January 05, 2015

ஒரு நாள் மகுடம் சூடும் புள்ளடி ராஜாக்கள் நாம் !

ஜனவரி 8!!!

இந்த ஒரேயொரு நாளுக்காக நாட்டை ஆளும் ராஜாக்களும் தேடி வந்து​ எம் காலில் விழக்கூடத் தயாராக இருப்பார்கள்.

எல்லாம் எங்கள் கைகளால் இடப்போகும் அந்தப் புள்ளடி அவர்களுக்குத் தரப்போகும் நாடாளும் ஆணை.ஒவ்வொரு வாக்காக தேடும் ஒவ்வொரு தரப்பும், இலங்கையின் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இரு தரப்பும் காலில் விழாக்குறையாக கைகளைக் கூப்பித் தொழுது, செய்தவை, செய்யாதவை, இனி செய்ய இருப்பவை என்று அடுக்கி, அடுக்கி அள்ளிப் போடுங்கம்மா வாக்கு என்று சாதாரணர்கள் எங்களுக்கு மேலான அந்தஸ்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.


வழமையாக ஆட்சி எங்கேயோ நடக்கும், நாம் ஆளப்பட்டுக்கொண்டிருப்போம்.

எங்களுக்கானது தான் ஆட்சி என்ற நிலை தாண்டி, ஆட்சிக்குள்ளே நாம் வாழப் பழகியிருப்போம்.


சகிப்புத்தன்மை என்பதே எங்கள் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருப்பதால் யார் என்ன செய்தாலும் 'அட்ஜஸ்ட் ' என்பதே தாரக மந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவிகள் எமக்கு ஐந்து, ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படியான ராஜ மரியாதை கிடைக்கும்.எங்கள் குரல்களே எடுபடாமல், அவர்களின் குரல்களை மட்டுமே நாம் தினமும் கேட்டுப் பழகிப்போன நிலையில், எங்கள் குரல்கள், கோரிக்கைகள், அபிலாஷைகள் என்பவற்றை ஆளப்போகிறவர்கள் / ஆண்டவர்கள் கேட்கும் அல்லது  கேட்பவதாகப் பாவனை செய்யும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாட்கள் இவை.இவற்றுள் மேலும் ஒரு மகுடம் வைக்கும் நாள் தான் வரும் 8ஆம் திகதி.

தேர்தல் நாள் நாங்கள் தான் ராஜாக்கள்.

எங்கள் கைகள் இடும் புள்ளடிகள் தான் அரச ஆணை.

யாரை நோக்கி எங்கள் கரங்களின் ஆதரவு நீள்கிறதோ அவருக்கு ஆட்சி பீடம்.

நாங்கள் யாரை வேண்டாம் என்கிறோமோ அவருக்கு அது (இம்முறை) எழமுடியாத மரண அடியாக அமையும்.


உங்கள் உங்கள் தீர்மானங்கள் மனதில் எப்போதோ உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.
அவரா இவரா என முடிவு செய்திருப்பீர்கள்.
யாருக்கு வேண்டுமானாலும் வாக்கை நீங்கள் அளிக்கும் ஜனநாயக உரிமை உங்களுக்கு இருக்கிறது.
வாக்கை நிராகரிக்கும் உரிமை, ஏன் வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உரிமை கூட உள்ளது.

ஆனால் இலங்கையின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, கடைசி இரு வழிமுறைகளும் எப்போதும் கைகொடுக்காது என்பது அனுபவபூர்வமாக நாம் வலியோடு கண்ட உண்மைகள்.

​அதேபோல, யார் வந்தாலும் என்ன?
ராமன் என்ன ராவணன் என்ன நம்ம வாழ்க்கை நம் கையில் என்று இருந்துவிடுவதனால் மோசமான ஆட்சி ஒன்று உருவானால் அது பற்றி விமர்சிக்க, குறை சொல்ல ஏன் புலம்புவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிடுகிறோம்.​

அதேபோல எங்களுக்கு சுதந்திரமாக இருக்கும் ஒரே (அல்லது மிக முக்கியமான )உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதும், அதை இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பது போன்றதே.

மாற்றம் செய்வதாக இருந்தால் கூட ஏதாவது செய்தாகவேண்டுமே..
வேண்டுவது வேண்டாதது என்பதைத் தீர்மானிப்பது எம் கைகளாக இருக்கவேண்டும்.
இந்த ஒருநாள் ராஜா பதவிகளை பயன்படுத்துவோமே...

பதிவு செய்துள்ள வாக்காளர்கள்  - மாவட்ட - தொகுதி வாரியாக 


'ஜனநாயகம்' என்பது பெயரளவிலேனும் ஒரு அடிப்படை அம்சமாக நாட்டில் இருக்கையில், கட்சி மாறல்கள், பதவிக்காக கொள்கை மாறல்கள், கூட்டணி சேர்த்தல்கள், விலகல்கள் என்று நடக்கும் பலவிதமான கூத்துக்களிலும் வாக்காளர்களாக எமது விருப்பு, வெறுப்புக்கள் இருப்பதில்லை.

எனவே தான் யார் வரவேண்டும் என்று தீர்மானிப்பதிலாவது  வாக்குரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் நாம் ஊக்குவிக்கவேண்டி இருக்கிறது.
​"யார் வரவேண்டும் ​என்று பார்த்து வாக்களிப்பது இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகளுக்குள் சிரமமாக இருக்கலாம் ; ஆனால் யார் வரக்கூடாது என்று தீர்மானிப்பதில் பெரியளவு சிக்கல் இருக்கப்போவதில்லையே"


எனவே அங்கே தான் வாக்களிக்காமல் விட்ட, செல்லுபடியற்ற வாக்கை வழங்கிய மந்தைகளுள் ஒருவராக நாம் ஆயிடாமல், ஏதாவது ஒரு தெரிவை வழங்கவேண்டியது அவசியமாகிறது.

இந்த முறை 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
இவர்கள் இளையவர்கள்.

அவர்களுக்கு இந்த ஜனநாயகத் தெரிவு முறை மேல் நம்பிக்கையை வழங்குவதும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்காக குரல் கொடுக்கும் எமது நம்பிக்கையை வைக்கக்கூடிய பிரதிநிதிகளை நாம் அனுப்பிவைக்கலாமென்ற நம்பிக்கையை வழங்குவதற்கும் வாக்களிக்கத் தூண்டவேண்டும்.

காரணம் இளைய தலைமுறை நம்பிக்கை இழந்துபோன பல விடயங்களுள் ஒன்றாக எமது பிரதிநிதிகளை, எம்மை ஆளுவோரை நாமே தெரிவு செய்வதும் மாறிவிடக்கூடாது என்பதே எனதும் அக்கறையாகும்.

கடந்த காலங்களில் பதிவு செய்த வாக்காளர்களாகிய எம்மில் கால்வாசிப் பங்குக்கும் அதிகமானோர் வாக்களித்ததில்லை.
இது இலங்கை போன்ற கல்வியறிவில் முன்னிலை பெற்ற ஒரு நாட்டுக்கு எவ்வளவு வெட்கக்கேடான ஒரு விடயம்?


------------


வாக்களிக்கும் முறை..

நேரடியாக நாம் எமது ஒரே தெரிவை நாம் செலுத்தலாம்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு பெரும்பான்மை / 50.1% வாக்குகள் கிடைக்காவிடில் இரண்டாவது சுற்றுக்கணிப்புக்கு போகவேண்டிய நிலைமை ஏற்படும்.
(அவ்வாறு இதுவரை ஏற்பட்டதில்லை)
இதற்காக மூன்று விருப்பத் தெரிவுகள் வழங்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

கீழே விளக்கப்படம் உள்ளது.


வாக்களிக்கும் முறை பற்றிய சந்தேகங்கள் இன்னும் இருப்பின் கீழ்வரும் ஆங்கில இணையத் தொடுப்பை க்ளிக்கி அறிந்துகொள்ளவும்.


இல்லையேல் இந்த இடுகையின் கீழே comments ஆக இடுங்கள். முடியுமானவரை பதிலிடுகிறேன்.


நாம் வாக்கிடுவோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

புள்ளி ராஜாக்களாக தேர்தலுக்குப் பின் பூஜ்ஜியங்களாக  ஆகாதிருக்க (இம்முறையும் ஏமாறினால் - அதை பிறகு பார்க்கலாம் - எத்தனை ஏமாற்றம் கண்டுவிட்டோம் - நம்பிக்கை தானே வாழ்க்கை) புள்ளடி போட்ட ராஜாக்களாக பெருமையுடன் விரலில் முடிசூடிக் கொள்வோம்.


"யார் வேண்டும் என்று வாக்களிப்பது மனதுக்கு இம்முறை ஒவ்வாவிட்டால், யார் எமக்கும் எம் எதிர்காலத்துக்கும் வேண்டாம் என்று வாக்களியுங்கள்."
தெளிவும் தெரிவும் இலகு.

------------------
நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. இலத்திரனியல், அச்சு, இணைய ஊடகங்கள் வழியான விளம்பரங்களும் பிரசாரங்களும் நாளையுடன் முற்றுப்பெற வேண்டும். 

ஆனால், இணையவெளியில் பல்கிப் பெருகியிருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமான விளம்பரங்கள், பிரசாரங்களை எவ்வாறு தேர்தல் திணைக்களம் கட்டுப்படுத்தப்போகின்றது என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் இல்லை.
நிறுவனங்களாக, அமைப்புக்களாக இவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் தனிநபர்கள் தத்தம் விருப்பு வெறுப்புக்களைக் கொண்டு பிரசாரம் செய்யப்போவதை எவ்வாறு தடுக்கலாம்?

சிக்கலான கேள்வி இது..
தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை இது தொடரும்.
அதிலும் இம்முறை எழுச்சி கொஞ்சம் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று என்ணத்தோன்றுகிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified