December 01, 2008

பெயர்களே பிரச்சினையாக...


நேற்று நண்பர் மகேஷின் பதிவைப் பார்த்தபின் தான் (கிச்சடி 30-11-2008)இந்தப் பதிவு ஐடியா வந்தது..
தமிழராக இருக்கிற அநேகருக்கு இருக்கும் பிரச்சினை பெயர்..

surname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.

தமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..

எனக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினை வங்கி விஷயங்களிலும், credit card விஷயங்களிலும் தான் சிக்கலைத் தரும்.வீட்டுக்கே தொலைபேசி அழைப்பெடுத்து அப்பாவின் பெயரை சொல்லி இன்னமும் இந்த மாத credit card கட்டணம் கட்டவில்லை என்று இனிமையான குரலில் ஒரு பெண் முறையிடுவாள். அப்பாவி அப்பா ஒழுங்காகக் கட்டணம் கட்டி இருப்பார். (தனது credit card க்கு) ஆனால் நம்பாமல் அம்மா திட்டுவது அப்பாவுக்குத் தான்..

அதுபோலத் தான் ஒரு தடவை (ஒரே தடவை தான்) ஐரோப்பா சென்ற போதும் எல்லா இடங்களிலும் அப்பாவின் பெயர் தான் என் திரு நாமம் ஆனது. ;)

ரொம்பக் கஷ்டப்பட்டு எல்லா இடங்களிலும் ஒவ்வொரு விதமாக எனது அப்பாவின் பெயரைப் போட்டுப் படுத்தி எடுத்தார்கள்..
இன்னுமொரு விஷயம்.. பள்ளி நாட்களில் இருந்து இன்றுவரை எனது முழுப்பெயரை பிழையில்லாமல் சரியாக உச்சரித்தவர்கள் மிக,மிகக் குறைவு.(ஆங்கிலத்திலோ,தமிழிலோ)

என் பெயர் அப்படி.. அதுவும் அப்பாவின் பெயரையும் சேர்க்கும் போது தொலைந்தார்கள் என்னை அழைப்பவர்கள்..

ரகுபதிபாலஸ்ரீதரன் வாமலோசனன்.

இந்த அழகான பெயரை எல்லோரும் சிறுவயது முதலே தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் அழைத்தும்,உச்சரித்தும் பாடாய்ப்படுத்தியதாலேயே, நான் வானொலித்துறைக்கு வந்தவுடனே என்னை வீட்டில் அழைக்கப் பயன்படுத்தும் 'லோஷன்' என்பதை என் பெயராக்கிக் கொண்டேன்.. (அப்பாடா ஒரு பெரிய வரலாற்று ரகசியம் சொல்லியாச்சு..)

எங்கள் அப்பாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே இப்படி நீளமான,மிக நீளமான பெயர்கள் தான்..

அப்பாவின் அப்பா ஒரு தமிழ்ப் பண்டிதர்.அந்தக் காலத்திலேயே சென்னை போய் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்.எனவே தனது பிள்ளைகளின் பெயர் விடயத்திலும் தன் புலமையைக் காட்டி விட்டார்.

பெயர்களைப் பாருங்கள்..

சபாபதி பால கங்காதரன்
இரகுபதி பால ஸ்ரீதரன்
பூபதி பால வடிவேர்கரன்
அமர சேனாபதி பால கார்த்திகைக் குமரன் (எப்படித் தான் சின்ன வயதில் தன் பெயரை இவர் எழுதினாரோ??)
ஸ்ரீபதி பால முரளீதரன்

இவர்களில் என் அப்பா தவிர ஏனைய எல்லோரும் வெளிநாடுகளில்.பாஸ்போர்டில் இந்த ஒரு கிலோ மீட்டர் பெயர்கள் கொள்ளாது என்ற காரணத்தால் குட்டிப் பெயர்களோடும் ,அதற்கு முன் ஏராளமான இனிஷல்களோடும் வாழ்கின்றனர்.

பாடசாலை நாட்களில் பரீட்சைத் தாளில் இவர்கள் பெயர்கள் எழுதிமுடிக்க முதல் பரீட்சை முடிந்து விடுமோ தெரியாது.

ஆண்பிள்ளைகள் தான் இவ்வாறேன்று இல்லை.. எனது மாமிமார் இருவரதும் பெயர்கள்..
அருந்ததி ஆனந்த கௌரி
காயத்திரி ஆனந்த ரமணி

அவதானித்துப் பார்த்தால் எனது பாட்டனார் தனது மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றிலும் பால,பதி என்ற சொற்களும்,மகள்களின் பெயர்களில் ஆனந்த என்ற சொல் இடம்பெறுமாறும் பார்த்துக் கொண்டார்.

அந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர் சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)

இவ்வளவு நீளமான பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்த அவரது பெயர் ஆனந்தர்!!!

மறுபக்கம் எனது அம்மாவின் குடும்பத்தில்,எனது தாத்தாவான இலங்கை வானொலி புகழ் - சானா என்றழைக்கப்பட்ட (எவ்வளவு சின்னப் பெயர் பாருங்கள்) சண்முகநாதன் (லண்டன் கந்தையா) எனது மாமன்மாருக்கும்,அம்மா,பெரியம்மாவுக்கும் சின்னப் பெயர்களாகத் தேடிப் பார்த்து வைத்துவிட்டார்.

ஆண் பிள்ளைகளுக்கு நான்கு எழுத்துப் பெயர்களும்,பெண்களுக்கு மூன்று மற்றும் இரண்டு எழுத்துகளிலும் பெயர்கள்..

அசோகன்
தேவகன்
அமலன்
ராகுலன்
ஜனகன்

உமா
சுமதி

ஆனால் இரண்டு குடும்பங்களிலுமே ஐந்து ஆண்களும்,இரண்டு பெண்களும்..

இது தான் வேற்றுமையில் ஒற்றுமையோ?

நான் பாடசாலையில் படிக்கும் நாட்களிலும் சரி பின் வேலை புரிகின்ற நாட்களிலும் சரி என்னுடைய நீளமான பெயர்கள் பலருக்கு சிரமம் கொடுத்திருக்கின்றன.
குறிப்பாகப் படிவங்கள் நிரப்பும் போது, அடையாள அட்டைகள்,போலீஸ் பதிவு எழுதும் போது (அண்மையில் நிறையப் பேருக்கு வேண்டாமென்று போய் விட்டது.) என்று பல சந்தர்ப்பங்கள்..

அதிலும் இப்போது வேலை புரியும் இடத்தில் முதல் மாத சம்பளம் வாங்கும்போது (இங்கே மட்டும் வங்கியில் சம்பளம் போடாமல் கை நிறைய,வெள்ளைக் கடித உறையில் இட்டு கொடுப்பார்கள்) எங்கள் வெற்றி பிரிவில் மட்டும் ஆண்களில் எங்களுக்கு சம்பளம் வழங்கப் படாமல் எங்கள் தந்தைமாரின் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நான் வேடிக்கைக்காக எங்கள் பிரதான காசாளரிடம் "வீட்டில் இருக்கும் எங்கள் அப்பாமாருக்கு சம்பளம் கொடுத்தீங்க, பரவாயில்லை..ஆனால் வேலை செய்த எங்களுக்கும் கொடுக்கத் தானே வேணும்" என்றேன்.. ஆளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. பிறகு விளக்கிச் சொன்னவுடன் சிரித்தார்.

என் பெயரை எங்கள் குடும்பவழக்கதிற்கும் மாறாக (வழமையாக எங்கள் வீட்டில் அனைவரது பெயர்களையும் பாட்டா- அப்பாவின் அப்பா தான் வைப்பார்) தாத்தா தான் வைத்தார்.. சமஸ்கிருத மொழியில் அழகிய கண்களையுடையவன் என்று அர்த்தமாம்.. (பாருங்கப்பா.. அப்பவே என் அழகைப் பார்த்து தீர்க்க தரிசனத்தோடு மனுஷன் வச்சிருக்காரு ;))

எனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்.
எனது கமல் பைத்தியம் பெயரில் தெரிவதாக மனைவி அடிக்கடி சாடுவதும் உண்டு.. எனினும் இந்தப்பெயரில் ஒளி பொருந்தியவன்,மகிழ்ச்சிப் படுத்துபவன்,சூரியன்,சிவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன..

வளர்ந்த பிறகு என் மகனும் நீளமான பெயர் வைத்து அவஸ்தை தந்துவிட்டேன் என்று என்னைத் திட்டுவானோ தெரியாது.. விரும்பினால் பின்னாளில் மாற்றிக் கொள்ளும் முழு உரிமையையும் அவனுக்குக் கொடுப்பேன்..

அவனும் நான் என் அப்பருக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது போல அவனும் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவானோ என்ற பயமும் உண்டு..


28 comments:

நந்தரூபன் said...

ஆனால் நீங்கள், sure name,first name ,சந்தேகத்தை தீர்க்கவில்லை

சந்தனமுல்லை said...

:-))

'டொன்' லீ said...

கிட்டத்தட்ட இந்தப் பிரச்சினை நம்மவர் பலருக்கு இருக்கு
http://donthelee.blogspot.com/2008/09/blog-post.html

சயந்தன் said...

எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.//

வெளிநாடுகளில் இந்த பிரச்சனையால கல்யாணம் கட்டின பெண்ணுக்கு முதற்பெயராக மாமானாரின் பெயர் அமையப் பெற்று விடுகிறது. :(

இப்பவெல்லாம் கல்யாணம் செய்த பிறகு உம்மை எப்பிடி அழைக்க வேண்டும் என எழுதியே தாருங்கள் என கேட்டு வாங்குகிறார்கள்.
(சுவிஸ்லாந்தில் திருமணப் பதிவு செய்த போது அதற்கான படிவத்தை தமிழில் தந்த போது எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது :)


சபாபதி பால கங்காதரன்இரகுபதி பால ஸ்ரீதரன்பூபதி பால வடிவேர்கரன்அமர சேனாபதி பால கார்த்திகைக் குமரன் (எப்படித் தான் சின்ன வயதில் தன் பெயரை இவர் எழுதினாரோ??)ஸ்ரீபதி பால முரளீதரன்//

இவர்கள் எந்த நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட மன்னர்கள் என சொல்ல முடியுமா ... :) :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

லோஷன், இவ்வளவு நீளமான பெயரா உங்களது? இன்றுதான் அறிந்தேன். :)

உலகிலேயே நீண்ட பெயர் கொண்டவர் இலங்கையில்தான் இருக்கிறார். மெயில் ஐடி கொடுங்கள்.. விபரங்களை அனுப்பிவைக்கிறேன்.

rishanshareef@gmail.com

கலை - இராகலை said...

"ஹர்ஷஹாசன்"
இந்தப்பெயரில் ஒளி பொருந்தியவன்,மகிழ்ச்சிப் படுத்துபவன்,சூரியன்,சிவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன..

இந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்று தேடிக்கொண்டிருந்தேன் லோஷன் அண்ணா அப்பாட சரியாக ஒரு மாதம் ஆகும் போது அர்த்தம் தெரிந்து விட்டது.

உங்கட பெயரை இப்படிதான் முன்பு எழுதுவேன் "Lotion" எப்படி உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும் அர்த்தம் வேறாயிற்றே!!!!!

குசும்பன் said...

நானும் கூட உங்கள் பெயரை தப்பு தப்பாக படித்து இருக்கிறேன் எப்படி படிச்சேன் என்று சொன்னால் வருத்தப்படுவீங்க:))))

வதீஸ்வருணன் said...
This comment has been removed by the author.
வதீஸ்வருணன் said...

உங்கள் அதே பிரச்சினைத்தான் எனக்கும் என்னுடைய முழுப்பெயரை பாருங்கள் அன்ரன் துரைரட்ணம் வதீஸ்வருணன்
அப்பாவின் பெயரில்தான் ஆண்டு 5 புலமைபரிசில் பரீட்சை எழுதினேன் என்றால் பாருங்களேன் (பின்பு அதை மற்ற பட்ட பாடு போதும் என்றாகி விட்‌டது)

திகழ்மிளிர் said...

நாம் எப்பொழுதுமே அப்பாவை பெயரைச் சொல்லி அழைத்திருக்க மாட்டோம்.ஆனால் வெளிநாடுகளுக்கு சென்ற பின் நம்மை அவர்கள் அப்பாவின் பெயரைச் சொல்லி அழைக்கும் கொடுமை என்னவென்று
சொல்வது

Abiman said...

மிகவும் அழகான பெயர் "ஹர்ஷஹாஷன்". ரொம்ப நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்றுதான் ச்ந்தர்ப்பம் கிடைத்தது.பார்த்த முதல் நாளே நானும் "கமல்" வாடை அடிப்பதாக உணர்ந்த்தேன்.

IRSHATH said...

முன்பு ஒரு நாள், கல் தோன்றி மண் தோன்றி ஆனால் வெற்றிFM தோன்றாத ஒரு நாளில் விடியல் மாதிரி ஒரு நிகழ்ச்சியில் நியூமறோலோஜி பற்றி பேசியபோது நான் ஒரு sms அனுபினேன்.

"ஒருவருடைய பெயரை மாற்றி வைப்பதன் மூலம் அவர் மாற்றுவதற்கு முதல் செய்த பாவங்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் சொல்லுமா? ஆறு அறிவுடைய மனிதனை ஏமாற்ற முடியாவிட்டால் முக்காலம் உணர்ந்த கடவுளையும் அவன் உண்டாக்கிய விதியையும் நியூமறோலோஜி மாற்றுமா?

அதற்கு உங்கள் பதில் அவ்வாறும் நடக்கலாம்

அன்றே தெரியும் நியூமறோலோஜிஇல் உங்கள் நம்பிக்கை

LOSHAN said...

நன்றி நந்தரூபன், எனக்கே இன்னும் சந்தேகம் தீராத பொது நான் எப்படி தீர்க்க முடியும்? ;)

நன்றி சந்தனமுல்லை

நன்றி 'டொன்' லீ
ம்ம்ம் இன்று தான் வாசித்தேன்.. உங்கள் பதிவும் சுவாரஸ்யமானது.. சிங்களவரின் பெயர்கள் எங்களை விட நீளமானதாக இருந்தாலும் அவர்களது குடும்பப் பெயர்களை எழுதும்போது குழ்ப்பம் இல்லை.ஆங்கிலேயர் போல எழுதி விடுவர்.எங்களுக்குத் தானே இந்த அப்பா பெயர் மகனுக்கு வரும் குழப்பம் இருக்கு.. ;)

நன்றி சயந்தா..
நிறைய மேலை நாடுகளில் இந்த வழமை தோன்றியுள்ளதாக நானும் அறிந்தேன்.

நானும் அப்பாட்ட கேட்டேன்.. இலங்கையை ஆளத் தான் பார்தாங்களாம். முடிஞ்சது இணுவிலை ஆள மட்டும் தானாம்.. ;)

நன்றி,ரிஷான்..
இலங்கையிலா?நான் வேறெங்கோ நாட்டில் தான் இருப்பதாக அறிந்தேன். ஒ.கே நான் அனுப்புறேன்.. நீங்களும் அனுப்புங்க.

நன்றி கலை.. அப்படி எழுதினாலும் பரவால்ல.. வாசனையும் இருக்கே,, நிறையப் பெண்களுக்கும் பிடிக்கும். ;)

ஐயா குசும்பனாரே.. தெரியும் ஐயா..நீங்க இப்படி எல்லாம் படிச்சிருப்பீங்க என்று சொல்லி ஊகிக்க முடியுது.. ம்கூம்..முடியல.. அழுதிருவேன்..

வள்ளி said...

லோசன்,
எனக்கொரு சந்தேகம் பெண்கள் அப்பாவின் பெயரை தன் பெயருக்கு முன்னால் எழுதுவது சரியா? பின்னால் எழுதுவது சரியா?

LOSHAN said...

நன்றி வதீஸ்,திகழ்மிளிர் (அழகான பெயர்),அபிமன்,இர்ஷாத் & வள்ளி

பரவாயில்லை திகழ்மிளிர்,நல்லபடியா நாங்கள் இருந்தால் அப்பாமாருக்கு எங்களால் பெருமை கிடைக்கும் தானே..

அபிமன், கமல் வாடை? ;) கமல் தாக்கம் என்பது நல்லா இருக்காதா?

இர்ஷாத், எனக்கும் ஞாபகம் இருக்கு. எனது சொந்த விருப்புகளையும் வெறுப்புகளையும் திணிக்கக் கூடாது என்றே மழுப்பல் பதில் அளித்தேன்..

வள்ளி,எது சரி எது பிழை என்று சொல்லுமளவுக்கு என் தகுதி போதாது (தன்னடக்கம் !!) ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் பின்னால் தானே எழுதுகிறார்கள்.. என் அபிப்பிராயப் படி அப்பாவுக்கு மரியாதை கொடுத்து முன்னாலேயே எழுதவேண்டும்.. (ஆண்/பெண் இருவருமே)

வள்ளி said...

சந்தோசம் லோசன்.நான் முன்னால் தான் அப்பாவின் பெயரை எழுதுகிறேன்.ஆனால் சிலர் பின்னால் எழுத வேண்டும் என்கிறார்கள் அதுதான் கேட்டேன்.நன்றி

Thusha said...

hai ...................
ஆரம்ப காலத்தில் உங்களுடைய A.R.V யின் ful names தெரிந்து கொள்ள வானோர்லிக்கு அருகில் கத்து இருந்தது தன் ஞபாகம் வருகின்றது ...............
"ஹர்ஷஹாசன்" மிகவும் அழகான பெயர்

Anonymous said...

//அவனும் நான் என் அப்பருக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது போல அவனும் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவானோ என்ற பயமும் உண்டு.//

இந்த பதிவு எழுதியதன் நோக்கம் இது தானோ... :)

இங்கு பல்கலைக்கழகத்திலும் எம்மில் பலருக்கு அப்பா பெயர்தான்...

நிமல்-NiMaL said...

மேலே பின்னூட்டமிட்ட talkouttamil இன் பெயர் நிமல் (நிமலபிரகாசன்)

:)

மெல்போர்ன் கமல் said...

வீட்டில் இருக்கும் எங்கள் அப்பாமாருக்கு சம்பளம் கொடுத்தீங்க,பரவாயில்லை..ஆனால் வேலை செய்த எங்களுக்கும் கொடுக்கத் தானே வேணும்" என்றேன்.. ஆளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. பிறகு விளக்கிச் சொன்னவுடன் சிரித்தார்.

அண்ணை எப்பிடிச் சுகமா இருக்கிறீங்களோ?? வெற்றி எப்.எம் எப்பிடிப் போகுது?? அது சரி பேப்பர் பொடியனும் நியூமறோலோஜி பார்த்து வைச்ச பெயரோ??

ஆதிரை said...

//பாருங்கப்பா.. அப்பவே என் அழகைப் பார்த்து தீர்க்க தரிசனத்தோடு மனுஷன் வச்சிருக்காரு ;)

குழந்தைப்பருவத்தில் எல்லோரும் ஒருவித அழகுதானே. அந்த அழகு சிலருக்கு கூடவே வருகிறது. பலருக்கு இடைவழியில் காணாமல் போகின்றது.

நான் முதல் வகையில்... நீங்கள் இறுதி வகையில் என்று சொன்னால் ஏற்கவா போகின்றீர்கள்... :)

ஆதிரை said...

//பேப்பர் பொடியனும் நியூமறோலோஜி பார்த்து வைச்ச பெயரோ??

பேப்பர்த்தம்பிக்கும் நியூமறோலோஜிக்கும் சம்பந்தம் இருக்கலாம்.

மாயா said...

இங்க வெளிநாட்டில் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவிலும் அனேகரது அப்பாக்களே பட்டம் பெறுவர் :)

sinthu said...

Anna i was confused about your name because I didn't know the meaning of "A" of your name. I knew from your article.When I was in Sri Lanka, I usually listened the Sooriyan news because your always read the news so I wanted to hear your name with full of effort. It got value when you said your name.
Thanks for your explain
sinthu
Bangladesh

Sinthu, Bangladesh said...

Anna I put in Facebook as Vivekananthan sinthuka because my father was born bofore me and gave birth to me. If someone see my profile, they thought i'm a boy because they thought my name is Vivekananthan so I changed my name. give me one ways to put my father's name in front of me but still my name is Sinthuka. i hope you will give the goog solution. I faced many problems because I put myfather's mane first.
sinthu

LOSHAN said...

நன்றி வள்ளி,துஷா, நிமல்,கமல்,ஆதிரை,மாயா,சிந்து..
நிமல், இந்தப் பதிவு முடியும் வேளையில் நோக்கம் அதுவும் ஆகிவிட்டது.. ;)

கமல், நல்லாப் போகுது.. நீங்கள் கேக்கிறீங்களோ? பேப்பர் பொடியனும்,பேப்பர் தம்பியும் தானா வந்தது,, நியூமறோலோஜி பாத்து வச்சாலும் அப்பிடி வராதே..

ஆதிரை, உங்களைப் பார்த்தாப் பிறகு தான் எந்த முடிவுக்கும் வரமுடியும்..

மாயா,தந்தைமாருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் தனயன்மார்.

நன்றி சிந்து,, நானா? நல்ல முடிவா? நல்ல கதை.. நானே குழம்பிப் போய் தானே இந்தப் பதிவையே போட்டேன்.. யாராவது பெரியவங்க கிட்டே போய் கேட்டு எனக்கும் சொல்லுங்க.. :)

yasan said...

loshan anna athu ean unagalukku mattum ippadi peyar ungaludaiya irandu sakotharagalukkum appadi illaiyea... irukkko..

Anonymous said...

They write Surname frist and then male students name in Sri lankan Examination Board Forms. For girls they write their name and then dad's name. My teacher told me that the way we have to write. Paallai poona handwriting.. Achu mathiri iruppathal adiyen thaan ella writing vellaiyum school illa seithathu.... vetta poonal kai valikkum.. oru computer present panna venum enda school ikku.. vada pakuthi school thane enga enllam kaiyala ezhutha vendiyathu thaan..

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified