள் நண்பரும் தற்போதைய எதிரியுமான அரவிந்த டீ சில்வாவை பழிவாங்கவுமே என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்..
நாம் மண்டியிடத் தேவையில்லை.. அதற்காக எப்போதும் உதவாத எங்களுஉகு இன்னமுமே மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை வழங்கத் தயங்கி வரும் இங்கிலாந்திற்காக இலங்கைக்கு கிரிக்கெட்டில் உதவி வரும் இந்தியாவைப் பகைக்க வேண்டுமா?
குண்டுகள் வெடிக்கின்றன என்று காரணம் சொல்லி வெள்ளைக்காரர்கள் கிரிக்கெட்டை இங்கே பகிஷ்கரித்த போது இங்கு வந்தவர்கள் இந்தியர்களும்,பாகிச்தானியர்களுமே..
நன்றி சுகன், ஆமாம் ICLஐ நானும், எனது வெற்றியின் விளையாட்டு செய்திகளும் கூட அங்கீகரிக்கிறோம்.. அதில் அர்ஜுன செய்தது தவறென்று இல்லை.. ஆனால் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒரு முடிவெடுத்திருக்கும் போது அர்ஜுன அறிவிக்காமல் நடந்து கொண்டதே தவறு என்று நான் கருதுகிறேன்..
ஐயா அனானி, உங்கள் கருத்துக்கள் என்னை உரத்து சிரிக்கவே வைத்தன..யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம்.. என் பதிவுகளுக்கு வருகின்ற எல்லா விதமான கருத்துக்களும் எந்த வித மட்டுறுத்தலும் இல்லாமலே வருகின்றன.. அப்படி இருக்கும் போது நான் எப்படி நீங்கள் சொல்வது மாதிரி நடந்து கொள்வதாக சொல்ல முடியும்? ;)
அடுத்தது நான் செய்த தில்லு முல்லுகளா? ஹா ஹா.. நல்ல நகைச்சுவை..
உங்கள் பாணியில் அதையும் அதிரடி மாற்றங்களாக நினைத்துக் கொள்ளுங்கள்.. (அப்படி நான் தில்லு முல்லு செய்திருந்தால்)
உன்னைப்பற்றி அறிந்தவன் யாவும் தெரிந்தவன் - நீங்களே இதற்கு முன் அனானியாக வந்தவர் என்பது தெரிகிறது.. யார் தான் பணம் மீது அக்கறை இல்லாதவர்? ஆனால் போது வாழ்க்கையில் ஈடுபடுவோர் அவ்வாறு நடக்கும் போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நண்பரே.. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியுமே.. ;)
அது சரி எந்த இடத்திலும் அர்ஜுன பணத்தின் மீது ஆசை கொண்டிருந்தார் என்று சொல்லவே இல்லையே..
அது சரி அது என்ன புத்தகசாலை விஷயம்? புரியவே இல்லை எனக்கு..
அனானி - வானொலியில் பணிபுரிவதால் நானும் ஊடகவியலாளன் தானே.. இல்லையா?
நன்றி கலை.. யாரும் எதுவும் சொல்லலாம் கலை.. விமர்சனங்களுக்கு உட்பட்டவன் தானே எந்தப் படைப்பாளியும்.. :)
தூயா :)
all these feed backs, not relevent to topic.. if you have anything to comment why you didn't comment on his radio stories?
any way Arjuna is hated character in Sri lanka at this moment.. Thilanga is a must for our cricket
லோசன் முதலில் பதிலுக்கு நன்றி. உங்கள் வலைப்பதிவுகளை முகப்புத்தகம்( facebook) மூலம் படித்து வருகிறேன். உங்கள் விடயதானங்கள் , தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஆர்வமில்லாத, சமயங்களில் (வர்தக வானொலி போன்ற) எனக்கு எரிச்சல் ஊட்டும் விடயங்கள் பற்றியதாக இருப்பதால் இதுவரை கருத்து கூறவில்லை. ஒரு நுகர்வோனாக இதுவரை நான் அவதானித்ததில், ஊடகங்கள் யாவுமே ஒரு உள்நோக்கோடு( hidden agenda) இயங்குவதாகவே நான் கருதுகிறேன்.
அந்தவகையில் உங்கள் கட்டுரையும் அர்ஜுனாவின் எதிர் முகாமின் குறைகள் எதனையும் அலசாது, தனியே அர்ஜுனவின் பிழைகளை மட்டும், மிகைப்படுத்தி கூறுவது போல படுகிறது. அர்ஜுன ஒரு நல்ல தேர்வாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரிற்க்கானா மாற்று மனிதர்களுடன் ஒப்பிடும் போது அவர் எவ்வளவோ பரவாயில்லை. (அரசியலில் அல்ல கிரிகெட்டில்)
எந்த நீதிமன்றும் குற்றவாளியாக நிரூபணமாக்காத ஒருவரை பற்றி "தில்லு முல்லுகள்" என்று தலைப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது? எனக்கு இது பத்திரிகை விற்க்கும் தந்திரம்(sensationalisation) போலப் படுகிறது.
உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை கையாண்ட விதம் அருமை. பிடியுங்கள் ஒரு சபாஷ்.
ரேடியோ போன்று சுயத்தை முன்னிறுத்தி செயற்ப்படும் தொழில்களில் தனிமனித தாக்குதல் தவிர்க்க முடியாததே. உங்கள் கட்டுரையின் மொழிமாற்றத்தை வாசிக்க நேர்ந்தால் அர்ஜுனவும் இப்படித்தான் கவலைப்படுவாரோ?
முக புத்தகம்.. வருடத்தின் இறுதியில் அருமையான ஜோக்.. பெயர்களுக்கு மொழி மாற்றம் இல்லை அன்பரே.. பேஸ் புக் என்றே அழையுங்கள். அர்ஜுனவின் தில்லு முல்லு என்ற தலைப்புக்கு அவரின் தில்லு முல்லு கள் பற்றி மட்டுமே எழுத முடியும். இலங்கை கிரிக்கெட் தில்லு முல்லு என்ற தலைப்பு ஆக இருந்தால் எதிர் முகாமின் குறைகள் அலசப்படலாம். அதேவேளை இலங்கை கிரிகெட் இன் தலைமை தேர்வுகளில் அர்ஜுன தான் மிக மோசமான தேர்வு. ameture ஆக நிருவாகத்தை கையாண்டவருக்கு வக்காலத்து வாங்கவும் சிலதுகள் இருக்கின்றன
யார் என்ன சொன்னாலும் அவன் அவன் வேலையை அவன் அவன் பார்த்து கொண்டு போறது நமக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது
நண்பர் இர்சாத்துக்கு, எனது நகைச்சுவையை ரசித்ததற்க்கு நன்றி. வருட இறுதியில் வந்தாலும் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவையாக வரும் என நினைத்தேன். அந்தோ என்னே பரிதாபம், தனது சமீபத்திய அறிக்கை மூலம் எனது அந்த கனவையும் தகர்த்து விட்டார் ஒரு அமைச்சர் பெருமான். பரவாயில்லை.
அதுசரி, பெயர் சொற்களுக்கு மொழிமாற்றம் இல்லை எனில் கொம்ப்யூட்டர் எப்படி கணனி ஆனது? ஈமெயில் எப்படி மின்னஞ்சல் ஆனது? இது எல்லாவற்றையும் விடுங்கள் பிளாக் எப்படி வலைப்பதிவு ஆனது? இவை எல்லாம் பெயர்சொற்க்கள் இல்லையா?
அல்லது நீங்கள் கூறியது போல "சிறுபிள்ளைத்தனமாக" என்பதை அப்படியே ஆங்கிலத்தில் "அமெச்சூர்" என எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? விட்டுவிடுங்க இர்சாத், எனக்கு என் தாய் மொழியை ,கலப்படம் இல்லாமல் பார்க்கவே, பேசவே ஆசையாய் இருக்கிறது.
அப்புறம் ஒரு மனிதனை பற்றி, எவ்வித ஆதரமுமின்றி, போதிய தரவுகள் இன்றி, சட்டப்படி பார்த்தால் மானநஷ்டம் ஏற்படும் படியாக வரைய பட்ட ஒரு கட்டுரைக்கு வக்காலத்து வாங்கவே உங்களை (கவனிக்க அது இது இல்லை, நாமெல்லாம் உயர்திணை அப்படித்தானே?) போன்றோர் இருக்கையில், அதற்க்கு எதிராக, பதில்-வக்காலத்து வாங்குவதில் என்ன தப்பிருக்கிறது?
(இத்தோட முடிச்சுக்கலாமா? இன்னொருவர் வலைப்பதிவுல வந்து நம்ப கடை போடுறது அவ்வளவு நல்லாயில்லை)
இர்ஷாத், எதையும் நாம் எதிர்கொள்ளத் தானே வேண்டும்.. நண்பர்கள் இனி சரியாகப் பதிவார்கள்.. நீங்கள் அர்ஜுன வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே சொன்னது (வானொலியில்,எனது விளையாட்டு நிகழ்ச்சியில்) இப்போது நடந்து விட்டது..
சேது, மறைமுகத் திட்டங்கள் மேலிடத்தினால் கொண்டு செல்லப் பட்வனவே தவிர நேரடியாக நாம் (ஒலிபரப்பாளர்கள்) சம்பந்தப்படுவதில்லை..எம்மை/சமூகத்தை அது நேரடியாகப் பாதிக்கும் வரை அதுபற்றி அக்கறைப்படப் போவதுமில்லை..
நானும் ஒரு கிரிக்கெட் வீரராக,ஒரு அணித் தலைவராக அர்ஜுனவை ரசித்தவனே.. ஆனாலும் அவர் ஒரு நல்ல நிர்வாகி அல்ல என்பது தெளிவு..
பொது வாழ்க்கையில் பிரவேசிக்கும் அனைவரும் விமர்சிக்கப்படுவர் என்ற நியதிக்கு அமையவே நானும் அர்ஜுனவை எனக்குக் கிடைத்த சரியான ஆதாரங்களை வைத்துக் கொண்டு விமர்சித்துள்ளேன்..
இங்கு வெளிவரும் ஆங்கில,சிங்கள நாளேடுகள் இதைவிட மோசமான குற்றச் சாட்டுக்களையும் அர்ஜுன மேல் சுமத்தியுள்ளன.. எனவே இதை வாசித்தால் அர்ஜுன ஜுஜுப்பீ என்று தான் சொல்லுவார்.. ;)
இர்ஷாத், சேது.. ஆகா நம்ம தளத்தை அகராதியாக்கிடுவீங்க போல இருக்கே..
வக்காலத்து யாருக்கு என்ற கேள்வி வேண்டாம்.. கருத்துக்கள் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு.. நான் எழுதியதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற தேவையும் இல்லை..
இன்னுமொரு சிறு விடயம், கணினி போன்ற பாவனைப் பொருட்களைத் தமிழ்ப் படுத்துவதில் தப்பில்லை.. ஆனால் தயாரிப்புக்களைத் தமிழ்ப்படுத்துவது விடயத்தை விவகாரம் ஆக்கிவிடும்..
facebook - முகப் புத்தகம் என்றால், ஜப்பானில் தயாராகும் Honda, Suzuki,Toyota போன்றவை? இல்லாவிட்டால் Facebook போன்ற நட்புத் தளங்களான Tagged,Hi5 போன்றவை?
இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.
ஐயா அனானி.. எல்லாரும் அவரவர் வேலை பார்ப்பது என்றால் உலகம் என்னாவது.. நீங்களும் உங்க வேலையைப் பார்த்திருக்கலாமே.. ;)
Post a Comment