December 25, 2008

பண்டிகைகள்,பட்டாசுகள்,பாவங்கள்.. சிந்தனைக்கு

வழமையாகவே எந்தப் பெருநாள்/திருநாள்/பண்டிகை வந்தாலுமே நான் பொதுவாக கொண்டாட அதிலும் ஆடம்பரமாக,புது ஆடை எடுத்துக் கொண்டாட விரும்புவதே இல்லை..அதே நாளில் எத்தனையோ கொண்டாட முடியாமல் அல்லலுறும் மனிதர்களை நினைத்து எனது பாடசாலை நாட்களிலேயே நான் எடுத்த முடிவு இது.அப்போதெல்லாம் அப்பா,அம்மாவுடன் சண்டை போட்டு எந்தப் பண்டிகையும் கொண்டாட மாட்டேன்.. புது ஆடைகளை கூட அந்த விஷேட தினத்திலே அணியாமல் அடுத்த நாள் தான் அணிவேன்.. அது என பிறந்தநாளாக இருந்தால் கூட.. 

என்னை இதற்காக சில உறவினர்கள்,நண்பர்கள் ஒரு வித்தியாசமான பிறவியாகப் பார்த்தோரும் இருக்கிறார்கள்..

உண்மையில் எனக்கு இந்தக் கொண்டாட்டங்களைத் தவிர்க்கும் எண்ணம் தோன்றக் காரணம், 91ஆம் ஆண்டில் தீபாவளி நாளில் என் நண்பன் ஒருவனின் அப்பா குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.

அன்று நாங்கள் எல்லாரும் தீபாவளி வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்க அவன் மட்டும் அழுதுகொண்டிருந்தது இன்றும் என் கண்ணிலே நிழலாடுகிறது.. அன்று தான் யோசித்தேன், நாங்கள் சிரித்து,மகிழுந்து பண்டிகை கொண்டாடும் நேரத்தில் இன்னும் எத்தனை பேர் வேதனையால் வாடி அழுதுகொண்டிருப்பார்கள் என்று யோசனை வந்தது.. 

 அன்றிலிருந்து நான் புதிய ஆடைகளோடு கொண்டாடிய நாட்கள்.. என் திருமணம்,திருமணத்தின் பின் வந்த தீபாவளி (தலைத் தீபாவளி) மற்றும் என் மகனின் முதலாவது பிறந்த நாள் மட்டுமே.. (எல்லாமே என் மனைவியின் திருப்திக்காக)

அடிக்கடி எனது நேயர்களிடமும்,நண்பர்களிடமும் நான் (வற்புறுத்தாமல்) சொல்கிற விஷயமும் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும் விதத்தில் கொண்டாடுங்கள்.. ஆனால் அளவுகடந்த ஆடம்பரம் வேண்டாம் என்று..

எனக்கு வாய்த்த தொழிலின் அடிப்படையிலும் எந்தவொரு திருநாளிலும் எனக்கு நிகழ்ச்சி இருக்கும்.. ஒன்றில் வானொலியில் இல்லையேல் ஏதாவது மேடை நிகழ்ச்சி..
விடுமுறை நாட்களில் தான் அதிகம் பேர் வீட்டிலிருந்து கேட்பார்கள் என்ற காரணத்தால் நானும் தவறவிட விரும்புவதில்லை.. எனது அனுசரணையாளர்களும் நான் அன்று நிகழ்ச்சி செய்வதையே விரும்புவார்கள்.. அது பொங்கலாக இருந்தாலும் சரி, நத்தாராக இருந்தாலும் சரி, இல்லை நோன்புப் பெருநாளானாலும் சரி.. 

நாளாந்தம் பல பேர் மாண்டு கொண்டிருக்கும் எமது நாட்டிலே என்ன பண்டிகை வேண்டி இருக்கிறது என்று அடிக்கடி மனதுக்குள் வெம்புவதுண்டு..
எத்தனை ஆயிரம் பேர் தினமும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. எத்தனை பேர் ஒருவேளை உணவுக்கே திண்டாடுகிறார்கள்..
இவர்களை எல்லாம் யோசிக்கும் பொது இந்தப் பண்டிகைகள், இவை கொண்டாடப்படும் நோக்கங்கள் எல்லாமே எனக்கு மிகப் போலியாகத் தோன்றும்..

பண்டிகைகளுக்கான தலைவர்கள்,ஜனாதிபதி,பிரதமரின் வாழ்த்துக்களைத் தாங்கி வரும் செய்திகளில் தொடர்ந்து வருவன எல்லாமே கொலை,சாவு,பட்டினி செய்திகளே..
பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் முதல் பக்கத்திலே பெரிய எழுத்துக்களில் வாழ்த்துக்களும்,கீழேயே குண்டு வீச்சில் இத்தனை பேர் சாவு,லட்சக் கணக்கானோர் இடம்பெயர்வு என்று அவலச் செய்திகள்.. 

வழமையாகவே எனக்குக் கோபம் வரவைக்கிற ஒரு விடயம்,எங்கள் வெள்ளவத்தைப் பகுதிகளில் இந்தப் பண்டிகைக் காலங்களில் (குறிப்பாக தமிழ்ப் பண்டிகை நேரம்) போடப்படுகிற பட்டாசுகள்..எங்கள் மக்கள் அவதிப்படுகிற காலகட்டத்திலேயே(முதல் நாள் எங்கேயாவது குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான பேர் இறந்திருப்பார்கள்) இவர்கள் பட்டாசு போட்டு கோலாகல விழா எடுப்பார்கள்.. செத்தவீட்டில் சந்தோஷ விழா கொண்டாடுவது போல..
கரியாகும் அந்தக் காசை அனாதைகளுக்கும்,அகதிகளுக்கும்கொடுத்தால் கூடக் கோடி புண்ணியமே என்றும் மனதில் ஒரு ஆதங்கம்.  

ஆனால் இம்முறை கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாக இருந்தது.. எங்கள் பக்கம் எந்தவிதப் பட்டாசு ஆரவாரமும் நத்தாருக்கு இல்லை.. கடந்த தீபாவளிக்கும் எதுவித ஆடம்பரமும் இருக்கவில்லை.

(இம்முறை பட்டாசு வெடிச் சத்தம் இல்லாததால் எனக்கு தனிப்பட்ட முறையிலும் பெரிய ஆறுதல்.. ஒன்று, இப்போது பெற்றோர் வீட்டில் இருப்பதால் எனது வாகனம் வீட்டுக்கு வெளியே தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. வெடிகளால் எந்த ஆபத்தும் இல்லை.. அடுத்து எனது சின்ன மகன் பட்டாசு சத்தங்களால் திடுக்கிட்டு தூக்கத்தால் எழும்பவில்லை)  
நம்மவர்கள் திருந்தி விட்டார்களோ என்று ஒரு ஆச்சரியமான நிம்மதி இருந்தது.. இன்று ஒரு நேயர் அனுப்பிய தகவல் அந்த நிம்மதியைக் கொஞ்சம் குறைத்து விட்டது.. 

இப்போ இருக்கிற பொருளாதார சிக்கல் நிலையில் எதற்கும் செலவழிக்க யாரிடமும் பெரிதாகப் பணமில்லை..

வழமையாக நத்தார் என்றாலே நியூயோர்க் போலக் களை கட்டும் கொழும்பு இம்முறை அழுது வடிகிறது..

எனினும் நத்தாரின் உண்மை விளக்கத்தைப் புரிந்து கொண்டாலே போதும்..

புவியுலகோரின் பாவங்களை நீக்கவும்,போக்கவும் கடவுளின் மைந்தன் அவதரித்த நன்னாள் இது..
எங்களுக்காகவும் எங்கோ ஒருவன் இருக்கிறான் என்பது தான் இதன் மறைபொருள் என்று நான் கருதுகிறேன்..

நாங்கள் மற்றவர்கள் பாவங்களை ஏற்று ரட்சிக்காவிட்டாலும், மற்றவர்கள் மேல் பாவம் செய்யாமல்,நாம் பாவிகள் ஆகாமல் இருக்க முயற்சிப்போம்..(குறைந்தது இன்றாவது)


பி.கு - இன்று மாலை வானொலி வறுவலில்,என்னுடன் சில இந்திய நட்சத்திரங்களும் வருவார்கள்.. (மாலையில் எனக்கு நேரம் இருந்தால் கூட்டிட்டு வாறன்) 
 

11 comments:

Anonymous said...

உண்மை!!!!!

Sinthu said...

"அப்போதெல்லாம் அம்மாவுடன் சண்டை போட்டு எந்தப் பண்டிகையும் கொண்டாட மாட்டேன்.. புது ஆடைகளை கூட அந்த விஷேட தினத்திலே அணியாமல் அடுத்த நாள் தான் அணிவேன்.. அது என பிறந்தநாளாக இருந்தால் கூட.."
me too but I don't know the reason...

"இன்று மாலை வானொலி வறுவலில்,என்னுடன் சில இந்திய நட்சத்திரங்களும் வருவார்கள்.. (மாலையில் எனக்கு நேரம் இருந்தால் கூட்டிட்டு வாறன்) "
Come soon..............

IRSHATH said...

இன்று ஒரு நேயர் அனுப்பிய தகவல் அந்த நிம்மதியைக் கொஞ்சம் குறைத்து விட்டது..

உங்க நிம்மதியா கெடுத்த அந்த நேயருக்கு முனிவர் ஸ்டைல் இல் "பிடி சாபம்" கொடுக்கணும்

Anonymous said...

\\நாளாந்தம் பல பேர் மாண்டு கொண்டிருக்கும் எமது நாட்டிலே என்ன பண்டிகை வேண்டி இருக்கிறது \\
சிந்த்திக்க வேண்டியதும் வருதபட வேண்டியதும்

kuma36 said...

(எல்லாமே என் மனைவியின் திருப்திக்காக)

ம்ம்ம்ம்ம் அப்பாடா ஒரு மாதிரி பெரிய ஐஸ்சா வச்சிடிங்க லோசன் அண்ணா. இந்த கஞ்சிபாயோடு சேர்ந்தாலே இப்படிதான்!!!!!!!

Anonymous said...

பிறந்தார் பிறந்தார் இஎது பிறந்தார் விண்ணிலும் மண்ணிலும் ஒளிபிறக்க ...................

எப்போதும் நம்புவோம் என்றே ஒரு நாள் விடியல் வரும் என்று .................

Anonymous said...

லோசன் அண்ணா நானும் எல்லோருக்கும் சொல்லவிரும்புவதும் இதுதான் நண்பர்கலே எமது சொந்தங்கள் வாடுகிரது பசியால் தயவு செய்து பண்டிகை காலங்களில் தேவை இல்லாத செலவுகள் செய்யாமல் உதவிடுங்கள் எமது உறவுகளூக்கு(தம்பிலுவில் திசாந்தன்,கட்டாரில் இருந்து)

Anonymous said...

கவல படாதீங்க.. 2009 ல நீங்க எல்லா பண்டிகையும் கொண்டாடலாம். பழைய பாக்கியையும் சேர்த்து.. மஹிந்தா உங்களுக்காகத்தான் தன் இன சனங்களின் உயிரையும் கொடுத்து பாடுபடுகிறார்..

Pottu Amman sidelined தெரியுமா?

ARV Loshan said...

நன்றி நந்தரூபன்
வருகைக்கு நன்றி சிந்து..

இர்ஷாத், ஆமாம் அய்யா.. நீங்கள் சொல்வது போல அந்தப் பாவிப்ப பயலுக்கு பிடி சாபம் அல்ல, இடி சாபம் கொடுத்தாலும் தகும்..
அவரது பெயர் கூட நான்கு எழுத்து.. ஈனாவில் ஆரம்பித்து, த்தன்னாவில் முடியும்.. ;)

கவின், எல்லோரும் யோசிக்க வேண்டுமே..

ஆமாம் கலை, எல்லாம் கஞ்சிபாயாலே தான்..

துஷா.. நன்றிகள்,, நம்பிக்கை தானே வாழ்க்கை..

திசாந்தன்,
ஒருவேளை சாப்பாட்டை எல்லோரும் ஒரே ஒரு நாள் அளித்தால்,இலங்கையில் எல்லோருடைய பட்டினியும் தீருமாம்..

அனானி.. இப்படியெல்லாம் பேசினா எனக்கு இப்ப காத்து கேக்குறதில்லை.. ;)

Anonymous said...

நல்ல செய்தி!

நீங்கள் மணி கட்டிய பூனையாதலால் இப்படியான நல்ல கருத்துக்கள் உங்கள் வழியாக வரும் போது மக்களிற் பலர் அதை ஏற்றுக்கொள்வார்கள்!

எது எவ்வாறிருப்பினும் தமிழர் தீபாவளியைக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

IRSHATH said...

எல்லாமே என் மனைவியின் திருப்திக்காக

பொண்டாட்டி தாசன் ஒத்துகிட்டாரு.. வாக்குமூலம் கொடுத்திட்டாரு.. இனி கஞ்சி பாய் யாரு என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே..

இடி சாபம் என்றால் வேள்ளவத்தயில குட்டிங்கள இடிக்கிறதா.. அப்படின்னா அது வரம்...

ஈயன்னாவில் பெயர் உள்ளவருக்கு மஜாதான்..

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner